Published:Updated:

தோற்றவர்களின் கதை - 22

தோற்றவர்களின் கதை - 22
பிரீமியம் ஸ்டோரி
News
தோற்றவர்களின் கதை - 22

சுசி திருஞானம்தொடர்

தோற்றவர்களின் கதை - 22
தோற்றவர்களின் கதை - 22

லிலியோ, ஐசக் நியூட்டன், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வரிசையில் வைத்துப் போற்றப்படும் மகத்தான இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங். பிரிட்டிஷ் இயற்பியலாளரும் எழுத்தாளருமான ஸ்டீஃபன் ஹாக்கிங், பிரபஞ்சத்தின் தோற்றம், காலப் பயணம், வேற்றுகிரகவாசிகள், பிரபஞ்சக் கருங்குழிகள் போன்றவை பற்றிய தனது சிந்தனைகளால் விஞ்ஞான உலகை உலுக்கி வருபவர். அறிவியல் கோட்பாடுகளை விளக்கும் ஒரு புத்தகத்தை ஒரு கோடி பிரதிகள் விற்க முடியும் என்று நிரூபித்துக் காட்டிய ஜனரஞ்சக இயற்பியலாளர் அவர்...

நரம்புத் தசை நோயால் பாதிக்கப்பட்டு, உடலின் பெரும்பகுதி செயல் இழந்த நிலையில், 40 ஆண்டுகளாக சக்கர நாற்காலியில் முடக்கப்பட்டிருக்கிறார் அவர். வாய் பேச முடியாத நிலையில், தனது கண் புருவ அசைவுகளையே வார்த்தைகளாக மாற்றும் கணினி உதவியுடன் எழுதிக்குவித்தும் வரும் 75 வயது ஸ்டீபன் ஹாக்கிங், நம் சமகாலத்தில் வாழும் ஓர் அறிவியல் அதிசயம். உடல்பலத்தைவிட வலிமையானது மனபலம் என்ற கருத்துக்கு இவரைவிடச் சிறந்த உதாரணம் இருக்கவே முடியாது.

பிரிட்டனில் 1942-ம் ஆண்டு, ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார் ஸ்டீபன் ஹாக்கிங். தந்தை மருத்துவர். தாயார் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர். எனினும் பள்ளிப்படிப்பில் ஸ்டீபன் ஹாக்கிங் சுமார் ரகம். என்றபோதும், ஏன் - எதற்கு - எப்படி என்ற கேள்விகளை எழுப்பி, விடை தேடுவது அவரது இயல்பாக இருந்தது. இதனால், பள்ளியில் அவருக்கு வைக்கப்பட்ட பட்டப் பெயர் ஐன்ஸ்ட்டீன்.  தன்னைப்போல் மகனை மருத்துவராக்க விரும்பினார் தந்தை. ஆனால், ஸ்டீபனுக்கோ இயற்பியல் படிப்பதில் ஆர்வம். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் இயற்பியலையும் வேதியியலையும் படித்தார். மூன்றாவது வருடம் படித்துக்கொண்டு இருந்தபோது, தனக்கு ஏதோவொரு வினோத நோய் வந்திருப்பதை உணர்ந்தார். காரணமின்றி அடிக்கடி கீழே விழுந்தார். அவரது தசை மாதிரிகளை எடுத்துப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு நரம்புத் தசை நோய் வந்திருப்பதை உறுதி செய்தனர். அந்த நோய், சுயமான தசை இயக்கங்களை ஆட்சி செய்யும் நரம்புச் செல்களைச் சிதைத்துவிடும். அந்த நோய் முற்றிவிட்டதால் அவர் இரண்டு வருடங்களுக்கு மேல் உயிர் வாழ முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.

ஆனால், சக்கர நாற்காலியில் இருந்தபடியே பல்கலைக்கழக ஆய்வினை முடித்து, பேராசிரியர் ஆனார். திருமணம் முடிந்தது. மூன்று குழந்தைகளும் பிறந்தன. 1970 முதல், ஸ்டீபன் அண்டவெளிக் கருங்குழிகளைப் பற்றி ஆய்வுகள் செய்ய ஆரம்பித்தார். ஒளித்துகளை கருங்குழிகள் விழுங்கிவிடும் என்றும் கருங்குழியின் வெப்பத்தால் கதிர்வீச்சு எழுகிறது என்றும் அவர் கண்டறிந்த கோட்பாடுகள், இயற்பியல் உலகில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன.

1985-ம் வருடம், அவர் அணுத்துகள் ஆராய்ச்சிக்காக ஜெனீவா சென்றிருந்தபோது, நரம்பு நோய் முற்றியதால், அவரது உடல் இயக்கங்கள் பெருமளவில் செயலிழந்துவிட்டன. அவர் இன்னும் சில மணி நேரம்தான் உயிருடன் இருப்பார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். உடனடியாக அவரைக் கேம்பிரிட்ஜ் மருத்துவக் கூடத்துக்கு விமானத்தில் கொண்டு சென்றனர். அங்கு நடந்த தொண்டைக்குழி அறுவை சிகிச்சையால் அவர் உயிர் பிழைத்தார். ஆனால், அவரது குரல் முற்றிலும் அறுந்து போய்விட்டது. தனது உடல் தசைகள் தன் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும், மூளையும் சிந்தனையும் முழு உற்சாகத்துடன் இருக்குமாறு, அவர் தனது சிந்தனைப்போக்கை அமைத்துக்கொண்டார். ஸ்டீபனின் கண் புருவ அசைவுகளைப் படம்பிடித்து, அவற்றையே வார்த்தைகளாக மாற்றும் கணிப்பொறி மென்பொருளை உருவாக்கிய அவரது மாணவர்கள், அதற்கான கருவிகளை அவரது சக்கர நாற்காலியில் பொருத்தித் தந்துள்ளனர். இதனால், தனது குறைபாட்டைப் பற்றி கவலைப்படாமல், அதிகமாகச் சிந்தித்து நிறைய எழுதிக் குவித்தார் ஸ்டீபன். மாணவர்களுக்கு அதிக உற்சாகத்துடன் பாடம் நடத்தினார்.

‘A Brief History of Time’ என்கிற புத்தகம் ஒன்றை எழுதினார். அந்தப் புத்தகம் ஸ்டீபன் ஹாக்கிங்கை புகழின் உச்சிக்குக் கொண்டுசென்றது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்றுள்ள அந்தப் புத்தகம், சண்டே டைம்ஸ் இதழில் 237 வாரங்கள் முதலிடத்தில் இருந்து சாதனை படைத்தது. பிரபஞ்சம் உருவானதற்குக் காரணமான பெருவெடிப்பு குறித்த கருத்தையும், அதற்கு முந்தைய காலகட்டத்தையும் இதில் அவர் விளக்கியுள்ளார். ‘காலம் எப்போது தொடங்கியது? எப்போது முடியும்? காலத்தைப் பின்னோக்கிச் சென்று காண முடியுமா? விண்வெளிக்கு எல்லை உண்டா?’ என எல்லோர் மனதிலும் இருக்கும் கேள்விகளுக்கு அறிவியல் ரீதியாக பதில் சொல்லி மலைக்கவைத்தார் ஸ்டீபன் ஹாக்கிங்.

தோற்றவர்களின் கதை - 22

2010-ம் ஆண்டு வெளியிடப்பட்ட  ஸ்டீபன் ஹாக்கிங்கின் The Grand Design என்று நூல் உலகளாவிய சர்ச்சைகளை உருவாக்கியது. இந்த நூலில், இந்தப் பிரபஞ்சம் உண்டானதில் கடவுளின் பங்கு இருக்கலாம் என்ற நியூட்டனின் கோட்பாட்டை விமர்சனம் செய்துள்ளார் அவர். பிரபஞ்சம், சுயம்புவாக உருவானது என்று நிறுவியுள்ள ஸ்டீபன் ஹாக்கிங், உலகம் கடவுளால் வடிவமைக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று நிறுவுகிறார்.

“புவி ஈர்ப்பு விசை போன்ற இயற்பியல் விதிகள் உண்மையானவை என்பதால், இந்தப் பிரபஞ்சம், இயற்பியல் விதிகளின்படி தன்னைத்தானே உருவாக்கிக்கொண்டிருக்க முடியும் என்பதும் உண்மை. பிரபஞ்சத்தின் தோற்றம், உயிரினங்களின் தோற்றம், மனித இனத்தின் தோற்றம் அனைத்துமே அறிவியல் விதிகளின்படி இயல்பாக நடந்திருக்க முடியும். கடவுள் என்ற ஒருவர், திடீரென ஒரு நாள் பட்டனை அழுத்தி பிரபஞ்சத்தைப் படைத்தார் என்று சொல்லி, எதற்காக இங்கே கடவுளை உள்ளே கொண்டுவர வேண்டும்?” என்று அவர் எழுப்பிய கேள்வி அறிவியல் பார்வையுடன் அனைத்தையும் பார்க்க வலியுறுத்தியது.

புனைகதைகளின் சுவாரஸ்யத்துடன் காலப் பயணம் குறித்து அறிவியல் ரீதியில் விளக்கியவர் ஸ்டீபன் ஹாக்கிங் மட்டுமே. “இறந்த காலத்துக்கான காலப் பயணம் சாத்தியமில்லை என்பது சோகமான உண்மை. டைனோசர் வேட்டைக்காரர்களுக்கு இது ஏமாற்றம் தரலாம். வரலாற்று ஆசிரியர்களுக்கு நிம்மதி தரலாம்” என்று அறுதியிட்டுக் கூறும் ஸ்டீபன் ஹாக்கிங், எதிர்காலத்துக்குள் காலப் பயணம் மேற்கொள்வது கோட்பாட்டு ரீதியில் சாத்தியமே என்கிறார். “ஒளியின் வேகத்தில் பயணிக்கும் கப்பலை நம்மால் உருவாக்க முடிந்தால், அதில் நாம் புறப்பட்ட 6 ஆண்டுகளுக்குப் பிறகு, கப்பல் தளத்தின் ஒருநாள், பூமியின் ஒரு முழு ஆண்டுக்கு நிகராகும். நமது கப்பல் உண்மையாகவே எதிர்காலத்தில் பறந்துகொண்டிருக்கும். மனிதன் தன் வாழ்நாளுக்குள்ளேயே, அசாத்தியமான தொலைவைக் கடந்து பயணிக்க முடியும். பிரபஞ்சம் எவ்வளவு விநோதமாக உள்ளது என்பதை நாம் அறிய முடியும்” என்று சுவைபட விளக்குகிறார் அவர்.

அண்டப் பெருவெளியில் பூமியைப் போன்ற கிரகங்கள் இருக்கக் கூடும் என்றும், அத்தகைய வேற்று கிரகவாசிகள் நம்மைவிட முன்னேறியவர்களாக இருக்கக் கூடும் என்றும் ஸ்டீபன் ஹாக்கிங் கருதுகிறார். அத்தகைய வேற்று கிரகவாசிகளை நாமாக தேடவேண்டாம் என்றும் அவர் வலியுறுத்துகிறார். “கொலம்பஸ் வந்ததால் உள்ளூர் அமெரிக்க மக்கள் பாதிக்கப்பட்டதுபோல், வேற்று கிரகவாசிகள் இங்கு வந்தால், மனிதகுலம் பாதிக்கப்படலாம்” என்பது அவரது கருத்து.

தோற்றவர்களின் கதை - 22

உடலின் பல பாகங்கள் பெருமளவு செயல் இழந்த நிலையில், 2005-ம் ஆண்டு, பி.பி.சி தொலைக்காட்சி நிலையத்துக்கு சக்கர நாற்காலியில் அழைத்துவரப்பட்டார் 63 வயதான ஸ்டீபன் ஹாக்கிங்.  ‘‘வாழ்க்கை எப்படி இருக்கிறது?’’ எனக் கேட்டார்கள். ‘‘முன்பைவிட மிகவும் சுவாரஸ்யமாகவும், சவால்கள் நிறைந்ததாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது’’ என்றார். இந்த உடல்நிலையுடன் உங்களால் உண்மையிலேயே சந்தோஷமாக இருக்க முடிகிறதா என்று அடுத்த கேள்வி தயக்கத்தோடு கேட்கப்பட்டது. ‘‘எதை இழந்தீர்கள் என்பதல்ல; என்ன ஆற்றல் உங்களிடம் மீதம் இருக்கிறது என்பதே வாழ்க்கையில் முக்கியம்’’ என்றார் ஸ்டீபன் ஹாக்கிங்.

தோல்விகள் மூலமாக துவண்டுவிடாமல் பாடம் கற்றுக்கொண்டு வெற்றிபெற்றவர்களை இதுவரை உங்களுக்கு அடையாளம் காட்டினேன்.இதில் இருந்து நாமும் பாடம் கற்றுக் கொள்வோம்!

(நிறைவு)