Published:Updated:

மைல்ஸ் டு கோ - 23

மைல்ஸ் டு கோ
பிரீமியம் ஸ்டோரி
News
மைல்ஸ் டு கோ

படங்கள்: ஸ்டில் ராபர்ட்

`ஆடுகளம்' படம் முடித்து அடுத்த கதைக்கான தேடலில் இருந்தபோது, தங்கவேலவனின் ‘வேங்கச்சாமி’ கதையில் சில மாதங்கள் வேலை செய்தோம்.

பிறகு, ‘ராஞ்சனா’ படத்தின் இயக்குநர் ஆனந்த் ராய் தயாரிப்பில் இந்தியில் ஒரு படம் இயக்கும் திட்டம் இருந்தது. அட்வான்ஸ்கூட வாங்கியிருந்தேன். அதன் ஸ்கிரிப்ட் வேலை முடிந்தும் படம் சில காரணங்களால் தொடங்கவில்லை. இப்படிப் பல புராஜெக்ட்கள் ஆரம்பித்து பிறகு தள்ளிப்போனது. `ஆடுகளம்' படம் ரிலீஸ் ஆகி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டதால், எனக்கு உடனே படம் தொடங்க வேண்டும் என்ற நெருக்கடி. அப்போது தனுஷ் தயாரித்து நடிக்க, `சூதாடி’ என்ற படத்தைத் தொடங்கினோம்.

`தேசிய நெடுஞ்சாலை' படத்தின் ப்ரீ புரொடக்‌ஷனில் என்னுடன் பணிபுரிந்த செந்தில் சூதாட்டம் பற்றி நிறையத் தகவல்களைச் சொல்லியிருக்கிறான். அவன் சொன்ன தகவல்களை வைத்து ‘சூதாடி’ என்ற ஸ்கிரிப்ட்டை எழுதினோம். அதில் இரண்டு முக்கியக் கதாபாத்திரங்கள். ஒன்று தனுஷ்; இன்னொன்று பார்த்திபன். தனுஷ் அப்போது இந்தியில் `ஷமிதாப்' படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். அந்தப் படத்துக்கு இடையே `சூதாடி' படப்பிடிப்பு தொடங்கியது. `சூதாடி' ஷூட்டிங் சில நாட்கள் முடிந்ததும், தனுஷ் மீண்டும் `ஷமிதாப்' படத்துக்காக நான்கு மாதங்கள் செல்லவேண்டியிருந்தது.

நான்கு வருடங்கள் கழித்து அப்போதுதான் ஷூட்டிங் சென்றிருந்ததால், அந்தத் தொடர்ச்சியை விட வேண்டாம் என ஆசைப்பட்டேன். `அந்த இடைவெளியில் ஒரு சின்னப் படம் எடுத்துவிடலாம்' எனத் தோன்றியது. அதனால் `சூதாடி' புராஜெக்டைத் தள்ளிவைத்துவிட்டு, வேறு படம் எடுக்கலாம் என முடிவுசெய்தேன். செந்தில் அவன் சொன்ன சூதாட்டத் தகவல்களை வைத்து ஒரு ஸ்கிரிப்ட் செய்துவைத்திருந்தான். நான் அதைப் படமாக்குவதில் அவனுக்கு மனவருத்தம் இருந்தது. `சூதாடி' நின்றது, செந்திலுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்திருக்கும். ` `ஷமிதாப்' முடிப்பதற்குள் 35, 40 நாட்களில் ஒரு படம் எடுத்துவிடலாம்' என்ற ஐடியாவை தனுஷிடம் சொன்னேன். அவரும் `சரி' என்றார்.

