Published:Updated:

தோற்றவர்களின் கதை - 14

தோற்றவர்களின் கதை - 14
பிரீமியம் ஸ்டோரி
News
தோற்றவர்களின் கதை - 14

சுசி திருஞானம்தொடர்

ஆபிரகாம் லிங்கன்

தோற்றவர்களின் கதை - 14

மெரிக்க ஜனாதிபதிகளிலேயே மிக அதிகப் புகழ் பெற்றவர் அவர். கறுப்பர் இன அடிமைகளின் விடுதலையைச் சாதித்துக் காட்டியவர்.

உள்நாட்டுப் போரில் அமெரிக்க மாகாணங்கள் சிதறிவிடாமல் காத்தவர். ‘மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி’ என்று ஜனநாயகத்துக்கு மிகச் சிறந்த விளக்கம் சொன்ன பேராசான். இவை எல்லாம் ஆபிரகாம் லிங்கன் பற்றி அதிகம் பேசப்பட்ட  செய்திகள்.

ஆனால், அவர் பிறப்பு முதல் இறப்பு வரை சந்தித்த அடுக்கடுக்கான தோல்விகள் பற்றி நிறையப் பேருக்குத் தெரியாது. ‘தோல்விகளின் செல்லக் குழந்தை’ என்றே அவரை வரலாறு பதிவு செய்தது. அமெரிக்க ஜனாதிபதி ஆனபின்னரும்கூட காங்கிரஸில் வைத்தே அவமானப் படுத்தப்பட்டார் அவர். “அவமானகரமான தோல்விகளை நான் சந்தித்த போதெல்லாம், அதைப்பற்றி நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கவில்லை. மாறாக, அங்கீகாரத்துக்குத் தகுதியானவனாக என்னைத் தயார்படுத்திக்கொண்டே வந்தேன்” என்று, தான் கடந்துவந்த பாதை குறித்து பின்னாட்களில் குறிப்பிட்டார் ஆபிரகாம் லிங்கன்.

அமெரிக்காவில் உள்ள கெண்டுகி மாகாணத்தில் 1809-ம் ஆண்டு பிறந்தார் ஆபிரகாம் லிங்கன். அவரது தந்தை தாமஸ் லிங்கன் ஒரு தச்சர், செருப்புத் தைக்கும் தொழிலாளர். தாய் நான்ஸி. ஒரேஒரு அறைகொண்ட பண்ணை வீட்டில் வசித்த விவசாயக் குடும்பம் அது. சட்டப் பிரச்னைகளால் அங்கிருந்து அவரது குடும்பம் விரட்டப்பட்டது. இண்டியானாவில் உள்ள ஒரு காட்டுப் பகுதிக்கு வந்தபோது, காட்டைத் திருத்தி ஒரு சிறிய வீட்டை உருவாக்கும் பணியில் தனது தந்தையோடு சேர்ந்து பாடுபட்டார் ஆபிரகாம் லிங்கன்.

தோற்றவர்களின் கதை - 14

ஆபிரகாம் லிங்கனுக்கு 9 வயது இருக்கும்போது தாய் இறந்துபோனதால், சிற்றன்னையால் லிங்கன் வளர்க்கப்பட்டார். காடுகளுக்கிடையே பல மைல்தூரம் நடந்து சென்று கல்வி பயின்றார் லிங்கன். பள்ளியில் அவர் முறையாகப் படித்தது ஒரு வருடம் மட்டுமே. ஆனால், ஒரு நல்ல புத்தகத்தைக் கடன் வாங்கிவந்து படிப்பதற்காக மைல் கணக்கில் நடந்து போய்வருவார்.

பள்ளிப் படிப்பை முறையாகக் கற்காததால் அவரது இளமைக்காலம் கடினமானதாக இருந்தது. 6 அடி 4 அங்குல உயரம் கொண்ட லிங்கன், சிறிதுகாலம் விறகு வெட்டும் வேலைக்குப் போனார். பின்னர் தினக் கூலியாக ரயில்வேயில் வேலி அமைக்கும் வேலைக்குப் போனார். அதுபோன்ற உடல் உழைப்பை ஒருபுறம் செய்தபோதும், தனது வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்திக்கொண்டே இருந்தார்.

