Published:Updated:

தோற்றவர்களின் கதை - 19

தோற்றவர்களின் கதை - 19
பிரீமியம் ஸ்டோரி
News
தோற்றவர்களின் கதை - 19

சுசி திருஞானம்தொடர்

தோற்றவர்களின் கதை - 19

முகமது அலி

குத்துச்சண்டைப் பயிற்சியின் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் வெறுத்தேன். ஆனால், எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். முயற்சியைக் கைவிட்டுவிடாதே. இப்போது கஷ்டப்பட்டால், மீதமுள்ள வாழ்நாள் முழுவதும் உலக சாம்பியன் என்ற பெருமை யுடன் வாழலாம்.’’ 

குத்துச்சண்டை உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த முகமது அலி, பயிற்சியின்போது மரண வலியைச் சந்தித்தபோது எல்லாம் மேற்சொன்ன வரிகளைத் தன் மனதுக்குள் சொல்லிக் கொண்டார். குத்துச்சண்டை மேடையில் மட்டுமல்ல, சமூக அரசியல் களத்திலும் அவர் வலிமிகுந்த தாக்குதல்களை எதிர்கொண்டார். பர்கின்சன் நோய் எனப்படும் மறதி நோய் அவரை 32 ஆண்டுகளாக வதை செய்தது. பயிற்சியின்போது காட்டிய அதே மனஉறுதியுடன் கடைசிவரை போராடும் சாம்பியனாகவே அவர் வாழ்ந்தார்.

அமெரிக்காவின் தென் பகுதி மாகாணமான கென்டக்கியில் 1942-ம் ஆண்டு முகமது அலி பிறந்தார். காசியஸ் க்ளே என்பது அவரது இயற்பெயர். அவருடைய மூதாதையர்கள், ஆப்பிரிக்க - அமெரிக்கக் கறுப்பின அடிமை களாக வாழ்ந்தவர்கள். முகமது அலி சிறுவனாக இருந்தபோது ஒரு கடையில், தாகத்துக்குத் தண்ணீர் கேட்டார். கறுப்பின அடிமைச் சிறுவனுக்குத் தண்ணீர்தர முடியாது என்று வெள்ளைக்கார கடைக்காரர் துரத்திவிட்டார். அந்தச் சம்பவம், அவர் மனதில் ஆழப் பதிந்தது. நிற ஒடுக்குமுறைக்கு எதிராகவும், அனைத்துவித ஒடுக்குமுறைகள் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும் ஆக்ரோஷமாகக் குரல்கொடுப்பது, கடைசிவரை அவரது இயல்பாக இருந்தது.

முகமது அலி 12 வயது சிறுவனாக இருந்தபோது அவருடைய சைக்கிள் திருடப்பட்டுவிட்டது. முகமது அலி, புகார் அளிக்கக் காவல் நிலையம் சென்றார். சைக்கிளைத் திருடியவனை, நேரில் கண்டால் அவனை அடித்து நொறுக்கிவிட விரும்புவதாக போலீஸ்காரர்களிடம் தெரிவித்தார். சிறுவனின் ஆக்ரோஷத்தைக் கவனித்த ஜோ மார்ட்டின் என்ற போலீஸ்காரர், குத்துச்சண்டை பயிற்சி பெறுவதற்கு முகமது அலிக்கு வழிகாட்டினார். அமெச்சூர் வீரராக உருவெடுத்தார் முகமது அலி. 105 அமெச்சூர் போட்டிகளில் களம் இறங்கிய முகமது அலி, 5 முறை மட்டுமே தோல்வி கண்டார். 1960-ம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில், 18 வயதே ஆன முகமது அலி தங்கம் வென்று சாதனை படைத்தார்.

ரோம் ஒலிம்பிக்கில் இருந்து அமெரிக்கா திரும்பிய முகமது அலி, தனது நண்பருடன் ஒரு ஹோட்டலுக்குச் சென்றார். முகமது அலிக்கும் அவரது நண்பருக்கும் சேவை செய்யமுடியாது என அங்கு பணியில் இருந்த வெள்ளைக்காரப் பெண் ஆணவமாகப் பதில் அளித்தார். இதனால், கடும் கோபமடைந்த முகமது அலி, எதிர்த்து வாதிட்டதுடன், தனது ஒலிம்பிக் பதக்கத்தை ஓகியோ நதியில் வீசியதாகத் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். நாட்டுக்காகத் தங்கப்பதக்கம் வாங்கிய தன்னை நிற பேதம் காட்டி அவமானப்படுத்தும் அமெரிக்கத் தேசத்தின் நிலைமை குறித்து வேதனைப்படுவதாக முகமது அலி தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். நிறவெறி மீதான தனது கோபத்தைக் குத்துச்சண்டைப் போட்டிகளில் காட்ட முடிவெடுத்த முகமது அலி, அதே ஆண்டில் தொழில்முறைக் குத்துச்சண்டை வீரராக உருவெடுத்தார். பின்னர், களமிறங்கிய அனைத்துப் போட்டிகளிலும் ஆக்ரோஷமாக எதிராளியைத் தாக்கினார். தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக நடந்த 19  குத்துச்சண்டை போட்டிகளில் அவர் ஒருமுறைகூடத் தோற்கவில்லை. 15 முறை நாக் அவுட் வெற்றி.

20-வது போட்டி, உலக குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் போட்டியாக அமைந்தது. அந்தப் போட்டியில், உலகின் மிக ஆபத்தான வீரராக அறியப்பட்ட உலக சாம்பியன் சோனி லிஸ்டனை, 22 வயதே ஆன முகமது அலி எதிர்கொண்டார். இந்தப் போட்டியின் 7-வது சுற்றில், ‘டெக்னிக்கல் நாக்-அவுட்’ முறையில் வெற்றி பெற்ற முகமது அலி, உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார். கூடியிருந்த மக்கள் முன்பாக, ‘‘நான் யாராலும் வெல்லப்பட முடியாத உலக சாம்பியன். நானே உலகின் மாவீரன்’’ என்று தன்னம்பிக்கையுடன் முழக்கமிட்டார். 

அமெரிக்காவில் நிலவிவந்த நிறவெறிக்கு எதிராக குரல்கொடுத்த மால்கம் எக்ஸ் என்ற தலைவரின் மீது தான் கொண்ட அபிமானத்தால், காசியஸ் க்ளே என்ற தனது பெயரை, க்ளேசியஸ் எக்ஸ் என்று சிறிதுகாலம் மாற்றிக்கொண்டார். கறுப்பின மக்கள் மீதான அடக்குமுறைக்கு எதிரான போராட்ட வடிவமாக மதமாற்றம் கருதப்பட்ட காலகட்டத்தில், தனது பெயரை முகமது அலி என்று பின்னர் மாற்றிக்கொண்டார். ‘‘கிளே என்ற பெயர் அடிமை முறையை நினைவுபடுத்துகிறது. ‘முகமது அலி’ என்றால் கடவுளின் அன்புக்குரியவர் என்று பொருள். எனவே, எல்லோரும் என்னை முகமது அலி என்றே அழையுங்கள்’’ என்றார்.

1967-ம் ஆண்டு நடந்த வியட்நாம் போரில், அமெரிக்கப் படையினருக்காகப் போரிட முகமது அலி மறுத்ததால், 5 ஆண்டுகாலம் சிறை, 10,000 டாலர் அபராதம், சாம்பியன்ஷிப் பட்டம் பறிப்பு, குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்கத் தடை என இன்னல்களைத் தந்தது அமெரிக்க அரசு. இதனால், முகமது அலியின் வருமான வாய்ப்புகள் அடைக்கப்பட்டு, அவர் பெரும் கடனாளி ஆகிவிட்டார். ஆனாலும், அவர் தனது நிலைப்பாட்டில் இருந்து துளியும் மாறவில்லை. தான் மிகவும் நேசித்த குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்க முடியாமல் மூன்றரை ஆண்டு காலம் ஒதுங்கியிருந்தார். சிறைத் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்த முகமது அலி, நீதிமன்றத்தில் மட்டுமின்றி மக்கள் மன்றத்திலும் தனது கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துவைத்துப் போராடினார். 

முகமது அலியின் கருத்து அமெரிக்க மக்களின் கருத்தாக மாறியது. வியட்நாம் போரிலிருந்து அமெரிக்கா பின்வாங்க நேரிட்டது. முகமது அலியிடம் பறிக்கப்பட்ட விருதுகள் மீண்டும் தரப்பட்டன. தடை நீங்கி மீண்டும் களம் கண்ட முகமது அலியிடம் சற்றும் வேகம் குறையவில்லை. மொத்தம் 61 முறை ஹெவி வெய்ட் குத்துச்சண்டை போட்டிகளில் களமிறங்கிய முகமது அலி, அவற்றில் 56 போட்டிகளில் வெற்றி பெற்றார். இதில் 37 முறை நாக்-அவுட் முறையில் வென்றார். வரிசையாக மூன்று முறை உலக சாம்பியன் பட்டங்களை வென்று அசத்தினார்.

1980-ல் தமிழ்நாடு அமெச்சூர் குத்துச்சண்டை சங்கத்துக்கு நிதி திரட்டுவதற்காக சென்னையில், காட்சி குத்துச்சண்டை போட்டி நடத்தப்பட்டது. அதில் முகமது அலியும், முன்னாள் ஹெவி வெயிட் சாம்பியனான ஜிம்மி எல்லிஸும் மோதினர். அதற்காக சென்னை வந்த முகமது அலிக்கு முதல்வர் எம்.ஜி.ஆர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தன்னைக் காண கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களைக் கண்டு முகமது அலி நெகிழ்ச்சியடைந்தார்.

தோற்றவர்களின் கதை - 19

அடுத்த சில ஆண்டுகளில் அவரது பேச்சில் நடுக்கம் உருவானது. குத்துச்சண்டையின்போது, பலமுறை தலையில் அடிபட்டதால், முகமது அலிக்குத் தலையில் ரத்த உறைவு ஏற்பட்டு பக்கவாதம் தாக்கியது. பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட அலி, ஓரிரு மாதங்கள்கூடத் தாங்கமாட்டார் என மருத்துவர்கள் கூற, அதையும் சவாலாக ஏற்று, வாழ்ந்துகாட்டினார் அலி. உடல் நலிவுற்றபோதிலும், கறுப்பின மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது, சமூக சேவையில் ஈடுபடுவது என தனது கடைசிக் காலத்திலும் பரபரப்புடனே செயல்பட்டார் முகமது அலி. மரணத்துடன் நடந்த போட்டியில், மரணத்தை பலமுறை நாக்-அவுட் செய்த முகமது அலி, கடந்த ஜூன் மாதம் காலமானார்.

மிகவும் பின்தங்கிய சூழலில் பிறந்து, உலகின் மாவீரனாக மாறியது எப்படி என்ற கேள்விக்கு, முகமது அலி இப்படிப் பதிலளித்தார்: ‘‘நான் ஒரு சாதாரண மனிதன். எனக்கு நானே தன்னம்பிக்கையை அளித்துக்கொண்டேன். நான் உலக சாம்பியன் என்று மீண்டும் மீண்டும் எனக்குள் மந்திரம்போல் சொல்லிவந்தேன். இந்த மந்திர உச்சாடனத்தால் எனது நம்பிக்கை உயர்ந்தது. நம்பிக்கையும் வெறித்தனமான உழைப்பும் ஒன்றுசேரும்போது, நம்பிய இலக்கு நம் கைவசமாகிறது.’’

(இன்னும் வெல்வோம்)