Published:Updated:

தோற்றவர்களின் கதை - 10

தோற்றவர்களின் கதை - 10
பிரீமியம் ஸ்டோரி
News
தோற்றவர்களின் கதை - 10

சுசி திருஞானம்தொடர்

தோற்றவர்களின் கதை - 10

ஜாக் மா!

சீனாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் ஜாக் மா. பிரபலமான அலிபாபா நிறுவனத்தின் தலைவரான ஜாக் மாவின் இன்றைய சொத்து மதிப்பு 2,25,000 கோடி ரூபாய். பூஜ்யத்தில் தொடங்கி, ஒரு மாபெரும் வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ஜாக் மாவின் கதை, பல திடீர் திருப்பங்களைக் கொண்டது. சிறு வயது முதலே அடுக்கடுக்கான தோல்விகளால் புரட்டி எடுக்கப்பட்ட ஜாக் மா, ‘‘தோல்விகள்தான் எனது வாழ்க்கைப் பயணத்தின் திசைகாட்டிகள்’’ என்று குறிப்பிடுகிறார்.

1964-ம் ஆண்டு ஹாங்சூ என்ற சிறுநகரில் பிறந்தார் ஜாக் மா. தாயும் தந்தையும் கதைசொல்லிகள். பள்ளிப்படிப்பில் ஜாக் மா சுமார் ரகம். ஆரம்பப் பள்ளித் தேர்வுகளில் இரண்டு முறை தோற்றுப்போனார். இடைநிலைப் பள்ளித் தேர்வுகளில் மூன்று முறை தோல்விகண்டார். பள்ளிப் பாடங்களில் திணறிய ஜாக் மா, ஆங்கிலப் புலமையை வளர்த்துக்கொள்வதில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார்.

கம்யூனிச ஆட்சியின் கெடுபிடிகள் குறைந்திருந்த காலகட்டத்தில், தொழில் தொடங்குவது பற்றிய ஆர்வம் அவருக்குள் சிறுவயது முதலே இருந்தது. அதற்கு ஆங்கிலம் பேசும் திறன் அவசியம் என்பதால், வானொலியில் ஆங்கிலச் செய்தி அறிக்கை கேட்பதை வழக்கமாக்கிக்கொண்டார். மேலைநாட்டுப் பயணிகளுக்குச் சுற்றுலா வழிகாட்டியாகத் தானே முன்சென்று உதவியதன்மூலம் தனது ஆங்கிலப் பேச்சுத் திறனை வளர்த்துக்கொண்டார்.

கல்லூரிப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை எழுதிய அவர், அதிலும் 3 முறை தோல்விகண்டார். ஒருமுறை கணிதப் பாட தேர்வில் 120 மதிப்பெண்ணுக்கு ஒரே ஒரு மதிப்பெண் வாங்கியிருந்தார். “கணக்கு என்றாலே எனக்கு அலர்ஜி. இப்போதும்கூட கம்பெனியின் வரவு, செலவுக் கணக்குகளின் நுட்பங்கள் எனக்குப் பிடிபடுவதில்லை” என்று அண்மையில் கூறியிருந்தார் ஜாக் மா. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சேரலாம் என்ற ஆசையோடு, அதற்கான நுழைவுத் தேர்வை எழுதினார். அதிலும் தோல்வி. அடுத்தடுத்து 10 முறை நுழைவுத் தேர்வை எழுதி, 10 முறையும் தோல்வி அடைந்தார். அதன்பின் ஹாங்சூ நார்மல் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பட்டப் படிப்புக்கு ஒருவழியாகத் தேர்வாகி பட்டம் பெற்றார்.   

அதன்பின் வேலைதேடும் படலத்தின்போதும் அடுக்கடுக்கான தோல்விகள். வேலைகேட்டு அவர் ஏறி இறங்கிய 30 இடங்களில் நிராகரிக்கப்பட்டார். தற்காப்புக் கலையில் அனுபவம்பெற்ற ஜாக் மா, போலீஸ் அதிகாரி வேலையில் சேர்ந்துவிடலாம் என்று ஆவலோடு முயற்சி செய்தார். ‘உயரம் போதாது’ என்று அனுப்பிவிட்டார்கள். கே.எப்.சி நிறுவனம், சீனாவில் உணவகங்கள் திறப்பதை அறிந்து அங்கு வேலை கேட்டுச் சென்றார் ஜாக் மா. மொத்தம் 24 பேர் நேர்முகத் தேர்வுக்குச் சென்றிருந்தார்கள். 23 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஜாக் மா மட்டும் நிராகரிக்கப்பட்டார்.
பல போராட்டங்களுக்குப் பின்னர், ஹாங்சூ டயான்சி பல்கலைக்கழகத்தில் மாதம் 7,500 ரூபாய் சம்பளத்தில் அவருக்கு ஆங்கில ஆசிரியர் வேலை கிடைத்தது. அவரது மனம் முழுவதும் சுயமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்பதில் இருந்தது. அதற்காகத் தொழில் நிர்வாகப் படிப்பில் சேர்ந்து பட்டம் பெற்றார்.

சீனாவில் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் சூடுபிடிக்கத் தொடங்கிய 1990-ம் ஆண்டுகளில் ஹைபோ என்ற மொழிபெயர்ப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். தொடக்கத்தில் ஒரு சில வாடிக்கையாளர்கள் கிடைத்தபோதும், எதிர்பார்த்த வருமானம் கிடைக்காததால் விரைவில் அந்த நிறுவனத்தை மூட வேண்டியிருந்தது. முதலாவது தொழில் முயற்சியிலும் தோல்வி.

