
படங்கள் : கே.ராஜசேகரன்

‘‘நான் கையை விரிக்கும்போது உருவாகும் வெளியே, எனக்கு வரைவதற்கு போதுமானது.”
- வில்லம் டி கூனிங்
அப்பாவின் ஓவிய வாழ்வின் காலத்தை, என் நேரிடையான அனுபவத்தை வைத்து, இரண்டாகப் பிரித்துப்பார்ப்பேன். முதல் பகுதி, பெசன்ட் நகர் CPWD குவார்ட்டர்ஸில் வசித்துவந்த காலம். 1972-ம் ஆண்டில் அங்கு குடியேறினோம். அப்பா மத்திய அரசு ஊழியராக இருந்ததால், அங்கு வீடு கிடைத்தது.
முதல் மாடியில் உள்ள இரண்டு அறைகள் கொண்ட சிறிய அபார்ட்மென்ட். அதில் ஓர் அறையை அப்பா தன் ஸ்டுடியோவாகப் பயன்படுத்தினார். கிராமத்திலிருந்து வரும் உணவு தானியங்களும் அங்கேதான் வைக்கப்பட்டிருக்கும். அப்பா தனது கல்லூரிக் காலத்தில் இருந்து வரைந்த ஓவியங்களும் அறையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்திருக்கும். ஒருவர் நடந்து செல்வதற்குரிய இடம் மட்டுமே உள்ள அந்த அறையில், 60 வாட்ஸ் மஞ்சள் விளக்கு தரும் ஒளியில்தான் அப்பா 18 வருடங்கள் தனது படைப்புகளை உருவாக்கினார்.
1969-ம் ஆண்டில் வரையப்பட்ட, `காந்தி கோட்டோவியங்கள்’ மாதிரியான ‘Figurative - Representation’ பாணியில் இருந்து, 1974-ம் ஆண்டில் `Space Series’ - கறுப்பு வெள்ளைக் கோட்டோவியங்களால் ஆன அரூப வெளிப்பாட்டுக்குள் (Abstraction) பயணிக்கத் தொடங்கியது இந்த பெசன்ட் நகர் வீட்டில்தான். 1978-ம் ஆண்டில் எண்ணெய் வண்ண ஓவியங்களை கேன்வாஸில் வரையத் தொடங்கினார். இந்த வகையில் வரைந்த ஓவியமே, 1979-ம் ஆண்டு தேசிய விருதைப் பெற்றது. தமிழ் நவீன எழுத்தாளர்
களுடன் நட்பு, தமிழ் நவீனத்துக்கான புதிய கட்புல மொழி (Visual Language) அவருள் உருவானது இந்தக் காலகட்டத்தில்தான்.

‘Space and Forms’, ‘Mystic Land’, ‘The Land I Chase’ என்ற பெயர்களில் தொடர் ஓவியங்களும், `Sketch Book Series’, `Maharaja Series’ ஆகிய கோட்டோவியத் தொடர்களையும் வரைந்தார். 1980-களில் விகடனில் வெளிவந்த `கோபல்லபுரத்து மக்கள்’, `கரிசல் காட்டுக் கடுதாசி’ போன்றவற்றுக்குப் படங்கள் வரைந்தார்.
அப்பா விருப்ப ஓய்வு பெற்ற பிறகு,1990-ம் ஆண்டில் கிழக்குக் கடற்கரைச் சாலை, ஈஞ்சம்பாக்கத்தில் புதிதாகக் கட்டப்பட்ட எங்கள் வீட்டுக்குக் குடியேறியதை, அவர் வாழ்வின் இரண்டாம் பகுதியாகப் பார்க்கிறேன். இங்கு வந்ததும் அப்பா முழுநேர ஓவியராகப் பயணிக்கத் தொடங்கினார். அரூப ஓவியத்தில் அதிகபட்ச சாத்தியத்தை எட்டிய ‘White Series’ ஓவியங்களை இங்கேதான் வரைந்தார். அடுத்து வந்த ஆண்டுகளில் ‘Reflex’, ‘Untitled’, ‘Terra - Incognita’ தொடர் ஓவியங்களை வரைந்தார். 1990-ம் ஆண்டில் இருந்து 2008 வரை அவர் வாழ்ந்த இந்தக் காலமே அவருக்குச் செழுமையான காலம் என்று சொல்லலாம். பொருளாதாரத் திடநிலை, தேச, சர்வதேச அங்கீகாரம் அவரைத் தேடி வந்தது.
பெசன்ட் நகர் வீட்டில் ஓர் எளிமையான ட்ரைபேடு (Tripad) ஈசல் இருந்தது. ஈஞ்சம்பாக்கம் வீட்டிற்கு வந்த பிறகு, புதியதாக ஓர் ஈசலை செய்துகொண்டார். (நீங்கள் புகைப்படத்தில் பார்ப்பது அந்த ஈசல்தான்). தனது கலை வாழ்க்கையில் இந்த இரண்டு ஈசல்களை மட்டுமே பயன்படுத்தினார்.

அப்பா எப்பொழுதுமே நின்றுகொண்டுதான் படம் வரைவார். ‘ஸ்கெட்ச்சஸ்’ மட்டுமே நாற்காலியில் உட்கார்ந்து வரைவார்.
ஓர் ஓவியத்தை முடித்தவுடன் வெகு நேரம் நாற்காலியில் உட்கார்ந்து அதைப் பார்த்துக்கொண்டிருப்பார். சில நேரங்களில் குறிப்பாக முகப்பு ஓவியங்கள் மற்றும் அட்டைப்படத் தலைப்புகள் எழுதும்போது, பேப்பரை தரையில் வைத்து எழுதுவார்.
புகைப்படத்தில் உள்ள ஓவியம் அப்பா இறுதியாக வரைந்தது. மிக மோசமான உடல்நிலை, அதிக நேரம் நிற்கக்கூட முடியாது. ஆனாலும் அந்தப் படத்தை நின்றுகொண்டே வரைந்தார்.
கலை மீது இருந்த நம்பிக்கையே அவரின் உள் வலிமைக்குக் காரணமாக இருந்தது. அதுவே தன் மரணம் மிக அருகில் நெருங்கியதைத் தெரிந்தும் கசப்பு உணர்வின்றி, சாந்தத்துடன் அதை எதிர்கொண்டார் என நம்புகிறேன்.