மைல்ஸ் டு கோ - 23

அவ்வளவு குறுகிய நாட்களில் எடுக்க வேண்டும் என்றால், குறைவான கதாபாத்திரங்களும் லொக்கேஷனும் தேவைப்படும் கதையாக இருக்க வேண்டும் என நினைத்தேன். அந்தச் சமயத்தில்தான் தங்கவேலவன் ‘லாக்கப்’ நாவலைத் தந்தார். 15 பக்கங்கள் படித்ததுமே அது சரியாக இருக்கும் எனத் தோன்றியது. `லாக்கப்’ ஆசிரியர் சந்திரகுமார், தங்கவேலவனின் நண்பர். அவரிடம் `நாவலின் உரிமையைக் கொடுப்பாரா?' எனக் கேட்கச் சொன்னேன். அவரும் `சரி' என்றார். உடனே அதற்கு திரைக்கதை எழுதும் வேலையைத் தொடங்கினோம். இடைவேளை வரை பிரச்னை இன்றி திரைக்கதை வளர்ந்தது. ஆனால், இரண்டாம் பாதிக்கு அந்தக் கதை போதுமா என்ற சந்தேகம் எனக்கு வந்தது. அதனால் `லாக்கப்' கதையை எக்ஸ்டெண்ட் செய்து இரண்டாம் பாதிக்கு ஒரு ஐடியா பிடித்தோம். என்கொயரிக்கு வரும்  ஒரு ஆடிட்டர் தற்செயலாக இறந்துபோகிறார்.

அந்த அரசியல் விளையாட்டுக்குள் இந்த நான்கு பேரும் எப்படி மாட்டிக்கொள்கிறார்கள் என்பது மட்டும் மனதில் இருந்தது. நானும் இயக்குநர் சமுத்திரக்கனியும் அடிக்கடி பேசிக்கொள்வது உண்டு. ஒருநாள் அவரிடம் `விசாரணை' படத்தின் கதையை 15 நிமிடங்கள் சொல்லி, `நீங்கதான் அந்த இன்ஸ்பெக்டர் கேரக்டர்ல நடிக்கிறீங்க' என்றேன். உடனே, `எப்போ ஷூட்டிங், கூட யார் யாரெல்லாம் நடிக்கிறாங்க, நான் ரெடி’ என்றார். `எல்லாம் நம்ம பசங்கதான்!' என்றேன். எனக்கு நடிகர்கள் தினேஷையும் முருகதாஸையும் பல ஆண்டுகளாகத் தெரியும். ஒருநாள் தினேஷை அலுவலகத்துக்கு வரச் சொன்னேன். `அடுத்த மாசத்துல இருந்து ஷூட் போறோம். இந்தக் கதையில நீதான் ப்ராட்டகானிஸ்ட்' என தினேஷிடம் சொன்னேன். `ஒரே ஒரு ரூபாய் ஃப்ரேம் பண்ணி கொடுங்க சார். போதும்' என தினேஷ் தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினான்.

தினேஷிடம் `இது மனரீதியா ரொம்பப் பெரிய உழைப்பு தேவைப்படுற படம்ப்பா. ரொம்பக் கஷ்டப்படவேண்டியிருக்கும். பெரிய  போராட்டமா இருக்கும்' என்றேன். `பண்ணிடலாம் சார்' என்றவனிடம் கதையைச் சொல்ல ஆரம்பித்ததும் `ஆர்டராதானே ஷூட் பண்றோம். அப்படியே தினம் தினம் அந்தக் கஷ்டத்தை அனுபவிச்சே தெரிஞ்சுக்கிறோம் சார்' என்றான். கதை கேட்கவில்லை. அடுத்து, தனுஷிடம் சென்று `நான்கு பேரை வைத்து ஒரு படம் எடுக்கப்போகிறேன்' என்றேன். `கதை என்னன்னா...' என ஆரம்பித்ததும் `சொல்லாதீங்க சார்' என்றார். `கதை சொன்னா எனக்குப் பிடிக்கும். பிடிச்சா நான் நடிக்கணும்னு ஆசைப்படுவேன்.

அப்புறம் திரும்பவும் உங்களுக்கு லேட் ஆகும். நீங்க படம் எடுங்க சார். நீங்க படம் எடுக்கிறதுதான் எனக்கு சந்தோஷம். அதுல நான் நடிக்கணும்னு அவசியம் இல்லை' என்றார் தனுஷ். நடிகரும் கதை கேட்கவில்லை; தயாரிப்பாளரும் கதை கேட்கவில்லை. இந்த மாதிரியான ஒரு ஸ்பேஸ் எல்லா இயக்குநர்களுக்கும் அவர்களது கரியரின் எல்லா சமயங்களிலும் கிடைக்காது.ஒரு சில இயக்குநர்களுக்கு, அதுவும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே அந்தச் சலுகை கிடைக்கும். அந்தச் சலுகையை வைத்து சமூகத்துக்குப் பயனுள்ள ஒரு படம் எடுக்க வேண்டும் என நினைத்தேன். எந்தக் கேள்வியும் கேட்காமல் நான் சொல்வதைச் செய்யும் டீம் எனக்கு எப்போதும் அமையும். `விசாரணை' படத்தில் இன்னும் ஒருபடி மேலே சென்று, எனக்காக வேலைசெய்ய ஒரு நல்ல டீம் அமைந்தது.

 `விசாரணை'யில் வர்ஷாவும் சுரேஷும் முதன்மை உதவி இயக்குநர்கள். இருவருமே கடின உழைப்பாளிகள். எவ்வளவு வேலை தந்தாலும் முகம் சுளிக்காமல் செய்வதும், என்ன திட்டினாலும் எனர்ஜி குறையாமல் இருப்பதும் அவர்களது பலம். ஆனாலும், `விசாரணை' மாதிரியான படத்தைச் சமாளித்துவிட முடியுமா என்ற பயம் அவர்களுக்கு இருந்தது. `சூதாடி' சமயத்தில் நான் இயக்குநர் சுப்ரமணியசிவாவைப் பார்த்தேன். அவரை `சூதாடி' படத்தில் உடன் இருந்து உதவிசெய்யச் சொல்லி தயங்கியபடி கேட்டேன். அவர் உடனே எந்தத் தயக்கமும் இன்றி வந்து வேலைசெய்தார்.

`சூதாடி'க்குப் பிறகு `விசாரணை'யிலும் அவரது பங்களிப்பு தொடர்ந்தது. பொதுவாக நான் ஸ்பாட்டில் ஓர் உதவி இயக்குநரைப்போல எல்லா வேலைகளையும் எடுத்துச் செய்வேன். சிவா அந்த வேலைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு `க்ரியேட்டிவ் விஷயங்களை பற்றி மட்டும் நீங்கள் யோசியுங்கள்' எனச் சொல்லி, அதற்கான சூழலை ஏற்படுத்தித்தந்தார். `விசாரணை' படத்துக்கு சுப்ரமணியசிவா மிகப் பெரிய பலம்.  `ஆடுகளம்' படத்தில் பணிபுரிந்த பாஸ்கரும், நீண்டகாலமாக என்னுடன் இருந்த குமாரும், `விசாரணை' படத்தில் உதவி இயக்குநர்களாக வேலைசெய்தார்கள். மேலும், பாலு மகேந்திரா சார் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் இருந்து இரண்டு பேர் அன்பு என்ற பெயரிலும், பிரதீஷ், பாலா, டெரின் ஆகியோரும் வேலைசெய்தார்கள்.

மைல்ஸ் டு கோ - 23

படப்பிடிப்பு தொடங்கியதும் `விசாரணை' அதுவாகவே தன்னை வளர்த்துக்கொண்டது. முதல் பாதி ஸ்கிரிப்ட் இருந்தது. இரண்டாம் பாதி ஒரு ஐடியாவாக மனதில் இருந்தது. அதை ஸ்கிரிப்டாக எழுதுவதில் எனக்கு மிகப் பெரிய சவால் காத்திருந்தது. அந்த நான்கு பேருக்கும் நடக்கும் விஷயங்களை எழுதுவது எனக்குப் பயமாக இருந்தது. ஸ்பாட்டுக்குச் சென்றதும் என்ன விஷயம் என்பதைச் சொல்வேன். அப்படியே ஒவ்வொரு கதாபாத்திரமாக என்ன சொல்வார்கள் என்பதை அங்கேயே டிஸ்கஸ் செய்து படம்பிடித்தோம். ஸ்கிரிப்டே இல்லாமல்தான் இரண்டாம் பாதி முழுவதுமே ஷூட் செய்தோம்.

