
நாலுபேரு நாலுவிதமா...
இந்த யுகத்து இளைஞர்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதால் யூ-டியூபில் வைரல் ஹிட் ஆகியிருக்கிறது ஒரு சீரிஸ். ஒவ்வொரு எபிஸோடும் அதிகபட்சம் 13 நிமிடங்கள்தான். இந்த நறுக் சுறுக் தன்மைக்காகவே லட்சக்கணக்கில் வியூஸ் குவிகின்றன. அது தமிழின் முதல் வெப் சீரிஸான Ctrl Alt Del.

வெங்கி, மதுமிதா, கெளதம், ரோகிணி நால்வரும் இந்த சாஃப்ட்வேர் யுகத்தின் இளைஞர்கள். வெங்கி - கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை தீவிரமாய்க் கடைப்பிடிக்கும் தமிழ்ப் பையன். கல்யாணம் ஆயிரங்காலத்து பயிர் என்ற கொள்கை உடையவன். மதுவும், கெளதமும் ‘சரியா வந்தாதான் கல்யாணம். இல்லைனா சிங்கிளாவே இருப்போம்’ என்ற பாலிசி உடையவர்கள். டேட்டிங், லிவிங் டுகெதர் எல்லாம் தப்பே இல்லை என்பது ரோகிணியின் வாதம். அலுவலகத்தில் இவர்கள் நால்வரும்தான் கேங். இவர்களுக்குள் நடக்கும் விவாதங்கள், கலாட்டா கச்சேரிகள், ரொமான்ஸ் என ரகளையாய்க் களை கட்டுகிறது Ctrl Alt Del வெப் சீரிஸ். இது கல்ச்சுரல் மெஷினின் யூ-டியூப் சேனலான ஃபுட் சட்னியின் முயற்சி.
சீரிஸின் இயக்குநர் ஹரிஹரனை சாட்டிங்கில் பிடித்தேன். சீரிஸ் ஹிட் அடித்த குஷியில் மளமளவென ஃபீலிங்க்ஸைக் கொட்டினார்.
‘‘ஃபுட் சட்னி பேனரில் வெப் சீரிஸ் எடுக்கலாம் என முடிவெடுத்தோம். வெப் சீரிஸ் சரியான பார்வையாளர்களைப் போய்ச் சேர்ந்தால் சூப்பர்ஹிட்டாகும். சாஃப்ட்வேரில் பணிபுரியும் இளைஞர்கள் எங்கள் சேனலின் முக்கியப் பார்வையாளர்கள். எனவே அவர்களைப் பிரதிபலிப்பது போல சீரிஸ் எடுத்தால் ஹிட் ஆகும் எனத் தோன்றியது. எங்கள் குழுவில் இருந்த நிறைய பேருக்கு ஐ.டி துறையில் வேலை பார்த்த அனுபவம் இருந்ததால், அந்தச் சூழலை அப்படியே திரையில் கொண்டுவர முடிந்தது.

முதலில் எங்களுக்கு இருந்த லேசான தயக்கமும் ‘சூப்பர் முயற்சி ஜி’ எனப் பார்வையாளர்கள் பாராட்டியவுடன் காணாமல் போனது. இந்தக் கதையோடு பொருந்திப்போக முடிவதாக நிறையப் பேர் பாராட்டினார்கள். மொத்தம் எட்டு எபிஸோடுகள் என முடிவு செய்திருக்கிறோம்.
மளமளவென ஷுட் செய்து உடனுக்குடன் போஸ்ட் புரொடக்ஷன் முடித்து அப்லோட் செய்வது பெரிய சவால்தான். ஆனால் அதைச் சரியாக செய்ய முடிந்ததில் மகிழ்ச்சி. ஆன்லைனின் மிகப்பெரிய பலமே நாம் சொல்ல விரும்பும் கருத்துகளை சுதந்திரமாய் சொல்லலாம் என்பதுதான். எனவே எழுதியிருந்ததை அப்படியே திரைக்குக் கொண்டு வர முடிந்தது. கொஞ்சம் பொறுப்பு உணர்வு, கொஞ்சம் ஆடியன்ஸ் பல்ஸ் ஆகியவை தெரிந்தால் போதும் யூ-டியூபில் ஹிட்டடிக்க’’ உற்சாகமாய் முடிக்கிறார் ஹரிஹரன்.
வாழ்த்துகள் ப்ரோ!
-நிதிஷ்