
சுட்ட படம்!

கமலின் ‘குணா’, காலங்கள் கடந்தும் நம் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த சினிமா. அந்த குணாவே ஒரு ஸ்பானிஷ் படத்தின் மையக்கருவைத் தழுவியது என்பது கொஞ்சம் அதிர்ச்சிதானே!
பெட்ரோ அல்மோடோவர் இயக்கி 1990-ல் ரிலீஸான ‘டை மீ அப்! டை மீ டௌன்!’ என்ற டார்க் ரொமான்டிக் காமெடிப்படமே அது. இந்தப் படத்தில் கிளுகிளு அழகி விக்டோரியா ஆப்ரில் மற்றும் பெண்களின் உள்ளம் கவர் கள்வன் ஆன்டனியோ பென்டரஸ், நாயகி-நாயகனாக கலக்கல் நடிப்பில் வெளுத்து வாங்கி இருந்தார்கள். கொஞ்சம் எசகுபிசகான காட்சிகளால் வயது வந்தோருக்கான சினிமாவாக சென்ஸார் செய்யப்பட்டிருந்தாலும் படம் இப்போதுவரை கல்ட் க்ளாஸிக்கில் கொண்டாடப்படும் சினிமாவாக இருக்கிறது.
சரி...படத்தின் கதை ...? ரிக்கி 23-வயதே ஆன மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன். ஒரு மனநலக் காப்பகத்தில் வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறான். சிகிச்சையில் இருக்கும்போது மரினா என்ற பெண்ணை எதேச்சையாகச் சந்திக்கும் சூழல். அவள் முன்னாள் போர்னோ நடிகை.
போதைப்பழக்கத்தில் இருந்து மீண்டு வருபவள். மனநலக் காப்பகத்தில் இருந்து தப்பித்து வந்தவன் அவளோடு ஒரே அறையில் அவள் போதையில் இருக்கும்போது ஒன்றாகத் தூங்குகிறான். அவனுக்கு அவள்மீது பேரன்பும் பெருங்காதலும் பட்டென பற்றிக்கொள்கின்றன. மறுநாள் அவளின் முழு ஜாதகத்தையும் ஒரு சினிமா வார இதழ் மூலம் தெரிந்துகொள்கிறான். ‘தி மிட்நைட் பேண்ட்’ என்ற படத்தின் கடைசிநாள் ஷூட்டிங்கில் இருக்கும் அவளைத்தேடி அங்கு செல்கிறான். அந்தப் படத்தின் டைரக்டர் மேக்ஸிமோவுக்கு மரினாவை அடைய வேண்டும் என்ற வெறி இருக்கிறது. மேக்ஸிமோ பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வீல் சேரில் இருக்கும் ஓர் ஆள் என்பது இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம்.

ஷூட்டிங் தளத்தில் நுழையும் ரிக்கி அந்த ‘ஒன்நைட் ஸ்டாண்ட்’ சம்பவத்தை நினைவுப்படுத்தி அவளின் கவனத்தை ஈர்க்க முயன்று தோற்கிறான். காரணம் அவளுக்கு எதுவுமே நினைவில் இல்லை. படப்பிடிப்பு முடிந்ததும் தன் வீட்டுக்குச் செல்கிறாள் மரினா. அவளை நிழல் போலத் தொடர்ந்து செல்லும் ரிக்கி அவள் உள்ளே சென்றதும் கதவைத் தட்டி வலுக்கட்டாயமாக அவள் அனுமதி இன்றி வீட்டுக்குள் செல்கிறான். அலறிக்கூப்பாடு போடும் அவளை மிரட்டி வாயை மூடவைத்து, வாயையும் கை கால்களையும் கட்டி விடுகிறான். மறுநாள் கண்விழித்துப் பார்க்கும்போது கடுமையான பல்வலியால் துடிக்கிறாள். ‘ஹெவி டோஸ்’ போதை மாத்திரைகள் சாப்பிடும் பழக்கம் கொண்ட உடம்பு என்பதால் சாதாரண வலி நிவாரணி மாத்திரைகள் வேலை செய்யவில்லை. அப்போது அவள், அவனைப் பார்த்து ‘ஏன் என்னைக் கட்டிப்போட்டு சித்ரவதை செய்கிறாய்?’ என்று கேட்கிறாள். ரிக்கி, தான் அவளைக் காதலிப்பதாகவும் தன் குழந்தைகளுக்கு அம்மாவாக உன்னை மட்டும்தான் இந்த உலகில் தேர்ந்தெடுக்கிறேன் என்றும் புனிதமான காதல் என்றும் உருகி உருகிச் சொல்கிறான். கடுப்பான அவள் ‘உன்னைலாம் யாருடா லவ் பண்ணுவா? எந்தக் காலத்திலும் உன்னை ஏற்றுக்கொள்ள முடியாது’ என அவன் காதலை நிராகரிக்கிறாள். ‘அதையும்தான் பார்க்கலாம்’ என்று சவால் விடுகிறான் ரிக்கி. அவள் மனதை எப்படியாவது ‘அட்ராக்ட்’ செய்ய வேண்டும் என மெனக்கெடுகிறான். ரிக்கியின் செயல்களால் அதிர்ச்சியாகும் மரினா அங்கிருந்து தப்பித்துச் செல்ல முயன்று தோற்கிறாள். இதற்கிடையே பல்வலியால் துடிக்கும் மரினா டாக்டரிடம் தன்னைக் கூட்டிச் செல்லச் சொல்லி கதறுகிறாள். அவளை ஒரு டாக்டரிடம் அழைத்துச் செல்கிறான். அங்கேயே விட்டுவிட்டு டாக்டர் சொன்ன மாத்திரைகளை வாங்கி வரத் தனியாகச் செல்கிறான். இவனது தோற்றத்தைப் பார்த்து, மெடிக்கலில் மாத்திரைகளைத் தர மறுத்து விடுகிறார்கள். கள்ளச் சந்தையில் கடைக்காரரைத் தாக்கி வாங்கி வருகிறான்.
