
படங்கள்: ஸ்டில் ராபர்ட்
ஒருநாள் அதிகாலை. தமிழ்ப் படங்களுக்கு சப்டைட்டில் எழுதும் ரேக்ஸ் என்கிற ரேகா சந்திரன் என்னை அழைத்தார். `சும்மா உங்ககிட்ட பேசணும்னு தோணுச்சு’ என்றார். ஏதோ வித்தியாசமாகத் தெரிந்தது.
மணியிடம் `ரேகா அழைத்து பூடகமாக ஏதோ பேசினார்' எனச் சொன்னேன். தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கலாம் என யூகித்தேன். சிறந்த மாநில மொழி திரைப்படத்துக்கும், எடிட்டர் கிஷோருக்கும் விருது கிடைக்க வாய்ப்பு இருப்பதாகத் தோன்றியது.
அதன் பின் அன்றைய வேலைகளில் பிஸி ஆனேன். ரேகா மீண்டும் மதியம் 2:30 மணிக்கு அழைத்தார். `இன்னும் யாரும் உங்ககிட்ட சொல்லலையா? நான்தான் இந்தியாவின் பெஸ்ட் டைரக்டருக்கு முதல் வாழ்த்து சொல்றேனா?’ என்றார். நான் நம்ப மறுத்தேன்... `நேஷனல் சேனல் ஏதாவது போட்டுப்பாருங்க’ என்றார். பிறகு, டி.வி-யில் CNN - IBN சேனலைப் பார்த்தேன். தேசிய விருதுகள் தேர்வு கமிட்டியின் பிரசிடென்ட் நேரலையில் விருதுபெற்றவர்கள் பட்டியல் வாசித்துக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் சிறந்த இயக்கத்துக்கான அறிவிப்பு வந்தது. `Best director for feature film goes to அடுகளாம்’ என அறிவிக்க, கீழே டி.வி பார்த்துக்கொண்டிருந்த உதவியாளர்கள் சந்தோஷத்துடன் `சார்... சார்... டி.வி பாருங்க’ என ஓடிவந்தார்கள்.
அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோதே, அம்மாவிடம் இருந்து போன் வந்தது.
`தம்பி... தம்பி... நேஷனல் அவார்டுடா...’ என்றவர் அதற்கு மேல் பேச முடியாமல் அழத் தொடங்கினார். என்னால் எதுவும் பேச முடியவில்லை. அவரால் அழுகையை நிறுத்தவும் முடியவில்லை.
`நான் சினிமாவுக்குப் போகிறேன்' எனச் சொன்னபோது `நீ நேஷனல் அவார்டு வாங்கணும். அதை நான் மொத வரிசையில உக்காந்து பாக்கணும்' எனச் சொன்னது என் அம்மாதான். `அப்புறம் பேசறேம்மா...’ என அவரிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே தடதடவென உதவியாளர்கள் மீண்டும் மேலே ஓடிவந்தார்கள்.. `சார்... சார்... தனுஷ் சார்... தனுஷ் சார்’ என்றதும் எனக்கு அவர் வந்துவிட்டதாகத் தோன்றியது. அதன் பிறகுதான் சிறந்த நடிகர் விருது தனுஷுக்கு என்பது தெரிந்தது. அம்மாவிடம் `நீங்க நியூஸ் பாருங்க. நான் அப்புறம் கால் பண்றேன்’ எனச் சொல்லிவிட்டு, ஹோட்டல் ஆதித்யாவுக்குக் கிளம்பிச் சென்றுவிட்டேன்.

அப்போது, எடிட்டர் கிஷோர் அழைத்தார். `சார் கங்கிராட்ஸ் சார்... ரெண்டு அவார்டு. சூப்பர் சார்’ என்றார். `ஆமா கிஷோர். டைரக்டர், நடிகர் ரெண்டு பேருக்கும் கிடைச்சது பெரிய விஷயம்’ என்றேன். `இல்லை சார், உங்களுக்கே ரெண்டு. ஸ்கிரீன்ப்ளேவுக்கும் உங்களுக்குத்தான் சார்’ என்றார். எனக்கு ஆச்சர்யம். ஆதித்யா ஹோட்டல் காபி ஷாப்பில் டி.வி ஆன் செய்யச் சொல்லிப் பார்த்தேன். அந்தச் சமயம் சிறந்த எடிட்டருக்கான விருது `ஆடுகளம்' படத் துக்காக கிஷோருக்கு என அறிவித்தார்கள்.
