
சின்னவயசுப் பிரபலம்!

சரித்திரத்தைக் கொஞ்சம் திருப்பிப் பாருங்க... உங்களுடைய 14-வது வயசுல என்ன பண்ணிட்டு இருந்தீங்க? நம்மில் பல பேர் பெருசா ஒண்ணும் பண்ணியிருக்க மாட்டோம். ஸ்கூல், கிரவுண்ட், வீட்டுப்பாடம், கார்ட்டூன் சேனல், வீடியோகேம்னுதான் வாழ்க்கை ஓடியிருக்கும். ஆனால், துபாயைச் சேர்ந்த ரசீத் செய்யது பெல்லாஸா எனும் சிறுவன் தனது பதினான்காவது வயதில், நாம் நினைத்துப் பார்க்கக்கூட முடியாத வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறார். பீச்சில் நடிகர்களின் கட்- அவுட்டோடு போட்டோ எடுக்க வரிசையில் பலர் நின்றிருக்க, நடிகர்கள் முதல் விளையாட்டு வீரர்கள் வரை இவரைப் பார்க்க அப்பாயின்ட்மென்ட் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஏன்?

ரசீத்தின் அப்பா சயிஃப் அகமது பெல்லாஸா துபாயைச் சேர்ந்த ஒரு கட்டுமான அதிபர். ரசீத் சொந்தமாக ‘ப்ராடா’, ‘பர்பெரி’ போல ஃபேஷன் லைன் ஒன்றும் வைத்திருக்கிறார் (ஃபேஷன் லைன் என்பது தனக்கே உரிய ஸ்டைலில் ஆடைகளை டிசைன் செய்து, விற்கும் ஒரு நிறுவனம்). அதுமட்டுமல்லாது ஸ்னீக்கர் ஷூக்களின் பிரமாண்ட கலெக்ஷன்களையும் வைத்திருக்கிறார். இவரது ஃபேஷன் லைனையும், ஷீ கலெக்ஷன்களைப் பார்வையிடவே துபாய் பக்கம் வரும் பிரபலங்கள், இவர் வீட்டிற்கு வண்டியைத் திருப்புகிறார்கள். இவரைப் பார்க்கும்முன் கட்டாயம் இவரது ஏஜென்டிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கியிருக்க வேண்டுமாம். ஜாக்கிசான், ஷாரூக், சல்மான், மெஸ்ஸி, நெய்மர் எனத் தன்னைக் காணவரும் பிரபலங்கள் பலரோடு செல்ஃபி எடுத்துப்போட்டு நெட்டிசன்கள் வயிற்றில் புகைச்சலை ஏற்படுத்தி வருகிறார் இந்த ரசீத். ஷாக்கைக் குறைங்க... ஷாக்கைக் குறைங்க...
-ப.சூரியராஜ்