
ட்ரெஸ் எங்கே இருக்கு?
ஒவ்வொரு தொழிலுமே புதுப்புது ஐடியாக்கள் கொண்டுதான் மற்றவர்களிடமிருந்து தங்களை வித்தியாசப்படுத்திக் காட்டுவதோடு வெற்றிபெறவும் முடியும். ஆடை வடிவமைப்புத் தொழிலும் அப்படித்தான். ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளரான ஷமேக் ப்ளூவி அந்த வகையில் மிகமிக வித்தியாசமானவர்.


இவர் ஓர் எளிய வழியைக் கடைப்பிடித்து கற்பனைக்கு எட்டாத வகையில் புதிது புதிதாக ஆடைகளை வடிவமைத்து வருகிறார். பேப்பரில் பெண் உருவத்தின் அவுட்லைனை மட்டும் வரைந்துவிட்டு ஆடை இருக்கும் பகுதியை வெட்டி எடுத்து விடுகிறார். ஆடைக்குப் பதில் வெறும் அவுட்லைன் மட்டும் கொண்ட இந்த பேப்பரை வானம், கட்டடம், மரம், தரைத்தளம் எனக் கண்ணில்படும் இடங்களில் எல்லாம் நீட்டுகிறார். இப்படிச் செய்யும்போது பின்புறம் உள்ள பொருட்கள் பெண் உருவ அவுட்லைனில் ஆடையாகத் தோற்றமளிக்கின்றன. இப்படி இயற்கையாகவே சில ஆடை வடிவமைப்பு ஐடியாக்கள் கிடைக்கின்றன. இதைக்கொண்டு கற்பனைக்கு எட்டாத பல வடிவங்களில் இவர் ஆடைகளை வடிவமைக்கிறார். உலகம் முழுவதும் இவரின் இந்த உத்தி தற்போது பிரபலமடைந்து வருகிறது. நீங்களும் ட்ரை பண்ணிப் பாருங்களேன்!
- கருப்பு