உடனே, கிஷோருக்கு கால் செய்தேன். `நம்ம டீமுக்கு நிறைய அவார்டுகள்.சந்தோஷமா இருக்கு சார்’ என்றார். ரேகா போல யாரோ அவருக்கும் முன்னரே சொல்லியிருப்பார்கள்போல என நினைத்தேன். அவர் தொடர்ந்து `உங்களுக்கும் தனுஷ் சாருக்கும் கிடைச்சது...' என்ற ரீதியில் பேசிக்கொண்டிருந்தார். `கடைசியாக எப்போது டி.வி-யைப் பார்த்தீர்கள்?' எனக் கேட்க, `பத்து நிமிஷம் முன்னாடி சார்’ என்றார். `இப்ப பாருங்க கிஷோர். உங்களுக்கும் விருது அறிவிச்சிருக்காங்க’ எனச் சொன்னதும் அவரால் நம்ப முடியவில்லை.
தொடர்ந்து அறிவிப்புகள் வந்தன. சிறந்த நடன அமைப்புக்காக தினேஷுக்கும், நடுவர்களின் சிறப்பு விருது வ.ஐ.ச. ஜெயபாலனுக்கும் சேர்த்து `ஆடுகளம்' படத்துக்கு மொத்தம் ஆறு தேசிய விருதுகள் அறிவித்திருந்தார்கள். அன்று மதியம் 3 மணிக்குத் தொடங்கி விடியற்காலை 3:30 மணி வரை நான் போனிலே வாழ்த்தியவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். திரைத்துறையைச் சேர்ந்த அனைவரும் வாழ்த்துக்களையும் பொக்கேக்களையும் அனுப்பியவண்ணம் இருந்தார்கள். விருதுகள், எப்போதும் ஒரு படத்தின் தரத்தை உயர்த்தவோ தாழ்த்தவோ முடியாது. ஆனால், ஓர் உயரிய குழு ஒரு படத்துக்கு அங்கீகாரம் கொடுக்கும்போது, அந்த ஃபிலிம் மேக்கருக்கு அது பெரிய ஊக்கமாக இருக்கும்.
அடுத்த நாள், விருதுகள் பற்றி பேச ஒரு பிரஸ் மீட் ஏற்பாடு செய்தோம். அதில், தேசிய விருதுகளை யாருக்கு டெடிகேட் செய்ய விரும்புவதாகக் கேட்டார்கள். `இந்த விருதுகள் மட்டும் அல்ல, என் வாழ்க்கையில் சினிமாவுக்காக நான் வாங்கப்போகும் எல்லா விருதுகளும் பாலு மகேந்திரா சாருக்கானது தான். அடிப்படைப் படைப்பாற்றலோடு இருந்த என்னை ஒழுங்குபடுத்தி, உருமாற்றியது அவர்தான்.
அவர் இல்லை என்றால், நான் படம் எடுத்திருப்பேன். ஆனால், கொஞ்சம் சென்சிபிளான படங்கள் எடுக்கும் இடத்தில் இருந்திருப்பேனா என்பது சந்தேகம்தான். என் படங்கள் ஓரளவுக்கு நன்றாக இருக்கின்றன என்றால், அதற்கு ஒரே காரணம் பாலு மகேந்திரா சார்தான். சினிமாவில் படங்கள் எடுக்க உதவும் முதலீட்டாளர்களுக்கு, போட்ட பணத்தைத் திருப்பி எடுத்துத் தருவதுதான் எனக்கு முக்கியமான விஷயம். முதலீட்டாளர்கள் இல்லையென்றால், ஒரு திரைப்படம் அந்த ஃபிலிம் மேக்கரின் கனவாக மட்டுமே இருக்கும். அதனால், முதலீட்டாளர் களுக்குக் குறைந்தபட்சம் முதலீட்டைத் திரும்ப எடுத்துக் கொடுக்கும் பொறுப்பு எனக்கு இருப்பதாக நினைக்கிறேன்.

