மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!
பிரீமியம் ஸ்டோரி
News
அனுபவங்கள் பேசுகின்றன!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ. 200 / ராமமூர்த்தி

அனுபவங்கள் பேசுகின்றன!

மனதைக் கவர்ந்த மாற்றுத்திறனாளி!

சமீபத்தில் என் தோழியின் அண்ணன்  திருமணத்துக்குச் சென்றேன். மணமகளை அவள் உறவினர்கள் கைத்தாங்கலாக அழைத்துவந்து மணவறையில் போடப்பட்டிருந்த சோபாவில் அமரவைத்தனர். அவர் மாற்றுத்திறனாளி என்பது அப்போதுதான் எனக்குத் தெரிந்தது.

இது பற்றி தோழியிடம் கேட்டபோது, ``என் அண்ணன் பொறுப்பு இல்லாமல் ஊர் சுற்றிக்கொண்டு இருந்தான். சுயதொழில் செய்யும் இந்தப் பெண் என் அண்ணனுக்கு அறிமுகமாகி, நட்பு வளர்ந்தது. அண்ணனை ஊக்கப்படுத்தி ஒரு வேலையும் கிடைக்கக் காரணமாக அமைந்தாள். பிறகு, அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. அவர்கள் காதலை இருவீட்டினரும் ஏற்றுக்கொண்டு கல்யாணம் செய்ய முடிவெடுத்தனர்’’ என்றாள்.

ஓர் இளைஞனை நல்வழியில் மாற்றி, திருமணம் செய்துகொண்ட அந்த மாற்றுத்திறனாளி மங்கையை மனதார பாராட்டினேன்.

- க.கலா, தஞ்சை

அனுபவங்கள் பேசுகின்றன!

பணமாகவே கொடுக்கலாமே..!

எங்கள் உறவினர் ஒருவர் தன் வீட்டுக் கிரஹப்பிரவேசத்தை நடத்தினார். பத்திரிகை வைக்கும்போதே எல்லோரிடமும், ‘’யாரும் பரிசுப் பொருட்களாக கொடுக்க வேண்டாம். வீட்டுக்கடன் இருப்பதால், மொய்ப்பணமாக வைத்துவிடுங்கள்’’ என்று வெளிப்படையாகவே கூறினார். யோசித்துப் பார்த்தால், இது நல்ல ஐடியாவாகவே தோன்றுகிறது. இன்று பெரும்பாலும் பரிசுப் பொருட்கள் என்றால் சுவர்க் கடிகாரம், மில்க் குக்கர், ஹாட்பாக்ஸ், சுவாமி படங்கள் போன்றவற்றை வாங்கியோ, அல்லது தங்கள் வீட்டு விசேஷங்களுக்கு வந்ததையோ கொடுத்துவிடுகிறார்கள். மேலும் அத்தகைய  பரிசுப் பொருட்களில் பெரும்பாலானவை எல்லோர் வீடுகளிலுமே இருக்கின்றன; ஒரே பரிசுப்பொருள் மூன்று, நான்கு என்றுகூட  வந்துவிடுகிறது.

எனவே, விசேஷங்களுக்குச் செல்பவர்கள், பரிசளிக்க விரும்பினால், பணமாகவே கொடுப்பதுதான் சிறந்தது. சரிதானே தோழிகளே..?!

- கே.மகாலட்சுமி, திண்டுக்கல்

அனுபவங்கள் பேசுகின்றன!

சின்ன விஷயத்தையும் கவனிங்க..!

சமீபத்தில் ஒரு திருமண வரவேற்புக்கு சென்றிருந்தேன். வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடந்தது. மண்டபத்தில் சாப்பிட்ட பின்பு எல்லோருக்கும் பாதாம் பால் கொடுத்தனர். குடித்தவர்கள் கப்களை ஆங்காங்கே போட்டுச் சென்றனர். பார்ப்பதற்கு அருவருப்பாக இருந்தது. ஒரு சாதாரண அட்டைப்பெட்டி வைக்கக் கூடாதா? தண்ணீர் பாட்டில்களை அடுக்கி கொண்டுவரும் அட்டைப்பெட்டியை வைத்தால்கூட போதுமே! வரவேற்பு நடத்துபவர்கள், இதுபோன்ற சிறிய விஷங்களில் கவனம் செலுத்த வேண்டும்.  நீங்கள் மண்டபத்தில் இருக்கும் வரை அது உங்கள் இடம்... அதனை  சுத்தமாக வைத்திருக்கலாமே!

- ஜி.விஜயலெட்சுமி, கும்பகோணம்