இந்த நிலையில் மரினாவின் தங்கை லோலா, அக்காவை ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து தேடத் துவங்குகிறாள். மரினாவின் வீட்டுக்கு வரும் லோலா ஒரு கடிதத்தை மரினாவுக்கு எழுதி வைத்துவிட்டுச் செல்கிறாள். யாருக்கும் சந்தேகம் வரக் கூடாது என்பதற்காக மரினாவை பக்கத்தில் இருக்கும் இன்னொரு அப்பார்ட்மென்ட்டுக்கு மாற்றுகிறான். ஆள் இல்லாமல் இருக்கும் அந்த அப்ப்பார்ட்மென்ட் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற லோலாதான் வருவாள் என்பது ரிக்கிக்குத் தெரியாது. இந்த நிலையில் மருந்துக்காக அடிவாங்கிய ஒருவன் ரிக்கியைப் பார்த்து அடித்துவைக்கிறான். அடிபட்ட அவன் அப்பார்ட்மென்ட்டுக்கு வருகிறான். அவன் இல்லாதபோது அங்கிருந்து தப்பித்துச் செல்ல முயன்று தோற்று அவனுக்காகக் காத்திருக்கிறாள் மரியா. காரணம் மரியா அவனைக் காதலிக்கத் தொடங்கிவிட்டாள். எந்தச் சூழலிலும் உன்னைவிட்டுப் பிரியமாட்டேன் என்று சொல்லும் அவள் தன்னைக் கட்டிப்போடச் சொல்கிறாள். அந்தச் சூழலில் அங்கு வரும் லோலா, மரியாவைக் காப்பாற்றுகிறாள். மரியா - ரிக்கி காதல் என்னவானது? லோலா ரிக்கியைத் தாக்கினாளா? அல்லது ரிக்கி லோலாவைத் தாக்கினானா? அந்த ‘புனிதமான’ காதல் என்னவானது? என்பதே க்ளைமாக்ஸ்.
படு ரொமான்டிக் காமெடிப்படமான இந்தப் படத்தின் மையக்கரு ‘குணா’ படத்தின் மையக்கருவும் ஒன்றுதான்.
ஹைதரபாத்தின் மனநலக் காப்பகத்தில் இருந்து தப்பிக்கும் குணாவுக்கு ‘அபிராமி’ என்ற கற்பனை பெண் மீது காதல். ஒரு பௌர்ணமி நாளில் தன் மனம் கவர்ந்த தேவதையைக் கல்யாணம் பண்ணுவது அவன் லட்சியம். பணக்காரப் பெண் ரோஷினியைப் பார்க்கும் குணாவுக்கு கன்னாபின்னா காதல். கடத்திக் கொண்டு போய் வைத்து உருகி மருகி ‘புனிதமானது’ எனப் புரிய வைக்கிறான். அந்தக் காதலால் எழும் சிக்கல். அந்தக் காதலால் குணா என்ற மனநிலை பிறழ்ந்தவனுக்கு என்னவானது என்பதே க்ளைமாக்ஸ்!
கமலின் நடிப்பினாலும் இளையராஜாவின் இசையினாலும் காலங்கள் கடந்து ரசிக்கப்பட்ட படம் என்பது மட்டும் நிஜம்!
(இன்னும் சுடும்..!)