என் படங்கள் கொஞ்சம் சென்சிபிளாகவும், அதே சமயம் முதலீட்டாளர் களுக்குப் பணத்தைத் திரும்ப எடுத்துக் கொடுக்கும் படமாகவும் இருக்க வேண்டும். அப்படி எடுக்கும் படங்களுக்கு ஓர் அங்கீகாரம் கிடைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது' எனவும் சொல்லியிருந்தேன்.
விருதுகள் அறிவிக்கப்பட்டபோது, ரஜினி சார் உடல்நலமின்ற இராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதனால், தனுஷால் விருதுகள் தந்த சந்தோஷத்தை முழுமையாக ரசிக்க முடியவில்லை.
`ஆடுகளம்', தேசிய விருதுகள், விகடன் விருதுகள், உலகத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டதுமாக மொத்தம் 67 அங்கீகாரங்களைப் பெற்றது. `ஆடுகளம்' படம் தொடர்பாக பல விவாதங்கள் நடந்ததுபோலவே அதற்குக் கிடைத்த தேசிய விருதுகள் பற்றியும் பல விவாதங்கள் நடந்தன. `இந்தப் படத்துக்கு எதற்காக ஆறு விருதுகள்?', `பாலு மகேந்திராதான் வெற்றி மாறனுக்கு விருதுகளை வாங்கிக் கொடுத்துட்டார்' என, பல சர்ச்சைகள் எழுந்தன.
அந்த வருடம் `ஆடுகளம்' ஆறு விருதுகளையும், சீனுராமசாமியின் `தென்மேற்கு பருவக்காற்று' மூன்று விருதுகளையும் பெற்றது, இந்த விவாதத்துக்குக் காரணம் ஆனது. ஒரு திரைப்படத்துக்கான விருது என்பது அந்தத் தேர்வுக் குழுவின் ரசனைக்கு உட்பட்டது. அந்த விருதுகள் அறிவிக்கப்படுவதே அந்தப் படத்துக்கான அளவுகோல் ஆகாது. இதைப் பலரும் புரிந்துகொள்வது இல்லை. `ஆடுகளம்' அதிக காலம் எடுத்துக்கொண்ட ஒரு படம். அதிக பிரஷர் கொடுத்த ஒரு புராஜெக்ட் என்றும் சொல்லலாம். அதனால், கொஞ்சம் ரிலாக்ஸாக, குறைந்த காலத்தில் ஒரு படம் எடுக்கலாம் என முடிவுசெய்தேன். ஒரு வீடு, ஒரு முதியவரின் மரணத்தை மையமாகக்கொண்டு நா.முத்துக்குமார் எழுதிய ஒரு கவிதையை அடிப்படையாக வைத்து ஒரு திரைக்கதை அமைத்தேன். அந்த வேலைகளில் இருந்தபோதுதான் `ஆடுகளம்' ரிலீஸ் ஆகி, தேசிய விருதுகள் பெற்றது. அதன் பிறகு `ஆடுகளம்' படத்தை பல சர்வதேசத் திரைப்பட விழாக்களுக்குக் கொண்டுசெல்ல முடிந்தது. அப்போது இருந்த சூழலில் அந்தத் திரைப்படத்தைத் தொடர்ந்து எடுக்க முடியவில்லை.
அதன் பிறகு 2014-ம் ஆண்டு தனுஷ், பார்த்திபன் நடிக்க `சூதாடி’ என்ற படத்தைத் தொடங்கினோம். பார்த்திபனை வைத்து ஐந்து நாட்கள் படப்பிடிப்பும் நடத்தினோம். அந்தச் சமயம் `ஷமிதாப்' என்ற இந்திப் படத்தில் நடிக்க தனுஷ் செல்ல வேண்டியதானது. அந்த நான்கு மாத காலம் காத்திருக்கும் சமயத்தில்தான் `விசாரணை' எடுக்கலாம் என முடிவுசெய்தேன். `ஆடுகளம்' படத்தில் இருந்து `விசாரணை’ படத்துக்கு வந்துசேர, நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன.
