
கதை விடுறாங்க!
‘நடைபாதையில் தன்னை இடித்துத் தள்ளிவிட்டு முன்னால் நடந்தவனின் சட்டையைப் பிடித்துத் திருப்பினான் அசோக். திரும்பியவன் அச்சு அசலாக தன்னைப் போலவே இருந்ததைக்கண்டு மெர்சலாகி வாய் திறந்த அசோக்...’
- இந்த வரியை நம் ஃபேஸ்புக் பக்கத்தில் கொடுத்து சுவாரஸ்யமான கதையாக உருவாக்கச் சொல்லியிருந்தோம். வாசகர்கள் உருவாக்கிய கதைகள் இதோ...!

முருகவேல்: தன்னைப்போலவே இருந்த அவனுடன் செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்கில் போட்டு லைக்கை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தான் அசோக்.
குலாம் மொஹைதீன்: தனது அப்பாவை நொந்துகொண்டான். ‘இன்னும் எத்தனை அண்ணன், தம்பிகளைப் பார்க்கப் போகிறேனோ’ என மனதில் எண்ணிக்கொண்டான்.
வைத்தீஸ் மாரியப்பன்: ‘அந்தக் குரங்கு பொம்மை. என்ன விலை?’னு கேட்டான்.
ஆண்டவர் கனி: ‘எப்பப்பாரு தூங்கிகிட்டே இரு. ஒரு வேலைவெட்டிக்கு போகாம’ என அர்ச்சனை செய்துகொண்டே தண்ணீரை ஊற்றி எழுப்பினாள் அவன் மனைவி.
பால முருகன்: ஓங்கி அவன் முகத்தில் குத்தினான். குத்திய கை ரத்தமானது. ‘தண்ணியடிச்சா ஒழுங்கா நடந்துபோக முடியாதா? மரியாதையா உடைச்ச கண்ணாடிக்கு காசைக் கொடுத்துட்டுப் போ’ என்று திட்டி சட்டையைப் பிடித்தார் பிளாட்ஃபாரக் கண்ணாடிக் கடைக்காரர்.
ராஜா நவநீதம்: ‘என்னடா சரக்கு இது... முன்னாடில்லாம் ரெண்டு ரெண்டா தெரியும். இப்ப யாரைப் பார்த்தாலும் நம்மளைப் போலவே தெரியறாங்களே! ஐயோ யாரும் குடிக்கு அடிமையாகிடாதீங்கடா’ என்று புலம்பிக்கொண்டே நடந்தான்.