
படம்: ஸ்டில் ராபர்ட்
`வட சென்னை' படம் வரைக்குமான என் பயணத்தில் இருக்கும் எல்லோரும் முக்கியமானவர்கள். முகம் தெரிந்தவர்கள் சிலரை இங்கே பதிவுசெய்திருக்கிறேன். முகம் தெரியாதவர்கள் பலரும் இருந்திருக்கிறார்கள்.
இன்று வரை என் அலுவலகத்தின் வாடகை என்ன, கரன்ட் பில் என்ன, எத்தனை பேர் வேலைசெய்கிறார்கள், அவர்கள் சாப்பிட்டார்களா என எதைப் பற்றியும் நான் யோசித்தது கிடையாது. நான் எந்தக் குழப்பமும் பிரஷரும் இல்லாமல் சினிமா பற்றி மட்டுமே சிந்திக்க, எனக்கு உறுதுணையாக இருப்பதில் முக்கியமானவர் என் மேனேஜர் சொக்கலிங்கம்.
எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் எதையுமே என்னிடம் கொண்டுவராத என் உதவி இயக்குநர்கள். சரியோ, தவறோ தனக்குத் தோன்றுவதை எந்தச் சமரசமும் இல்லாமல் சொல்லும், எந்த நிலையிலும் என்னுடனே இருக்கும் ஸ்டில் ராபர்ட். எந்தச் சூழலிலும் என்னை விட்டுக்கொடுக்காத ஒரு நண்பர் நாராயணன் (`ஆடுகளம்' நரேன்), நடிக்க வாய்ப்புத் தேடி அலையும்போதே கேட்டரிங் வேலை செய்து, அந்தப் பணத்தில் எனக்கு ஏதாவது வாங்கித் தரும் ராஜா, நான் கதை சொல்லி வாய்ப்புத் தேடிய காலத்தில் எனக்கு உதவிகள் செய்த பல மேனேஜர்கள், உதவி இயக்குநர்கள், நடிக்க வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்த நடிகர்கள்... இப்படி என் நினைவில் இருக்கும் பலர் பற்றி பேச வாய்ப்பு கிடைக்காததால்தான் அவர்களைப் பற்றி பதிவுசெய்ய முடியவில்லை. இன்று நான் எல்லோருக்கும் தெரிந்த முகம் என்றால், அதற்கு இவர்கள் அத்தனை பேரும் என் பின்னால் இருந்ததுதான் காரணம். அன்றாட வாழ்க்கையில் நம் கூடவே இருந்து, நமக்காக வேலைசெய்யும், நம்முடைய நல்லதுக்காகச் சிந்திக்கும் பலரை We take for granted.
நம் வாழ்க்கை மேம்படுவதில் அவர்களின் பங்களிப்பைக் கவனிக்கவோ அல்லது அதை அவர்களிடம் பகிர்ந்துகொள்ளவோ தவறிவிடுகிறோம். வாழ்க்கை ஓடும் வேகத்தில் எப்போதாவது அவர்களைக் காயப்படுத்திவிட்டு தொடர்ந்து ஓடுகிறோம். நின்று அவர்களிடம் ஒரு நன்றியையோ அல்லது மன்னிப்பையோ கோரும் சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்திக்கொள்வது இல்லை. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நான் சிலருக்கு நன்றியும் பலரிடம் மன்னிப்பும் கேட்க வேண்டும் என நினைக்கிறேன்.

