Published:Updated:

தோற்றவர்களின் கதை - 13

தோற்றவர்களின் கதை - 13
பிரீமியம் ஸ்டோரி
News
தோற்றவர்களின் கதை - 13

சுசி திருஞானம்தொடர்

தோற்றவர்களின் கதை - 13

புரூஸ் லீ

ற்காப்புக் கலையின் மந்திர ஆற்றலை, மொத்த உலகுக்கும் எடுத்துச் சொன்ன மின்னல் வேகச் சண்டைக்காரர் புரூஸ் லீ. ‘என்டர் தி டிராகன்’ போன்ற படங்கள் மூலமாக உலக இளைஞர்களை வசீகரித்தவர். ஆசியா கண்டத்தவர்கள் மீதான ஹாலிவுட் தீண்டாமைக்கு மரண அடி கொடுத்த சாகச வீரர்.

அவரது திரைப்படக் காட்சிகள் இன்றும் எண்ணற்ற லைக்குகளை அள்ளிக் கொண்டிருக்கின்றன. நுஞ்சாக் உபகரணத்தை வைத்து அவர் அதிரடியாக டேபிள் டென்னிஸ் ஆடியிருக்கிறார். ஆள்காட்டி விரலையும் பெருவிரலையும் மட்டுமே தரையில் ஊன்றி, ‘புஷ் அப்’ பயிற்சி செய்திருக்கிறார். அதிவேகமாக நுஞ்சாக்கைச் சுற்றி ஒருவரின் வாயில் இருக்கும் தீக்குச்சியைப் பற்றவைத்திருக்கிறார். தன்னை நோக்கி அடுத்தடுத்து வீசி எறியப்படும் தீக்குச்சிகள் அனைத்தையும், நுஞ்சாக் சுற்றியபடியே கவனம் சிதறாமல் ஒன்றன்பின் ஒன்றாகத் தீப்பற்றச் செய்திருக்கிறார்.

30 வயதில் உலகப் புகழ்பெற்று 32 வயதிலேயே மறைந்த அந்தச் சாகச வீரரின் வாழ்க்கையே ஒரு பாடம். துல்லியமான வாழ்க்கைக் குறிக்கோளை உருவாக்கி ஜெயிப்பது எப்படி, மனதின் அற்புத ஆற்றலை ஒன்றுதிரட்டி வெல்வது எப்படி போன்ற வாழ்வியல் கலைகளில் கரைகண்டவர் புரூஸ் லீ.

அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் 1940-ம் ஆண்டு பிறந்தார் புரூஸ் லீ. அவரது தந்தை லீ கோய்ன் ஒரு சீனர். தாயார் கிரேஸ், பாதி ஐரோப்பிய மரபினர். எனவே மத, இனப் பாகுபாடுகள் கடந்த மனிதராகவே புரூஸ் லீ வளர்ந்தார். ஹாங்காங் நகருக்குக் குடிபெயர்ந்தது லீ குடும்பம். அங்கே சுமார் 20 சீனப் படங்களில் குழந்தை நட்சத்திரமாகத் தோன்றும் வாய்ப்பு புரூஸ் லீக்குக் கிடைத்தது. குழந்தைப் பருவத்தில் அவர் பரம சாது. அவரது 13 வயதில் நடந்த ஒரு தெருச்சண்டையில் தற்செயலாக அவரை இழுத்து விட்டுவிட்டனர். பயிற்சியில்லாத புரூஸ் லீயை எதிராளி அடித்து நொறுக்கிவிட்டார். அந்த எதிர்பாராதத் தோல்வி அவருக்குள் ஒரு வைராக்கியத்தை உருவாக்கிவிட்டது. ‘‘வெல்லப்பட முடியாத சண்டைவீரனாக மாறுவேன்’’ என்று அப்போதே உறுதி எடுத்தார் புரூஸ் லீ.

