மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மெல்லிசை மன்னரின் மந்திரப் பெட்டி - விஜயகிருஷ்ணன்

மெல்லிசை மன்னரின் மந்திரப் பெட்டி - விஜயகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
News
மெல்லிசை மன்னரின் மந்திரப் பெட்டி - விஜயகிருஷ்ணன்

படம்: தி.குமரகுருபரன்

மெல்லிசை மன்னரின் மந்திரப் பெட்டி - விஜயகிருஷ்ணன்

ன்றும் நினைவில் இருந்து நீங்காத ஆயிரக்கணக்கான அற்புதமான பாடல்களை அள்ளி அள்ளிக் கொடுக்கக் காரணமாக இருந்தது எம்.எஸ்.வி-யின் ஆர்மோனியம். அதுதான் அவருடைய ஆன்மா, தெய்வம், தோழன்... எல்லாம்!

எம்.எஸ்.வி. தன் இசைப் பயணத்தை ஒரு ஆர்மோனிஸ்ட்டாகத்தான் தொடங்கினார். திரைத்துறையில் அவருக்கு முதல் வாய்ப்பைப் பெற்றுத்தந்தவர் ஒரு ஆர்மோனிஸ்ட்; பெயர் ராஜா. எம்.எஸ்.வி அப்போது   இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமனிடம் உதவியாளராக இருந்தார். ‘ஜெனோவா’ என்ற புதுப்படத்தில் தயாரிப்பாளரிடம் பேசி, எம்.எஸ்.வி-க்கு வாய்ப்பு வாங்கித் தந்திருக்கிறார் ராஜா. ஏற்கெனவே ‘ஜெனோவா’வில் இரண்டு இசையமைப்பாளர்கள்; அவர்களோடு  எம்.எஸ்.வி-யும் சேர்ந்துகொண்டார்.

படத்தின் கதாநாயகனான எம்.ஜி.ஆர் ஆரம்பத்தில் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். பிறகு, எம்.எஸ்.வி. இசையமைத்த மூன்று பாடல்களைக் கேட்டதும் தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டார். அன்று இரவே எம்.எஸ்.வி-யின் வீடு தேடிப்போய் பாராட்டினார். அதோடு, தன் நினைவாக ஒரு பரிசையும் கொடுத்தார். அது, ஒரு ஆர்மோனியம்.  பிறகு, எம்.எஸ்.வியும் - ராமமூர்த்தியும் இணைந்து இசையமைத்த ‘பணம்’ திரைப்படம் வெளியானது. 1952-ம் ஆண்டு, என்.எஸ்.கிருஷ்ணன் இயக்கத்தில், சிவாஜி, பத்மினி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் எனப் பலர் நடித்திருந்த அந்தப் படம் எம்.எஸ்.வி திரைத்துறையில் அழுத்தமாகக் காலூன்ற வழிவகுத்தது.

எம்.எஸ்.வி-யிடம் நிறைய ஆர்மோனியங்கள் இருந்தன. இந்தப் படத்தில் இருப்பது டான் பாஸ்கோ பள்ளி, அதன் பொன்விழாக் கொண்டாட்டத்தின்போது அவருக்குக் கொடுத்தது. அவர் எங்கு சென்றாலும் ஆர்மோனியத்தையும் எடுத்துப்போவார். அவரைப் பொறுத்தவரை ஆர்மோனியம்தான் கடவுள். அதை பக்தியோடுதான் தொடுவார்; வாசிப்பார். அதைத் தொடும்போது செருப்பு அணிய மாட்டார். 

இந்தியில் ‘மேரா நாம் ஜோக்கர்’ போன்ற வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தவர் ஷங்கர் ஜெய்கிஷன். அவர் பாடல் கம்போஸிங்குக்காக சென்னைக்கு வந்தால், எம்.எஸ்.வி-யின் ஆர்மோனியத்தைத்தான் வாங்கிக்கொண்டுபோய் இசையமைப்பார். இப்படி எம்.எஸ்.வி-யின் ஆர்மோனியத்துக்கே பல ரசிகர்கள் உண்டு.

1962-ம் ஆண்டு. இந்திய - சீனப் போர் உச்சம் பெற்றிருந்த நேரம். போர் முனையில் இருக்கும் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக இங்கிருந்து ஒரு கலைக்குழு கிளம்பிச் சென்றது. சிவாஜி கணேசன், ஜெமினி, சந்திரபாபு போன்ற பெரிய நடிகர்களுடன் எம்.எஸ்.வி-யும் சென்றார். ‘நாடோடி’ படத்தில் எம்.ஜி.ஆர் தோளில் ஒரு ஆர்மோனியத்தைத் தொங்கவிட்டுப் பாடுவார் இல்லையா? அதுபோல, எம்.எஸ்.வி அங்கே வீரர்களுக்கு முன்னால் ஆர்மோனியத்தை மாட்டிக்கொண்டு உற்சாகமாகப் பாடினார்.

எம்.எஸ்.விஸ்வநாதன் பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்கள் பாடியிருக்கிறார். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீனிவாஸ், கங்கை அமரன், ஜி.வி.பிரகாஷ், யுவன் சங்கர்ராஜா, வி.குமார், பரத்வாஜ் என மிக நீண்ட பட்டியல். இத்தனை இசையமைப்பாளர்களின் இசையில் பாடிய இசையமைப்பாளர் என்கிற பெருமையும் எம்.எஸ்.வி-க்கு உண்டு. தனிப்பாடல்கள், திரைப் பாடல்கள், பக்திப் பாடல்கள் என 500-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர் எம்.எஸ்.வி. அத்தனை பாடல்களையும் அவர் `ஆர்மோனியம் வாசித்தபடிதான்’ பாடியிருக்கிறார் என்பது ஆச்சர்யமான உண்மை.

ஆர்மோனியத்தில் அவர் விரல்கள் நர்த்தனமாடுவதைப் பார்ப்பதே அழகு. ‘இவ்வளவு வேகமாக வாசிக்க முடியுமா?’ என நாம் வியக்கும் அளவுக்கு வேகமாக வாசிப்பார். பிரபல கர்நாடக இசைப் பாடகரும் மெல்லிசை மன்னரிடம் சில வருடங்கள் உதவியாளராகவும் இருந்த மதுரை ஜி.எஸ்.மணி அடிக்கடி கூறுவார்... `எம்.எஸ்.வி-யின் ஆர்மோனிய வாசிப்பு  தனித்துவமாக இருக்கும். எல்லோரும் சட்ஜமத்துக்கு கட்டை விரலைத்தான் பயன்படுத்துவார்கள். ஆனால், எம்.எஸ்.வி தன் சுண்டுவிரலைப் பயன்படுத்துவார்.’

பாடலுக்கு அவர் மெட்டிசைப்பதே  ஓர் அழகு; பார்ப்பவர்களுக்கு அது ஒரு தனி அனுபவமாக இருக்கும். அவர் இசையில் வரும் ஒவ்வோர் இசைக்கோர்வையும் இசைக்கருவியின் ஒலியும் அவரது ஆர்மோனியத்தில் பிறந்தவைதான்; அது பாடலாக இருந்தாலும் சரி, பின்னணி இசையாக இருந்தாலும் சரி... தனக்கு வேண்டியதை ஆர்மோனியத்தில் வாசித்துக்காட்டியே பெறுவார்.

மெல்லிசை மன்னரின் மந்திரப் பெட்டி - விஜயகிருஷ்ணன்

மெட்டின் குறிகளைக்கொண்டு இசையமைக்கும் முறையை அவர் கையாண்டது இல்லை. உணர்ச்சியுடன் பாடி, வாசித்துக் காண்பித்து இசையில் அந்த உணர்ச்சியைக் கொண்டுவருவார்.

அவரது மற்றொரு பழக்கம், ஆர்மோனியக் கட்டைகளின் மேலாகவே தாளத்தை வாசித்துக் காண்பிப்பது. ஆர்மோனிய பெட்டியின் மேலும் வாசிப்பார். இதை இயக்குநர் பாக்யராஜ் `அந்த 7 நாட்கள்’ படத்தில் காண்பித்திருப்பார். வேறு சிலரைப்போல் வெளிநாட்டுக்கோ வெளியூருக்கோ சென்றால்தான் பாட்டு வரும் என்ற நிலை அவருக்கு இல்லாததால், எங்கு வேண்டுமானாலும் அவர் இசையமைப்பார். எங்கள் வீட்டில், நூறு சதுரஅடி இடத்திலேயே ஏழு படங்களுக்கும் மேலாக இசை அமைத்த மேதை அவர்.

அந்த நாட்களில் `MSV 5052’ கறுப்பு நிற ஃபியட் எங்கள் வீட்டுக்கு வந்தாலே கொண்டாட்டம்தான். கார் நின்றவுடன், அவருடைய டிரைவர் முத்து ஆர்மோனியத்தையும் ஒரு குடம் சீரகத் தண்ணீரையும் கம்போஸிங் ரூமில் கொண்டுபோய் வைப்பார். எம்.எஸ்.வி., வந்து உட்கார்ந்து, கதைச் சூழல் கேட்பார், பிறகு சந்தமா (மெட்டு) இல்லை சொந்தமா என்பதை முடிவுசெய்வார்கள். புதுக் கவிஞராக இருந்தால் எம்.எஸ்.வி சொந்தத்துக்கு எழுதச் சொல்லிவிடுவார். மெட்டைமைப்பது என்றால், தாளக்கட்டை சொல்லிவிட்டு, ஆர்மோனியத்தில் கை அலைய ஆரம்பிக்கும். மெட்டு பிறக்க வழி பிறக்கும். கவிஞரின் சொந்தத்துக்கு என்றால், பாட்டு எழுதிய தாளை வாங்கி ஆர்மோனியத்தின் மேல் வைப்பார். கவிதையைப் படிப்பார். சந்தேகம் இருந்தால் கேட்டுக்கொள்வார். இவை அனைத்தும் நடக்கும்போது அவரது விரல்கள் ஆர்மோனியக் கட்டைகளை நீவிக்கொடுத்துக்கொண்டிருக்கும். சில விநாடிகளே, அவரிடம் ஒரு கனைப்பு... ஸ்வரங்கள் தங்கு தடையின்றி வர ஆரம்பிக்கும்; ஒரு நீரருவியைப்போல் அலையலையாய் வந்து விழும்.

மெல்லிசை மன்னர் தனது ஆர்மோனியத்துடன் நடத்திய காதல் விளையாட்டின் பலனே இத்தனை சாகாவரம்பெற்ற பாடல்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவரைச் சந்திக்கும்போது அவரிடம் சொன்னேன். `நீங்கள்தான் பாடல் உருவான விதத்தைப்பற்றிச் சொல்ல மாட்டேன் என்கிறீர்கள். உங்கள் ஆர்மோனியத்துக்கு வாயிருந்தால் அதுவாவது பேசியிருக்கும்’ உடனே தன் கண்களில் குறும்பு மின்னிட, `ஏன் இத்தனை நாள் என் ஆர்மோனியம் பேசலையா?’ என்று கேட்டார்.

அவரில்லாமல் ஆர்மோனியம் மட்டுமல்ல, எண்ணற்ற ரசிகர்களும் நாள்தோறும் கலங்குகிறோம். இன்றைக்கும் எம்.எஸ்.வி-யின் ஆன்மா அவரின் ஆர்மோனியத்தில்தான் உறைந்திருக்கிறது!

விஜயகிருஷ்ணன்

சிறுவயது முதல் எம்.எஸ்.வி-யின் தீவிர ரசிகர். அவருடன் நெருங்கிப் பழகியவர். உலகமெங்கும் இருக்கும் எம்.எஸ்.வி-யின் ரசிகர்களை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர். எம்.எஸ்.வி ரசிகர்களுக்காக ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்றவற்றை நிர்வகித்துவருபவர்.