இல்லினாய்ஸ் மாகாணத்துக்கு அவரது குடும்பம் இடம்பெயர்ந்தபோது, அங்குள்ள பலசரக்குக் கடையில் சிறிதுகாலம் வேலைபார்த்தார். அதன்பின் அஞ்சல்காரராக வேலைபார்த்தார். அதுவும் நிலைக்கவில்லை. கடன் வாங்கி டிபார்ட்மென்ட் ஸ்டோர் ஒன்றைத் தொடங்கினார். விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. பெரும் நஷ்டத்துடன் கடையை மூடிவிட்டார். ஆனால் அந்தக் கடனை அடைக்கப் பல ஆண்டுகாலம் அவர் போராட வேண்டியிருந்தது. எனினும், இப்படி பல வேலைகளில் பல பேருடன் பழக நேர்ந்ததால் அவருக்கு அரசியல் ஆர்வம் வந்தது.

அடிமைகளாகக் கறுப்பினத்தவர்கள் விற்கப்படுவதைக் கண்ட போதெல்லாம் அவர் மன வேதனை அடைந்தார். அவர்கள் இரும்புக் கம்பிகளால் கட்டப்படுவதையும்  சாட்டையால் அடிக்கப்படுவதையும் கண்டு, அவர் மனம் துடித்தது. இந்தக் கொடுமைகளுக்கு முடிவு காணவேண்டும் என்று லிங்கன் விரும்பினார். அரசியலில் ஈடுபடுவதன் மூலமே இதுபோன்ற அடிமைத் தனங்களை ஒழிக்க முடியும் என்ற முடிவுக்கு லிங்கன் வந்தார்.

1832-ம் ஆண்டில் அமெரிக்காவின் ஆதி மனிதர்களுக்கும், புதிதாகக் குடியேறியவர்களுக்கும் இடையிலான பெரும் கலகம் வெடித்தது. அந்தக் கலகத்தின்போது உள்ளூர் பகுதித் தலைவராக லிங்கன் தேர்வு செய்யப்பட்டார். துடிப்போடு செயல்பட்டு அமைதியை நிலைநாட்டிய லிங்கன் அந்தப் பகுதி மக்களிடம் பிரபலமானார். அடுத்து நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்டார். எனினும், அவரது பேச்சுத் திறனை கவனித்த  விக் கட்சித் தலைவர், அவருக்கு அடுத்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தார். வெற்றிபெற்று பேரவை உறுப்பினரான லிங்கன், இன சமத்துவம், வளர்ச்சித் திட்டங்களின் முக்கியத்துவம் போன்றவற்றைத் தனது பணிகளில் முன்னிறுத்தினார். அரசியல் பணிகளுக்கு அவசியம் என்பதால் சட்டப் படிப்பை முடித்து வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டார்.

1846-ம் ஆண்டில் முதன் முதலாக லிங்கன் அமெரிக்க காங்கிரஸுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடிமைகள் விடுதலை, மெக்சிகோவுடன் போர் நிறுத்தம் போன்ற கொள்கைகளை அமெரிக்க காங்கிரஸில் அவர் வலியுறுதிப் பேசியதால், லிங்கன் தேசப்பற்று இல்லாதவர் என்ற விஷமப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. 1848-ல் லிங்கன் அங்கம் வகித்த விக் கட்சித் தலைவரே அமெரிக்க ஜனாதிபதி ஆனபோதும், லிங்கனது சொந்த மாவட்டத்திலேயே அவருக்கு எதிராகத் தீவிர எதிர் பிரசாரம் நடந்து வந்தது. ஆரிகான் மாகாண கவர்னர் பதவியை அவரது கட்சி சிபாரிசு செய்தபோதும், வேண்டாம் என்று மறுத்துவிட்டு, வழக்கறிஞர் வேலைக்குத் திரும்பிவிட்டார் லிங்கன். அவரது அரசியல் வாழ்க்கையை முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டதாக எதிரிகள் மகிழ்ந்தனர். அவமானங்களை சகித்துக்கொண்டார் லிங்கன்.

