மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!
பிரீமியம் ஸ்டோரி
News
அனுபவங்கள் பேசுகின்றன!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ. 200 / ராமமூர்த்தி

அனுபவங்கள் பேசுகின்றன!

அசரவைத்த ஆசிரியர்!

எனக்குத் தெரிந்த பெண் ஒருவர் அரசுப் பள்ளியில் மகளை ஆறாம் வகுப்பில் சேர்ந்திருந்தார். மதிய உணவு கொடுப்பதற்காக பள்ளிக்குச் சென்றிருந்தபோது, அம்மாவிடமிருந்து சாப்பாட்டுக் கூடையை அவசரமாக எடுத்துச் சென்று சாப்பிட்டு வந்த மகளிடம் ``சாப்பாடு எடுத்துவர லேட்டானதால பசியா இருந்தியா... அதனாலதான் சாப்பாடு கூடையைப் பிடுங்கிக்கிட்டு ஓடினாயா? என்று கேட்டாராம். அதற்கு, ``இல்லம்மா, எங்க வகுப்புக்கு புதுசா ஒரு டீச்சர் வந்திருக்காங்க, அவங்க மதியம் எங்ககூடத்தான் உட்கார்ந்து சாப்பிடுவாங்க. அதோட எப்படி சாப்பிடணும், எது சத்தான உணவு, எதெல்லாம் சாப்பிடக் கூடாதுன்னு சொல்லுவாங்க. சாப்பிட்டு முடிச்சதும், ஏதாவது விளையாட்டு சொல்லிக் கொடுப்பாங்க’' என்று மகள் கூறினாளாம்.

அரசுப் பள்ளி ஆசிரியர் என்றாலே மாணவர்களிடம் அதிக அக்கறை காட்டாதவர்களாக பல நேரங்களில் சித்திரிக்கப்படுகிறார்கள். இந்நிலையில், அந்த ஆசிரியரின் செயல்பாடு பாராட்டும்படி இருந்தது. `இதுபோன்ற ஆசிரியர்கள் பெருகினால், அரசுப் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்க அதிகமான பெற்றோர்கள் முன்வருவார்கள்’’ என்று தோன்றியது.

- சிவசித்ரா, சிட்லபாக்கம்

இனிய தலைமுறை!

அனுபவங்கள் பேசுகின்றன!

தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவளுடைய அண்ணன் மகன், மனைவி என்று இளஞ்ஜோடியும் வந்தனர். விருந்து முடிந்து கிளம்பும்போது, தோழியையும் அவள் கணவரையும் தங்கள் வீட்டுக்கு சாப்பிட அழைத்தனர். அதன்பிறகு நடந்தது எனக்கு வியப்பை அளித்தது.

அந்தப் பெண், ``ஆன்ட்டி, உங்களுக்குப் பிடிக்காத காய், பழங்கள்... தள்ளுபடியான காய், பழங்கள் பற்றி சொல்லுங்க...’’ என்றாள். தோழி `ஏன்’ என்று கேட்டதற்கு  அந்தப் பெண், ``உதாரணத்துக்கு, தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் கோஸ் சாப்பிட மாட்டார்கள். காசிக்கு போய்வந்தவர் என்பதால் சில காய், பழங்கள் விட்டு வருவார்கள். மேலும் சிலர், சில காய்களைத் தொடவே மாட்டார்கள். அவற்றை நான் சமைத்துவிட்டால், நீங்கள் ஒதுக்கிவிடுவீர்கள். அதனால்தான் கேட்டேன். வாய்விட்டு பேசினால், இதுபோன்ற  சங்கடங்களை ஈஸியா தவிர்க்கலாமே! நீங்க நன்றாக சாப்பிட வேண்டும் என்று நினைப்பதால் இப்படிக் கேட்கிறேன்’’ என்றாள்.

இந்தக் காலத்து இளம்பெண்களை குறை சொல்பவர்கள், இதுபோன்ற சூப்பர் ஐடியா, அன்பான அணுகுமுறைகளை மனம்விட்டு பாராட்டலாமே!

- சீனு.சந்திரா, மயிலாப்பூர்

சங்கடம் தவிருங்கள்... ப்ளீஸ்!

அனுபவங்கள் பேசுகின்றன!

சமீபத்தில் வயதுக்கு வந்த என் மகளுக்கு  மருத்துவ ஆலோசனை பெற மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன். அங்கே அவருடைய நண்பருடன் பேசிக்கொண்டே என் மகளின் உடல் பிரச்னை பற்றி விசாரித்தார். பொதுவாக பெண்கள் தங்கள் உடல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை ஆண் டாக்டரிடம் சொல்லவே கூச்சப்படும் நிலையில், வெளியார் ஒருவர் அங்கு அமர்ந்திருக்கும்போது சொல்ல மிகவும் சங்கடமாக இருந்தது.

எனவே, மருத்துவர்கள் தங்களை நாடி வரும் நோயாளிகளிடம் பேசும்போது, நண்பர்களையோ உறவினர்களையோ அருகே அமரவைப்பதை தவிர்க்க வேண்டும் என்று  கேட்டுக்கொள்கிறேன்.

- செல்வ.மேகலா, தஞ்சை

மதிப்போம்... உறவுகளை!

அனுபவங்கள் பேசுகின்றன!

அண்மையில் என்னுடைய தோழியைப் பார்ப்பதற்காக அவளுடைய இல்லத்துக்குச் சென்றிருந்தேன். தோழி சில மாதங்களுக்கு முன்புதான் அவளுடைய ஒரே மகளுக்கு திருமணம் செய்து வைத்திருந்தாள். இரண்டு குடும்பத்தினருமே வசதியானவர்கள். தோழியின் முகத்தில் வருத்த ரேகைகள் தெரியவே... காரணம் கேட்டேன்.

‘’என் உறவினர் வீடுகளில் திருமணங்கள் நடந்தபோது நான் சென்று வருவதோடு சரி. நெருங்கிய உறவுகளாக இருக்கும் திருமணத் தம்பதிகளை என்னுடைய வீட்டுக்கு கூப்பிட்டு விருந்து வைக்கும் வழக்கத்தை எல்லாம் நான் கடைப்பிடித்ததே இல்லை. அதனால் என்னுடைய மகளையும், மருமகனையும் இப்போது யாருமே விருந்துக்கு கூப்பிடவில்லை. இது எனக்கு மிகுந்த மன சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது” என்றாள்.

இதைக் கேட்டதிலிருந்து நான் உஷாராகிவிட்டேன். இப்போது  என்னுடைய  நெருங்கிய உறவினர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன். திருமணமாகும் தம்பதிகளை வீட்டுக்குக் கூப்பிட்டு விருந்து கொடுக்கிறேன். அப்ப நீங்க..?

- ஜெயலட்சுமி வசந்தராசன், கிருஷ்ணகிரி