
இங்கேயும்... இப்போதும்...

சக்தி அருளானந்தம்
`` `எமக்குத் தொழில் கவிதை’ எனப் பெருமிதமாகச் சொல்லிக்கொள்ளும் நிலையில் தமிழ்ச்சூழல் இல்லை. பெரும்பான்மையோர் எழுத்து வாழ்வை நகர்த்த ஏதோ ஒரு பணியில் இருக்கின்றனர். நானும் அப்படியே. அப்பா, ரஷ்ய சிறுவர் இலக்கியப் புத்தகங்களை வாங்கித் தந்து உற்சாகப்படுத்தினார். அந்தச் சிறுவயது வாசிப்புப் பழக்கமே என்னை எழுதத் தூண்டியது.’’
சேலத்தில் மிக்ஸி, அயர்ன் பாக்ஸ், குக்கர், கேஸ் ஸ்டவ் போன்றவற்றைப் பழுதுநீக்கும் கடை வைத்திருக்கிறார் சக்தி அருளானந்தம். ‘இருண்மையிலிருந்து...’, ‘பறவைகள் புறக்கணித்த நகரம்’ என இரு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. நல்ல ஓவியரும்கூட. திரை இசை கேட்பதில், பயணிப்பதில், புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் மிக்கவர். முகநூலில் இவருடைய கவிதைகளையும் ஓவியங்களையும் பதிவிட்டுவருகிறார்.
குமார் அம்பாயிரம்

``நீங்கள் யார் என்று கேட்கிறார்கள். நாங்கள் நிலத்தோடு உறவாடும் மண் புழுக்கள்.’’
குமார் அம்பாயிரம், தமிழில் குறிப்பிடத்தகுந்த இளம் ஆளுமை. கவிஞர், சிறுகதையாளர், ஆஸ்திரேலியப் பழங்குடி இசைக்கருவியான டிஜிரிடூ இசைக்கலைஞர் எனப் பன்முகம் கொண்டவர். நம்மாழ்வாரின் `வானகம்’ மையத்தில் பயிற்சி பெற்றவர். திருவண்ணாமலையைச் சேர்ந்த இவர், இயற்கை முறையிலான வேளாண் பண்ணை அமைத்தல், இயற்கைப் பொருட்களாலான கட்டடங்களை உருவாக்குதல், இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதற்கு எதிரான போராட்டங்களில் பங்கெடுத்தல் என இயங்குபவர். இவரது ‘ஈட்டி’ சிறுகதைத் தொகுப்பு மிகுந்த கவனம்பெற்றது.
வே.பாபு

`` `முழம் எவ்வளவு?’ என்பதற்குள், ‘பத்து ரூபாய்க்கு வாங்கிக்கோ போதும்’ எனக் கூறும் கணவர்களையும், `இன்னொரு முழம் சேர்த்து வாங்கிக்கோ’ எனும் கணவர்களையும் ஒருசேரப் பார்க்க முடிகிறது. பூக்களுக்கு மத்தியில் அமர்ந்துகொண்டு, விதவிதமான மனிதர்களைச் சந்திப்பது ஒருவித சந்தோஷத்தைத் தருவதோடு, படைப்பாக்கத்தையும் மேம்படுத்துகிறது.’’
வே.பாபு, கவிஞர், சிற்றிதழாளர். இவரது ‘மதுக்குவளை மலர்’ எனும் கவிதைத் தொகுப்பு பரவலான கவனத்தைப் பெற்றது. டிப்ளமோ இன் டெக்ஸ்டைல் டெக்னாலஜி முடித்துவிட்டு, நூற்பாலையில் மேற்பார்வையாளராகப் பணிபுரிந்தவர். குழந்தைத் தொழிலாளர்களிடம் வேலை வாங்குவதை ஒப்புக்கொள்ளாத மனம், ஒரு கட்டத்தில் அந்தத் துறையைவிட்டே விலகச்செய்தது. சேலம் அம்மாப்பேட்டையில் பூக்கடை நடத்திவருகிறார். கவிதைகளாலும் பூக்களாலும் மனிதர்களாலும் நிறைந்திருக்கிறது வாழ்வு.
சக்தி ஜோதி

``நிலமும் நீருமே பெண். இதுவே என் கவி ஈரம். கடந்த 15 ஆண்டுகளாக நிலம், நீர் பாதுகாப்பு மற்றும் பெண்கல்வியை மையப்படுத்தி `சக்தி அறக்கட்டளை’ என்கிற நிறுவனத்தைத் தொடங்கிச் செயல்படுகிறேன்.’’
திண்டுக்கல்லுக்கு அருகேயுள்ள அய்யம்பாளையத்தில் தனது குடும்பத்துடன் வசிக்கிறார் கவிஞர் சக்தி ஜோதி. கடந்த ஒன்பது ஆண்டுகளில் இவரின் 10 கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. சங்கப் பெண்பாற் புலவர்களையும் நவீனப் பெண் எழுத்துகளையும் ஒப்பிட்டு ஒரு கட்டுரைத் தொடர் எழுதிவருபவர், சங்க இலக்கியத்தில் முனைவர் பட்ட ஆய்வினை முடித்திருக்கிறார். தமிழ்க் கவிதைப் பரப்பில் தொடர்ந்து இயங்கிவரும் பெண் கவிஞர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர்.