தோற்றவர்களின் கதை - 14

அடுத்த 10 ஆண்டுகளில் லிங்கன் வழக்கறிஞர் தொழிலில் மிகவும் புகழ்பெற்று விளங்கினார். அதேவேளையில் அமெரிக்க நாடு அரசியல் நெருக்கடிகளில் தத்தளித்துக் கொண்டிருந்தது. தென் மாநிலங்களில் இருந்த பலர், அடிமை முறை என்பது அவரவர் உரிமை என்று பேசிவந்தனர். வட மாநிலங்களில் இருந்த பலர், அடிமை முறை என்பது அநீதி என்று பேசிவந்தனர். இந்தச் சர்ச்சை தீவிரமடைந்தபோது லிங்கன் மீண்டும் அரசியலுக்கு வரவேண்டியதாயிற்று. அடிமை முறை என்பது தார்மிக ரீதியிலும், சமூக ரீதியிலும் தவறானது என்று அவர் முழங்கினார். லிங்கனின் புகழ் ஓங்கிவந்த நிலையில், லிங்கன் போட்டியிட சீட் கொடுக்காமல் ஏமாற்றியது விக் கட்சி. நம்பிக்கைத் துரோகத்தால் மீண்டும் தோல்வி.

அப்போது, புதிதாக உதித்த ரிபப்ளிகன் கட்சியில் சேர்ந்துகொண்டார் லிங்கன். 1856-ம் ஆண்டில் ரிபப்ளிகன் மெம்பராகத் தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட அவர் தோல்வி கண்டார். எனினும், ரிபப்ளிகன் கட்சியின் முக்கியப் பிரமுகராக அங்கீகாரம் பெற்றார்.
1860-ல் ஆபிரகாம் லிங்கனை அமெரிக்கக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ரிபப்ளிகன் கட்சி தேர்வு செய்தது. லிங்கனை எதிர்த்தவர்கள் தங்கள் பணபலத்தாலும், ஆள் பலத்தாலும் வெற்றியைக் கைப்பற்ற முயன்றனர். இறுதியில், 1861-ம் ஆண்டு ஆபிரகாம் லிங்கனே அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார்.

லிங்கன் குடியரசுத் தலைவராக இருந்தபோது அவருடைய காரை அவரே ஓட்டிச் செல்வது வழக்கம். அவரது புள்ளிகள் விழுந்த ஒடுங்கிய முகத்தோற்றத்தையும், கீச்சுக் குரலையும் எதிரிகள் எள்ளி நகையாடினர். அமெரிக்க காங்கிரஸ் கூட்டத்தில் ஒரு செல்வந்தர் ஆபிரகாம் லிங்கனை கேலி செய்து, “திரு.லிங்கன் அவர்களே, எங்கள் குடும்பத்துக்குச் செருப்புத் தைத்துக் கொடுத்தவர் உங்கள் தந்தை என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம்” என்று பேசினார். அவரது பேச்சுக்கு ஆதரவாகச் சிலர் கைதட்டிச் சிரித்தனர். லிங்கன் கம்பீரமாக எழுந்து இப்படி பதிலளித்தார்:
“ஐயா, உங்கள் குடும்பத்துக்கு எனது தந்தை செருப்புத் தைத்துக் கொடுத்தது உண்மை. இங்கு அமர்ந்திருக்கும் வேறு சில உறுப்பினர்களின் குடும்பங்களும் அவர் தைத்த செருப்பைப் பயன்படுத்தி இருக்கக் கூடும். ஏனெனில், அவரைப்போல் யாரும் அத்தனை அக்கறையுடன் செருப்புத் தைக்க முடியாது. அதில், ஏதாவது குறை இருந்தால் சொல்லுங்கள். நான் சரிசெய்து தருகிறேன். எனக்கும் அந்தக் கலை தெரியும். ஆனால், நான் அறிந்தவரை என் தந்தை தைத்த செருப்பில் யாரும், எந்தக் குறையும் காண முடியாது. அந்த எளிமையான தொழிலில் அவர் ஒரு மகா கலைஞன். அவரை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்”  லிங்கனின் பதிலைக் கேட்டதும் மொத்தச் சபையிலும் நிசப்தம். கேலி செய்தவர்கள் தலைகுனிந்தனர்.