`விசாரணை' படம் என்னை நானே சுயபரிசோதனை செய்துக்கொள்ள வாய்ப்பு அளித்தது. ஒரு ஸ்கிரிப்ட் ரைட்டராக என் நிறைகுறைகளைத் தெரிந்துகொள்ள உதவியது. `விசாரணை' பட சமயத்தில் என்னை மிகவும் பாதித்த சம்பவம் எடிட்டர் கிஷோரின் மரணம்.அது ஈடுசெய்யமுடியாத மிகப் பெரிய இழப்பு. மரணம் கிஷோரை இழுத்துச்சென்ற விதம் கற்பனையே செய்ய முடியாதது. பேசிக்கொண்டே இருந்தவர், அப்படியே கீபோர்டு மீது சரிந்து விழுந்தார். ரத்த அழுத்தம் குறைவாக இருப்பதாகச் சொன்னார்கள். அடுத்து `ஸ்கேன் எடுக்க வேண்டும்' என்றார்கள். இரவு 11 மணிக்கு மூளைச்சாவு அடைந்துவிட்டதாகச் சொன்னார்கள்.

எவ்வளவு கனவுகள்... எவ்வளவு திட்டங்களுடன் நாம் வாழ்கிறோம்? அவை எல்லாமே மரணத்தின் முன்பு அர்த்தமற்றதாகிவிடுகின்றன. எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் மிகச் சாதாரணமாக வந்து நம்மை இழுத்துச் சென்றுவிடுகிறது மரணம். என் தேடல்களின் பாதையை மாற்றிய ஒரு முக்கிய நிகழ்வு அது. அதில் இருந்து மீண்டு வர, எனக்கு நான்கு மாதங்கள் ஆனது. `விசாரணை' படப்பிடிப்பே ஒரு போராட்டமான விஷயம்தான். யாராவது கஷ்டப்படுகிறார் என்றால், நம்மாலான உதவியைச் செய்வோம் அல்லது அந்த இடத்தில் இருந்து நகர்ந்துவிடுவோம்.

`விசாரணை'யில் நான்கு பேரைக் கஷ்டப்பட வைத்து, அதை நாங்களே படம்பிடித்தோம். விழுந்த அடிகள் எல்லாமே நிஜமான அடிகள். உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக லத்திகளை ஃபைபரில் செய்தோம். லத்திகள் டம்மி. ஆனால், அடிகள் உண்மை. முதல் மூன்று நாட்களில் நடித்த தினேஷ், முருகதாஸ், அஃப்சல், பிரதீஷ் நான்கு பேரும் கதறிவிட்டார்கள். ஒருமுறை பிரதீஷுக்கு அடி தவறி விழுந்துவிட்டது. அவன் கதறல் வித்தியாசமாகத் தெரிந்து ஷாட்டை கட் செய்வதற்குள் வலியில் துடித்துவிட்டான். ஆனால், அடுத்த நொடி `ரெடி சார்... ரெடி சார்' எனத் தயாராகிவிட்டான்.

`இவை அனைத்தையும் நிஜத்தில் அனுபவித்த ஒருவர் எழுதியிருக்கிறார். அதை நடிப்பதே இவ்வளவு சிரமம் என்றால், அதை அனுபவத்தவரின் வலி எவ்வளவு பெரியது? அதை நாம் வெளிக்கொண்டு வருவதென்றால் அதற்கான டெடிகேஷன் தேவை. இது ஒண்ணும் பெரிய வலி இல்லை சார்' என எப்போதும் தினேஷ் சொல்லிக்கொண்டே இருப்பான். அத்தனை சவால்களுக்கும் இடையில் தொடர்ந்து படமாக்க எங்களுக்கு அது ஒன்றுதான் ஊக்கச் சக்தியாக இருந்தது. தினேஷை அடித்துவிட்டு ஒவ்வொரு ஷாட்டுக்குப் பிறகும் அஜய் கோஷ் (ஆந்திரா போலிஸாக நடித்தவர்) அவனைக் கட்டிபிடித்து அழுவார்.  எடிட்டிங்கிலும் `விசாரணை' படம் கடினமாக இருந்தது.

