Published:Updated:

தோற்றவர்களின் கதை - 17

தோற்றவர்களின் கதை - 17
பிரீமியம் ஸ்டோரி
News
தோற்றவர்களின் கதை - 17

சுசி திருஞானம்தொடர்

தோற்றவர்களின் கதை - 17

தாமஸ் ஆல்வா எடிசன்

லகின் நம்பர் ஒன் கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன் படிக்காத மேதை! பிரமாண்டமான கண்டுபிடிப்புத் தொழிற்சாலையை உருவாக்கி, புதிய நுட்பங்களைக் கண்டுபிடிப்பதையே வெற்றிகரமான தொழிலாக நடத்திவந்த வித்தியாசமான விஞ்ஞானி. மின்சார பல்ப் முதல் சினிமா வரை அவர் உருவாக்கிய கண்டுபிடிப்புகள், மனித வாழ்க்கையை சுவாரஸ்யமாக்கி உள்ளன.

பள்ளியில் இருந்து ஆசிரியரால் துரத்தப்பட்டது முதல், தனது வாழ்க்கை முழுவதும் ஏராளமான தோல்விகளைச் சந்தித்தவர் எடிசன்.

‘‘வெற்றிகளைப்போலவே தோல்விகளும் மதிப்புக்குரியவை. எதுவெல்லாம் உபயோகமற்றது என்று தெரிந்துகொண்டால்தான் உபயோகமானதைக் கண்டறிய முடியும்’’ என்பது அந்த மேதையின் வாக்கு.

அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்தில் 1847-ம் ஆண்டு பிறந்தவர் தாமஸ் ஆல்வா எடிசன். தந்தை சாமுவேல், கனடாவிலிருந்து துரத்தப்பட்டு எளிய வாழ்க்கை வாழ்ந்தவர். தாய் நான்சி. எடிசன், பள்ளிக்குப் படிக்கப்போனது மொத்தத்தில் மூன்றே மூன்று மாதங்கள் மட்டுமே. எடிசனின் பள்ளி ஆசிரியர், ‘‘எடிசனுக்குக் கவனிக்கும் ஆற்றல் சுத்தமாகக் கிடையாது. எடிசன், பள்ளிப் படிப்புக்கு லாயக்கில்லாதவர்’’ என்று குற்றம்சாட்டினார். கோபமுற்ற எடிசனின் தாய், எடிசனைப் பள்ளியிலிருந்து கூட்டிவந்துவிட்டார். எழுதவும், படிக்கவும், கணிதப் பாடத்திலும் எடிசனுக்குத் தானே பயிற்சி அளித்தார்.  ‘‘நீ அபாரமான புத்திசாலி. எதிர்காலத்தில் எல்லோரும் பாராட்டும் புகழ்பெற்ற மேதையாகத் திகழ்வாய்’’ என்ற தன்னம்பிக்கை விதைகளை எடிசனிடம் அவர் விதைத்தார். சுயமான அறிவுத் தேடல்மிக்க சிறுவனாக எடிசன் வளர்ந்தார்.

தோற்றவர்களின் கதை - 17

சொந்தக் காலில் நிற்க விரும்பிய எடிசன், 13 வயதில் ரயிலில் செய்தித்தாள் மற்றும் மிட்டாய் விற்கும் வேலையில் சேர்ந்தார்.  பையில் எப்போதும் இயந்திர மாதிரிகளையும் ரசாயனக் கலவைகளையும் வைத்திருந்தார். ஒருமுறை, ரயிலின் ஓர் ஓரத்தில் ரசாயனக் கலவை கொட்டித் தீப்பிடித்துவிட்டது. பாதுகாவலர், எடிசனின் கன்னத்தில் அறைந்தார். ஏற்கெனவே காய்ச்சலால் அவரது காது மந்தமாகி இருந்தது. இந்தச் சம்பவத்துக்குப் பின், அவரது இடது காதில் 100 சதவிகிதம் கேட்கும் திறன் போய்விட்டது. வலது காதில் 20 சதவிகிதம் மட்டுமே கேட்கும் திறன் இருந்தது. ஆனால், இந்தக் குறைபாட்டை எடிசன் ஒருபோதும் தடங்கலாகக் கருதியதில்லை. மாறாக, தனது ஆராய்ச்சிகளிலிருந்து கவனம் சிதறாமல் மனதை ஒன்றுகுவிக்க முடிவதற்கு இந்தக் குறைபாடே காரணம் என்று பெருமிதமாக அவர் நினைத்தார்.

ஒருமுறை ரயிலில் அடிபட இருந்த, ஸ்டேஷன் மாஸ்டரின் மூன்று வயதுக் குழந்தையை ஓடிச்சென்று எடிசன் காப்பாற்றினார். இதைப் பார்த்த ஸ்டேஷன் மாஸ்டர், எடிசனுக்கு தந்தி இயந்திரத்தின் நுட்பங்களைக் கற்றுக்கொடுத்து, தந்தி ஆபரேட்டர் வேலை போட்டுக் கொடுத்தார். ரயில் நிலைய அலுவலகத்திலும் பகுதி நேர ஆராய்ச்சிகளைச் செய்துகொண்டிருந்தார் எடிசன். ஒருமுறை அமிலம் கீழே கொட்டியதில் ஸ்டேஷன் மாஸ்டரின் சில ஆவணங்கள் எரிந்து பொசுங்கிவிட்டன. கோபமுற்ற ஸ்டேஷன் மாஸ்டர் எடிசனை வேலையிலிருந்து துரத்திவிட்டார்.

தோற்றவர்களின் கதை - 17

கையில் காசு கிடையாது. பெற்றோரிடமும் கேட்க முடியாது. எடிசனுக்கு மிகவும் இக்கட்டான நிலை. மற்றொரு மூத்த தந்தி ஆபரேட்டர் லியோனார்டு போப், எடிசனுக்கு ஆதரவளித்தார். அவரது நியூ ஜெர்சி வீட்டில் தங்கியபடி, எடிசன் தனது ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார்.

அமெரிக்க காங்கிரஸில் வாக்கெடுப்புகளுக்கு அதிக நேரம் பிடிப்பதைக் கவனித்த எடிசன், வாக்கு எண்ணும் இயந்திரத்தைக் கண்டுபிடித்து காங்கிரஸில் விற்றுவிடலாம் என்று திட்டமிட்டார். இரவு பகலாக உழைத்து, 1869-ம் ஆண்டில் எலெக்ட்ரோ கிராபிக் வாக்கு எண்ணும் இயந்திரத்தை உருவாக்கி அதற்கான காப்புரிமையையும் வாங்கிவிட்டார். அதனை எடுத்துச் சென்று காங்கிரஸ் உறுப்பினர்களிடம் பெருமிதத்துடன் காட்டினார். அந்த அரசியல்வாதிகள், அதனைப் பொருட்படுத்தவே இல்லை. ‘‘தம்பி உனது இயந்திரத்தைக் கொண்டுவந்து வைத்தால், இங்கே எல்லாமே 5 நிமிடங்களில் முடிந்துபோகும். நாங்கள் எப்படி அரசியல் பேசுவது?’’ என்று அவரைத் திருப்பி அனுப்பிவிட்டனர். தனது முதல் கண்டுபிடிப்பு, வாங்குவதற்கு ஆள் இல்லாமல் தோல்வியில் முடிந்தது குறித்து மிகுந்த வேதனைப்பட்டார் எடிசன்.

தன்னைத்தானே தேற்றிக்கொண்ட எடிசன், தனக்கு ஆதரவளித்த லியோனார்டு போப் உதவியுடன் பங்குச்சந்தை விலைக் குறியீடு அச்சிடும் இயந்திரத்தை உருவாக்கினார். அது, பங்குச்சந்தை ஏஜென்ட்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. ஒரே நேரத்தில் நான்கு வகை தகவல்களை எடுத்துச்செல்லும் நான்கு ஒயர் தந்தி முறையைக் கண்டுபிடித்தார். தந்தி நிறுவனங்கள், எடிசன் எதிர்பார்த்ததைவிட அதிக விலை கொடுத்து அதனை வாங்கின.

கண்டுபிடிப்புகளுக்காகவே நியூயார்க் அருகே தனியே ஒரு பெரிய ஆராய்ச்சிக்கூடத்தை உருவாக்கினார் எடிசன். உலகின் முதலாவது தொழில் முறை ஆராய்ச்சிக்கூடம் அது. அங்கே 8 ஆயிரம் வகையான ரசாயனங்கள் இருந்தன. விதவிதமான ஊசிகள், ஆணிகள், பொறியியல் உபகரணங்கள், விலங்குகளின் கொம்புகள், லாடங்கள், பறவை சிறகுகள், பாசிகள், சிப்பிகள் அனைத்தும் அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. 1877-ல் ஒலியைப் பதிவுசெய்யும் போனோகிராப் ரெக்கார்டுகளை அவர் கண்டுபிடித்தபோது அதற்கு மிகப் பெரிய வரவேற்பு. அமெரிக்க காங்கிரஸில் அவருக்குப் பாராட்டு மழை. மிக விரைவில் உலகப் புகழ்பெற்றார்.

எலெக்ட்ரிக் பேனா, போனோகிராப் ரெக்கார்டுகள் மூலமாகப் பேசும் பொம்மைகள் என விதவிதமான கண்டுபிடிப்புகளை உருவாக்கினார். பல கண்டுபிடிப்புகள் தோல்வியில் முடிந்தாலும் அதனை ஓர் அனுபவப் பாடம் என்று நேர்மறையாக எடுத்துக்கொண்டார்.  

தோற்றவர்களின் கதை - 17

நீடித்து நின்று எரியும் மின்சார பல்ப் கண்டுபிடிப்பதில் தனது கவனத்தை எல்லாம் ஒன்றுகுவித்தார். நின்று ஒளிர்வதற்காக, பிளாட்டினம் உள்ளிட்ட எத்தனையோ விதமான இழைகளை முயன்று பார்த்து, கடைசியாக கார்பன் இழைகள் பொருத்தமானவை என்று கண்டுபிடித்தார். 1880-ம் ஆண்டில் அதற்கான காப்புரிமை பெற்றார். மின்சார விளக்கை, விலை மலிவானதாக்குவதே தனது நோக்கம் என அறிவித்தார். ஜே.பி.மார்கன் உள்ளிட்ட பெரும் கோடீஸ்வரர்கள், எடிசன் எலெக்ட்ரிக் பல்ப் தொழிற்சாலை அமைக்க நிதி வழங்க முன்வந்தனர். அவர்களின் நிதி உதவியுடன் ‘எடிசன் எலெக்ட்ரிக் கம்பெனி’யைத் தொடங்கினார் எடிசன்.

எரிவாயு விளக்குகள் கோலோச்சிவந்த காலகட்டம் மறைந்து, மின்சார விளக்குகளின் காலம் தொடங்கிவிட்டதால், மின் விநியோக அமைப்புகளைக் கண்டுபிடிப்பதிலும் நிர்மாணிப்பதிலும் கவனம் செலுத்தினார் எடிசன். அப்போது டி.சி வகை மின்சாரமா... ஏ.சி வகை மின்சாரமா - எது சிறந்தது என்ற சர்ச்சை உருவாகியிருந்தது. டி.சி வகை மின்சாரமே ஆபத்து இல்லாதது என்று எடிசன் தரப்பு வாதிட்டது. ஏ.சி வகை மின்சாரம் விலைமலிவானது, நீண்டதூரம் விநியோகிக்க ஏற்றது என்று எதிர்தரப்பு வாதிட்டது. ஏ.சி வகை மின்சார நிறுவனங்களின் லாபம் அதிகரித்து, எடிசன் கம்பெனியின் லாபம் குறையவே, முதலீட்டாளர்கள் போர்க்கொடி தூக்கினர். முடிவில் எடிசன், அவர் தொடங்கிய கம்பெனியிலிருந்தே வெளியேற்றப்பட்டார். சாதனையிலும் சோதனை. அதே கம்பெனிதான் ஜெனரல் எலெக்ட்ரிக் கம்பெனியாக பின்னர் உருமாறியது. கலங்கவில்லை எடிசன். பிற கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்தினார். 1891-ம் ஆண்டில் கைனெட்டோஸ்கோப் என்று அழைக்கப்பட்ட திரைப்பட கேமராவை கண்டுபிடித்தார். ப்ரொஜெக்டோஸ்கோப் என்ற திரைப்பட ப்ரொஜெக்டரையும் கண்டுபிடித்தார். எடிசன் ப்ரொஜெக்டர்கள் மிகவும் பிரபலமாகின. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நிறைய தியேட்டர்களில் அவை நிறுவப்பட்டன. எடிசன் திரைப்பட ஸ்டுடியோ தொடங்கப்பட்டு அதன்மூலமாக 1,200 படங்கள் தயாரிக்கப்பட்டன.

அமெரிக்காவில் வளரும் மரங்களில் இருந்து ரப்பர் தயாரிப்பதற்காக ஒரு தாவரவியல் ஆய்வுப் பண்ணையை உருவாக்கினார் எடிசன். 10 ஆயிரம் தோல்விகளுக்குப் பின்னர், கடைசியாக கோல்டன்ராட் வகை தாவரத்திலிருந்து ரப்பர் தயாரிக்கும் முறையை அவர் கண்டுபிடித்தார். இதைப் பற்றிய ஒரு கேள்விக்குப் பதிலளிக்கும்போது, ‘‘நான் 10 ஆயிரம் முறை தோற்றதாகக் கூறுவது தவறு. பயன்தராத 10 ஆயிரம் வழிமுறைகளை நான் வெற்றிகரமாகக் கண்டுபிடித்தேன்’’ என்று அவர் சொன்னார். 

தோற்றவர்களின் கதை - 17

தனது கடைசி நாட்கள் வரையிலும், அதிதீவிர கண்டுபிடிப்பாளராகவும், கண்டுபிடிப்புகளைத் தூண்டும் அறிவியலாளராகவும் அவர் விளங்கினார். தாமஸ் பைன் என்ற பகுத்தறிவாளர் எழுதிய ‘தி ஏஜ் ஆஃப் ரீஸன்’ என்ற நூலை 12 வயதில் வாசித்து எழுச்சிப்பெற்ற எடிசன், தனது வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவாளராகவே இருந்தார். ‘‘எல்லா மதங்களும் போலியானவை. எல்லாப் புனித நூல்களும் மனிதனால் எழுதப்பட்டவை’’ என்று எடிசன் பேசியபோது பெரும் அதிர்வுகள் ஏற்பட்டன. ஸ்பானிஷ் அமெரிக்கப் போரில் வெற்றி பெற்றதற்காக நன்றிசொல்லும் பிரார்த்தனைக் கூட்டத்தை அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி நடத்தியபோது, ‘‘அதே கடவுள்தான் அமெரிக்காவுக்கு மஞ்சள் காய்ச்சலையும் கொடுத்திருக்கிறார். நமது ஜனாதிபதி அதற்காகவும் கடவுளுக்கு நன்றி சொல்வாரா?’’ என்று கேட்டார் எடிசன்.

கண்டுபிடிப்புகளின் நாயகனான எடிசனிடம், தோல்விக்கும் வெற்றிக்குமான காரணங்கள் பற்றிக் கேட்டபோது தயங்காமல் சொன்னார்: ‘‘நமது மிகப் பெரிய பலவீனமே முயற்சிகளைக் கைவிடுவதுதான். நிறையப் பேர், வெற்றிக்கு அருகில் வந்துவிட்டதை அறியாமல் தமது முயற்சியைக் கைவிட்டுவிட்டு, தோல்வியடைந்ததாக நொந்துகொள்கிறார்கள். இலக்கை நோக்கிய பயணத்தில், மீண்டும் ஒரே ஒருமுறை முயற்சித்துப் பாப்பதுதான் வெற்றிக்கான சூத்திரம்.”

(இன்னும் வெல்வோம்)

'மனச்சிறையில் சில மர்மங்கள்’ தொடர் அடுத்த இதழில்...