தோற்றவர்களின் கதை - 14

பதவியேற்ற இரண்டே ஆண்டுகளில் அனைத்து அடிமைகளும் விடுவிக்கப்படுவர் என்றும் அதன்பின் அமெரிக்காவில் அடிமைத்தனம் என்ற பேச்சே இருக்கக் கூடாது என்றும் பிரகடனம் செய்தார் ஆபிரகாம் லிங்கன். இதை எதிர்த்து உள்நாட்டுக் கலவரங்கள் ஏற்பட்டன. ‘அடிமைகளை
வைத்திருப்பது எங்கள் உரிமை’ என்று அடிமைத்தனத்தால் பயன் பெற்றவர்கள் பிரசாரம் செய்தனர். அமெரிக்காவிலிருந்து தென் மாநிலங்கள்  பிரிந்து சென்றுவிடலாம் என்று தெற்கில் உள்ள சில பழமைவாதிகள் முடிவெடுத்தனர். கலவரத்தையும் தூண்டிவிட்டனர். உள்நாட்டுப் போர்மூண்டது.

கலவரம் இவ்வளவு பெரிதாகும் என்று லிங்கன் முதலில் எதிர்பார்க்கவில்லை. அதனால் அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. பழமைவாதக் கலவரத்துக்கு எதிராக வெகுண்டு எழுந்தார் லிங்கன். ராணுவத் தளபதிகளை மாற்றி அமைத்தார். ராணுவ நுட்பங்களைத் தானே கற்றறிந்து ராணுவத்தைத் தைரியமாக வழிநடத்தினார். கலவரம் ஒடுக்கப்பட்டது. நாட்டின் ஒற்றுமை காக்கப்பட்டது. கறுப்பர் இன அடிமைகள் அனைவரையும் விடுவித்தார். “பிறப்பால் அனைவரும் சமம். அனைத்து மனிதர்களும் சுதந்திர மனிதர்களே” என்று பிரகடனப்படுத்தினார்.

1864 தேர்தலில் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். உள்நாட்டுப்போர் முடிவுற்றிருந்த வேளையில், நாட்டின் மறுநிர்மாணப் பணிகளை வேகமாக அவர் செயல்படுத்த முனைந்த காலகட்டத்தில், வெறிபிடித்த ஒரு மனிதனால் சுட்டுக்கொல்லப்பட்டார். அமெரிக்காவை
வலிமையான, சுதந்திர உணர்வு மிக்க தேசமாக மாற்றியதில் ஆபிரகாம் லிங்கனின் பங்கு அளப்பரியது. லிங்கனின் இன சமத்துவக் கருத்துக்களும், மக்களாட்சித் தத்துவமும் அமெரிக்க மக்களிடம் எழுச்சியை உண்டாக்கின. அமெரிக்காவை வலிமைமிக்க நாடாக மாற்றுவதற்கான பலமான அடித்தளம் அமைத்தவர் அவரே.

வெற்றிபெற என்னவெல்லாம் வேண்டும் என்று ஓர் இளைஞன் ஆபிரகாம் லிங்கனிடம் கேட்டபோது, அவர் சிரித்துக்கொண்டே சொன்னார்: “வேறு எல்லாவற்றையும் விட முக்கியமாக ஒன்று வேண்டும். ‘வெற்றிபெற்றே தீருவேன்’ என்ற வெறி உன்னிடம் இருக்க வேண்டும்”

(இன்னும் வெல்வோம்)