விங் சுவான் என்ற தற்காப்புக் கலை நிபுணரிடம் சேர்ந்து, வெறித்தனமாகப் பயிற்சியில் ஈடுபட்டார். அதன் பின்னர், புரூஸ் லீ ஒரு சண்டையில்கூடத் தோற்றதே இல்லை. ‘வம்புச் சண்டைக்குப் போகமாட்டேன், வந்த சண்டையைவிட மாட்டேன்’ என்று முடிவோடு இருந்த புரூஸ் லீயை உள்ளூர் பிரமுகர் ஒருவரின் மகன் சீண்டிப் பார்க்க, அவனைத் துவைத்து எடுத்துவிட்டார் புரூஸ் லீ. பயந்துபோன புரூஸ் லீ-யின் பெற்றோர் அவரை மீண்டும் அமெரிக்கா அனுப்ப முடிவெடுத்தனர். 100 டாலரை அவரிடம் கொடுத்து, ‘‘எப்படியாவது பிழைத்துக்கொள்’’ என்று ஆலோசனை சொல்லி அமெரிக்காவுக்குக் கப்பலேற்றிவிட்டனர்.

தோற்றவர்களின் கதை - 13

புரூஸ் லீ

சியாட்டலில் இருந்த ஒரு நண்பரின் சீன உணவக விடுதியில் தங்கி, வேலை பார்த்துக் கொண்டே படித்தார் புரூஸ் லீ. டேபிள் துடைப்பது முதல் உணவு பரிமாறுவதுவரை உணவகத்தின் எல்லா வேலைகளையும் செய்துவந்தார். சில மாதங்களுக்குப் பின்னர், பகுதி நேரமாகத் தற்காப்புக் கலையை கற்றுக்கொடுக்கத் தொடங் கினார். சில ஆண்டுகளுக்குப் பின், பயிற்சிப் பள்ளியைத் தொடங்கினார். சீனர் அல்லாதவர் களுக்கு தற்காப்புக் கலையைக் கற்றுக் கொடுக்கக் கூடாது என்று சீன சமூகத்தவர்கள் பலர் சர்ச்சை செய்தனர். இதுவே ஒரு நாள், சவாலாக மாறியது. ‘‘வாங் ஜேக் மேன் என்பவருடன் புரூஸ் லீ மோத வேண்டும் - சண்டையில் புரூஸ் லீ தோற்றுவிட்டால் அவர் சீனர் அல்லாதவர்களுக்குத் தற்காப்புக் கலையைக் கற்றுக் கொடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்’’ என்று சவால் விடப்பட்டது. சண்டை ஆரம்பித்தது. தனது மின்னல் வேகத் தாக்குதல்களால் வாங் ஜேக் மேனை வீழ்த்திவிட்டார் புரூஸ் லீ.

தற்காப்புக் கலைப் பயிற்சிப் பள்ளியில் பெரிய வருமானம் இல்லை. சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்துப் பார்த்தார். அதிலும் சம்பளம் முறையாகக் கிடைக்கவில்லை. திருமணமாகி, இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்ட நிலையில் அன்றாட வாழ்க்கைக்கான நிதித் தேவைகளைச் சமாளிப்பதே அவருக்குப் பெரிய சவாலாக இருந்தது. அத்தனைச் சிரமங்களுக்கு இடையிலும் தத்துவப் புத்தகங்களையும், சுய முன்னேற்றப் புத்தகங்களையும் தேடித் தேடி வாசிப்பதைப் பழக்கமாக்கிக் கொண்டிருந்தார் புரூஸ் லீ.

தான் வாசித்த புத்தகங்கள் தந்த வழிகாட்டுதலில், தனது வாழ்க்கை லட்சியத்தை ஒரு கட்டளை வாக்கியமாக உருவாக்கித் தனது டைரியில் எழுதினார் புரூஸ் லீ. 1969 ஜனவரியில் அவர் தனக்குத்தானே கைப்பட எழுதிய இந்தக் கட்டளை வாக்கியம்தான் அவரது வாழ்க்கையில் திருப்புமுனையை உருவாக்கியது. 

