
என்னா சின்சியாரிட்டி!
வாழ்நாள் முழுவதும் சிலர் உழைத்தும் தனக்கான சரியான ஊதிய உயர்வோ, அங்கீகாரமோ கிடைக்கவில்லை எனப் புலம்புவார்கள். ஆனால் சிலரோ வேலையில் டிமிக்கி கொடுத்துவிட்டு சம்பளமும் பெற்றுவந்துள்ளனர். அப்படிப்பட்ட சின்சியரில்லா சிகாமணிகளின் தொகுப்பு.

24 வருட விடுப்பு!
மத்திய பொதுப்பணித் துறையில் பணிபுரிந்த ஏ.கே.வர்மா என்ற ஊழியர் 1990-ம் ஆண்டு ‘ஒருநாள் உடல்நிலை சரியில்லை’ எனக் கூறிவிட்டு லீவில் சென்றார். அதன்பின் அவர் அலுவலகத்திற்கே வரவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி கிரிமினல் குற்றச்சாட்டினைத் தவிர்த்து பிற காரணங்களுக்காக அரசு ஊழியரை அவ்வளவு எளிதில் பணிநீக்கம் செய்துவிட முடியாது. 1992-ம் ஆண்டு வர்மாவின் மேட்டர் விசாரணைக்கு உள்ளானது. 2007-ம் ஆண்டு அவரைப் பணியில் இருந்து நீக்குவதற்கான நடைமுறைகள் துவங்கி, பின்னர் கிடப்பில் போடப்பட்டது. 2015-ம் ஆண்டு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு வரைக்கும் இந்த விஷயம் போனது. வேண்டுமென்றே பணிக்கு வராத காரணத்தால் வர்மா டிஸ்மிஸ் செய்யப்பட்டார். 24 ஆண்டுகளாய் நடந்துவந்த இந்த விவகாரத்தில் அவருக்கு சம்பளம் வழங்கப்பட்டு வந்துள்ளது. இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அவரது லீவுக்கு யாரும் ஒப்புதல் வழங்கவில்லை. அட தேவுடா!
சார் இவன் தூங்கிட்டான் சார்!
அமெரிக்காவில் தொலைக்காட்சி, கேபிள் டி.வி, இன்டர்நெட் போன்ற சேவைகளை வழங்கிவருகிறது காம்கேஸ்ட் என்ற முன்னணி நிறுவனம். வாஷிங்டன் நகரில் வசித்துவந்த ப்ரையன் பிங்கல்ஸ்டீன் என்பவர் தனது வீட்டில் இன்டர்நெட் வேலை செய்யவில்லை என கஸ்டமர் கேரில் புகார் அளித்தார். அந்நிறுவனம் உடனடியாக சர்வீஸ் செய்வதற்கான பணியாளர் ஒருவரை அவரது வீட்டிற்கு அனுப்பிவைத்தது. வந்தவருக்கு என்ன களைப்போ தெரியவில்லை. சோபாவில் படுத்து மணிக்கணக்கில் உறங்கிவிட்டார். இதைப்பார்த்த ப்ரையன் தனது மொபைலில் பணியாளர் உறங்குவதை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட, அந்த வீடியோ வைரல் ஆனது. உஷாரான காம்கேஸ்ட் நிறுவனம் உடனடியாக நான்கைந்து பணியாளர்களை அனுப்பி நிலைமையைச் சரிசெய்தது. பணியின்போது உறங்கியவரைப் பணிநீக்கம் செய்தது. ‘கொஞ்சம் டயர்டா இருந்துச்சு. அசந்து தூங்கிட்டேன். இதெல்லாம் ஒரு தப்பா?’ என நடையைக் கட்டியிருக்கிறார் அவர். தூங்கா அலவன்ஸ் கொடுங்க சார்!

ஜகஜ்ஜால கில்லாடி!
அமெரிக்காவைச் சேர்ந்த வெரிசான் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த பாப் என்பவரின் சிறப்பான வேலை காரணமாக சிறந்த டெவலப்பராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆறு இலக்கங்களில் சம்பளம் பெற்றுவந்த அவருக்கு அலுவலகத்தில் அனைவரிடத்திலும் வெகு மரியாதை. ஒருநாள் அவர் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டார். காரணம் சுவாரசியமானது. தினமும் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை மீறி சீனாவில் இருந்து ஒருவர் தொடர்ச்சியாக நிறுவனத்தின் நெட்வொர்க்கில் நுழைவது தெரியவந்தது. ஹேக்கிங் முயற்சி என நினைத்த அதிகாரிகள் ஆராய்ந்ததில், அவர் பாப்பின் நெட்வொர்க்கில் தொடர்ந்து நுழைவது சந்தேகம் அளித்தது. பார்த்தால், பாப் தினமும் ஆன்லைனில் ஆர்டர் செய்வது, வீடியோ பார்ப்பது என வேலை நேரத்தில் பொழுதைக் கழித்துவந்துள்ளார். அதன்பின்னான விசாரணையில் பாப் தனது வேலையை சீனாவில் உள்ள ஒருவரிடம் அவுட் சோர்சிங் முறையில் கணிசமான விலைக்குக் கொடுத்தது தெரிய வந்தது. நிறுவனம் அவரை பணிநீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பியது. விற்கிற வேலை போல!

எங்க சாமி இருந்தே இத்தனை நாளா?
ஸ்பெயின் நாட்டில் காடிஷ் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் ஜொக்கெய்ன் கார்சியா. ஸ்பெயின் அரசு சார்பாக நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியை மேற்கொண்டது அந்நிறுவனம். கார்சியா இத்திட்டத்தின் பணிகளைப் பார்வையிட மேற்பார்வையாளராக அனுப்பிவைக்கப்பட்டார். ஆறு ஆண்டுகள் கடந்தன. கார்சியா இந்நிறுவனத்தில் சேர்ந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டதால், சக ஊழியர்கள் அவருக்கு விழா ஒன்றை ஏற்பாடு செய்து தொடர்புகொண்டனர். அப்போதுதான் தெரிந்தது, ஆறு ஆண்டுகளாக அவர் வேலைக்கே வரவில்லை. ஆனால் தொடர்ந்து ஆண்டு ஒன்றுக்கு 31,000 யூரோக்கள் சம்பளமாகப் பெற்றுவந்திருக்கிறார். அவர் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருப்பதாக அந்நிறுவனமும், காடிஷ் நிறுவனத்தில் இருப்பதாக நீர் சுத்திகரிப்பு நிலைய அதிகாரிகளும் இத்தனை ஆண்டுகளாக எண்ணியிருக்கின்றனர். நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது. ஸ்பெயின் நாட்டு சட்டப்படி அதிகபட்சமாக 27,000 யூரோக்கள் மட்டுமே அபராதம் விதிக்க முடியும். அதைச் செலுத்தும்படி நீதிமன்றம் கார்சியாவிற்கு உத்தரவிட்டது. இத்தனை ஆண்டுகளாக ஏன் வேலைக்கு வரவில்லை என்ற கேள்விக்கு, ‘அங்கே எனக்கு எந்த வேலையும் இல்லை. அதனால் அங்கு போகவில்லை’ என கார்சியா பதில் அளித்துள்ளார். அப்புறம் ஏன்யா சம்பளம் வாங்கினே?
- கருப்பு