மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!
பிரீமியம் ஸ்டோரி
News
அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ. 200  / ராமமூர்த்தி

உறுதிமொழி ஏற்போம்..!

எங்கள் ஊரில் ஒரு மூதாட்டி குப்பைத் தொட்டியில் கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்கள், பாலித்தீன் பை, காலி மருந்துப்புட்டி ஆகியவற்றை தேடிப் பொறுக்கி, கோணிப்பையில் போட்டு எடுத்துச் செல்வார். பழைய பொருள் வாங்கும் கடையில் கொடுத்து காசாக்கி ஜீவனம் நடத்திவந்தார். சமீபத்தில், ஒரு வாரத்துக்கும் மேலாக, அவரைக் காணவில்லை. அக்கம்பக்கத்தில் விசாரித்தோம். குப்பையில் கிடந்த பிளேடு கையைக் கிழித்துவிட்டது. ரத்தம் சொட்டச் சொட்ட சென்றவர் சிகிச்சை பெற்றுவருகிறார் என்று சொன்னார்கள்.

அனுபவங்கள் பேசுகின்றன!

பிளேடு, டியூப்லைட், கண்ணாடி போன்ற பொருட்களை கவரில் போட்டோ, பேப்பரால் நன்கு சுற்றியோ குப்பைத் தொட்டியில் போடுவதை அனைவரும் வழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். `துப்புரவுப் பணியாளர்கள், குப்பை பொறுக்குபவர்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்போம்’ என உறுதிமொழி எடுத்துக்கொள்வோம்.

- ஆர்.வனஜா, போளூர்

இளைய தலைமுறை... இனிய அறிமுகம்!

அனுபவங்கள் பேசுகின்றன!

சமீபத்தில் என் தோழி தன்னுடைய உறவுக்காரருடன், அவருடைய மகளின் திருமணப் பத்திரிகையை கொடுக்க வந்தார் (நான் நெருங்கிய தோழி என்பதால் உறவினர் திருமணத்துக்கு அழைக்க வந்திருந்தாள்). உறவுக்காரருடன் அவர் மருமகளும் வந்திருந்தார். `அவர் மனைவியை அழைத்து வராமல் மருமகளை அழைத்து வந்திருக்கிறாரே’ என யோசித்து, ``மனைவிக்கு உடல்நிலை சரியில்லையா?’’ எனக் கேட்டேன். அதற்கு அவர் கூறிய பதில் ஆச்சர்யப்படுத்தியது. ``இதுவரை எங்கள் வீட்டில் ஐந்து கல்யாணம் பண்ணியாச்சு. நானும், என் மனைவியும் உறவினர்களுக்கு நேரில் போய் அழைத்து பத்திரிகை வைத்தோம். இந்தக் கல்யாணம்தான் கடைசி. இனிமே நடக்கற நல்ல விஷயங்களுக்கு அடுத்த தலைமுறைக்கு நம் உறவுகளை அறிமுகப்படுத்தவே சில உறவுக்காரங்க வீட்டுக்கு மருமகளை நான் அழைச்சுட்டுப் போறேன். என் மனைவி எங்கள் மகனை அழைச்சுட்டுப் போய் அறிமுகப்படுத்துறா’’ என்றார்.

உறவுகளுக்கும் அடுத்த தலைமுறைக்கும் பாலம் அமைக்கும் இந்த வழிமுறை, பாராட்டத்தக்கதுதானே..!

- எஸ்.சித்ரா, சிட்லபாக்கம்

என்று முடியும் இந்த பேதம்?!

சமீபத்தில் எங்கள் வீட்டுக்கு அருகில் வசிக்கும் பெண்ணுக்கு பிரசவகாலம் நெருங்கி, இடுப்புவலி ஏற்பட்டதால் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். துணையாக நானும் என் அம்மா அங்கே இருந்தோம்.

அனுபவங்கள் பேசுகின்றன!

சிறிது நேரத்தில் குழந்தையின் முதல் அழுகைக் குரல் கேட்டது. அதன்பின் எங்களிடம் வந்த நர்ஸ், ‘’குழந்தை நல்லபடியா பிறந்திடுச்சு. ஆனா, பொம்பளை பிள்ளைதான்” என்று முகத்தை சுருக்கியபடி கூறினார். இதைக் கேட்ட என் அம்மா, ‘’அதென்ன அலட்சியமா `பெண் குழந்தைதான்’னு சொல்றே!’’ என்று அந்த நர்ஸிடம் சண்டைக்கே போய்விட்டார். அவரை சமாதானப்படுத்தி அழைத்து வந்தோம்.

உடல்நலம் குன்றிவர்களுக்கு சேவை புரியும் மிகச்சிறந்த செவிலியர் பணியில் இருப்பவரே பிறந்த குழந்தைகளிடம் ஏற்றதாழ்வு காட்டியது, வருத்தத்துக்குரிய விஷயம். விவசாயம் முதல் விண்வெளி வரை பெண்கள் சாதனை புரிந்துவரும் இருபத்தியோராம் நூற்றாண்டிலும்  இப்படியா? ஆண் - பெண் பேதம் காட்டும் போக்குக்கு என்றுதான் முடிவு காலம் வருமோ?! 

- ஆர்.பிரவீணா, மதுரை

இலவசம்... இனி வேண்டாம்!

நான் பதினான்கு வருடங்கள் கேரளாவில் இருந்தேன். அப்போது நடந்த சட்டசபை தேர்தலானாலும் பஞ்சாயத்து தேர்தலானாலும்... வேட்பாளர்கள் வீடு வீடாக வந்து வாக்காளர் அறிவிப்புத் தாளை கொடுத்துவிட்டு செல்வார்கள். எந்தவிதமான பந்தாவும் இல்லை. தமிழ்நாட்டில் நடப்பது போல, காரில் தெருதெருவாக ஆரவாரத்தோடு வருவது கிடையாது; இலவசங்களை கொடுத்தும், பணத்தை கொடுத்தும் மயக்குவது கிடையாது.

அனுபவங்கள் பேசுகின்றன!

இருக்க இடம், உண்ண உணவு, அறிவு மேம்பாட்டுக்கு கல்வி ஆகியவற்றை ஏழைமக்கள் பெருவதற்கான சூழ்நிலையை உருவாக்கினால் போதுமானது. இலவசங்கள், பணம் கொடுப்பது போன்றவை மக்கள் சுயஉழைப்பால் முன்னுக்கு வருவதற்கு தடையாக இருக்கும். இதையெல்லாம் அனைவருமே உணர்ந்தால்தான் நமக்கு நல்ல எதிர்காலம் அமையும்.

- கி.ஸ்ரீமதி மாலு, சென்னை