
எங்கெங்கும் ரெடிமேட்ஸ் மலிந்துவிட்ட பெரு நகரத்தில், ஒரு அபார்ட்மென்ட் வாசலில் மெஷின் போட்டு உட்கார்ந்திருக்கும் அவரை நினைத்தால் பாவமாக இருக்கிறது.
''கட் பண்ணா... அஜீத் சார் ரத்தம் வழிய வழியப் புழுதியில கெடக்குறார்ஜி. அப்பிடியே கட் பண்ணா... மும்பைல ஒரு மொட்டை மாடியில நின்னுக்கிட்டு 'அவன் எனக்கு உயிரோட வேணும்டா’னு பேய்த்தனமா கத்திக்கிட்டே சுருட்டைத் தூக்கிப்போட்டு மிதிக்கிறாரு பிரகாஷ்ராஜ். கட் பண்ணா...''
இந்த 'கட் பண்ணா’ என்கிற வார்த்தைகள் கோடம்பாக்கம் கதைசொல்லிகளிடம் அவ்வளவு பிரபலம். கதை சொல்லும்போது ஒரு காட்சி முடிவதற்கும் அடுத்த காட்சி தொடங்குவதற்குமான இணைப்பு வார்த்தைகள் இவை. ஒவ்வொரு நாளும் 24 மணி நேர சினிமாவாகத்தானே இருக்கிறது நமக்கு. ஆகவே...
கட் பண்ணா...

ஃபேஷன் டி.வி-யில் ஏதேதோ தேசத்து அழகிகள், நாம் ஒருபோதும் அணிந்து நடமாடவே முடியாத துணிமணிகளைப் போட்டுக்கொண்டு, இசை அதிர நடந்துகொண்டு இருக்கிறார்கள். தொடை வரைக்கும் கீறிவிடப்பட்ட ஆடைகளோடு, அத்துமீறி எனது ஹாலுக்குள் பிரவேசிக்கும் பிரியப்பட்ட பிசாசுகள். எப்போதோ தூங்கிவிட்டேன். விழித்தபோது, அணைக்க மறந்த அழகிகள் இன்னும் நடந்துகொண்டே இருக்கிறார்கள்.
டீ குடிக்க வெளியே வந்தால், அபார்ட்மென்ட் வாசல் பிளாட்ஃபார்மில் தையல் மெஷின் தடதடக்க, 'வணக்கம் சார்’ எனச் சிரிக்கிறார் ஒரு டெய்லரண்ணன். ஒரு கணம் சட்டென்று குற்ற உணர்வு மனதைப் பிசைகிறது. இத்தனை நாட்களாக இந்த டெய்லர் இங்கேதான் இருக்கிறார். எப்போதும் ஏதாவது பழைய துணிகளைத் தைத்தபடி உட்கார்ந்திருக்கிறார்.
இதுவரை ஒரு சட்டையைக்கூட இவரிடம் தைக்கக் கொடுக்கலாம் எனத் தோன்றியதே கிடையாது. உள்ளே போய் பட்டன்போன இரண்டு சட்டை களையும், ஆக்ஸிடென்டில் முட்டி கிழிந்த, ஜிப்பு போன பேன்ட்களையும் எடுத்துவந்து அவரிடம் தந்தேன். ''காஸ்ட்லி சட்டைங்க சார்... நம்மகிட்ட இந்த பட்டன்லாம் இருக்காதே... காலர்லேர்ந்து உருவி வெச்சுரலாமா?'' எனச் சிரிக்கிறார். முட்டி கிழிந்த பேன்ட்டைப் பார்த்து, ''அச்சச்சோ... பைக்ல விழுந்துட்டீங்களா? எப்போ சார்? சரியாகிருச்சுல்ல...'' எனப் பதறுகிறார். ''மொத்தமா 120 ரூவா ஆகும் சார்.''

எங்கெங்கும் ரெடிமேட்ஸ் மலிந்துவிட்ட பெரு நகரத்தில், ஒரு அபார்ட்மென்ட் வாசலில் மெஷின் போட்டு உட்கார்ந்திருக்கும் அவரை நினைத்தால் பாவமாக இருக்கிறது.
தினம் தினம் ஏதாவது கிழிந்த துணி கிடைக்குமா என அடுக்குமாடிகளையே பார்த்துக்கொண்டு இருக்கிறார். யாரோ வாட்ச்மேனுக்குக் கொடுக்கும் சாப்பாட்டை, யாருக்கும் தெரியாமல் கூச்சத்தோடு பகிர்ந்துகொள்கிறார். சும்மா இருக்கப் பிடிக்காமல், வீட்டில் இருந்து எடுத்து வந்த பழைய துணிகளை வெட்டி வெட்டி இறைக்கிறார். எஃப் டி.வி. அழகிகளைப்போல் மனிதர்கள் அவரைக் கடந்து நடந்துகொண்டே இருக்கிறார்கள். கிழிந்த துணிகளுக்கு நடுவே, பசித்த, ஏக்கப்பட்ட ஒரு டெய்லர் குடும்பம், நடிகைகள் ஆடும் துணிக் கடை விளம்பரங்களைப் பார்த்துக்கொண்டு இருக்கிறது. என்ன செய்ய முடியும்? ஏதாவது புதுத் துணி வாங்கிவந்து அவரிடம் தைக்கக் கொடுக்கலாம். அதைத் தொட்டுத் தடவி, ''சார்ர்ர்...'' என அவர் தரப்போகும் ஒரு சின்ன சிரிப்புக்காக!
டிரஸ்ட்புரம் கடைத் தெருவில் அவரவரும் அவரவர் வேலைக்குப் போய்க்கொண்டு இருக்கும் காலையில், பொட்ட்டெரென்று டியூப் லைட்டைத் தன் நெஞ்சில் அறைந்து உடைக்கிறார் ஒரு பெரியவர். நொறுங்கிச் சிதறிய டியூப்லைட் கண்ணாடிச் சில்லுகளின் மேல் உருள்கிறார். பக்கத்தில் அவர் பேரன் மாதிரி ஒருவன் குத்தவைத்து, துண்டை விரிக்கிறான். யாரும் நின்றுகூடப் பார்க்க வில்லை. பக்கத்தில் ஏ.டி.எம். வாசலில் நிற்கிற ஒரு கூட்டம் திரும்பிப் பார்த்துவிட்டு நகர்ந்துகொண்டே இருக்கிறது. அஞ்சு டியூப் லைட்டுகள் உடைத்த பிறகு, ''டீ வாங்கித் தாங்க சார்...'' எனத் தாத்தாவும் பேரனும் எதிர் டீக்கடையில் கெஞ்சு கிறார்கள். எதிர்த் திசையில் இன்னும் அஞ்சாறு லைட்டுகள் கிடக்கின்றன!
சாந்தி தியேட்டருக்கு எதிரே, சப்-வே வாசலில் கையில் தட்டை நீட்டியபடி, எதுவும் பேசாமல் உட்கார்ந்திருக்கிறாள் ஒரு பெண்மணி. மழைக்கு சப்-வேயில் ஒதுங்கிய கூட்டம் அவளைப் பார்க்கவே இல்லை. மழைக்கு உள்ளே வந்து தட்டுடன் பக்கத்தில் நிற்கிற அவளை உற்றுப் பார்க்கிறேன். 10 வருடங்களுக்கு முன்பு இதே இடத்தில் இவள் பாவாடை சட்டையோடு சிறுமியாக உட்கார்ந்திருந்தாள். அழுக்குச் சட்டை - பேன்ட்டில் தட்டு நீட்டியபடி பதின்பருவத்தைக் கடந்துகொண்டு இருந் தாள். இன்று குண்டடித்து, பாழடைந்த கண்களோடு புடவையில் தட்டு நீட்டி நிற்கிறாள். யாருக்கும் குரல் கொடுக்காமல் மௌனமாகத் தட்டை நீட்டிக்கொண்டு, ஒரு சிம்பல் மாதிரி இதே இடத்தில் நிற்கிறாள். அவள் ஒரே ஒரு காட்சியை மட்டுமே நமக்குத் தருகிறாள். ஆனால், அந்தக் காட்சிக்குப் பின்னால் ஆயிரமாயிரம் மனிதர்கள், காதல்கள், அவலங்கள், கனவுகள் ஒளிந்திருக்கின்றன. மழை வலுக்கும்போது அவள் சுரங்கத்தில் பர்ஸ் விற்கிறவன் பக்கத்தில் போய் உட்கார்ந்துகொள்கிறாள். கால் இல்லாமல் தொடையோடு மொண்ணையான அவன், அவளை எதற்காகவோ திட்டத் தொடங்கும்போது... மழை இன்னும் வலுக்கத் தொடங்குகிறது!
நான் வசிக்கும் தெரு முனையில் காலை யில், புதிதாக ஒரு பைத்தியக்காரப் பெண் கிடக்கிறாள். மொட்டைத் தலையோடு, ஏகப்பட்ட அழுக்குத் துணிகளை ஒரு பையில் அடைத்து, நெஞ்சோடு அணைத்த படி நீல்மெட்டல் தொட்டிக்குப் பக்கத்தில் கிடக்கிறாள். கடக்கையில் பார்க்கும்போது எல்லாம் அந்த அழுக்குப் பையில் இருந்து துணிகளை எடுத்துத் தன் மார்புப் பகுதி யில் அடைப்பதும் எடுப்பதுமாக இருக் கிறாள். எப்போதும் தனக்குத்தானே பேசிக்கொண்டே இருக்கிறாள். இரவுகளில் பெரும் குரலெடுத்து யாரையோ திட்டுகிற தொனியில் கத்துகிறாள். வாசலுக்கு போன் பண்ண வந்தால், அவள் கத்துவது காதடைக்கிறது. ''அய்யே! நைட்டெல்லாம் இது டார்ச்சர் தாங்கலைங்க...'' எனக் காலையில் டீக்கடையில் நின்று தெருக் காரர்கள் சொன்னார்கள். டீக்கடைக்காரர் சொல்கிறார், ''சார்... அதோட ஒரு பக்கம் மாரை யாரோ அறுத்துட்டானுங்க சார். அதான் துணியை அடைச்சுட்டுக் கெடக்கு. நேத்து ஒரு கெழவி வாளில சாப்பாடு எடுத்துட்டு வந்து தந்துச்சு. பக்கத்து ஏரியாதான்போல...'' என்றார். மழை பிடித்த நாளில் அவளைக் காணவில்லை!

ஸ்பான்சர் நண்பரோடு, நள்ளிரவு ஒரு மணிக்கு ரெசிடென்ஸி டவர்ஸ் ஹோட்டல். லாபியில் நின்றபடி சையிஃப் அலிகானும் கரீனா கபூரும் கொஞ்சிக்கொண்டு இருக் கிறார்கள். பக்கத்து டேபிளில் நண்பர் களோடு நகுல் உட்கார்ந்து இருந்தார். கடைசி டேபிளில் மொபைலை நோண்டிக்கொண்டு இருந்தது அமலா பால்தானா? தூக்கத்தின் சுவடுகளே இல்லாமல் செவத்த பையன்களும் பெண்களும் ஹை டெஸிபலில் சிரித்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நேரத்திலும் அங்கங்கே நடுத்தர வயது மனிதர்கள் பணம் வழியும் கண்களோடு நிசப்தமாக பிசினஸ் பேசுகிறார்கள். ரெஸ்ட் ரூம் போய் விட்டுத் திரும்பும்போது, கை நிறையத் தட்டுகளுடன் ஹோட்டல் யூனி ஃபார்மில் எதிரே சம்பத் வருகிறான். என்னைப் பார்த்த கணம் அவன் முகம் சங்கடத்தில் நெளிகிறது. சம்பத், மன்னார்குடியில் பெரிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். மாடுகளுக்கு ஒரு தொழுவம், குதிரைகளுக்கு ஒரு தொழுவம் எனப் பெரு வாழ்வு பார்த்தவன். ஊருக்குப் போகும்போது, பரந்துகிடக்கும் வயல்களுக்கு நடுவே அவன் அப்பாவோடு நடந்து வந்த காட்சி, பழுப்பேறிய புகைப்படம் போல மனதில் உதிர்கிறது. ஆலங்குடி திருவிழா வுக்கு, வலங்கைமானில் பட்டாசு வாங்கிக் கொண்டு, ஆறேழு பைக்குகளில் அவன் வந்ததைப் பார்த்து 10 வருஷம் இருக்கும்.
''சம்பத்து... இங்கேயா வேலை பார்க்கற..?''
''ஆமா மாப்ள... ரெண்டு வருஷமாச்சு... ரெஸ்டாரென்ட் டூட்டி.''
கொஞ்ச நேரத்தில் நகுல் டேபிளுக்கு பில் வைத்துவிட்டு எங்கள் டேபிளுக்கு வந்து நின்றான் சம்பத்.
''சார், ஆர்டர் ப்ளீஸ்!''
மழைக்கு ஒதுங்கி கோடம்பாக்கம் பாலத்துக்குக் கீழே நிற்கிறேன். சட்டென்று மனசுக்கு ஏதோ ஆகிவிடுகிறது. மழையா, தனிமையா, தோல்வியா? எதுவுமே புரியவில்லை. இப்படித்தானே எல்லோரும் ஒரு கணமும் மறு கணமுமாக மாறிமாறி வாழ்கிறோம். மழைக்கு ஒதுங்கி நின்று ஊரை, மனிதர்களைப் பார்க்கும்போது, நெஞ்சு நனைந்து ஏதேதோ முளைவிடுகிறது. இதெல்லாம் எதன்பொருட்டு என்ற கேள்வி குடைக்காளான்போல் பூக்கிறது. வேளாவேளைக்குச் சாப்பாடு, சம்பளம், துயரம், சந்தோஷம் எனக் கிடைக்கும் ஒரு வாழ்வு எல்லோருக்கும் எப்போதும் அமைவது இல்லை. கனவு, லட்சியம், வேட்கை எனத் துரத்தும் வாழ்வில் எங்கேதான் போய் நிற்கப்போகிறோம்? பாழாய்ப்போன மனசு எப்போதும் அடைவதற்கான ஆவேசங்களிலோ, விடுபடுவதற்கான விமோசனங்களிலோதான் இருக்கிறது. அன்புக்கு ஏங்குகிறது. வன்மம் இல்லாத உலகுக்குத் தவிக்கிறது. தளைகள் அற்ற சந்தோஷத்துக்குக் காத்திருக்கிறது. மாடிப் படியின் கீழ் இரவெல்லாம் கத்தும், குட்டிகள் ஈன்ற பூனையைப்போல, எப்போதும் பரிசுத்தமான காதலுக்குப் பரிதவிக்கிறது. ஆனால், நாமே நாம் நினைத்ததுபோல் இருப்பது இல்லையே. யாருக்கும் நாம் வேண்டுவதைக் கொடுப்பது இல்லை. வன்மமும் கோபமும் வெறுப்புமாக ஒரு வாழ்க்கை அனுதினமும் நம்மை அழைக்கிறது.
எஃப். டி.வி. அலறும் அபார்ட்மென்டுக்கு முன்னால் ஒரு பாவப்பட்ட டெய்லர், வெயில் சாலையில் நெஞ்சில் டியூப் உடைக்கும் முதியவர், சப்-வேயில் காலங்காலமாக மௌனமாகத் தட்டு நீட்டும் ஒருத்தி, தெரு முனையில் மார்பு அறுந்துகிடக்கும் ஒரு மன நோயாளி, நட்சத்திர ஹோட்டலில் பேரர் வேலை பார்க்கும் விவசாயி மகன், இதை எழுதிக்கொண்டு இருக்கும் நான்... எல்லோரும் ஒன்றுதான். வறுமை என்பது பணமும் பொருளும் மட்டும் அல்ல... அன்பின் வறுமைதான் உலகின் அதிபயங்கரம்.
இரவு வீட்டுக்கு பாலா வருகிறார். தீவிரமான அரசியல் விமர்சகர். ''அமெரிக்கா, இங்கிலாந்துனு முக்கியமான அஞ்சு நாடுகள் இந்தியாவுக்குச் சுற்றுலா போகாதீங்கனு சொல்லிட்டாங்க பார்த்தியா? எனக்கென்னவோ சீனாவும் பாகிஸ்தானும் சேர்ந்து இந்தியாவுல பெரிய போரைக் கொண்டுவரப்போறானுங்கனு நினைக்கிறேன்.''
''மெட்ராஸ்லயும் குண்டு போடுவானுங்களா..?''
''பின்னே... இதுதானே மெயின் அயிட்டம். சென்னைல்லாம் அதுல நம்பர் ஒண்ணுடி. மக்களோட எதிர்காலத்தைப் பத்திக் கவலைப்படாம அதிகாரம், அணு ஆயுதம், ஊழல்னு நடக்கிற உலக அரசியல் அதோட முடிவைத் தேடிட்டே இருக்கு. அதுக்கும் நாமதான் பலி.''

தவிர்க்கவே முடியாமல் குண்டுகள் விழுகிற கற்பனை வருகிறது. அறிவாலயத்திலும் போயஸ் கார்டனிலும் ப.சிதம்பரம் வீட்டிலும் ஒளிந்துகொள்ள மக்கள் முட்டிமோதுவதைப் போல் காட்சி வருகிறது. தெருமுனைப் பைத்தியம், ''ஓடுங்கடா... ஓடுங்கடா...'' எனப் பெருங்குரல்எடுத்துச் சிரிப்பது பின்னணிக் குரலாகக் கேட்கிறது. கூட வந்த இன்னொரு நண்பர், ''அதை விடுங்க... எனக்கென்னவோ இந்த மாயன் காலண்டர் வேலையைக் காட்டுமோனு தோணுது. பார்த்தீங்களா... வரவர எல்லா மக்களும் டி.வி., மொபைலு, இன்டர்நெட்னு கொண்டாட்டமா இருக் கான். ஆண்டவன் எல்லாரும் அனுபவிச்சுக் கங்கடா... மொத்தமா சோலியை முடிக்கப் போறேன்னு சொல்றான்னு நெனைக் கிறேன்...''
''மாயன் காலண்டரா?''
''அதாம்ப்பா... சீக்கிரம் உலகம் அழியப்போகுதுன்னு சொல்ற காலண்டரு...''
''டேய்... தோட்டத்துக்கு வந்தப்ப நீ நட்டுவெச்ச தேக்கு இப்போ மரமாகிருச்சுரா...'' என மொபைலில் சௌபா அண்ணன் வருகிறார். திடீரென்று மனசு சந்தோஷமாகிறது. இனம் புரியாத உற்சாகமாகிறது. பெரும் நம்பிக்கை உள்ளே தழைக்கிறது. சில வார்த்தைகள்தான்.... ஒரு செயல்தான்... ஒரு விடியல். இந்த மழைக் காலத்தில் யார் யாரோ வைத்த எத்தனையோ செடிகள் வளரும் என்கிற நம்பிக்கைதான் இன்னொரு கோடையைக் கொண்டுவருகிறது. செடிகள் என்பது செடிகள் மட்டுமே அல்ல!
(போட்டு வாங்குவோம்)
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!
Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan