மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சொல்லில் விடியும் இருள் குவண்டனமோ கவிதைகள் - இளங்கோ கிருஷ்ணன்

சொல்லில் விடியும் இருள் குவண்டனமோ கவிதைகள் - இளங்கோ கிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்லில் விடியும் இருள் குவண்டனமோ கவிதைகள் - இளங்கோ கிருஷ்ணன்

நூல் அறிமுகம்

சொல்லில் விடியும் இருள் குவண்டனமோ கவிதைகள் - இளங்கோ கிருஷ்ணன்

ர் ஓவியனை அரசன் சிறையில் அடைக்கிறான். ஓவியன் அமைதியாக, “எனக்குக் கொஞ்சம் வண்ணங்களும் தூரிகையும் கிடைக்குமா?” என்கிறான். தரப்படுகின்றன. ஆகாயம் நிறைந்த ஒரு வனத்தைத் தீட்டுமவன் ``என் கற்பனை என்னை விடுதலை செய்யும்’’ எனக் கூறியபடி அந்த வனத்திற்குள் சென்று மறைகிறான். `குவண்டனமோ கவிதைகள்’ என்ற தொகுப்பைப் படித்தபோது எனக்கு இந்தக் கதைதான் நினைவுக்கு வந்தது. உண்மையில் கலை ஏற்படுத்தித் தரும் விடுதலை என்பது இதுதான். ஒருவகையில், அது ஓர் ஆறுதல், அது ஓர் இளைப்பாறல், அது ஒரு விடுதலை.

க்யூபாவின் குவண்டனமோவில் உள்ள அமெரிக்காவின் தடுப்புக் காவல் முகாம் கைதிகளால் வதைமிகுந்த சிறையில் இருந்து எழுதப்பட்ட கவிதைகள் இவை. எழுதவதற்கான காகிதமோ எழுதுகோலோ கிடைக்காத நிலையில் ஸ்டைரோஃபோம் கோப்பைகளின் அடிப்பாகத்திலும், கூழாங்கற்களிலும் கடும் பரிசோதனைக்குப் பின் அனுமதிக்கப்பட்ட கடிதங்களின் வெற்று இடங்களிலும் பற்பசைகொண்டு எழுதப்பட்ட கவிதைகளும் இதில் உள்ளன. இப்படி எழுதப்பட்ட கவிதைகள் ஒரு சிறை அறையில் இருந்து இன்னொரு சிறை அறைக்கு ரகசியமாகப் பகிர்ந்துகொள்ளப்படும்; வாசிக்கப்படும்; சிறைக்குள்ளேயே கொண்டாடப்படும். பகிர்ந்துகொள்ள ஏதுமற்ற, உலகச் சமூகத்தால் கைவிடப்பட்ட எளிய மனங்களுக்கு இந்தக் கவிதைகள்தான் எதிர்காலத்தைப் பற்றிக்கொள்வதற்கான நம்பிக்கையின் விரல்களாக இருந்திருக்கின்றன.மொத்தம் 17 பேரால் எழுதப்பட்ட 22 கவிதைகள் இந்த நூலில் உள்ளன. இவர்களில் பாகிஸ்தானிய கவிஞர் ஷேக் அப்துரஹீம் முஸ்லிம் தோஸ்த் தவிர யாருமே தொழில்முறைக் கவிஞர்கள் அல்ல. இதில் உள்ள கவிதைகள் புலமையான மொழி அழகால் அல்லாமல்ஆன்மா மணக்கும் வாழ்வின் அனுபவங்களால் மிளிர்கின்றன. மார்க் ஃபாகாஃப் கடும் பிரயத்தனங்களுக்குப் பின் இந்தக் கவிதைகளை தொகுத்து உள்ளார். சில கவிதைகளை கைதிகள் வெளியே வந்த பின் அவர்களைச் சந்தித்து மீள் உருவாக்கம் செய்திருக்கிறார். கோப்பையின் பின்புறம் எழுதப்பட்ட கவிதைகள், பிறகு குப்பைக்குச் சென்றுவிட்டதுதான் காரணம். இந்நூலில் எழுதி உள்ள ஒவ்வொருவரின் பின்னும் நம்மை உலுக்கிவிடும்படியான ஒரு துயரக் கதை உள்ளது.

வலியும் வேதனையும் நம்பிக்கையும் நம்பிக்கையின்மையும் மிக்க இந்தக் கவிதைகள் வாசிப்பவர்களை நிம்மதி இழக்கச்செய்பவை. நாகரிகமிக்க சமூகமா நம்முடையது என்று மானுடத்தை நோக்கி ஆழமான கேள்வி எழுப்புபவை. கவிதைகளை அதன் ஆன்மா கெடாமல் இயல்பான சரளமான நடையில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் கவிஞர் மண்குதிரை.

காலச்சுவடு பதிப்பகம்,
669, கே.பி.சாலை, நாகர்கோவில்.
பக்கங்கள்: 72 விலை: ரூ 75