மைல்ஸ் டு கோ - 23

வழக்கமாக, காலை 10 மணிக்குத் தொடங்கினால் இரவு 12 மணி வரை எடிட்டிங்கில் இருப்பேன். ஆனால், `விசாரணை' பட எடிட்டிங்கில் ஒரு மணி நேரத்துக்கு மேல் என்னால் இருக்க முடியவில்லை. காதுகளில் கதறல் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். டப்பிங்கும் தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே நடந்தது. வழக்கமாக போஸ்ட் புரொடக்‌ஷனுக்கு ஆகும் நாட்களைப்போல இரண்டு மடங்கு நாட்கள் `விசாரணை' படத்துக்கு ஆனது. `விசாரணை' கதையில் இருந்த உண்மை அது ஒரு சர்வதேசத் தளத்துக்கான படமாக அமையும் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால் சர்வதேசத் திரைப்பட விழாக்களுக்கு `விசாரணை' படத்தைக் கொண்டுசெல்ல வேண்டும் என விரும்பினேன். அதற்கு அனுராக் காஷ்யப்பின் எக்ஸிக்யூட்டிவ் புரொட்யூசர் குனீத் மோங்கா உதவினார். 

72 வருட வெனீஸ் திரைப்பட விழா வரலாற்றில், போட்டிப் பிரிவில் தேர்வான முதல் தமிழ்த்  திரைப்படம் `விசாரணை'. வெனீஸுக்குச் செல்லும்போது சந்திரகுமார் இல்லாமல் போகக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அவரிடம் விஷயத்தைச் சொன்னபோது அவர் சொன்னது இதுதான்... `அன்னைக்கு எங்களோட அழுகுரல் அந்த நாலு சுவரைத் தாண்டி கேட்டுடாதான்னு நாங்க ஏங்கினோம். இன்னைக்கு ஒரு திரைப்படம் மூலம் உலகம் முழுக்கக் கேட்கப் போகுதுங்கிறது எனக்கு ஆறுதலா இருக்கு'. வெனீஸில் அவருடைய ஆதங்கத்தை அற்புதமாக வெளிப்படுத்தினார்.

`விசாரணை', என் கரியரில் ஒரு ஸ்பெஷலான படம். இதை ஆரம்பித்தபோது ஒரு சின்னப் படம் என்றுதான் ஆரம்பித்தேன். ஆனால், என் திரைப் பயணத்தில் மிகப் பெரிய படங்களில் `விசாரணை' ஒன்றாக இருக்கும். சினிமா உலகின் மிகப் பெரிய சர்வதேச ஆளுமைகளுக்கு மத்தியில், தமிழ் என்ற மொழியில் இப்படி ஒரு படம் எடுத்திருக்கிறார்கள் என தன் மூலம் எங்களை அடையாளப்படுத்தியது `விசாரணை'. விமர்சனப் பார்வையில் நல்ல படம் எனப் பெயர் வாங்கியதைத் தாண்டி வணிக ரீதியாகவும் அது அடைந்த வெற்றி மிக முக்கியமானது. வணிக வெற்றி என்றால், இரண்டரை கோடி முதலீடு செய்து 10 கோடி எடு்ப்பதைச் சொல்லவில்லை. `விசாரணை' போல ஒரு படம் முதலீடுசெய்த பணத்தை எடுத்ததையே நான் வெற்றியாகத்தான் பார்க்கிறேன். `விசாரணை' ஒரு நல்ல ஓப்பனிங்கைப் பெற்றாலும், அடுத்த வாரமே வசூல் குறைந்தது.

பெண்கள் மற்றும் குழந்தைகள்  தியேட்டருக்கு வரவில்லை என்பதும், ரிப்பீட்டட் ஆடியன்ஸ் இல்லை என்பதும் அதற்கு முக்கியக் காரணங்கள். `விசாரணை' படம் எங்கள் குழுவுக்கு வாங்கித் தந்திருக்கும் பேரும், பொறுப்பும்   பெரியது. அதன் மூலம்  எங்களுக்கு அமைந்திருக்கும் பாதையும் கடினமானது. அந்தப் பயணத்தை எதிர்கொள்வதே மிகப் பெரிய சவால்தான். இப்போது தனுஷ் நடிக்க ‘வடசென்னை’ படத்தின் படப் பிடிப்பைத் தொடங்கி, அந்தப் பயணத்தைத் தொடர்கிறோம், இதில் வரக்கூடிய சவால்களை எதிர்கொள்ள தயாராக.

- பயணிப்பேன்...

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan