Published:Updated:

தோற்றவர்களின் கதை - 11

தோற்றவர்களின் கதை - 11
பிரீமியம் ஸ்டோரி
News
தோற்றவர்களின் கதை - 11

சுசி திருஞானம்தொடர்

தோற்றவர்களின் கதை - 11

ஹென்றி ஃபோர்ட்

ஹென்றி ஃபோர்ட் - கார் வடிவமைப்பின் பிதாமகன்; பிரமாண்டமான ஆலைத்தொழில் சிந்தனைக்கு வித்திட்ட மாமேதை; பிரான்சைஸிங் முறையில் உலகின் முதலாவது பலமான வணிக நெட்ஒர்க்கை உருவாக்கிய முன்னோடி; பல லட்சம் தொழில் முனைவோருக்கு முன்மாதிரி!

அவரது மாபெரும் வெற்றி சாம்ராஜ்யம், படுதோல்விகள் என்ற அடித்தளத்தில் இருந்து உருவானது. தோல்விகளை வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாற்றும் உத்தியை, பெரும் அவமானங்களுக்கு இடையே அவர் கற்றுக் கொண்டார். “எனது தோல்விகளும் அவை தந்த வேதனையும், இரும்பைப் போன்ற மன உறுதியை வளர்த்துக்கொண்டு முன்னேற எனக்கு உதவின” என்று பின்னாட்களில் குறிப்பிட்டார் ஹென்றி ஃபோர்ட். 

அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாநிலத்தில் ஒரு விவசாயப் பண்ணைப் பகுதியில் 1863-ம் ஆண்டில் பிறந்தார் ஹென்றி ஃபோர்ட். 15 வயதில் அவருக்கு ஒரு கைக்கடிகாரத்தைப் பரிசாகக் கொடுத்தார் அவரது தந்தை. அதனைப் பலமுறை தனித்தனிப் பாகங்களாகக் கழற்றி மாட்டுவதை அவர் வேடிக்கை விளையாட்டாகக் கொண்டிருந்தார். பொறியியல் சிந்தனை அவரது நாடி நரம்பெல்லாம் பரவியிருந்தது.

16 வயதில் டெட்ராய்ட் தொழில் நிறுவனம் ஒன்றில் பயிற்சிப் பொறியாளராக வேலையில் சேர்ந்தார். பின்னர் பிரபல விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் நடத்திவந்த எடிசன் எலெக்ட்ரிக் கம்பெனியில் 40 டாலர் மாதச் சம்பளத்துக்கு, பொறியாளராக வேலையில் சேர்ந்தார்.

குதிரை வண்டிகளும், ரயில் வண்டிகளும் மட்டுமே போக்குவரத்து வாகனங்களாகக் கோலோச்சிவந்த காலகட்டம் அது. ஒருநாள், எரிவாயுவால் இயங்கும் மோட்டாரைக் கவனித்த ஹென்றி ஃபோர்ட், இதை அடிப்படையாக வைத்து குதிரையில்லாத கார் வண்டியை உருவாக்கினால் போக்குவரத்து முறையில் ஒரு புரட்சியை உருவாக்கிவிடலாம் என்று கனவு கண்டார். இந்தக் கனவு அவரைத் தூங்கவிடாமல் செய்தது.

தனது வீட்டின் பின்புறத்தில் சிறு தொழிற்கூடத்தை உருவாக்கிய ஹென்றி ஃபோர்ட், கசோலின் கார் வண்டியை உருவாக்கும் முயற்சிகளைத் தொடங்கினார். எடிசன் எலெக்ட்ரிக் கம்பெனியில் இரவில் வேலைபார்த்த ஹென்றி ஃபோர்ட், பகலில் சிறிதுநேரம் மட்டுமே தூங்கிவிட்டுப் பின்னர், தனது மோட்டார் கார் வடிவமைப்பு வேலைகளில் மும்முரமாக ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

‘‘ஏன்டா... உன் நேரத்தை வீணடிக்கிறாய்?’’ என்று வசைபாடினார் தந்தை. ‘‘வாழ்க்கையைச் சுகமாக வாழத் தெரியாதவன்’’ என்று நகையாடினர் நண்பர்கள்.  எதையும் காதில் வாங்காமல் தனது முயற்சிகளைத் தொடர்ந்தார் ஹென்றி ஃபோர்ட். பல தோல்விகளுக்குப் பின்னர், ஒரு சிலிண்டர் கசோலின் மோட்டார் என்ஜினை உருவாக்கினார் ஃபோர்ட்.  இதனை மேலும் செம்மைப்படுத்தி, 1896-ம் ஆண்டில், ‘குவாட்ரிசைக்கிள்’ என்று அழைக்கப்பட்ட குதிரையில்லா கார் வண்டியை வடிவமைத்துவிட்டார். எத்தனாலால் இயக்கப்பட்ட இரண்டு சிலிண்டர் இன்ஜினும், மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகமும் அந்த நான்கு சக்கர வண்டியின் சிறப்புகள்.

அடுத்த 2 ஆண்டுகளுக்குள், மேலும் மேம்படுத்தப்பட்ட குவாட்ரிசைக்கிள் கார் வண்டியை உருவாக்கினார் ஹென்றி ஃபோர்ட். அதேபோன்ற வண்டிகளைத் தயாரிக்கும் தொழிற்சாலையைப் பெரிதாக உருவாக்க வேண்டும் என்பது அவரது ஆசை. அதற்காக, எடிசன் கம்பெனி வேலையிலிருந்து விலகிவிட்டார்.

தோற்றவர்களின் கதை - 11

சொந்தத் தொழிலுக்கான நிதி திரட்டுவதற்காக, பல செல்வந்தர்களைச் சந்தித்து உதவி கோரினார். அவமானங்களே பரிசாகக் கிடைத்தன. ‘‘இதுவரை இல்லாத புதிய தொழிலில் முதலீடு செய்து நஷ்டப்பட விரும்பவில்லை’’ என்பதுதான் அனைவரின் பதில். டெட்ராய்ட் நகர மேயர் மூலமாக வில்லியம் மர்பி என்ற தொழிலதிபரைச் சந்தித்து, தனது தொழில் திட்டத்தை விளக்கினார் ஹென்றி ஃபோர்ட். அவரைத் தனது குவாட்ரிசைக்கிள் வண்டியில் ஏற்றிக்கொண்டு 100 கிலோமீட்டர் பயணம் செய்து காட்டினார். திருப்தி அடைந்த வில்லியம் மர்பி, தொழிலுக்கான ஒரு பகுதி நிதியைத்  தர ஒப்புக்கொண்டார். மீதிப் பணத்தைப் பல நண்பர்கள், உறவினர்கள் மூலமாகத் திரட்டிய ஹென்றி ஃபோர்ட், 1899-ம் ஆண்டில் ‘டெட்ராய்ட் மோட்டார் கம்பெனி’ என்ற தனது சொந்தக் கம்பெனியைப் பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கினார்.

கார் தயாரிப்பு என்ற தொழிலே புதியதாக இருந்த அந்தக் காலகட்டத்தில், தேவைப்பட்ட உதிரிப் பாகங்கள் கிடைப்பதில் தாமதமாகின. திறன்பெற்ற ஊழியர்கள் கிடைப்பதிலும் சிக்கல். எதிர்பார்த்த வேகத்தில் கார் தயாரிப்பு நடக்கவில்லை. முதலீடு செய்தவர்கள் உடனடி லாபத்தை எதிர்பார்த்தனர். ஹென்றி ஃபோர்ட்க்கு கடும் நெருக்கடி. வேறு வழியின்றி, தொடங்கி இரண்டு ஆண்டு முடிவதற்குள் டெட்ராய்ட் மோட்டார் கம்பெனி மூடப்பட்டது.

கம்பெனி மூடப்பட்டபோதும், பந்தயக் கார்களைத் தயாரித்து, தேவைப்படுவோருக்கு விற்றுவந்தார் ஹென்றி ஃபோர்ட். தோல்வியில் இருந்து கற்ற பாடங்களுடன் மீண்டும் கார் தயாரிப்பு கம்பெனி தொடங்கலாம் என்ற ஆர்வம் அவருக்கு வந்தது. முதலீட்டாளர்கள் பலரையும் சந்தித்து நிதி உதவி கோரினார். ஏற்கெனவே அவரது கம்பெனி மூடப்பட்டதை அறிந்திருந்த அவர்கள், ‘‘முடியாது’’ என்ற பதிலையே  கொடுத்தனர். தொடர் தோல்விகளே மிஞ்சின.

முதல் முறை நிதி உதவி அளித்த வில்லியம் மர்பியை சந்தித்து, மீண்டும் நிதி உதவி தருமாறு வேண்டுகோள் விடுத்தார் ஹென்றி ஃபோர்ட். முதலில் மறுத்த மர்பி, தொடர் வேண்டுகோள்களுக்குப் பின்னர், ‘நிபந்தனைகளுடன் நிதி உதவி’ தருவதாக ஒப்புக் கொண்டார். 1901-ம் ஆண்டில், ‘ஹென்றி ஃபோர்ட் கம்பெனி’ என்ற பெயரில் புதிய கார் உற்பத்தி ஆலையைத் தொடங்கினார் ஹென்றி ஃபோர்ட். என்ன வகையான கார்களுக்கு முன்னுரிமை என்பதில் மர்பியுடன் சர்ச்சை ஆரம்பித்தது. இருக்கிற கார் டிசைனை வைத்து அவசர அவசரமாக கார்களை உற்பத்தி செய்ய வலியுறுத்தினார் மர்பி. மேம்படுத்திய வலிமையான கார்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் ஹென்றி ஃபோர்ட். கடுப்பான மர்பி, புதிய ஆலோசகர்களை ஆலைக்குள் கொண்டுவந்தார். ஆலோசகர்களின் தலையீடுகளால் வெறுத்துப்போனார் ஹென்றி ஃபோர்ட். ஒரே வருடத்தில் ஹென்றி ஃபோர்ட் கம்பெனியும் மூடப்பட்டது.

எல்லா இடங்களிலும் அவமானமே மிஞ்சியது. ஹென்றி ஃபோர்ட் பெயரைக் கேட்டாலே நிதி நிறுவனங்கள் முகம் சுளித்தன. ஆனால், ஹென்றி ஃபோர்ட்க்கு இதுவரை இல்லாத தன்னம்பிக்கை உருவாகி இருந்தது. ஒரு கார் தயாரிப்பு கம்பெனி எப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்பதை இரு பெரும் தோல்விகளில் இருந்து பாடமாகக் கற்று வைத்திருந்தார் அவர். தோல்வியைத் தோற்கடிக்கும் உறுதியுடன் மீண்டும் களம் இறங்கினார் ஹென்றி ஃபோர்ட். பல மாதங்கள் முயற்சிக்குப் பின்னர் அலெக்சாண்டர் மால்கம்சன் என்ற பெரும் தொழிலதிபரிடம் தனது திட்டத்தை எடுத்துரைத்து அவரது  நம்பிக்கையைப் பெற்றார்.

‘ஃபோர்ட் மோட்டார் கம்பெனி’ என்ற பெயரில் மூன்றாவது கம்பெனியைத்  தொடங்கிய ஹென்றி ஃபோர்ட், இந்த முறை தனது அனுபவப் பாடங்களையெல்லாம் ஒன்று திரட்டி வெற்றிக்காக வெறியுடன் உழைத்தார். வாடிக்கையாளர்கள் விரும்பும் அழகிய கார் வடிவமைப்புக்கு முதல் முக்கியத்துவம் அளித்தார். குறைவான எடையும், அதிகமான திறனும் கொண்ட கார்களைத் தயாரித்து அளிக்க, உலகின் மிகப் பெரிய உற்பத்தித் தொடர் ஆலையை உருவாக்கினார். நல்ல சம்பளம் கொடுத்ததால், திறன்மிக்க ஊழியர்கள் அவரைத் தேடி வந்தனர். நிதி முதலீடு செய்தவர்கள் உற்பத்தியில் தலையிடாமல் பார்த்துக்கொண்டார்.

தோற்றவர்களின் கதை - 11

கார் விற்பனை சூடுபிடித்தது. எனினும், கார்களை வாங்கிச் சென்றவர்கள் நிறையப் புகார்கள் கூறினார்கள். எந்த ஊரிலிருந்து புகார் வந்தாலும் அந்த ஊருக்கு உடனடியாகப் பயிற்சிபெற்ற மெக்கானிக்குகளை அனுப்பி சரிசெய்துகொடுத்தார். வாடிக்கை யாளர்களின் விருப்பு வெறுப்புகளை மெக்கானிக்குகள் மூலமாகக் கேட்டுத் தெரிந்துகொண்டார். உலைக்கூடத்தில் தானே களம் இறங்கி, குறைகள் வராத கார் வடிவமைப்பை உருவாக்கினார். 

விளைவு? 1904-ம் ஆண்டுக்குள் உலகின் நம்பர் ஒன் கார் தயாரிப்பு நிறுவனமானது ஃபோர்ட் மோட்டார் கம்பெனி. அவரது வடிவமைப்பில் உருவான T மாடல் என்ற பிரபலமான மாடல் கார்கள் உலகச் சந்தையில் முதலிடம்  பிடித்தன. 100 ஆண்டுகளுக்குப் பின்னரும் உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாகத் தொடர்கிறது ஃபோர்ட் மோட்டார் கம்பெனி. ஹென்றி ஃபோர்ட் அடைந்த இமாலய வெற்றிகளைப் பற்றி இன்றும் உலகம் பேசுகிறது.

தனது படுதோல்விகளையும், வேதனைகளையும் வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாற்றிய அந்த மேதையின் வார்த்தைகளைக் கவனியுங்கள்: “தோல்வி குறித்து அவமானப்பட எதுவுமில்லை. தோல்வி என்பது, கூடுதல் புத்திசாலித்தனத்துடன் மீண்டும் முயற்சிசெய்து முன்னேறுவதற்கான ஒரு வாய்ப்பு.’’

(இன்னும் வெல்வோம்)