Published:Updated:

தோற்றவர்களின் கதை - 15

தோற்றவர்களின் கதை - 15
பிரீமியம் ஸ்டோரி
News
தோற்றவர்களின் கதை - 15

சுசி திருஞானம்தொடர்

சார்லஸ் டார்வின்

ந்த உலகில் விதவிதமான உயிரினங்கள் எங்கிருந்து, எப்படி வந்தன என்ற அறிவியல் புதிருக்கு விடை கண்ட மகத்தான விஞ்ஞானி சார்லஸ் டார்வின். 150 ஆண்டுகளுக்கு முன், எண்ணற்ற ஆதாரங்களுடன் அவர் எழுதிய ‘உயிரினங்களின் தோற்றம்’ என்ற நூல் அறிவியல் உலகில் பெரும் புரட்சியை உண்டாக்கியது. நுட்பமான உபகரணங்கள் இல்லாத காலகட்டத்தில், காடுகள் மற்றும் கடல் வழிகளில் பயணித்து அவர் நடத்திய தீவிர ஆய்வுகள் இன்றும் நம்மைப் பிரமிக்கவைக்கின்றன.

னிதகுல சிந்தனைப் போக்கையே தலைகீழாகப் புரட்டிப்போட்ட இந்த மகத்தான விஞ்ஞானி, வாழ்க்கை முழுவதும் பல தோல்விகளையும், அவமானங்களையும் சந்தித்தவர்.

இங்கிலாந்து நாட்டில் 1809-ம் ஆண்டு பிறந்தார் சார்லஸ் டார்வின். அவரது தாத்தாவும், தந்தையும் அவரவர் காலகட்டத்தில் பிரபல மருத்துவர்கள். டார்வினுக்கு எட்டு வயதாகும்போது தாய் இறந்துவிட்டார். பள்ளிப் படிப்பின்போது மிகவும் சிரமப்பட்டார் டார்வின். பல நாட்கள் பாதியிலேயே வீட்டுக்கு வந்துவிடுவார். படிக்காத சில நண்பர்களோடு சேர்ந்துகொண்டு அடிக்கடி வேட்டைக்குப் போய்வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.

டார்வினின் அப்பா ஒருமுறை அவரைக் கூப்பிட்டு இப்படிக் கடுமையாக கடிந்துகொண்டார்: ‘‘உனக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை. எலி பிடிப்பது, வேட்டையாடுவது - இதுதான் வாழ்க்கை என்று திரிந்துகொண்டிருக்கிறாய். உன்னை நீயே அவமானப்படுத்திக் கொள்ளப் போகிறாய். நம் குடும்பத்துக்கும் உன்னால் அவமானம்தான் மிஞ்சும்.’’

தோற்றவர்களின் கதை - 15

பள்ளிப் பாடங்களின் மனப்பாட அணுகுமுறையை டார்வின் வெறுத்தார். அதேவேளையில், ஆய்வு மனப்பான்மை கொண்ட கல்வியில் பெரும் நாட்டம் கொண்டிருந்தார். ஜியாமெட்ரி படிப்பதிலும், கெமிஸ்ட்ரி படிப்பதிலும் அவருக்கு அதிக ஈடுபாடு இருந்தது. தனது அண்ணனுடன் சேர்ந்து வீட்டின் பின்பகுதியில் ஒரு ரசாயன ஆய்வகத்தையே உருவாக்கினார். ஆனால், அது பள்ளிப் பாடத்திட்டத்தில் வரவில்லை. டார்வினின் தலைமை ஆசிரியர், ‘‘உனது நேரத்தையெல்லாம் கெமிஸ்ட்ரியில் வீணடிக்கிறாய்’’ என்று கடிந்துகொண்டார்.

பள்ளியில் படிக்கும்போது அவருக்குக் கிடைத்த ‘விந்தைமிகு உலகம்’ என்ற பயண நூல் அவருக்குள் பெரும் ஆர்வத்தைத் தூண்டியது. விந்தைமிக்க பறவைகள், விலங்குகளைப் பார்வையிட நீண்ட கடல் பயணம் மேற்கொள்ளும் ஆவல் அவரின் உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரிந்தது.

தான் படித்த புகழ்பெற்ற எடின்பர்க் பல்கலைக்கழக மருத்துவப் படிப்பில், தனது மகன் டார்வினை சேர்த்துவிட்டார் அவரது தந்தை. ஆராய்ச்சி மனப்பாங்குகொண்ட டார்வினுக்கு, அங்கு எடுக்கப்பட்ட சலிப்பூட்டும் விரிவுரைகள் கசப்பைத் தந்தன. மருத்துவமனை வார்டுகளுக்குச் சென்று வருவது, அறுவைச்சிகிச்சைகளை உடனிருந்து கவனிப்பது போன்ற அனைத்தையும் டார்வின் வெறுத்தார். கல்லூரியில் இருந்து அடுத்தடுத்த எச்சரிக்கைகள் வந்தன.

தன்னைப்போல மகனும் டாக்டர் ஆகிவிடுவான் என்று கனவுகண்ட தந்தைக்கு, டார்வினின் போக்கு எரிச்சலைத் தந்தது. வேறு எதிலும் தேறாத மகனுக்கு, பாதிரியார் வேலை பாதுகாப்பானதாக இருக்கும் என்று எண்ணிய அவர், தனது மகனின் மருத்துவப் படிப்பை பாதியில் நிறுத்தி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கலை பட்டப்படிப்பில் சேர்த்துவிட்டார். கேம்பிரிட்ஜ் வளாகம் டார்வினுக்குப் பிடித்திருந்தது. நிறைய நண்பர்கள் கிடைத்தனர். அவ்வப்போது வேட்டையாடச் செல்ல வாய்ப்புக் கிடைத்தது. வேட்டையாடப் போகும்போது விதவிதமான வண்டுகள், பறவைகள் போன்றவற்றைக் கவனித்து ஒப்பிட்டுப் பார்ப்பது டார்வினின் வழக்கமாக மாறியது.

தோற்றவர்களின் கதை - 15

உயிரினங்களின் ஒப்பீட்டு ஆய்வை தற்செயலாகத் தொடங்கிவிட்ட டார்வின், எவ்வளவு ஈடுபாட்டுடன் அதனைச் செய்தார் என்பதற்கு அவர் விவரிக்கும் இந்தச் சம்பவம் ஒரு சான்று. ‘‘ஒருமுறை, மரப்பட்டை ஒன்றை நான் உரித்துக் கொண்டிருந்தபோது விதவிதமான வண்டுகளைக் கவனித்தேன். வலது கையில் ஒருவகை வண்டு, இடது கையில் மற்றொரு வகை வண்டு எனப் பிடித்து வைத்திருந்தேன். அப்போது மூன்றாவது வகை வண்டு வெளிவரவே, எனது வலது கையில் இருந்த வண்டை வாயில் போட்டுக்கொண்டு, மூன்றாவது வகை வண்டைக் கையில் பிடித்தேன். வாயில் இருந்த வண்டு ஏதோ ஒரு நச்சுத் திரவத்தை வீசியடித்ததால் என் நாக்கு வெந்ததுபோல் ஆகிவிட்டது. உடனே அதை உமிழ்ந்துவிட்டேன். அந்த வண்டு தப்பிப் பறந்துவிட்டது.”

கேம்பிரிட்ஜ் நாட்களில் டார்வின் வாசித்த இரண்டு நூல்கள், அவருக்குள் பெரும் ஆராய்ச்சி ஆர்வத்தைத் தூண்டிவிட்டிருந்தன. அலெக்ஸாண்டர் வான் ஹம்போல்ட் எழுதிய, ‘எனது பயணங்கள்’ என்ற நூலும், ஜான் ஹெர்சல் எழுதிய, ‘இயற்கையின் தத்துவம்’ என்ற நூலும், உலகப் பயணம் மேற்கொண்டு ஆராய்ச்சிகள் செய்யும் வேட்கையைத் தூண்டின.

டார்வின் பட்டப்படிப்பை முடித்திருந்த வேளையில், அவர் தேடிக்கொண்டிருந்த வாய்ப்பு ஒன்று அவரைத் தேடி வந்தது. ‘ஹெச்.எம்.எஸ் பீகிள்’ என்ற பிரிட்டிஷ் கடற்படை கப்பலில் 5 ஆண்டுகள் உலக நெடும்பயணம் மேற்கொண்டு ஆய்வுகள் செய்து திரும்பும் வாய்ப்பு அது. பயணக் கட்டணத்தை அவரே செலுத்த வேண்டும். ஆனால், அவர் விரும்பிய ஆராய்ச்சிகளைச் செய்துகொள்ளலாம். ‘‘உலகப் பயணம் செல்கிறேன்’’ என்று டார்வின் சொன்னபோது, ‘‘வேண்டவே வேண்டாம்’’ என்றார் அவரது தந்தை. ‘‘5 ஆண்டுகள் வெட்டிப் பயணம் செய்து வாழ்க்கையை வீணடிக்கப் போகிறாயா?’’ என்று கோபப்பட்டார். தந்தையைச் சமாதானப்படுத்தி, கட்டணம் செலுத்தச் செய்து பயணம் புறப்பட்டார் டார்வின்.

பயணம் தொடங்கிய உடனே அவருக்கு கடல் காய்ச்சல் வந்தது. மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். எழுந்திருக்க முடியவில்லை. ‘‘திரும்பிப் போய்விடு’’ என்று பலர் ஆலோசனை கூறினார்கள். டார்வின் உறுதியாக இருந்தார். உடல்நலம் தேறினார். விந்தைகள் நிறைந்த உயிரினங்களின் உடல் கூறுகளையும், பண்புகளையும் தேடித்தேடி ஆய்வுசெய்வதையும், அதைக் குறிப்புகளாக எழுதித் தள்ளுவதையும் தவமாகச் செய்தார். ஆப்பிரிக்காவை ஒட்டிய தீவுகள், தென் அமெரிக்க நாடுகள், கலாபகஸ் தீவுகள், ஆஸ்திரேலியா, மொரிசியஸ் என தென் கடலில் மொத்த உலகத்தையும் சுற்றி வந்தது பீகிள். பல்லாயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்கள், நன்னீர்வாழ் உயிரினங்கள், தரைவாழ் உயிரினங்கள், காடுவாழ் உயிரினங்கள் அனைத்தையும் தேடித்தேடி ஆய்வு செய்தார் டார்வின். கலாபகஸ் தீவுகளின் விநோதமான உயிரினங்கள் அவருக்குப் பெரும் வியப்பை உருவாக்கின. தான் எழுதிய குறிப்புகளையும், சில விலங்கின மாதிரிகளையும் அவ்வப்போது இங்கிலாந்தில் உள்ள தனது பேராசிரியருக்கு அனுப்பிவைத்தார். டார்வினின் ஆராய்ச்சி குறித்து, அறிவியல் உலகில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

சாதாரணப் பட்டதாரி இளைஞராகப் பயணம் புறப்பட்ட டார்வின், 5 ஆண்டுப் பயணம் முடித்து திரும்பியபோது, மதித்துப் போற்றப்படும் விஞ்ஞானியாகத் திரும்பி வந்தார். தனது ஆராய்ச்சி அனுபவங்களைத் தொகுத்து ‘உயிரினங்களின் தோற்றம்’ என்ற நூலை அவர் 1859-ம் ஆண்டில் வெளியிட்டபோது, அறிவியல் உலகில் பெரும் பரபரப்பு. அத்தனைப் பிரதிகளும் உடனே விற்றுத் தீர்ந்தன.

தோற்றவர்களின் கதை - 15

உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி, இயற்கைத் தேர்வு மூலமாக நடந்துவருவதை மறுக்க முடியாத ஆதாரங்களுடன் நிரூபித்து அவர் இப்படி எழுதினார். ‘‘சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் உயிரினங்கள் மட்டுமே தாக்குப்பிடித்து வாழ்கின்றன. உயிரினங்களின் வளர்ச்சியில், சாதகமான மாற்றங்கள் பாதுகாக்கப்படுகின்றன. பாதகமான மாற்றங்கள் அழிந்து போகின்றன. இந்த மாற்றங்களால், ஒரு கட்டத்தில் புதிய உயிரினம் பரிணமிக்கிறது.’’

‘‘மனிதனும், பரிணாம வளர்ச்சியில் பண்பட்டு வளர்ந்த ஒரு விலங்குதான்’’ என்றும், ‘‘மனிதனுக்கும் குரங்குக்கும் ஒரே மூதாதையர்’’ என்றும் அவர் தெரிவித்த கருத்துக்களுக்கு ஆன்மிகவாதிகளிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு வந்தது. டார்வினைக் குரங்குபோல் சித்தரித்து கார்ட்டூன் படங்கள் வெளியிடப்பட்டன. கல்லெறியும், சொல்லெறியும் அந்த அறிவியலாளரை அசைக்க முடியவில்லை. உண்மையான அறிவியலாளர்கள் அவருடன் நின்றனர். மகத்தான அறிவியல் விருதுகள் அவரைத் தேடிவந்தன. தான் வாழ்ந்த காலத்திலேயே பெரும் புகழ்பெற்ற டார்வின் 1882-ம் ஆண்டில் காலமானார். அவர் உருவாக்கிய பரிணாமக் கொள்கை உயிரியல் பாடமாக இன்றும் உலகம் முழுவதும் கற்பிக்கப்படுகிறது.

See Also: தோற்றவர்களின் கதை - 14

சிறு வயதில் வேட்டையாடுவதிலும், வெட்டி அரட்டையிலும் பொழுதைப் போக்கியதற்காக தனது தந்தையிடம் கடுமையாகத் திட்டு வாங்கிய சார்லஸ் டார்வின், தனது குறிக்கோளை உருவாக்கிக்கொண்டதும் வெறித்தனமாக உழைத்து உலகப் புகழ்பெற்றார். வாழ்க்கை என்பதே நேரத்தால் ஆனது என்பதை அவர் பல முறை வலியுறுத்தினார். நாம் அனைவரும் நெஞ்சில் நிறுத்த வேண்டிய அவரது அறிவுரை இதுதான்: ‘‘ஒரு மணி நேரத்தை நீங்கள் வீணடிக்கிறீர்கள் என்றால், வாழ்க்கையின் மதிப்பை இன்னும் நீங்கள் உணரவில்லை என்று பொருள்.’’

(இன்னும் வெல்வோம்)