அப்போது எனக்கு 12 வயது இருக்கும். அம்மாவும் அக்காவும் நானும் ரேடியோவில் தினமும் மாலையில் நாடகம் கேட்போம். அப்படி ஒருநாள் நாடகம் கேட்டுவிட்டு, வீட்டு காம்பவுண்டின் மீது படுத்து எதையோ யோசித்துக்கொண்டிருந்தேன். வானத்தையும் நிலவையும் பார்த்ததும் ஏதோ தோன்றி, அதை ஒரு கவிதையாக எழுதினேன். `வானம் அழுதாத்தான் இந்த பூமியே சிரிக்கும்...’ என்ற கவிஞர் வாலியின் வரிகளை மாற்றி எழுதி, அதை என்னுடையதாக நானே நம்பிக்கொண்டேன். அதை அம்மாவிடம் காட்டியதும் `நல்லா இருக்குடா... ஒரு நோட்டுல எழுதி வை. மேலே தேதியை எழுது. கீழே உன் பேரைப் போடு. அப்பப்ப தோண்றதை எல்லாம் எழுதிவை' என்றார். ஒருவேளை அன்று என் அம்மா என்னை அப்படி உற்சாகப்படுத் தாமல் விட்டிருந்தால், நான் இன்றைக்கு இருக்கும் இடத்தில் இல்லாமல் போயிருக்கலாம். அந்த ஒரு தருணத்துக்காக இதுவரை நான் என் அம்மாவுக்கு நன்றி சொன்னதாக நினைவில் இல்லை. நன்றியை எதிர்பார்த்து அம்மாக்கள் எதையும் செய்வதும் இல்லை என்றாலும், இந்த விஷயத்துக்காக அவரிடம் நன்றியைப் பகிர்ந்துகொள்வது முக்கிய மானதாக நான் நினைக்கிறேன்.
பதினொன்றாம் வகுப்பை சென்னையில் என் சித்தி வீட்டில் தங்கிப் படித்தேன். அவர்கள் வீடு மாற்றவேண்டிய சூழ்நிலை வந்தபோது நண்பன் காமராஜ்தான் அவன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். ஆனால், அவன் பள்ளிப்படிப்பைத் தொடராமல் பெங்களூருக்கு வேலைக்குச் சென்றுவிட்டான். நான் அவன் வீட்டில் தங்கித்தான் ஓர் ஆண்டு படித்தேன். காமராஜின் பெற்றோர் என்னை அவர்கள் பிள்ளைபோல் பார்த்துக் கொண்டார்கள். அதற்காக காமராஜுக்கோ, அவன் பெற்றோருக்கோ நான் நன்றி சொன்னது இல்லை. கண்டிப்பாக அவர்களுக்கு இப்போது நான் நன்றி சொல்ல வேண்டும்.
பள்ளி நாட்களில் எனக்குப் படிப்பில் விருப்பம் இருந்தது இல்லை. அதனால், எதையாவது மாற்றி மாற்றிச் சொல்லிக்கொண்டிருப்பேன். ஒருமுறை கிரிக்கெட்டர் ஆக விரும்புவதாகச் சொன்னேன்.
உடனே, அப்பா என்னை சென்னை ஒய்.எம்.சி.ஏ பள்ளியில் சேர்த்துவிட்டார். அப்போது BDM பேட்தான் ஃபேமஸ். அந்த பேட்டும் மொத்த கிரிக்கெட் கிட்டும் வாங்கித் தந்தார். ஒருநாள் `ரோஜா' படம் பார்க்கச் சென்று, அந்த ஆர்வத்தில் நானும் காமராஜும் கிரிக்கெட் கிட்டை பஸ்ஸிலேயே விட்டுவிட்டோம். தியேட்டரில் டிக்கெட் வாங்கிய பிறகுதான் அதைக் கவனித்தோம்.