‘‘எனது அதிமுக்கியக் குறிக்கோள் - புரூஸ் லீ ஆகிய நான், அமெரிக்காவில் மிக அதிக ஊதியம் பெறும் ஆசிய சூப்பர் ஸ்டாராக உயர்வேன். அந்த அந்தஸ்தைப் பெறுவதற்காக நான் நடிகன் என்ற முறையில் ரிஸ்க் எடுத்து முழு அர்ப்பணிப்போடு உழைப்பேன். 1970-ம் ஆண்டுமுதல், நான் உலகப் புகழ் பெறுவேன். 1980-ம் ஆண்டுக்குள் 10 மில்லியன் டாலர் சம்பாதிப்பேன். நான் விரும்பிய வகையில் மன அமைதியோடும் மகிழ்ச்சியோடும் வாழ்வேன்.”

தோற்றவர்களின் கதை - 13

குறிக்கோள் நிர்ணயித்துச் செயல்படுபவர்கள் பெரும் ஆற்றல் பெறுகிறார்கள் - சோதனைகளைச் சாதனைகளாக மாற்றுகிறார்கள் என்பதற்கு புரூஸ் லீ-யின் வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணம்.

1970-ல் ஒருநாள் காலை உடற்பயிற்சியின்போது முதுகில் அடிபட்டு படுகாயமடைந்தார் புரூஸ் லீ. அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ‘‘முதுகில் உள்ள ஒரு முக்கிய நரம்பு சேதமடைந்துவிட்டது. இனிமேல் தற்காப்புப் பயிற்சிகளை மொத்தமாக மறந்துவிடவேண்டும். முழு ஓய்வு எடுத்தாக வேண்டும்’’ என்று பயமுறுத்திச் சென்றனர். தனது சிகிச்சைக் காலத்தை வாசிப்புக் காலமாக மாற்றிக்கொண்டார் புரூஸ் லீ. எத்தனை சோதனைகள் வந்தாலும் லட்சியத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என உறுதி செய்துகொண்டார். மிக வேகமாக உடல்நலம் தேறினார். மறுபடியும் ஆக்ரோஷமாகச் சண்டை போட்டு டாக்டர்களை மிரளவைத்தார் புரூஸ் லீ.

சீனத் தற்காப்புக் கலையை மேம்படுத்தி தனக்கெனச் சிறப்புப் பாணி தற்காப்புக் கலையை உருவாக்கினார் புரூஸ் லீ. அதில், அதிவேகம், மன வலிமை இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். ‘‘மனதின் அற்புத ஆற்றலை வெளிக்கொணரக் கற்றுக்கொண்டால் மந்திர ஜாலங்கள் நிகழ்த்தலாம்’’ என்று தன் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். ஒருவரிடம் இருந்து ஒரே ஒரு இன்ச் தூரத்தில் தனது விரலை வைத்துக்கொண்டு மிகுந்த வலிமையோடு தாக்கி அவரை வீழ்த்தும் ‘ஒரு இன்ச் உதை’ என்ற உத்தியை பலமுறை செய்து காட்டினார்.

தற்காப்புக் கலை தொடர்பான திரைக்கதைகளை எழுதி அதனைப் படமாக்க ஹாலிவுட் பட நிறுவனங்களை அணுகினார். ஹாலிவுட் பட அதிபர்கள் அவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ‘‘ஆசிய முகத்தைக் கதாநாயகனாக உலக சினிமா ஏற்றுக்கொள்ளாது. வெள்ளைக்காரர்களை மட்டுமே கதாநாயகனாக ஏற்க முடியும்’’ என்பதுதான் எல்லா இடங்களிலும் கிடைத்த பதில். அவரது அசாத்தியமான சண்டைக் கலை பற்றித் தெரிந்து வைத்திருந்தபோதும், அதனை இருட்டடிப்பு செய்யவே ஹாலிவுட் பட உலகம் விரும்பியது. ஒரு ஹாலிவுட் படத்துக்காக லொக்கேஷன் பார்க்க இந்தியா வந்துசென்றார் புரூஸ் லீ. அந்தப் பட முயற்சியும் தோல்வியில் முடிந்தது. தோல்வி மேல் தோல்வி கண்டார் புரூஸ் லீ.

ஹாலிவுட் படங்களில் முக்கிய வேடம் மறுக்கப்பட்ட நிலையில், ஒருமுறை ஹாங்காங் வந்த புரூஸ் லீக்கு எதிர்பாராத வரவேற்பு காத்திருந்தது. அமெரிக்காவில் அவர் நடித்த தொலைக்காட்சித் தொடர்கள் திரைப்படங்களாகச் சீனாவில் வெளியிடப்பட்டு வெற்றி அடைந்தன. எனவே, சீனப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் புரூஸ் லீ. ‘தி பிக் பாஸ்’, ‘ஃபிஸ்ட் ஆஃப் ஃபியூரி’ என்ற இரண்டு படங்கள் அவரை ஆசிய சூப்பர் ஸ்டாராக உயர்த்தின. பம்பரம்போல் அவர் சுழன்று காட்டிய தற்காப்பு வித்தைகள் ஆசிய சினிமா ரசிகர்களை ஈர்த்தன.

தோற்றவர்களின் கதை - 13

புரூஸ் லீ, 1972-ம் ஆண்டில், ‘ரிட்டன் ஆஃப் த டிராகன்’ என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்து, இயக்கி நடித்து, அமெரிக்காவிலும் வெளியிட்டார். விளைவு... புரூஸ் லீயின் மின்னல் வேக சண்டைக் காட்சிகளுக்கு அமெரிக்க இளைஞர்களும் ரசிகர்களாயினர். குங்பூ தற்காப்புக் கலை உலக அளவில்  பிரபலமாகிவிட்டது. புரூஸ் லீ உலக இளைஞர்கள் மத்தியில் கதாநாயகன் ஆகிவிட்டதை உணர்ந்த ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் இப்போது அவரது கால்ஷீட்டை தேடிவந்து நின்றனர். ஹாலிவுட்டுக்காக ‘என்டர் தி டிராகன்’ என்ற அதிரடிப் படம் தயாரானது. புரூஸ் லீயின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பில், அந்தப் படத்தின் படப்பிடிப்பு, எடிட்டிங் உள்ளிட்ட எல்லாப் பணிகளும் இரண்டு மாதங்களில் முடிவடைந்தன.

‘என்டர் தி டிராகன்’ படம் திரைக்கு வர மூன்றே வாரங்கள் இருந்தபோது எதிர்பாராத ஓர் அசம்பாவிதம் நிகழ்ந்தது. 1973-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி புரூஸ் லீ ஹாங்காங்கில் இருந்தபோது மர்மமான முறையில் மரணமடைந்தார். சண்டைக்காட்சியின்போது தலையில் விழுந்த அடி என்றும், வலி மாத்திரைகளின் பக்க விளைவு என்றும் காரணங்கள் கூறப்பட்டபோதும் உண்மையான காரணம் இன்னமும் உறுதியாகத் தெரியவில்லை.

புரூஸ் லீயின் மறைவுக்குப் பின் வெளியிடப்பட்ட ‘என்டர் தி டிராகன்’ படம் உலகம் முழுவதும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. ஒரு மில்லியனுக்கும் குறைவான செலவில் தயாரான அந்தப் படம், 200 மில்லியன் டாலர் வசூலை வாரிக்குவித்தது. உலகத்தின் கவனத்தையெல்லாம் தற்காப்புக் கலைப் பக்கம் திருப்பிவிட்டார் புரூஸ் லீ.

29 வயதில் தனது வாழ்க்கை லட்சியத்தை கட்டளை வாக்கியமாக வடிவமைத்து எழுதிய புரூஸ் லீ, அதனை அடுத்த 3 ஆண்டுகளுக்குள் சாதித்துக் காட்டினார். தோல்விகள், இருட்டடிப்புகள், அவமதிப்புகள் போன்றவற்றைத் தனது சாதுர்யத்தால் வென்ற சாகச வீரர் புரூஸ் லீ கூறும் அனுபவப் பாடம் இதுதான்: ‘‘சூழ்நிலையைக் குறைகூறும் பழக்கத்தைத் தூக்கிக் குப்பையில் போடுங்கள். வாய்ப்புகளைத் தேடுங்கள் அல்லது நீங்களே வாய்ப்புகளை உருவாக்குங்கள்.”

(இன்னும் வெல்வோம்)