
படங்கள் : கே.ராஜசேகரன்

நன்னிப் பயிருக்காக வெதமல்லாட்ட உடைத்த விரல்கள்... தாத்தா ஓட்டிய உழவுசாலில் தப்புக்கடலை எடுத்த விரல்கள்... கேழ்வரகு கிழித்த விரல்கள்... கம்பு நிமுட்டிய விரல்கள்... கலுங்கு வெள்ளத்துப் பெருஞ்சுழலில் பாய்ந்து மூழ்கி, கெளிறுகள் அள்ளிய விரல்கள்தாம் அறிவுமதியின் விரல்கள்.
இந்த விரல்களைக் கைநாட்டு விரல்களாக இல்லாமல் கையெழுத்து விரல்களாக மாற்றியதில் என் அப்பா கட்டிய கழகக் கொட்டாய்க்குப் பெரும் பங்கு இருக்கிறது.
அதுதான் அன்று படிப்பகம்... `வள்ளுவர் நூலகம்.’
அதில் அப்பா வாங்கிவந்து போட்ட `விடுதலை’, `நம்நாடு’, `திராவிட நாடு’, `மன்றம்’, `முரசொலி’, `முத்தாரம்’, `திராவிடன்’, `தென்றல்’, `மாலைமணி’, `கலைமன்றம்’, `நடிகன் குரல்’ போன்ற இதழ்களும்...
எட்டு மைல் பத்து மைல் என்று அப்பாவும் அவரது வயசுக்காரர்களும் என்போன்ற கால்சட்டைப் பையன்களையும் நடக்கவைத்து அழைத்துப்போய் கேட்கவைத்த பெரியார், அண்ணா, ஆசைத்தம்பி, நாவலர், கலைஞர், பேராசிரியர், சம்பத், கண்ணதாசன், சிற்றரசு, சத்தியவாணிமுத்து, என்.வி.நடராசன் போன்றோரது பேச்சுகளுமே என்னை, `தமிழ்தான் படிக்க வேண்டும், தமிழுக்காகவே வாழ வேண்டும்’ என்று உறுதிகொள்ளச் செய்தன.
`நான்டா... ங்கொப்பன்டா... நல்லமுத்துப் பேரன்டா’ என்று பாடல்களோடு விளையாடிக்கொண்டிருந்த என்னை இழுத்துப்போய் நடுமணல் வெப்பாலையின் கீழும், வீரனார் கோயில் காட்டுநாரத்தையின் கீழும் அமரவைத்து...
‘எழுதடா உனக்கும் கவிதை வரும்’ என்று உற்சாகப்படுத்தியவையும் அந்த இதழ்களும் அந்தப் பேச்சுகளும்தாம்.
கம்மாபுரம் உயர்நிலைப்பள்ளி, விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி வழியே அண்ணாமலைப் பல்கலைக்கழகம் போன எனக்கு, அங்கே புதிதாய் அறிமுகமானது பொதுவுடைமைச் சிந்தனை.
புதிய இதழ்களாய்... `தீபம்’, `கணையாழி’, `கண்ணதாசன்’, `தாமரை’, `செம்மலர்’, `மஞ்சரி’, `வானம்பாடி’. அண்ணன் இராமசாமி, நண்பன் அறிவழகன் உபயம்.
வ.சுப.மாணிக்கம், தண்டபாணி தேசிகர், க.வெள்ளைவாரணம் போன்ற தமிழறிஞர்களிடம் மரபுத்தமிழ்ப் பிள்ளையாக இருந்த என்னை புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், லா.ச.ரா., கல்கி, மு.வ., நா.பா., அகிலன், விந்தன் போன்றோரைப் படிக்கத் தூண்டியவர்கள், பேராசிரியர்கள் ச.மெய்யப்பன்,
அழ.பழநியப்பன், இளவரசு.

அய்யா மெய்யப்பன், பல்கலைக்கு வந்த கண்ணதாசனிடம், ‘இவன் என் மாணவன். நன்கு கவிதை எழுதுவான்’ என்று அறிமுகம் செய்வார். `தீபம்’, `கணையாழி’யில் வந்த என் கவிதைகளை வகுப்பில் படித்துக்காட்டிப் பாராட்டுவார்.
மௌனியின் கதைகளைப் படிக்கச் சொல்லிவிட்டு, சிதம்பரம் மேலவீதிக்குப் பக்கத்தில் இருந்த மௌனியிடமே கொண்டுபோய் என்னை அமரவைப்பார். நான் மௌனியின் பக்கங்களைப் படிக்கப் படிக்க ஊஞ்சலில் ஆடியபடியே அதற்கு விளக்கம் தந்துகொண்டிருந்த மௌனி இன்றும் என் நெஞ்சில் ஆடிக்கொண்டிருக்கிறார்.
இந்தச் சூழலில்தான் பூம்புகாரில் இந்திரவிழா நடந்தது. கலைஞர் தலைமையில் கவியரங்கம்.
அப்துல் ரகுமான் தொடங்கி பச்சையப்பன் கல்லூரி மாணவர் வைரமுத்து வரை அன்று... அவ்வளவு கைத்தட்டல்கள்.
சென்னை வந்ததும் வைரத்தைத் தேடி நட்பாக்கிக்கொண்டேன்.
சென்னை வானொலி இளையபாரதமும் குறிப்பாக லீலா அம்மாவும் வைரமுத்து, பொன்மணி, பழநிபாரதி, எஸ்.அறிவுமணி போன்றவர்களோடு என்னையும் வளர்த்தெடுத்தார்கள். சோவியத் கலாசார மையமும் குறிப்பாக சலாவுதீனும் நவாப்ஜானும்.
என் கவியரங்க முதல் மேடை... கலைவாணர் அரங்கம். புலமைப்பித்தன் தலைமை.
வைரமுத்து, தங்கை பொன்மணி ஆகியோரின் கவியரங்கக் கவிதைப் பிரதிகளை வாங்கிப் படித்து, அந்தப் பிரதிகளை முன்மாதிரியாக வைத்துத்தான் அன்று எழுதினேன். படிக்கப் படிக்க அவ்வளவு கைதட்டல்கள்.
அதன் தொடர்ச்சியில்தான் மதுரை உலகத் தமிழ் மாநாட்டுக் கவியரங்கில் கவிதை படிக்கிறேன். `புரட்சிக் கவிஞர்’ தலைப்பில். அவ்வளவு கைதட்டல்கள். அந்தப் பெருங்கூட்டத்தில் நீந்திவந்து என்னைக் கட்டிப்பிடித்துத் தாய்மையோடு முத்தம் கொடுத்தவர் அண்ணன் மீரா.
அவர்தான் மதுரை தியாகராசர் கல்லூரியில் தன் வகுப்புத் தோழர் அப்துல் ரகுமான் அய்யாவுக்குத் தொலைபேசிசெய்து, ‘அறிவுமதி என்ற பையன் மதுரை மாநாட்டில் சிறப்பாகக் கவிதை படித்தான். அவனை நீ அழைத்து வளர்த்துப் பார். சிறப்பாக வருவான்’ என சொல்லியிருக்கிறார்.
வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியில் இருந்து அழைப்பு. முத்தமிழ் விழா... `கவிராத்திரி’ அன்று படித்த என் சிறுசிறு கவிதைகளுக்கும் நல்ல வரவேற்பு.
அய்யாவுக்கும் அண்ணன்கள் அப்துல் காதர், நை.மு.இக்பால் மூவருக்கும் என்னைப் பிடித்துவிட்டது.
`இங்கேயே வந்து எங்களோடு கொஞ்ச காலம் இரு’ என்று அய்யா அழைத்த அன்பில் நெகிழ்ந்து வாணியம்பாடிக்குப் போய் சேர்ந்த அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது.
தனது டி.வி.எஸ் 50-ல் உட்காரச் சொல்லி, புது நகரில் இருந்து வாணியம்பாடிக்கு அழைத்துப்போய், கோரைப்பாய், தலையணை, மண்பானை, துடைப்பம், குளிப்பதற்கான பொருள்கள் என ஒரு மகளுக்குத் தாய் தேடித் தேடி வாங்கித் தருவதைப்போல வாங்கி, என்னைப் பின்னால் வைத்துக்கொள்ளச் சொல்லி, மெதுவாக ஓட்டிவந்து ‘பெத்தானியன் இல்லம்’ என்ற தங்கும்விடுதியில் தங்கவைத்துப்போனார்.
அன்று முதல் முன்னா, முன்னிக்கு அடுத்து அய்யாவிற்கு நான் மூன்றாவது பிள்ளை ஆனேன்.
கல்லூரிக்குப் போய்விட்டுவரும் அய்யாவிடம் இரவுபோய் அவரது எழுத்தறையில் அமர்வேன். அந்த அறை முழுக்க நூல்கள்... நூல்கள். பாட்டுப்பொறியில் ஒலியிழை நாடாவின் சுழற்சியில் லதா மங்கேஷ்கர் அறை முழுக்க இசையாய் வியாபித்திருப்பார்.
அதற்கு நடுவிலேதான் ஒவ்வோர் இரவும் ஷெல்லி, பைரன், வால்ட் விட்மன், பாப்லோ நெரூதா... என உலகக் கவிஞர்களோடு என்னை உரையாடவைப்பார்.
அய்க்கூ, கசல்... என உலகக் கவிதை வடிவங்களை அவ்வளவு அழகாக ஊட்டிவிடுவார். அவரது வகுப்புத் தோழி அம்மா லீலாவதி அவர்கள் மொழிபெயர்த் திருந்த சப்பான் அய்க்கூ கவிதைகள் ஏட்டை எடுத்துப்போய் `படித்துவா’ என்பார்.
எழுதி முற்றுப்பெறாத அழகழகான கவிதைகள் உள்ள நாட்குறிப்புகளையும் எடுத்துப்போய் `படித்துவா’ என்று கொடுப்பார். வேறு எந்தக் கவிஞரும் இப்படிச் செய்திருப்பாரா என்று எண்ணிப் பார்க்கவே இயலவில்லை. தன்மீது தன்னம்பிக்கையுள்ள படைப்பாளிக்கு மட்டுமே இந்தத் தாய்மை வரும்.
சென்னை புதுக் கல்லூரிக்கு எதிரில் உள்ள பஞ்சாப் அசோசியேஷன் பள்ளி அரங்கில் விடிய விடிய நடக்கும் ‘முஷைரா’ என்ற உருது கவிராத்திரிக்கு அழைத்துப்போய், அவர்கள் பாடப்பாட... அந்த உயிரை உருக்கும் காதல் கவிதைகளை அவர் மொழிபெயர்த்துச் சொல்லச் சொல்ல... ஏடுகளில் எழுதிக்கொண்டே கரைந்து நெகிழ்வேன் நான்.

`அவள் கண்களுக்குள்
எட்டிப் பாருங்கள்
சமுத்திரத்தின் ஆழத்திற்குள்
ஒரு சமுத்திரம் கிடைக்கலாம்...’
இது அங்கு அய்யா மொழியெர்த்ததுதான்.
சென்னை ஈகா திரையரங்கில் மகேஷ்பட் இயக்கிய ‘அர்த்’ திரைப்படம். நடிப்பிலும் உரையாடலிலும் அய்யா வியந்துபார்த்த படம். `வீட்டைவிட்டுத்தான் போகிறேன் வாழ்க்கையை விட்டல்ல’ போன்ற உரையாடல்களை மொழிபெயர்த்துச் சொல்லி அப்படிப் பாராட்டுவார். அதுதான் பாலுமகேந்திரா இயக்கத்தில் ‘மறுபடியும்’ என வந்தது.
சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் அய்யா அப்துல் காதர், இக்பால், நாஞ்சில் ஆரிது, மாணவர்களான கவிஞர்கள் அரசு, குலசேகரன், இராமலிங்கம், பழனிச்சாமி, விசயகுமார் என பேருந்துகளில் கலகலப்பாகப் பேசிப்போய், அய்யா தலைமையில் கலந்துகொண்ட இலக்கிய நிகழ்வுகளுக்குக் கணக்கே இல்லை.
மீரா, இன்குலாப், மு.மேத்தா, நா.காமராசன் போன்ற அண்ணன்களோடு அய்யா சேர்ந்திருக்கிற இடம்... கேலி, கிண்டல்களோடு மனம்விட்டுச் சிரிக்கிற சிரிப்பொலிகளால் படைப்பாளிகளின் பண்பியல் அழகை வரைந்துகொண்டிருக்கும்.
1982-ம் ஆண்டில் வாணியம்பாடியில் பாரதி நூற்றாண்டு விழா. தொழிற்சங்கத் தலைவர் அ.வெங்கடேசன் போன்றவர்களின் உறுதுணையோடு அய்யா நிகழ்த்திக் காட்டிய விழா... வியப்பின் வியப்பு.
அதில் கலைஞர் வர முடியாத சூழலில் அண்ணன் சிற்பி தலைமையில் கவியரங்கம். என் கவியரங்கக் கவிதைகளின் உச்சம் அது. கவிதையைக் கேட்டுவிட்டு அய்யா அவர்கள் காதோரம் நெருங்கி ‘இனி நானெல்லாம் கவியரங்கம் ஏற வேண்டாமா?’ என்று கூறிய தாய்மைத் தருணம் யாருக்கு வாய்க்கும். ஒரு மாணவனை இப்படி வாழ்த்தி வளர்க்க இவரைத் தவிர எவரால் முடியும்?
இளங்கலைக்குத்தான் வகுப்பெடுப்பார். முதுகலை முடித்த நானும் பேராசிரிய அண்ணன்களும் அவரது வகுப்பில்போய் மாணவர்களாகிவிடுவோம். எவ்வளவு எளிமையாய், எவ்வளவு ஆழமாய் இலக்கியங்களுக்குள் அழைத்துப்போய் எங்களை உலவவிடுவார்!
வகுப்புகளிலேயே மாணவர்களுக்குத் தலைப்பு கொடுத்து கவிதைகள் எழுத வைப்பார். வியக்கவைக்கும் மாணவர் கவிதைகளைத் தொகுத்து, `செவ்வானம்’, `நீருக்குத் தாகம்’, `தாகத்துக்குக் கானல் நீர்’, `இலவசத்திற்கு ஒரு விலை’, `மயானத்தில் ஒரு தொட்டில்’ என நூல்களாக்கி வெளியிட்டு தம் மாணவர்களைத் தொடர்ந்து எழுத நம்பிக்கையூட்டுவார்.
`இரவிலே வாங்கினோம்
இன்னும் விடியவே
இல்லை’
-இதனை எழுதியவர் அய்யாவின் மாணவர் அரங்கநாதன்.
தான் எழுதுகிற எந்த ஒரு படைப்பையும் நகல் எடுத்துப் பாதுகாத்துக்கொண்டுதான் தருவார்... இதழ்களுக்கு. `தருமுவும் அபியும் எனக்கு மிகவும் பிடித்த கவிஞர்கள்’ என்பார். `லா.ச.ரா-வின் ஒரு வாக்கியத்திற்கு எங்கள் கவிதைகளெல்லாம் ஈடாகுமா?’ என்பார்.
குறிப்பாக, ஜூனியர் விகடனில் அவர் தொடர்ந்து எழுதிய எழுத்துகள் பல்லாயிரக் கணக்கான அறிவுமதிகளை எழுத்தாளர் களாக்கிவிட்டன. `நிறுத்தவே நிறுத்தாதீர்கள். நீங்கள் விரும்புகிற வரை எழுதிக்கொண்டே இருங்கள்’ என்று விகடன் ஆசிரியர் எழுதிய மடலை அய்யா எனக்குக் காட்டியிருக்கிறார்.
`பால்வீதி’... நுழைந்தால் மூச்சுத் திணறவைக்கும் நடையாக. `நேயர் விருப்பம்’, பாலுமகேந்திராவின் `நீங்கள் கேட்டவை’யாக. கவிஞர்களுக்கான கவிஞராகவும் மக்களுக்கான கவிஞராகவும் விளங்குகிறவர்களின் முன்னத்தி ஏர் இவர்.
இவர்தான் ‘`அம்மி கொத்த சிற்பி எதற்கு?” என்று கேட்டார். தேவநேயப்பாவாணர் சிற்றரங்கு; நானும் இருந்தேன். அதற்கு எவ்வளவு சலசலப்புகள்!
`கவிதை பெரிது; பாடல் சிறிது’ என்கிற கருத்தில் சொல்லியது அல்ல அது.
பத்துப் பைசா, இருபது பைசா திரைப்படப் பாட்டுப் புத்தகங்களை, நடைமேடைக் கடைகளில் தேடித் தேடி வாங்கி, கட்டமைப்பு செய்து பாதுகாத்துப் படித்துப் பார்ப்பவர் அவர். சுரதாவைப் பேசவைத்து, கவிதை கண்டு ‘அடடே’ போடுகிறவர்.
அவர் ஏன் இப்படிச் சொன்னார்?
`நீங்கள் எங்களைப் போன்ற கவிஞர்கள். எங்களில் இருந்துதான் நீங்கள் பாடல்கள் எழுதப்போகிறீர்கள். போகிறபோது உங்களுடைய கவிஞனுக்கு உரிய சுயமரியாதையையும் தன்மானத்தையும் விட்டுக்கொடுக்காமல் எழுத முயலுங்கள். தமிழை எவர் வாசலிலும் பாடல் எழுதும் பொருட்டு பிச்சைப்பாத்திரமாக நீட்டிவிடாதீர்கள்.
நீங்கள் அவ்விதம் செய்கிறபோது அது ஒட்டுமொத்த கவிஞர்களுக்குமான தலைக்குனிவை ஏற்படுத்திவிடும்’ என்ற பொறுப்பு உணர்வுமிக்க அன்பில்தான் இவ்விதம் பேசினார்.
`மனுஷங்கடா.. நாங்க மனுஷங்கடா
உன்னப்போல அவனப்போல
எட்டுச் சாணு உசரமுள்ள
மனுஷங்கடா...’
இதை எழுதிய இன்குலாப் அண்ணனிடம் போய், இந்தப் பாடல் என் படத்திற்கு வேண்டும் என்று கேட்ட இயக்குநர் யார்? இசையமைப்பாளர் யார்?
‘பாலாடகூட
இங்கே பசியாலே நாக்க நீட்டும்
கஞ்சிதானே எங்க வீட்டில்
முழுசாக ஆடை கட்டும்’
இதை எழுதிய அப்துல் காதரை பேச்சாளராக மட்டும்தானே தமிழ்நாட்டுக்குத் தெரியும்.
‘மலர்களே நாதஸ்வரங்கள்’ எழுதிய சிற்பியை, `எங்களுக்கு நீ எதற்கு?’ என்று நிராகரித்ததுதானே இந்தத் திரைப்பட உலகம்.
அரபுநாடுகளில் போய் தமிழ்ப் பிள்ளைகள் படும் வேதனைகளுக்கு ஒத்தடமாய் பாடல்கள் வேண்டும் என்று தம்பி இசாக் கேட்டபோது, காசு வாங்காமல் இந்தச் சிற்பிகள் எழுதியுள்ள பாடல்களை விரைவில் கேட்பீர்கள். அப்போதுதான் இவர்களைப் பயன்படுத்திக்கொள்ளாத இழப்புகள் தெரியும்.

இப்போதுகூட ஒரு படத்தில்...
‘புத்தகங்களே புத்தகங்களே
குழந்தைகளைக்
கிழித்துவிடாதீர்கள்’
என்கிற அய்யாவின் புகழ்பெற்ற கவிதையைப் பயன்படுத்திவிட்டு, அவரது பெயரைப் போடாமல் விட்டிருக்கிறார்கள். நல்ல நோக்கத்துக்காக எடுக்கப்படுகிற படத்திலும் இப்படிப் பிழை நேர்கிறதே.
இப்போதும், அய்யாவின் பிறந்தநாளில் சோலை, முருகன், அரசு போன்றோரின் முயற்சியில், முன்னாள் மாணவர்களாய் நாங்கள் வகுப்பறையில் அமர்ந்து, அய்யாவைப் பாடம் எடுக்கச் சொல்லி கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
எந்தச் சூழலிலும் மதம் சார்ந்த கருத்துகளை அய்யா என்னிடம் பேசியதில்லை... பேசியதே இல்லை. ஆனாலும் அவர் என்னிடம் ஒரு மதநூலை எடுத்து நீட்டினார். அது பைபிள். `அதில் ஒரு பகுதியைப் படி. ஒரே கவித்துவமாக இருக்கும். நம் கவித்துவ நடைக்குப் பயன்படும்’ என்பார். அதுதான் பழைய ஏற்பாட்டில், யோபுவின் சரித்திரம்.
அய்யா என்னைப் பற்றி ‘அவைத்திமிர் அடக்கு’ நூலுக்கு எழுதியபோது இதையேதான் இப்படிக் குறிப்பிட்டார்...
`அறிவுமதி என் வளர்ப்பு. என் வார்ப்பு அன்று. வார்ப்பது எனக்குப் பிடிக்காதது. கவிதையின் குணங்கள் அவருக்கே சொந்தமானவை. சமய, கட்சித் தலைவனைப்போல ஒரு நல்ல படைப்பாளன், தன்னைப் பின்பற்றுகிறவனை விரும்ப மாட்டான். தன்னிடம் வாங்கிக்கொண்டு வளர்கிறவனைத்தான் விரும்புவான். அறிவுமதியை நான் விரும்புகிறேன்.’
`73, அபிபுல்லாசாலை படைப்புத் தம்பிகளின் வேடந்தாங்கல்’ என்று என்னைப் பாராட்டுவது அய்யாவையும் பாரதிராஜாவையும் பாராட்டுவதுதான்.
அண்மையில் தம்பி லிங்குசாமியின் கவிதை நூலுக்கு அணிந்துரை வாங்க, லிங்கு பிருந்தா, இசாக் என நாங்கள் சென்றிருந்த பொழுது அய்யாவின் எளிமையை, ஆளுமையை, பண்பை, விருந்தோம்பலை தனக்குத் தெரிந்த அனைத்தையும் அடுத்தத் தலைமுறைக்கு அவிழ்த்துக் கொட்டிவிட வேண்டும் என்கிற தாய்மையை... என என்னைப்போலவே கண்டு, கேட்டு அனுபவித்து உருகிப்போனார்கள்.
அவர் லிங்கூவிற்குக் கொடுத்த அணிந்துரையில் ஒரு பகுதி...
‘ஒரு மரம் வைக்கும்போது
நீங்கள் ஒரு புத்தனையும்
வரவேற்கிறீர்கள்’
என்ற கவிதையைப் படித்தபோது எனக்கொரு கவிதை தோன்றியது.
`மரம் பயந்தது
நான் யாருக்கோ
புத்தருக்கோ இயேசுவுக்கோ’
இப்படி எவ்விதத் தயக்கங்களும் இல்லாமல் அடுத்தத் தலைமுறை படைப்பாளிகளை உற்சாகப்படுத்தி வளர்த்தெடுக்கிற அப்துல் ரகுமான், எனக்கு ஆண்தாயாக வாய்த்ததை நினைத்து நினைத்து நெகிழ்கிறேன்.
நேருக்குநேர்... கருத்துகளில் முரண்பட்டு கருத்து சொன்னேன் என்பதற்காக ஒரு பிரபலமான கவிஞர், தன் படம் ஒன்றைப் போட்டு, ‘இது அறிவுமதிக்குப் பாட்டுக் கொடுத்தபோது (திட்டு) எடுத்ததோ’ என்று தன் முகப் புத்தகத்தில் போட்டு, என்னை ஏகடியம் செய்து மகிழ்ந்துகொண்டார்.
இன்னொரு பிரபலமான புதின எழுத்தாளர், யாரைப் பற்றியோ எழுத என் பெயரைப் பயன்படுத்தி ஏளனம் செய்திருந்தார்.
அதற்கெல்லாம் நான் மௌனம்தான் செய்தேன்.
ஆனால், இந்த இடத்தில் அப்துல் ரகுமானைப் பற்றி எழுதுகிறபோதுதான் இந்த ஒப்பீட்டு நினைவு எனக்கு வருகிறது.
‘அறத்தை’ யாரிடம்
கற்றுக்கொள்வது..
இவர்களிடத்திலா…
அல்லது அய்யா அப்துல் ரகுமானிடத்திலா...
(இந்தக் கட்டுரையை அய்யாவை வாணியம்பாடிக்குத் தேடிவந்த தம்பிகள் விழுப்புரம் இராமமூர்த்திக்கும் செயச் சந்திரனுக்கும் காணிக்கையாக்குகிறேன்.)