ஆனால், சினிமா பார்க்கும் ஆர்வத்தில், திரும்பச் சென்று அந்த பஸ்ஸைக் கண்டுபிடிக்கும் எண்ணத்தைக் கைவிட்டோம். கிரிக்கெட்டர் ஆகும் எண்ணமும் அன்றோடு குறைந்துபோனது. அடுத்து வழக்குரைஞர் ஆகும் ஆசை வந்தது. அம்மாவின் அப்பாவும் என் மாமாவும் லாயர்ஸ். அதைச் சொன்னதும் `சரி' எனச் சொன்ன அப்பா, அதற்காக யு.ஜி ஆங்கில இலக்கியம் படிக்கச் சொன்னார். லயோலாவில் ஸீட் கிடைத்ததும் சேர்ந்துவிட்டேன். அங்கே வந்ததும் சினிமா மீது ஆர்வம் வந்தது. அதைச் சொன்னபோதும் அம்மா ‘சரி' என்றுதான் சொன்னார்கள். அம்மாவுக்கு என் மீது நம்பிக்கை அதிகம். ஆனால், அம்மாவிடம் `நீ அவனுக்கு அதிக செல்லம் கொடுக்கிற’ என அப்பா சொல்வார். `நீ பாரு... உன்னால இவன் ஒருநாள் நடுரோட்டுல நிக்கப்போறான்’ என்பார். ஆனால் அம்மா, `நீங்க வேணும்னா பாருங்க. ஒரு பெரிய உயரத்துக்குப் போய் நமக்குப் பெருமை சேர்ப்பான்’ என நம்பிக்கையாகச் சொல்வார். நான் அவர்களின் மகன் என்பதாலோ அல்லது செய்வதை ஒழுங்காகச் செய்துவிடுவான் என்ற நம்பிக்கையினாலோ, என் விருப்பங்கள் எல்லாவற்றுக்கும் அம்மா துணையாக நின்றார். அம்மா நினைத்தை ஓரளவுக்குச் செய்துவிட்டேன் என்பதில் எனக்கு ஓர் ஆறுதல். ஆனால், நான் நன்றாக இருப்பதை அப்பா பார்க்கவில்லை என்பதில் பெரிய வருத்தம் உண்டு.

பள்ளி நாட்களில் சக்தி, ஜீவா, பழனி நான் எல்லாம் ஒரு கேங். எப்போதும் ஒன்றாகவே சுற்றுவோம். அதில் ஜீவா என்னைவிட மூன்று வயது பெரியவன். எதற்குமே, யாருக்குமே அவன் பயந்து நாங்கள் பார்த்தது இல்லை. தனக்கு சரி எனத் தோன்றும் எல்லா விஷயங்களிலும் ஜீவாதான் முதலில் நிற்பான். எங்கள் கேங்குக்கு நிறைய எதிரிகள் உண்டு. ஒருநாள் எங்கள் கேங் ஒரு ப்ளான் செய்தோம். நானும் ஜீவாவும் களத்தில் உள்ளே நிற்க, சக்தியும் மற்றவர்களும் வெளியே எங்களுக்காகக் காத்திருப்பார்கள். திட்டத்தின் முதல் அடியை ஜீவா எடுத்து வைக்க, நான் அடுத்த ஸ்டெப்பைச் செய்ய வேண்டும். இரண்டுக்கும் இடையே சில விநாடிகள்தான் வித்தியாசம். ஜீவாவின் டர்ன் வந்தபோது செய்யவேண்டியதைச் செய்யாமல் அமைதியாக நின்றான். நான் பதற்றமாகி அவனை `செய்... செய்...’ என்றபோது, வேண்டாம் என்பதுபோல சைகை காட்டினான். அந்த ஆபரேஷன் தோற்று வெளியே வந்ததும், `நீ இவ்ளோ பயப்படுவேன்னு எதிர்பாக்கலை’ என நானும் சக்தியும் சொன்னோம். அப்போது ஜீவா, `இல்லை வெற்றி.
இது சரியில்லை. தப்புடா!' என்றான். அன்று அந்த மூன்று விநாடிகள் அவன் நின்று நிதானமாக யோசித்து அதைத் தவிர்க்கவில்லை என்றால், என் வாழ்க்கை மட்டும் அல்ல... அன்று என்னுடன் இருந்த எல்லோருடைய வாழ்க்கையும் திசைமாறியிருக்கும். கற்பனையே செய்ய முடியாத வாழ்க்கையாக அது மாறியிருக்கும். அதற்காக ஜீவாவுக்கு நன்றிசொல்ல விரும்புகிறேன். அப்பா, சென்னையில் வெட்னரி சயின்ட்டிஸ்ட்டாக இருந்தவர். வார இறுதியில்தான் ராணிப்பேட்டைக்கு வருவார். எங்கள் இடையில் ஓர் அப்பா-மகனுக்கான உறவு ஆழமாக இருந்தது இல்லை. எல்லா டீன் ஏஜ் மகனைப்போல தவறாகத்தான் நானும் அவரைப் பார்த்தேன். அவருக்கு, ராணிப்பேட்டையில் இருந்த என் நண்பர்கள் யாரையுமே பிடிக்காது. என்னைப் படிக்கவிடாமல்செய்வது அவர்கள்தான் என நினைத்தார். அப்போது ஒரு பிரச்னை காரணமாக நானும் சக்தியும் ராணிப்பேட்டைக்குப் போக முடியாத சூழல். எங்களைத் திருப்பி அடிக்க, ஒரு கும்பல் தேடிக்கொண்டிருந்தது. நான் சைதாப்பேட்டையில் தங்கிப் படித்துக்கொண்டிருந்தேன். சக்தியும் சென்னைக்கு வந்து என்னுடன் தங்கிவிட்டான். சக்தி என்னுடன் தங்கியிருந்தது அப்பாவுக்குத் தெரியாது. அவர் அறைக்கு வரும்போது எல்லாம் சக்தி மாடிக்குச் சென்று படுத்துக்கொள்வான். அவர் கிளம்பிய பிறகுதான் அறைக்குத் திரும்புவான்.
ஒருநாள் எதிர்பாராத சமயத்தில் அப்பா அறைக்கு வந்தார். சக்தியைப் பார்த்துவிட்டார். சக்தி, கண்ணாடி அணிந்திருப்பான். அப்போதுதான் தூங்கி எழுந்திருந்ததால் கண்ணாடி அணியவில்லை. அப்பா சக்தியைப் பார்த்து `யார்ரா நீ?' எனக் கேட்டதும், அவருக்கு அடையாளம் தெரியவில்லை என்பதை நான் புரிந்துகொண்டேன். உடனே `இவன் என் க்ளாஸ்மேட் டாடி... குமார்' எனச் சொல்லிவிட்டேன். `குமாரா... எந்த ஊருடா நீ?' என்றார். `ஜோலார்பேட்டை' என நான் சொன்னேன். `எந்த குரூப்?' `எக்னாமிக்ஸ்தான் டாடி.' `எல்லா சப்ஜெக்ட்லயும் பாஸ் பண்ணுவியா?' `பாஸ் பண்ணிட்டேன் அங்கிள். எல்லாத்திலும் 60 பெர்சென்டுக்கு மேல’ என அதற்கு மட்டும் பதில் சொன்னான் சக்தி. `இவன் ஏன் பாஸ் பண்ண மாட்றான்? ஒழுங்கா படிங்கடா!' என்றார் அப்பா.
இப்படியே அவர் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லி மேட்ச் செய்துவிட்டோம். அதன் பிறகு, அவர் அறைக்கு வரும்போது எல்லாம் சக்தியை `குமார்' என நினைத்துக் கேட்பதும், நாங்கள் புதுப்புதுக் கதைகளும் சொல்வதே வழக்கமாகிவிட்டது. ஒருநாள் நான் பள்ளிக்குச் சென்றுவிட்டு திரும்பியபோது அப்பாவும் சக்தியும் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது எனக்குத் தெரியாது. அப்பாதான் ஆரம்பித்தார். `என்னடா, இப்பதான் எல்லாம் சொன்னான் இவன்' என்றார். சக்தி உண்மையை ஒப்புக்கொண்டுவிட்டான் என பயந்துவிட்டேன். சின்ன இடைவெளிக்குப் பிறகு `எவ்வளவு சொன்னாலும் நீ படிக்க மாட்றியாமே’ என்றார் அப்பா. நான் சக்தியை முறைக்க, அவன் தர்மசடங்கடமமான சிரிப்பு ஒன்றைச் சிரித்தான். அதன் பிறகு அப்பாவுக்கும், குமார் ஆகிய சக்திக்கும் ஒரு நல்ல ரிலேஷன்ஷிப் உருவானது. சக்தி ஒரு அத்லெட். அதனால் அவனுக்கு வேலை கிடைத்துவிடும். எனக்குத்தான் பிரச்னை என சக்தியிடம் அப்பா வருத்தப்படுவார். சில மாதங்களில் ஊரில் பிரச்னை சுமுகமானது. சக்தியும் ஊருக்குத் திரும்பிவிட்டான்.

