
கண்ணைக் கட்டும் ப்ரிஸ்மா!

‘ப்ரிஸ்மா’ என ஒரு செயலி ஆப்பிள் போனில் மட்டும் வந்ததற்கே இந்த அலப்பறைகள் எனில் ஆண்ட்ராய்டிலும் வந்திருந்தால் அமளி துமளி ஆகியிருக்கும் போல. அமெரிக்கவாழ் மக்கள் முதல் உள்ளூர் ஐடி கம்பெனி ஊழியர்கள் வரை அத்தனைப் பேரும் #ப்ரிஸ்மா #பக்கத்து ஊரு பெரியம்மா என ஹேஷ்டேக் போட்டு போட்டோக்களைத் தெறிக்கவிடப் பேய்ப்படம் பார்த்த குழந்தைகளைப் போலப் பதறி ஓடுகிறார்கள் மொத்த நெட்டிசன்களும். அந்தக் கொலைவெறிப் படங்களுக்கு இந்த மாதிரி நீள....மான கேப்சன்கள்தான் பொருத்தமாக இருக்கும்.
* சின்ன வயதில் பார்த்து ரசித்த மாயாவி படக்கதை போலக் கோடு கிழித்து வரைந்து கொடூர வில்லனாய் மாறிக்கொண்டிருக்கும் ஆண்ட்ராய்டு சமூகத்தைப் பாரீர்.
* களையாக இருக்கும் முகத்தை ப்ரிஸ்மா கலவைக்குள் முக்கியெடுத்துக் கரடுமுரடாக மாற்றிய போட்டோவைக் கண்டு களியுங்கள்.

* அறுவடை முடிந்தபிறகு பாளம்பாளமாய் வெடித்துக்கிடக்கும் நெல்வயலைப் போல சுற்றுச்சூழலைக் குறியீடாகக் காட்டும் இந்தப் படத்திற்கு எத்தனை லைக் நண்பர்களே?
* டீக்கடையில் பருப்புவடை வாங்கிப் பழைய நியூஸ்பேப்பரில் வைத்துத் தின்றபிறகு எண்ணெய் ஒட்டியவாறு பேப்பர் இருக்குமே, அதற்குச் சற்றும் குறைவில்லாதது எனது இந்த ப்ரிஸ்மா புகைப்படம். ஆதரவு தாரீர்.
* தோல் சுருங்கித் தடித்துப்போய் ‘ஐ’ வைரஸ் தாக்கியதுபோல் மூஞ்சி வீங்கிப் போயிருக்கும் இந்த போட்டோக்கள் தொற்றுவியாதிகள் போல் உங்கள் டைம்லைனையும் தாக்கக்கூடும். தயவுசெய்து ஷேர் செய்யவும்.
* சோறு வடித்த வடிதண்ணீரில் படர்ந்திருக்கும் ஆடைகளைப் போல மிதக்கும் வண்ணத்தில் ப்ரிஸ்மாவின் கைவண்ணம்.

* பாதி எரிந்துகொண்டிருக்கும்போது செத்துப்போனவன் அரைகுறையாக எழுந்து வந்ததைப்போல உடம்பெங்கும் நெருப்பைப் பற்றவைத்து ‘நெருப்புடா ப்ரிஸ்மா’வாகியிருக்கும் எனக்கு ஒரு லைக் செய்யவும்.
* ப்ரிஸ்மாவுக்குள் குளிக்கவைத்து நெருப்பில் வாட்டியெடுத்த நாட்டுக்கோழியைப் போலத் தோன்றும் இவருக்கு ஒரு லைக் போடலாமே ஃப்ரெண்ட்ஸ்...
- விக்கி