
சுசி திருஞானம்தொடர்

வ.உ.சிதம்பரனார்
வ.உ.சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை, இந்திய விடுதலைப் போராட்டக்களத்தில் மகத்தான பங்களிப்பைச் செய்த மாவீரர். பிரிட்டிஷ் கப்பல்களுக்குப் போட்டியாக இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி, வெள்ளையர்களை நடுநடுங்கச் செய்தவர். “இந்திய மக்கள் எல்லோரும் நம்மைப் பார்த்து பயந்து கும்பிடும் நிலையில், நமது வியாபாரத்தையே முடக்கும் அளவுக்குப் போட்டி கப்பல் கம்பெனி தொடங்கியுள்ள சிதம்பரம்பிள்ளைதான், இந்திய சுதந்திரப் போராட்டக்காரர்களிலேயே மிகவும் ஆபத்தானவர்” என்று பிரிட்டிஷ் ராணிக்கு ஆங்கிலேய அதிகாரிகள் குறிப்பு எழுதினர் என்றால், வ.உ.சி-யின் அறிவும் துணிவும் புரியும்.
பிரிட்டிஷ் அரசால் தேசத்துரோகியாகக் குற்றம்சாட்டப்பட்டு, இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப் பட்டார். அவருக்கு விலங்குபூட்டி செக்கிழுக்கவைத்து கொடுமைப்படுத்தினர். விடுதலைக்குப் பின்னர், வ.உ.சி-யைத் தலையில் வைத்துக் கொண்டாடியிருக்க வேண்டிய அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் பலர், புறக்கணிப்பையும் அவமரியாதையையும்தான் அவருக்குப் பரிசாகத் தந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் 1872-ல் வ.உ.சி பிறந்தார். தந்தை உலகநாதன் பிள்ளை, அவரது காலத்தில் மிகவும் பிரபலமான வழக்கறிஞர். ஒட்டப்பிடாரத்திலும், அருகிலுள்ள திருநெல்வேலியிலும் பள்ளிப்படிப்பை முடித்த வ.உ.சி சட்டப் படிப்பை நிறைவு செய்து வழக்கறிஞரானார். ஏழை மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் வழக்குகளில் ஆஜரானதால், ‘மக்கள் வழக்கறிஞர்’ என்ற பெயரைப் பெற்றார்.
சுதேசி இயக்கத்தில் லாலா லஜ்பத் ராய், பாலகங்காதர திலகர் போன்ற தலைவர்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான விடுதலை வேட்கையை விதைத்தனர். அதில் ஈர்க்கப்பட்ட வ.உ.சி, 1905-ல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரானார். பாரதியாரை சென்னையில் சந்தித்து உரையாடினார். கடல் வழியாக வந்து நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயரை விரட்ட, நம்மவர்களுக்குக் கடல் ஆதிக்கம் வேண்டும் என்று வ.உ.சி நம்பினார். இதற்காகவே 1906-ல், சுதேசி கப்பல் கம்பெனியை நிறுவினார். வ.உ.சி-யின் திட்டத்துக்காக நிதி தந்து உதவுமாறு ‘இந்தியா’ பத்திரிகையில் தலையங்கம் எழுதினார் பாரதி. வெறும் 200 ருபாய் மட்டுமே நிதி கிடைத்தது. சேலத்தில் விஜயராகவாச்சாரியார் நிதி திரட்டினார். தான் சேமித்து வைத்திருந்த 1,000 ரூபாயைக் கொடுத்து உதவினார் ராஜாஜி. பல இடையூறுகளுக்குப் பின்னர், ‘எஸ்.எஸ். காலியா’, ‘எஸ்.எஸ். லாவோ’ எனும் இரண்டு கப்பல்கள் மூலம் தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு பயணிகள் போக்குவரத்து சேவைகளைத் தொடங்கப்பட்டன. “எனது சுதேசிக் கப்பல் கம்பெனி, வெறும் வியாபாரக் கம்பெனி அல்ல; நம் தாய்த்திரு நாட்டை விட்டு வெள்ளையர்களை மூட்டை முடிச்சுகளுடன் வெளியேற்றுவதுதான் இந்தக்கப்பல்கள் இயக்கப்படுவதன் நோக்கம்” என்று வ.உ.சி முழங்கினார். இதனால் ஆங்கிலேயக் கப்பல் நிறுவனத்துக்கு மாதம் 40,000 ருபாய் நஷ்டம் ஏற்பட்டது. பயணிகளுக்கு இலவசக் குடைகள் வழங்குவது, பயணிகளை இலவசமாக அழைத்துச் செல்வது போன்ற உத்திகளை ஆங்கிலேயர்கள் கையாண்டனர். இதனால், வ.உ.சி-யின் சுதேசி கம்பெனி திவாலாகும் நிலைமைக்குச் சென்றது.

பிரிட்டிஷ் அதிகாரிகள், வ.உ.சி மீது தேச துரோகக் குற்றம்சாட்டி, அவரைக் கைதுசெய்ய உத்தரவிட்டனர். வழக்கின் முடிவில் சுப்பிரமணிய சிவாவுக்கு சிறை தண்டனையும், வ.உ.சி-க்கு இரட்டை ஆயுள் தண்டனையும் கொடுத்தார்கள். கைது செய்யப்பட்ட வ.உ.சி., பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். பாளையங் கோட்டை சிறையில் பாரதியார் வந்து வ.உ.சி-யைச் சந்தித்தார். கலெக்டர் விஞ்ச் துரைக்கும் வ.உ.சி-க்கும் இடையே நடந்த காரசாரமான வாக்குவாதத்தைக் கவிதை வடிவில் ‘இந்தியா’ வார இதழில் பாரதி வெளியிட்டார். பின்னர், கோயம்புத்தூர் சிறையில் இரண்டரை ஆண்டுகளும் கள்ளிக்கோட்டை சிறையில் இரண்டு ஆண்டுகளும் அடைக்கப்பட்ட வ.உ.சி-யை வெள்ளையர்கள், சங்கிலியால் பிணைத்தும், கல் உடைக்கவைத்தும், செக்கிழுக்கவைத்தும் கொடுமைப்படுத்தினார்கள். இதற்கிடையே திருநெல்வேலி கலெக்டரான ஆஷை மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் சுட்டுக்கொண்டு வீர மரணம் அடைந்தார். இந்த வழக்கில் வ.உ.சி., பாரதி ஆகியோர் மீதும் ஆங்கிலேயே போலீஸார் சந்தேகப்பட்டனர். சிறையிலிருந்த வ.உ.சி-யை கொடுமைப்படுத்தினார்கள்.
மேல்முறையீடு செய்து, தண்டனை குறைப்புக்குப்பின், 1912-ம் ஆண்டு வ.உ.சி விடுதலையானார். அதற்குள் காங்கிரஸ் கட்சிக்குள் நடந்த மாற்றங்களால் வ.உ.சி-க்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை. அவர் சிறை செல்லும்போது ஆயிரக்கணக்கானவர்கள் முழக்கமிட்டு வழியனுப்பி வைத்த நிலைமை, தலைகீழாக மாறியிருந்தது. வெளியே வரும்போது அவரை வரவேற்க, சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட ஒரு சிலரே வந்திருந்தனர். பின்னர் வ.உ.சி சென்னை சென்றார்.
வ.உ.சி தொடங்கிய சுதேசிக் கப்பல் கம்பெனி 1911-ல் மூடப்பட்டுவிட்டது. அவரிடமிருந்த ‘பாரிஸ்டர் பட்டம்’ வெள்ளை அரசால் பறிக்கப்பட்டதால், அவரால் வழக்கறிஞர் தொழிலும் செய்யமுடியவில்லை. குடும்பத்தைக் காப்பாற்ற மளிகைக்கடை நடத்தினார். மண்ணெண்ணை விற்றார். எதுவும் சரிப்பட்டு வரவில்லை. வறுமையுடன் போராடினார். இக்கட்டான சூழலில் வ.உ.சி-க்கு வழக்கறிஞர் உரிமையை ஆங்கிலேய நீதிபதி வாலஸ் மீட்டுத் தந்தார். இதற்கு நன்றியாகத்தான், தனது மகனுக்கு ‘வாலேசுவரன்’ என்று வ.உ.சி பெயரிட்டார்.

திரு.வி.க., சிங்காரவேலர், சக்கரைச் செட்டியார், வரதராஜுலு நாயுடு போன்ற தலைவர்களுடன் சேர்ந்து தொழிற்சங்க இயக்கத்தில் ஈடுபடுபட்டார். பல தொழிலாளர் போராட்டங்களில் பங்கேற்றார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்தில் அக்கறை காட்டியபோதும், சாதிய அடிப்படையில் அரசியல் கட்சிகள் தோன்றுவதை வ.உ.சி ஏற்கவில்லை. வ.உ.சிதம்பரம் பிள்ளை 1936 நவம்பர் 18-ம் தேதி காலமானார். இறக்கும் தருவாயில் மகாகவியின் “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்” எனும் பாடலைப் பாடச் சொல்லிக் கேட்டார். திட்டமிட்ட புறக்கணிப்புகளுக்குப் பின்னரும், இந்திய வரலாற்றில் கப்பலோட்டிய தமிழராக கம்பீரமாக நிலைத்திருக்கிறார் வ.உ.சி!
ஜேம்ஸ் ஆலனின் ‘வலிமைக்கு மார்க்கம்’ என்ற நூலின் கருத்துக்களை, தமிழில் இப்படி குறிப்பிடுகிறார் வ.உ.சி, “உலகம் முழுவதிலும் துன்பத்தால் துடிக்காத மனமே இல்லை. கவலையால் கலங்காத உயிரே இல்லை. துன்பத்தை வெறுப்பதாலோ, அல்லது அதனை கவனியாது இருப்பதாலோ துன்பத்திலிருந்து தப்பிக்க முடியாது. ஒரு துன்பம் எதனால் வந்தது என்பதை அறிவதும், அதிலிருந்து என்ன பாடம் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதை அறிவதும்தான் துன்பத்திலிருந்து விடுபடுவதற்கான வழி.”
(இன்னும் வெல்வோம்)