பல காரணங்கள் இருந்தாலும், நான் ரொம்ப டயர்டாக இருந்தது முக்கியக் காரணம். ஒரு திரைக்கதை ஆசிரியன் ஒரு திரைக்கதையை எழுதி முடிக்கும்போது, மக்களுடனான அவனது இயல்பு வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.
அதன் பிறகு எழுதும் எல்லா கதைகளும் அதுவரை வாழ்ந்த வாழ்க்கையைச் சார்ந்துதான் மீண்டும் மீண்டும் எழுத முடியும்.
என்னுடைய 28-வது வயதில் என் முதல் திரைக்கதையை எழுதி முடித்தேன். அதன் பிறகு எனக்கு புதிய அனுபவமே கிடைக்கவில்லை. வாழ்க்கையில் நடக்கும் எல்லா சம்பவங்களுமே ஒரு காட்சியாகவோ, கதாபாத்திர மாகவோதான் மனதில் பதிந்தது. ஒரு ஃபிலிம் மேக்கராக இல்லாமல் வாழ்க்கையைப் பார்க்க முடியவில்லை. எதுவுமே ஓர் அனுபவமாக இல்லாமல், கதைக்கான சோர்ஸாகத்தான் பார்க்க முடிந்தது. அதனால் வாழ்க்கையை வாழ முடியாமல்போனது.

நான் 23 வயதில் பாலு மகேந்திரா சாரிடம் உதவியாளராகச் சேர்ந்தேன். அதன் பிறகு எனக்கு மற்ற துறைகளில் பரிச்சயம் என்பது மிகவும் குறைந்துவிட்டது. எல்லாமே சினிமா என்று ஆனது. அதனால் என்ன எழுதினாலும் ஒரே கதைக்களம்தான் என் கதைகளில் வந்தது. இந்தத் தொடர்ச்சியை உடைக்க வேண்டும் என நினைத்தேன். அதற்கு எனக்கு புதிய அனுபவங்கள் தேவைப்பட்டன. இந்த மனநிலையில் இருந்தபோதுதான் (`விசாரணை', `சூதாடி'க்கும் முன்னரே) தங்கவேலவனின் `வேங்கச்சாமி' என்ற ஸ்கிரிப்ட்டைப் படமாக்கும் வேலைகளில் ஈடுபட்டேன். அது ஆதிவாசிகளின் வாழ்க்கையைச் சுற்றிப் பின்னப்பட்ட திரைக்கதை.

அவர்கள் வாழ்க்கையைப் பற்றிய ஒரு முக்கியமான பதிவு. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ரிசர்ச் செய்து தங்கவேலவன் அந்தக் திரைக்கதையை எழுதியிருந்தார். நானும் ஒன்றரை ஆண்டுகள் அந்த ஸ்கிரிப்ட்டில் வேலைசெய்தேன். அதற்காக காட்டுக்குள் அடிக்கடி சென்று அந்த மக்களைச் சந்திக்க நேர்ந்தது. அந்தக் கதையில் புலி ஒரு முக்கியக் கதாபாத்திரம். தங்கவேலவன் காட்டுக்குள் சென்று புலியைப் பார்த்திருக்கிறார். புலியைப் பார்ப்பது என்பது ஒரு பேரனுபவம் என அவர் அடிக்கடி சொல்வார்.
உலகில் இரண்டே வகை மக்கள்தான். ஒன்று புலியைப் பார்த்தவர்கள், மற்றொன்று புலியைப் பார்த்தவர்கள் புலியைப் பற்றி பேசுவதைக் கேட்பவர்கள். புலியைப் பார்த்தவர்கள் அந்தப் பரவசத்தைக் கேட்பவர்களுக்குக் கடத்திக்கொண்டே இருப்பார்கள். ஒருமுறை நானும் புலியைப் பார்த்தே தீர்வது என முடிவுசெய்து காட்டுக்குக் கிளம்பினோம். - பயணிப்பேன்...
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!
Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan