
தொகுப்பாசிரியர்: காலசுப்ரமணியம்

நவீன தமிழ் இலக்கியக் கலையின் அடையாளங் களில் ஒருவர் பிரமிள். அவரைப் புறந்தள்ள நினைத்தவர்களும் அவர் படைப்புகளை ரகசியமாய் படித்து தங்களை மேம்படுத்திக் கொண்டவர் களாகத்தான் இருப்பார்கள். சமகால இலக்கியத்தை மட்டுமல்ல, அதனுள் ஊடாடும் அரசியலையும் அலசி வெளியில் கொண்டுவந்து போட்டவர் என்ற கோபம், பிரமிள் மறைந்து 20 ஆண்டுகள் ஆனபிறகும் பலருக்கும் இன்னும் இருக்கவே செய்கிறது... இருக்கத்தான் செய்யும்.
அப்படிப்பட்ட ஆக்ரோஷ பிரமிள், திருகோணமலையில் பிறந்தவர். அங்குதான் முதல் கால் நூற்றாண்டு காலம் இருந்தார். 1960-களில் தமிழகம் வந்து
சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’ பத்திரிகை மூலமாக தனது இலக்கியப் பயணத்தை பிரமிள் தொடங்குகிறார். அதன்பிறகு அதிகமாகத் தமிழகத்திலேயே இருந்துவிட்டார். அவரை அனைவருக்கும் தமிழ்நாட்டுக் காரராகவே அறிமுகம். 1980-களின் தொடக்கத்தில் ஈழவிடுதலைப் போராட்டம் துளிர்த்தது. அப்போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் பிரமிளுக்கு தொடர்பு ஏற்பட்டது. அதற்கு முக்கியக் காரணம் அந்த அமைப்பின் அரசியல் ஆலோசகராக இருந்த அடேல் பாலசிங்கமும் பிரமிளும் இளம் வயது நண்பர்கள். எனவே, அந்த அமைப்பின் கொள்கை விளக்கப் புத்தகங்களை எழுதியும் மொழிபெயர்த்தும் கொடுத்தவர்களில் பிரமிளும் ஒருவர். அது, அன்றைய ‘விடுதலைப் புலிகள்’ ஏட்டில் வந்துள்ளது. இயக்கப் பாடல் என்ற அடையாளத்துடன் பிரமிள் ஒரு பாடல் எழுதினார். ஆனால், அதனை இயக்கம் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ‘லங்காவின் தேசியத் தற்கொலை’ என்று பிரமிள் எழுதிய சிறுநூல், இலங்கை தேசிய இனச் சிக்கலை உணர்த்தும் மிக நுணுக்கமான படைப்பாக அந்தக் காலகட்டத்தில் உணரப்பட்டது. ‘புதுயுகம் பிறக்கிறது’ என்ற இதழ் பிரமிள் முயற்சியால் தொடங்கப்பட்டு அதுவே அவருக்கும் அந்த இயக்கத்துக்குமான உறவை கொன்றது. ஆனாலும் ஈழம் குறித்தும், ஈழ இலக்கியம், அரசியல், ஆன்மிகம் குறித்தும் பிரமிள் தொடர்ச்சி யாக எழுதி வந்தார். அவற்றின் முழுமையான தொகுப்புத்தான் இந்த நூல்.
கவிதை, கதை, கட்டுரை ஆகிய அனைத்தையும் விடுபடுதல் இல்லாமல் காலசுப்ரமணியம் தொகுத்துள்ளார். பிரமிள் செய்த புண்ணியம்தான் காலசுப்ரமணியம் அவருக்குக் கிடைத்தது.

‘‘இலங்கையின் அரசியல் தலைமைக்கு, எப்போதும் ஒரு தேசிய அடிப்படை இருந்த தில்லை- இன அடிப்படை தவிர” என்று பிரமிள் அன்று எழுதினார். லட்சக்கணக்கான மக்களைத் தமிழன் என்பதற்காக மட்டுமே அடையாளம் பார்த்துப் பார்த்து கொன்றொழித்த முள்ளி வாய்க்காலுக்குப் பின்னும் இன்று அமைதி ஏற்பட்டுவிட்டதாகச் சொல்லி உரிமையற்ற இனமாகத் தமிழர்கள் மயான வாழ்க்கை வாழும் காலத்திலும் பிரமிள் சொல் கல்வெட்டாகக் காட்சி தருகிறது.
பிரபாகரனுக்கு பிரமிள் எழுதினார். அதுவே இன்னமும் தொடர்கிறது: ‘‘ஒவ்வொரு விநாடியும் தூக்கத்தில்கூட ஏதோ தூரத்துக்கதவு தட்டப்படும் ஓசையிலேயே திடுக்கிடும் இலங்கைவாழ் தமிழர்களை இங்குவரும்போது சந்தித்துப் பேசுகிறோம்!”
- எழுத்தன்