Published:Updated:

தோற்றவர்களின் கதை - 16

தோற்றவர்களின் கதை - 16
பிரீமியம் ஸ்டோரி
News
தோற்றவர்களின் கதை - 16

சுசி திருஞானம்தொடர்

தோற்றவர்களின் கதை - 16

முனிபா மஸாரி!

பாகிஸ்தானின் இரும்புப் பெண்மணி’ என்று போற்றப்படும் இளம் ஓவியர் முனிபா மஸாரி. ஆசியாவின் முதல் சக்கர நாற்காலி மாடலிங் பெண்மணி. பாகிஸ்தான் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளர். உலகின் 100 வலிமைமிக்க பெண்மணிகளில் ஒருவராக முனிபா மஸாரியை, பி.பி.சி தொலைக்காட்சி தேர்வு செய்திருக்கிறது. முனிபா மஸாரியின் வாழ்க்கைக் கதையைக் கேட்கும் எவருக்கும் தன்னம்பிக்கையும் உத்வேகமும் ஊற்றெடுக்கும்.

பாகிஸ்தானில் 1987-ம் ஆண்டு பிறந்தவர் முனிபா மஸாரி. 2007-ம் ஆண்டில் பெரும் விபத்தில் சிக்கினார். அப்போது அவருக்குத் திருமணமாகி சில காலமே ஆகியிருந்தது. ஓவியக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். தனது சொந்த ஊருக்கு காரில் பயணம் செய்துகொண்டிருந்தார். டிரைவர் சில நொடிகள் தூங்கிவிடவே, வேகமாகச் சென்ற கார் பள்ளத்தில் பாய்ந்து உருண்டது. முனிபா மஸாரியின் கால்கள் துண்டாகி விழுந்தன. கை, கழுத்து, முதுகுத்தண்டு எனப் பல இடங்களில் அவருக்கு எலும்புகள் முறிந்தன. கிட்டத்தட்ட உயிர்போகும் நிலைமை.

ஒரு மணி நேரத்துக்கு மேலாகியும் ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. ஒரு ஜீப்பில் அவரைத் தூக்கிவைத்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு, ‘‘முதல் உதவிகூடச் செய்ய முடியாது - கொண்டுபோய் விடுங்கள்’’ என்று கூறிவிட்டனர். அடுத்து ஒரு பெரிய மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். அங்குள்ள மருத்துவர்களும், ‘‘அவர் சிறிது நேரத்தில் இறந்துவிடுவார் - கொண்டுபோய் விடுங்கள்’’ என்றனர். மூன்றாவது மருத்துவமனையில், அவரைச் சேர்த்துக்கொண்டு சிகிச்சை அளிக்கத் தொடங்கினர். இரண்டு பெரிய ஆபரேஷன்களும் மூன்று சிறிய ஆபரேஷன்களும் செய்யப்பட்டன.

‘‘நான் உண்மையிலேயே இரும்புப் பெண்மணிதான். என் உடலின் பல இடங்களில் உலோகக் கம்பிகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன’’ என்று தன் வேதனையை வேடிக்கையாகக் குறிப்பிடுகிறார் முனிபா மஸாரி.    

இரண்டு ஆண்டுகள் மருத்துவமனைப் படுக்கையில் வலிமிகுந்த வாழ்க்கை. கால்கள் துண்டிக்கப்பட்டுவிட்டன. முதுகுத்தண்டிலும் கைகளிலும் அறுவைச்ச்ிகிச்சை செய்யப்பட்டி ருந்தது. பல் துலக்க முடியாது, தலைமுடியைச் சரி செய்ய முடியாது. விபத்து நிகழ்ந்ததிலிருந்து அத்தனை வலியையும் பொறுத்துக்கொண்டு அவர் ஒரு சொட்டுக் கண்ணீர்கூட விடவில்லை.

உடல் வலியைவிட, தான் நம்பிய மனிதர்கள் தன்னைவிட்டு விலகிப்போன வலி அவரை அதிகம் காயப்படுத்தியது. அப்பா, அவரைவிட்டுச் சென்றுவிட்டார். கணவர், விவாகரத்து செய்துவிட்டார். பார்க்க வருகிறவர்கள் ஆறுதல் சொல்வதாக நினைத்து வேதனைப்படுத்தினார்கள்.

விரக்தியில் தற்கொலை எண்ணம் அவருக்குள் தலைதூக்கியது. தனக்குள் சிந்தித்துப்பார்த்த முனிபா மஸாரிக்கு, ஒருநாள் திடீரென யதார்த்த நிலைமை சுளீரென உரைத்தது. ‘‘என் வாழ்வில் இல்லாத மனிதர்களை நம்பிப் புலம்புவதைவிட என் மீது இன்னும் நம்பிக்கை வைத்திருப்பவர்களை நினைத்துப் பெருமைப்பட வேண்டும் என முடிவெடுத்தேன். செயல் இழந்த உடல் உறுப்புகளைப் பற்றிக் கவலைப்படுவதைவிட, தேறிவரும் உடல்நிலை குறித்து நம்பிக்கைகொள்ள முடிவெடுத்தேன்’’ என்று முனிபா குறிப்பிடுகிறார்.   

தோற்றவர்களின் கதை - 16

அவரது கை ஓரளவு இயங்க ஆரம்பித்தது. அவரது ஓவியத் திறமை பற்றி அறிந்த மருத்துவர் அதைத் தொடரச் சொன்னார். பேப்பரைத் தூக்குவதற்குக்கூட நடுங்கிய கைகளால் எப்படி ஓவியம் வரைவது என்று முனிபா மஸாரி தயங்கினார். அம்மாவும், சகோதரர்களும் உற்சாகப்படுத்தினார்கள். தூரிகையைத் தொட்டதுமே முனிபா மஸாரியின் வாழ்க்கை மீண்டும் வண்ணமயமாக மாற ஆரம்பித்தது. உடல் வலிகளை மட்டுமின்றி, மனவலிகளையும் காணாமல் செய்துவிட்டன முனிபா மஸாரி வரைந்த வண்ணமயமான ஓவியங்கள்.

ஓர் இணையதளத்தில் எழுதும் வாய்ப்பு வந்திருப்பது பற்றித் தனது சகோதரர்களிடம் பகிர்ந்துகொண்டார் முனிபா மஸாரி. ‘‘இனிமேல் உன் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. உனது வெற்றி, மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாக மாறும்’’ என்று அவர்கள் மனதார வாழ்த்தினார்கள்.

முனிபா மஸாரிக்கு எழுதும் வாய்ப்புத் தந்த இணையதளமே, அவரது 25 ஓவியங்களை வாங்கிக்கொண்டது. எழுதுவதும், படம் வரைவதும் வருமான வாய்ப்பாகவும் மாபெரும் அங்கீகாரமாகவும் மாறியதால், முனிபாவின் தன்னம்பிக்கை உயர்ந்தது. வேகமாகப் பிரபலம் அடைந்தார் முனிபா. பள்ளிகள், கல்லூரிகளில் அவரைப் பேசுவதற்கு அழைத்தனர். ‘டெட் எக்ஸ் இஸ்லாமாபாத்’ பேச்சரங்கத்தில் தனது வாழ்க்கைக் கதையை அற்புதமான ஆங்கிலத்தில் அவர் பேசியபோது, உலகின் தலைசிறந்த தன்னம்பிக்கைப் பேச்சாளர்களில் ஒருவராக அவர் உயர்ந்தார். தொலைக்காட்சித் தொகுப்பாளராகக் கலக்கிவரும் முனிபா மஸாரி, மாடலிங் துறையிலும் கால் பதித்துவிட்டார்.

தோற்றவர்களின் கதை - 16

‘‘பேசும் இடங்களிலோ, அடுத்தவர்கள் முன்பாகவோ நான் அழுததே இல்லை. எனினும், ஒவ்வொரு நாள் இரவும் நான் கண்ணீர்விடுகிறேன். எனக்காக அல்ல... என் கண்ணீர். வலியோடு போராடும் சாதாரண மக்களை நினைத்து நான் அழுகிறேன். எனது வலியைத் தாங்கிக்கொள்ளவும், எனது திறமைகளை வளர்த்து, முன்னேறவும் வழிகாட்டிய கடவுள், ஆதரவற்று வலியில் வாடும் சாதாரண மனிதர்களுக்கும் வழிகாட்ட வேண்டும் என்று தினமும் பிரார்த்தனை செய்கிறேன்’’ என்கிறார் முனிபா மஸாரி.

சாவின் விளிம்புவரை சென்று திரும்பிய சாதனைப் பெண் முனிபா மஸாரி, இளைஞர்களுக்குச் சொல்லும் வாழ்க்கைப் பாடம் இதுதான்: ‘‘என்னை உயர்த்த நான் மட்டுமே மெனக்கெட வேண்டும் என்பதை எப்போது நான் புரிந்துகொண்டேனோ, அந்தக் கணம்தான் எனது வாழ்க்கையில் வசந்தம் வந்தது. அதையே உங்களுக்கும் சொல்கிறேன். வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் சிறுசிறு தோல்விகளுக்காக அழுதுகொண்டிருக்க வேண்டாம். சோதனைகளைச் சாதனைகளாக மாற்ற உத்வேகம்கொள்ளுங்கள். கதாநாயகர்களை வெளியே தேடாதீர்கள். அந்தச் சக்தி உங்களுக்குள் இருக்கிறது.’’

(இன்னும் வெல்வோம்)