ஒருநாள் சக்தி என் அறைக்கு வந்திருந்தபோது அப்பாவும் அம்மாவும் சேர்ந்துவந்தார்கள். அப்பாவைப் பார்த்ததும் சக்தி கண்ணாடியைக் கழட்ட, அப்பா `வாடா குமாரு’ என்றார். உடனே அம்மா `என்னங்க அவன குமாருங்கிறீங்க. இது சக்தி’ என்றார். உடனே சக்தி கண்ணாடியை மாட்டிக்கொண்டான். `இவன் குமார் மாதிரியே இல்லை...’ எனக் குழப்பத்துடன் யோசித்தார். அது சக்தி எனத் தெரிந்ததும் அப்பாவுக்குக் கோபம் வந்துவிட்டது. `இங்க என்னடா பண்ற... எப்ப கிளம்புற?' என்றார். அவனும் மாலையே கிளம்புவதாகச் சொன்னான்.
அப்பாவை, நான் பலமுறை ஏமாற்றியிருக்கிறேன். `பொல்லாதவன்' படத்தில் நான்கு 100 ரூபாய் நோட்டை எடுத்துவிட்டு, 50 ரூபாய் தாள்களை வைக்கும் காட்சி அப்பாவிடம் நிஜத்தில் நான் செய்ததுதான். சயின்ட்டிஸ்ட் என்பதால், பத்து நாட்கள்கூட குளிக்காமல் அவர் வேலைசெய்வது உண்டு. அவரது கவனம் வேலையில் மட்டுமே எப்போதும் இருக்கும். வீட்டுக்கு மூன்று, நான்கு மாதங்கள்கூட வராமல் இருப்பார். லேபுக்கு சென்றுவிட்டால் வெள்ளைச் சட்டை பிரவுன் கலர் ஆகும் வரை போடுவார். அவரைப் போன்ற ஒருவரை, சினிமாவில் வருவதுபோல கண்ணாடி போட்டால் ஒருவர் - போடாவிட்டால் மற்றொருவர் என ஆள் மாறாட்டம் செய்து ஏமாற்றுவது சாத்தியம்தான். அப்பா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த காலத்தில், தினமும் மாலை அவரைப் பார்க்கப் போய்விடுவேன். அவரிடம் இதைச் சொல்லிவிட வேண்டும் என அப்போது தோன்றியதே இல்லை.
அந்தச் சமயத்தில் விளையாட்டுத்தனமாகவும் ஒரு பயமாகவும் நாங்கள் செய்தது சரி எனத் தோன்றும். அவர் இறந்த பிறகு நானும் சக்தியும் அவரைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அன்று, அவரிடம் இந்த உண்மையைச் சொல்லியிருக்கலாம் எனத் தோன்றியது. அப்போது சொல்லாமல்விட்டதற்காக இப்போது அப்பாவிடம் மன்னிப்புக் கேட்க தோன்றுகிறது. இதேபோல அல்லது இதைவிட மோசமான இன்னொரு செயலுக்காக பாலு மகேந்திரா சாரிடமும் நான் மன்னிப்புக் கேட்க முயற்சி செய்தேன். ஆனால்...
- பயணிப்பேன்...
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!
Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan