
தெய்வங்கள் தோற்கும் தந்தையின் பாசம்!

‘வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே...’ என எழுதியவர் நா.முத்துக்குமார். அவர் ஒரு வெயில் பிரியர். ‘மழை மட்டுமா அழகு எனக் கேட்டுவிட்டு, சுடும் வெயில்கூட ஓர் அழகு’ என வெயிலை சிபாரிசு செய்தவர். இயற்கையை வர்ணிப்பதில் ஓரவஞ்சனை இல்லாத ஒப்பற்ற எழுத்துக்குச் சொந்தக்காரர் அவர்.
திரைப்படங்களுக்குப் பாடல் எழுதத் தொடங்கி இருபது ஆண்டுகளில் இரண்டு தேசிய விருதுகள். `ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என ‘தங்க மீன்கள்’ படத்துக்காக எழுதிய பாடலுக்கும் `அழகே அழகே எதுவும் அழகே’ என ‘சைவம்’ படத்துக்கு எழுதிய பாடலுக்கும் அவருக்கு தேசிய விருதுகள் கிடைத்தன.
காஞ்சி மாவட்டத்தின் கன்னிகாபுரத்தில் ஒரு தமிழாசிரியரின் மகனாகப் பிறந்த நா.முத்துக்குமார், சிறுவயதிலேயே தாயை இழந்தவர். தாயுமான தந்தையின் கைப்பிடித்து வளர்ந்தவர். உணவோடு இலக்கியம் ஊட்டி வளர்க்கப்பட்டவர். அப்பாவின் சேகரிப்பில் ஒரு லட்சம் புத்தகங்களுக்கும் மேல் வீட்டில் இருந்ததாக முத்துக்குமார் பலமுறை பதிவுசெய்திருக்கிறார். தந்தையின் மீது அவர் வைத்திருந்த பாசம் பல பாடல்களில் வெளிப்பட்டது. `தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே’ என எழுதினார்.
சினிமாவுக்குப் பாடல் எழுதும் ஆசை அவருக்குப் பெருங்கனவாக இருந்த நேரத்தில் மெட்டுக்குப் பாட்டெழுதும் கலையைக் கற்றுத்தந்தவர் கவிஞர் அறிவுமதி. திரைத்துறையினரின் அறிமுகமும் அறிவுமதியால் சாத்தியமானது. ‘கணையாழி’ இதழுக்குக் கவிதை தேர்வு செய்துதரும் பொறுப்பில் இருந்த எழுத்தாளர் சுஜாதா, இவருடைய ‘தூர்’ என்கிற கவிதையைச் சிலாகித்துப் பேசினார், எழுதினார். முத்துக்குமாரை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது சுஜாதாவின் வாழ்த்து. இயக்குநர் சீமான், தனது ‘வீரநடை’யில் திரை அறிமுகம் தந்தார். இயக்குநர் பாலுமகேந்திரா, பேச்சாளர் பெரியார்தாசன் போன்றவர்கள் இவரை மேடைகள்தோறும் பாராட்டினார்கள். அந்தக் காஞ்சி கவிஞன் மீது வெளிச்ச கிரணங்கள் அப்படித்தான் விழுந்தன. நா.முத்துக்குமாரின் வீரியமான பாடல்வரிகளை சினிமா உலகம் கொண்டாட ஆரம்பித்தது. அவர் புகழின் உச்சிக்குச் சென்றார். ஆனால், கௌரவங்கள் அவரை கர்வத்துக்குத் தள்ளியது இல்லை. ``அண்ணா’’ எனத்தான் அவர் அனைவரையும் அழைத்தார். இனிமையான குணம், இளகிய மனம் என்பதே அவருடைய இயல்பாக இருந்தது.
``கறுப்பு வெள்ளை பூக்கள் உண்டா..?
உன் கண்ணில் நான் கண்டேன்.
உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்’’ என்பது அவருடைய அபாரமான பல கற்பனையில் இருந்து ஓர் உதாரணம். இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரீஸ் ஜெயராஜ் போன்ற பலருடைய இசையமைப்பில் எழுதினார்.
`சிவாஜி’ திரைப்படத்தில் ‘பல்லேலக்கா பல்லேலக்கா’ என்ற பாடல் அவர் எழுதியது. அதில், ``ஆடு மாடு மேல உள்ள பாசம்... வீட்டின் ரேஷன் கார்டில் சேர்க்கச் சொல்லி கேட்கும்’’ என கிராமத்து வெள்ளந்தி மனசை வெளிப்படுத்தியது.
சிறுகதை, நாவல், கட்டுரைகள் என எல்லாப் படைப்புத்துறையிலும் அவருடைய பேராற்றல் பேசப்பட்டது. அணிலாடும் முன்றில், வேடிக்கைப் பார்ப்பவன் ஆகிய இரண்டு தொடர்களும் ‘ஆனந்தவிகடனில்’ வெளியானபோது சிலாகிக்கப்பட்டது. அப்பாவின் பெருமை பேசும் திரைப்படங்களான `வாரணம் ஆயிரம்’, `கிரீடம்’ போன்ற படங்களில் அவருடைய வசனத்துக்காகப் பாராட்டுப் பெற்றன. பட்டாம் பூச்சி விற்பவன், தூசிகள், நியூட்டனின் மூன்றாம் விதி போன்ற கவிதைத் தொகுப்புகளும் சில்க் சிட்டி என்ற நாவலும் அவருடைய எழுத்து ஆளுமைக்குச் சான்றுகள்.
கவிஞர்களை சாகடிக்க மரணம் தொடர்ந்து போராடுகிறது. பாரதி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எனப் பல நல்ல கவிஞர்கள் அற்ப வயதுகளில் இறந்துபோனார்கள். 41 வயதைத் தொட்ட அவரது வாழ்க்கை தொடர அனுமதிக்கவில்லை இயற்கை. நல்ல கவிஞர்களுக்கு அற்ப ஆயுள் என இலக்கணம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான் நம் அச்சம்!
- தமிழ்மகன், படம்: கே.ராஜசேகரன்