
ஒலிம்பிக் வினோதங்கள்!
ஒலிம்பிக்கில் இதுவரை பல வித்தியாசமான சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதில் மறக்கவே முடியாத சில...
யாரும்மா நீ?

ஒலிம்பிக் துவக்க விழாவில் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களும், நிர்வாகிகளும் அணிவகுப்பது மரபு. 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் துவக்க விழாவில் இந்தியாவின் சார்பில் வீரர்களும், நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். ஆனால் அணிவகுப்புத் தொடங்கிய சிறிது நேரத்தில் இந்தியக்கொடியைத் தாங்கி நடந்த சுஷில் குமார் அருகே சிவப்பு சட்டை, நீல நிற பேன்ட் அணிந்த ஒரு பெண்ணும் இந்திய வீரர்களுடன் அணிவகுத்தார். இந்திய அணிக்குச் சம்பந்தமே இல்லாத இந்த ‘மர்ம’ பெண் யாரென்றே வீரர்களுக்கே தெரியவில்லை. அதன்பின்புதான் அவர் பெயர் மதுரா நாகேந்திரா என்றும், பெங்களூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி என்பதும் தெரியவந்தது. இந்த சம்பவத்திற்காக அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்!
நம்பிக்கை நாயகன்!

பிரிட்டிஷ் தடகள வீரரான டெரக் ரெட்மன்ட், ஓட்டப்பந்தயத்தில் காமன்வெல்த், ஐரோப்பிய மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பல தங்கப் பதக்கங்களை வென்றவர். 1992-ம் ஆண்டு பார்சிலோனாவில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் அரை இறுதிப் போட்டியில் இவர் ஓடிக்கொண்டிருந்தபோது தொடையில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் கீழே விழுந்தார். அதற்குள் மற்ற வீரர்கள் இவரைக் கடந்து பந்தய தூரத்தைக் கடந்திருந்தனர். வலியைப் பொறுத்துக்கொண்டு எழுந்த டெரக், தனது தந்தையின் உதவியோடு அழுதபடி ஒரு காலை ஊன்றி நொண்டிக்கொண்டே பந்தய தூரத்தைக் கடந்தார். இறுதிப்போட்டிக்குச் செல்லும் தகுதியை இழந்தபோதும், பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று இவருக்கு மரியாதை செலுத்தினர். விடாமுயற்சிக்கும், தன்னம்பிக்கைக்கும் உதாரணமாக இன்றளவும் இந்தச் சம்பவம் நினைவுகூரப்படுகிறது!
வாத்துக்கே வழிவிட்டவர்!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹென்றி ராபர்ட் பியர்ஸ் (செல்லமாக பாபி பியர்ஸ்) துடுப்புப்படகு வீரர். இரண்டாயிரம் மீட்டர் தொலைவைத் துடுப்புப்படகின் மூலம் கடக்கும் படகுப் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தியவர் பாபி பியர்ஸ். 1928-ம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் கால் இறுதியில் பிரான்ஸ் வீரர் வின்சன்ட் சாவ்ரின் உடன் மோதினார். பந்தயத்தின் பாதிவழியில் வாத்து தனது குஞ்சுகளுடன் கரையின் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்திற்கு நீந்திச் சென்றது. இதைக்கண்ட பியர்ஸ் துடுப்பைச் செலுத்தாமல் நின்று வாத்து கடக்கும்வரை காத்திருந்தார். வெற்றியை மட்டும் குறிக்கோளாகக் கொள்ளாமல் இவர் நடந்துகொண்ட விதம் அனைவரையும் கவர்ந்தது. அதன் பின்பு தன்னை முந்திச் சென்ற சாவ்ரினை 30 வினாடி வித்தியாசத்தில் பியர்ஸ் வென்றது தனிக்கதை!
- கருப்பு