மொழிபெயர்ப்பு வேலைகள் தொடர்பாக அமெரிக்கா செல்ல அவருக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. இன்டர்நெட் யுகம் பிறந்துவிட்டதை நேரில் பார்த்த ஜாக் மா, சீனாவில் இன்டர்நெட் தொழில் தொடங்க முடிவு செய்தார். ‘சைனா பேஜஸ்’ என்ற இணையதள யெல்லோ பேஜஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். சிறு வணிக நிறுவனங்களுக்கு வர்த்தகத் தகவல் தொடர்பாளராக தனது இணையதளத்தை உருவாக்கினார். நிறுவனங்கள் பற்றிய தகவல்களைத் திரட்டி வெளியிட நிறைய பேரை வேலைக்கு அமர்த்தினார். கடன் வாங்கி விரிவாக்கம் செய்தபோதும், எதிர்பார்த்த வருமானம் வரவில்லை. அந்த நிறுவனத்தையும் மூடிவிட நேர்ந்தது. இரண்டாவது தொழில் முயற்சியும் படுதோல்வி. 
 
தற்காலிகமாக வேறு வேலையில் சேர்ந்துகொண்ட ஜாக் மா, 1999-ம் ஆண்டில் அலிபாபா நிறுவனத்தைத் தொடங்கினார். தனது நண்பர்கள் பலரையும் அதில் முதலீடு செய்யவைத்தார். சீன ஏற்றுமதி யாளர்கள் தங்கள் பொருட்களைப் பற்றி வெளிநாடு களில் உள்ள வணிகர்களுக்குத் தகவல் தெரிவிக்கச் செய்வதே அதன் முதன்மையான நோக்கம். ஆரம்பக்கட்டத்தில் நல்ல வரவேற்பு இருந்தபோதும், நிறுவனத்தின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வது பெரும் போராட்டமாக இருந்தது. ஓரிரு ஆண்டுகள் போராட்டத்துக்குப் பின்னரும்கூட, நிறுவனம் திவால் ஆகிவிடக் கூடிய நிலைமை இருந்தது.

தோற்றவர்களின் கதை - 10

அமெரிக்காவுக்குச் சென்று வென்ச்சர் கேபிடலில் நிதி திரட்ட அவர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. 2001-ம் ஆண்டில் அலிபாபா நிறுவனம், தனது வெளிநாடுவாழ் பணியாளர்கள் அனைவரையும் வேலையில் இருந்து நீக்க வேண்டிய நெருக்கடி. நிதிச் சிக்கல்கள் நெருக்கிய அந்தக் காலகட்டத்தில் பல தவறுகள் நேர்ந்ததாகப் பின்னர் ஜாக் மா குறிப்பிட்டார். ‘அலிபாபாவும் 1001 இரவுகளும்’ என்ற புகழ்பெற்ற கதைத் தொகுதித் தலைப்பை ஒப்பிட்டு ‘‘அந்தக் காலகட்டம் அலிபாபாவும் 1001 தவறுகளும் காலகட்டம்’’ என்று அவர் கூறுவதுண்டு.

விடாமுயற்சி என்ற பண்பு ஜாக் மாவின் பிறவிக் குணமாக இருந்தது. அனைத்துப் பிரச்னைகளையும், வாய்ப்புகளாக மாற்றினார் ஜாக் மா. அலிபாபாவின் சேவைகளை விரிவாக்கம் செய்தார். ஆன்லைன் வர்த்தகத் தளமாக மாற்றினார். ஊடகங்களில் தோன்றி ‘‘200 கோடி வாடிக்கையாளர்கள் எனது இலக்கு’’ என்று தனது பிரமாண்டமான கனவுகளைப் பற்றி நம்பிக்கையோடு பேசினார். ஊழியர்களை ஊக்குவித்தார். வாடிக்கையாளர்களை மின்னல் வேகத்தில் அதிகரித்தார். அலிபாபா நிறுவனம் நிதிச் சிக்கல்களில் இருந்து விடுபட்டு, லாபகரமான நிறுவனமாக மாறியது.

தற்போது உலகிலேயே நம்பர் ஒன் சில்லரை விற்பனை நிறுவனமாக உயர்ந்துவிட்டது அலிபாபா. ஒரே நாளில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து சாதனை படைத்திருக்கிறது. வணிகரீதியில் பெரும் சாதனை படைத்துவரும் ஜாக் மா, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிகுந்த அக்கறை காட்டி வருகிறார். சிறு வயதில் தான் அனுபவித்த பசுமையான சூழலுக்குத் திரும்பிச்செல்ல விரும்புவதாக அவர் குறிப்பிடுவதுண்டு. அலிபாபா நிறுவனத்தின் லாபத்தில் 0.3 சதவிகிதம் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணிகளுக்கு வழங்கப்படுகிறது.

தோல்விகளை வெற்றிகளாக மாற்றும் கலையில் வல்லவரான ஜாக் மா இளைஞர்களுக்குக் கூறும் அறிவுரை இதுதான்: ‘‘தோல்விகளைக் கண்டு அச்சப்பட வேண்டாம். தோல்விகளில் இருந்து கற்றுக்கொண்டு முன்னேறப் பழகுங்கள். இன்று கடினமாக இருக்கும். நாளை இன்னும் மோசமானதாக இருக்கும். நாளை மறுநாள் விடிவு பிறக்கும் - நம்பிக்கையோடு முயற்சிகளைத் தொடருங்கள்.’’

(இன்னும் வெல்வோம்)