மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அன்பின் பெருங்கோபக் காளி - மஹாஸ்வேதா தேவி - லீனா மணிமேகலை

அன்பின் பெருங்கோபக் காளி - மஹாஸ்வேதா தேவி - லீனா மணிமேகலை
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பின் பெருங்கோபக் காளி - மஹாஸ்வேதா தேவி - லீனா மணிமேகலை

அன்பின் பெருங்கோபக் காளி - மஹாஸ்வேதா தேவி - லீனா மணிமேகலை

அன்பின் பெருங்கோபக் காளி - மஹாஸ்வேதா தேவி - லீனா மணிமேகலை

2014-ம் ஆண்டு, ஒரு மழைக்கால மாலையில், கொல்கத்தா மாநகரின் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் மஹாஸ்வேதா தேவியைச் சந்தித்த தருணம் அலாதியானது. ‘ரேப் நேஷன்’ (Rape Nation) என்ற என் ஆவணப்படத்திற்காக அவரை நேர்காணல் செய்வதுதான் திட்டம். அவர் அமர்ந்து எழுதும் நாற்காலி, புத்தகங்கள் குவிந்திருக்கும் மேசை, குறிப்புகள் எடுத்துவைத்திருக்கும் நோட்டுப்  புத்தகங்கள், இங்க் பேனாக்கள், அவர் பேசும்போது சுருங்கி விரியும் முக ரேகைகள், கண்களின் மாறா ஒளி, கையசைவுகள் என அவரின் தரிசனத்தை நொடி நழுவாது வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்ததில்,  கேமரா இத்யாதிகளை எடுத்துச் சென்றதையும், என் குழுவினரையும் சுத்தமாக மறந்துவிட்டேன். அவருடைய ‘திரௌபதி’ சிறுகதையை மணிப்பூரின் ஆகச்சிறந்த நாடக ஆளுமைகள் கன்ஹையாலாலும் சாவித்திரியும் மேடையேற்றியதைப் பார்த்த அதே பரவசத்துடன், அந்தக்  கதையை அவர் எழுதிய சந்தர்ப்பம் குறித்துக் கேட்டேன். உடனே அவர் அந்தச் சிறுகதை இருந்த தொகுப்பை அருகில் இருந்த அலமாரியிலிருந்து தேடி எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். “துணி என்ன துணி? யாருக்கு வேணும் துணி? என்னை நிர்வாணமாக்க உன்னால் முடியும், ஆனால் என்னைத் திரும்ப உடுத்தவைக்க முடியுமா? சீ... நீ ஒரு ஆம்பளையா?” என்று மஹாஸ்வேதா தேவியின்  திரௌபதி தன் சிதைக்கப்பட்ட முலைகளோடு நின்று ராணுவ அதிகாரியைக்  கேள்வி கேட்பதையும் “நான் பார்த்து வெட்கப்படவேண்டிய ஆம்பளை இங்க யாரும் இல்ல, என் மேல் துணியைப் போட எவனையும் விட மாட்டேன். என்ன செய்வே? வா என்னை என்கெளன்ட்டர் பண்ணு” என்று ரத்தம் ஒழுகும் தன் குதறப்பட்ட உதடுகளால்  அதிகாரியின் முகத்தில் துப்புவதையும் சிறுகதையின்  காட்சிகளாக அவர் வங்காள மொழியில் வாசித்துக்காட்ட, அது மணிப்பூர், ஈழம், காஷ்மீர், போஸ்னியா, காங்கோ, சிரியா என உலகமெங்கும் அதிகாரத்தால் வேட்டையாடப்படும்  பெண்ணுடல்களின் ஒட்டுமொத்த அசரீரியாக ஒலித்தது. 2004-ம் ஆண்டில் மணிப்பூரில் தங்ஜம் மனோரமா ராணுவத்தால் மானபங்கப்படுத்தப்பட்டு, கொல்லப்பட்டபோது, தாய்மார்கள் ஒன்றுகூடி திரௌபதிகளாக மாறி நிர்வாணப் போராட்டம் நடத்தியபோது, மஹாஸ்வேதா தேவியின் வார்த்தைகளைத்தான் தங்கள் குரல் ஆயுதங்களாகவும்  கொடிகளாகவும் பயன்படுத்தினர் என்பதை நான் நினைவுறுத்தியபோது அவர் கண்கள் பனித்தன. “வேறெதற்காக எழுதுகிறோம்!?” என்று மெல்லிய ஆனால் தீர்க்கமான  குரலில் அவர் கேட்டபோது ஒரு செவ்வியல் ஓவியம்போல என் மனதில் ஆழப்பதிந்து விட்டார். தமிழில் நான் எழுதிவருகிறேன் என்றும், 1998-ம் ஆண்டில் ஒரு கல்லூரி மாணவியாக, இயக்குநர் கோவிந்த நிகலானியின் ‘ஹசார் சௌரசி கி மா’ திரைப்படத்தை ஒரு ஃபிலிம் சொஸைட்டி திரையிடலில் பார்த்த கணத்தில் இருந்து, அவரைப் பற்றிய தேடல்  தொடங்கியது என்றும் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டபோது, அவரின் கைகள் என்னைப் பற்றிக்கொண்டிருந்தன. “ஆங்கில மொழிபெயர்ப்பிருந்தால் உன் கவிதைகளை எனக்கு அனுப்பிவை” என்று ஒரு சீனியரின் அக்கறையோடு கேட்டபோதுதான், ஆதர்சங்களைச் சந்திக்கும் கனவொன்றின் வெளியில் சஞ்சரித்துக்கொண்டிருந்த நான் சகஜமாகி நிஜ உலகத்திற்குத் திரும்பினேன். வந்த வேலையைப் பற்றிய பிரக்ஞை தட்ட  படக்குழுவினரைத் தேடிய வேளை, அந்தி சாய்ந்து இரவு படரத் தொடங்கியிருந்தது. படப்பிடிப்பை அடுத்த நாள் வைத்துக் கொள்ள அனுமதி கேட்டபோதும் அவர் முகத்தில் அதே புன்னகை.

எழுத்து மட்டுமே ஒருவரை எழுத்தாளராக்கிவிட முடியாது என்ற என் நம்பிக்கையின் உயிர்வடிவம்  மஹாஸ்வேதா தேவி என்பதை அவரை வாசிக்கத்  தொடங்கிய காலத்தில் இருந்தே உணர்ந்திருக்கிறேன். வெறும் பிரசார எழுத்து, மானுடவியல் ஆய்வுக்குறிப்புகள் என்றெல்லாம் அவரின் எழுத்துகளை இலக்கியத்தில் இருந்து சதா வெளியே தள்ளிக்கொண்டிருந்த விமர்சனங்களும் வாசிக்கக் கிடைத்தன. ‘1084 இன் அம்மா’, ‘காட்டின் உரிமை’ இரண்டு நாவல்களும் சாகித்ய அகாடமியின் வெளியீடுகளாக சு.கிருஷ்ணமூர்த்தியின் மொழிபெயர்ப்பில் வந்திருந்தாலும், தமிழில் பொதுவாக வெளிவரும் இப்படியான மொழிபெயர்ப்பு நூல்களின் வாசிப்புத்தன்மைக்கு அஞ்சி,   ‘Breast Stories’, ‘Imaginary Maps’, ