
சுசி திருஞானம்தொடர்

சே குவாரா
மனிதகுல வரலாற்றிலேயே மிக அதிகமான இளைஞர்களை வசீகரித்த மந்திரச்சொல் சே குவாரா. உலகிலேயே அதிகப் பிரபலமான புகைப்படம், கியூப புகைப்பட நிபுணர் ஆல்பர்டோ கோர்டாவால் எடுக்கப்பட்ட சே குவாராவின் புகைப்படம். இன்றைக்கும் கோடானுகோடி டீஷர்ட்களில் காணப்படும் கம்பீரமான தாடி முகம் சே குவாராவின் முகம்தான். எல்லை கடந்த மனிதநேயமும், அணைபோட முடியாத உத்வேகமும் சே குவாராவின் இரு பெரும் பண்புகள்.
மருத்துவரான சே குவாரா, எங்கெல்லாம் மனிதகுலம் ஒடுக்குமுறைக்கு உள்ளானதோ அங்கெல்லாம் சென்று மக்களைத் திரட்டிப் போராடிய சோசலிசப் புரட்சியாளர். எத்தனை தோல்விகள் வந்தபோதும், ஒடுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காக ஆபத்தின் விளிம்பில் நின்று ஆண்டுக்கணக்காகப் போராடியவர்.
தென் அமெரிக்காவில் உள்ள அர்ஜென்டினாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் 1928-ம் ஆண்டு பிறந்தார் சே குவாரா. தந்தை சமதர்ம சிந்தனையாளராக இருந்ததால், விடுதலை வேட்கைகொண்ட தலைவர்கள் பலர் அவர்களது வீட்டுக்கு அடிக்கடி வந்துசென்றனர். வாழ்க்கை முழுவதும் ஆஸ்துமா நோய், சே குவாராவுக்குப் பெரும் தொந்தரவைக் கொடுத்தது. துன்பத்துக்குத் துன்பம் கொடுக்கும் துணிச்சல்கொண்ட சே குவாரா, அந்த நோயைப் பொருட்படுத்தாமல் நீச்சல், கால்பந்து, சைக்கிளிங், ரக்பி எனப் பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்கினார்.
பாப்லோ நெருடா, வால்ட் விட்மன் போன்ற மகா கவிஞர்களின் கவிதைகளைத் தேடித்தேடி வாசித்தார். ஹெச்.ஜி.வெல்ஸ், ராபர்ட் ஃப்ராஸ்ட், ஜவஹர்லால் நேரு, காரல் மார்க்ஸ், லெனின் போன்றோரின் நூல்களை இரவு பகலாகப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். புத்தர், அரிஸ்டாட்டில், பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், நீட்ஸே, சிக்மண்ட் ஃப்ராய்டு போன்றோரின் கருத்துகளை ஆழமாகப் படித்து, ஆய்வுசெய்து தன் கைப்பட நீண்ட குறிப்புகளாக எழுதிவந்தார். பின்னாட்களில் அவரைக் கொல்வதற்காக உலகம் முழுவதும் தேடி அலைந்த உளவு அமைப்பான சி.ஐ.ஏ., ‘லத்தீன் அமெரிக்கர்களில் மிகத் தீவிரமான வாசிப்பாளர் சே குவாரா’ என்று பதிவுசெய்து வைத்திருந்தது.
மருத்துவம் படிப்பதற்காக பியூனஸ் அயர்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் சே குவாரா. விந்தைமிகு உலகைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆவலால் படிப்பில் விடுப்பு எடுத்துக்கொண்டு, 2 பெரும் பயணங்களை மேற்கொண்டார்
சே குவாரா. 1950-ம் ஆண்டில், ஒரு சைக்கிளில் மோட்டார் எஞ்சினைப் பொருத்திக்கொண்டு 4,500 கிலோமீட்டர் பயணம் செய்து அர்ஜென்டினாவின் கிராமப்புறங்களைச் சுற்றிப்பார்த்தார். பின்னர், தனது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து, தென் அமெரிக்க நாடுகளுக்குப் பயணம் செய்தார். சிலி, பெரு, கொலம்பியா, வெனிசுலா போன்ற நாடுகளின் காடுகள் மற்றும் கிராமங்களை அருகில் சென்று கவனித்தார்.
பெருநாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த சான் பாப்லோ தொழுநோயாளர் குடியேற்றத்தில் சில வாரங்கள் தங்கியிருந்தார்
சே குவாரா. அங்கிருந்த டாக்டர் ஹியூகோ பெஸ்ஸியுடன் அவர் இரவு பகலாக விவாதித்தார். நிர்க்கதியான ஏழைகளின் துயர்துடைக்கப் பாடுபடுவது என்ற தன் வாழ்க்கைக் குறிக்கோளை இங்குதான் அவர் உருவாக்கிக் கொண்டார். இந்தப் பயணத்தின்போது அவர் எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி, ‘தி மோட்டார் சைக்கிள் டைரீஸ்’ என்னும் தலைப்பில் ஒரு புத்தகம் எழுதினார். இன்றுவரை, மிக அதிகம் விற்பனையாகும் நூல்களில் அதுவும் ஒன்று.
1953-ம் ஆண்டில், மருத்துவப் படிப்பை முடித்துப் பட்டம் பெற்றபோதும், சே குவாராவின் நாட்டம் முழுவதும், சமூக ஏற்றத்தாழ்வுகளுக்குத் தீர்வு காணவேண்டும் என்பதிலேயே இருந்தது.
கியூபாவின் பிற்போக்கு அரசாங்கத்துக்கு எதிரான கெரில்லா யுத்தத்தில் மிக முக்கியப் பங்காற்றினார். கியூப காடுகளில் இருந்தபடி குழுக்களாக வெளியேறித் தாக்கும் கெரில்லா போர் முறையை அவர் உருவாக்கினார். கெரில்லா யுத்தம் அன்றைய ஆட்சியாளர்களை நடுங்கவைத்தது. காடுகளில் இருந்தபடி சே குவாரா ஒருங்கிணைத்து உருவாக்கிய வானொலி, பிற்போக்காளர்களுக்குக் கிலியை ஏற்படுத்தியது.
கியூப புரட்சி வெற்றிபெற்று, காஸ்ட்ரோ அதிபரானபோது, அந்த நாட்டின் வளர்ச்சிப் பணிகளில் சே குவாரா முக்கியப் பங்காற்றினார். கியூபா நாட்டின் தூதராக எகிப்து, இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பயணம் செய்தார். அப்போதைய இந்தியப் பிரதமர் நேரு, பேரனைப்போலத் தன்னை அன்புடன் நடத்தியதாகவும், கியூப புரட்சியின் சிரமங்களை அக்கறையுடன் கேட்டுத் தெரிந்துகொண்டதாகவும் சே குவாரா குறிப்பிட்டார். இந்தியாவில் வறுமையும் செல்வச் செழிப்பும் அருகருகே நிலவுவதைக் கூர்ந்து கவனித்த சே குவாரா, ‘‘இந்தியா வேற்றுமைகளின் நாடு’’ என்று குறிப்பிட்டார்.

1964-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையில் சே குவாரா நிகழ்த்திய உரை மிகவும் பிரசித்த மானது. அமெரிக்க மண்ணில் இருந்தபடியே அமெரிக்க ஏகாதிபத்தியக் கொள்கையை எதிர்த்து முழங்கினார் சே குவாரா. ‘‘அநீதி எங்கு நடந்தாலும் அதற்கு எதிராக உன் மனது துடிக்கிறது என்றால், நீ என் தோழன்’’ என்ற அவரது குரலானது நாடுகள், எல்லைகளைக் கடந்து எல்லா இடங்களிலும் இன்றும் எதிரொலிக்கிறது.
கியூபா, ஒரு கட்டத்தில் ரஷ்யா சொல்வதைக் கேட்கும் நாடாக மாறிவிட்டதாக எண்ணி மனம் வருந்தினார் சே குவாரா. ஃபிடல் காஸ்ட்ரோவுக்கும், சே குவாராவுக்கும் கருத்து வேறுபாடு என்ற சர்ச்சைகள் வெளியாகின. காங்கோ மற்றும் பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு உதவுவதற்காக 1965-ல் கியூபா நாட்டைவிட்டு வெளியேறினார் சே குவாரா.
அந்த நாடுகளில் கடுமையான வறுமையும் அடக்குமுறையும் இருந்தபோதும், புரட்சிக்குத் தயாரான நிலையில் மக்களின் மனநிலை இல்லை. இதனால் சே குவாராவின் கெரில்லா படைக்கு அடுத்தடுத்த தோல்விகள் ஏற்பட்டன. ‘உலகிலேயே ஆபத்தான மனிதன் சே குவாரா’ என்று கணித்த சி.ஐ.ஏ., அவரைக் கொல்வதற்காகப் பெரும்பணம் செலவிட்டது.
1967-ம் ஆண்டில், பொலிவியா நாட்டில் சி.ஐ.ஏ தூண்டுதலின்படி சே குவாரா கைதுசெய்யப்பட்டு, எந்தவித விசாரணையும் இன்றி சுட்டுக் கொல்லப் பட்டார். அவரது மரணத்துக்குப் பின், சே குவாரா உலகிலுள்ள எல்லாப் புரட்சி இயக்கங்களி னாலும் கொண்டாடப்படும் மாவீரனாகிவிட்டார்.

வாழ்க்கையில் லட்சிய வெறி இருக்க வேண்டும் என்று அவர் இளைஞர்களிடம் வலியுறுத்தி வந்தார். சே குவாராவின் புகழ்பெற்ற மேற்கோள் இதுதான்: ‘‘ஒருவன் தனது வாழ்க்கை குறிக்கோளுக்காக, உயிரைக் கொடுத்து உழைக்கத் தயாராக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட உத்வேகம் தரும் குறிக்கோள் ஒருவனிடம் இல்லை என்றால், அது வாழ்க்கையே இல்லை.’’
(இன்னும் வெல்வோம்)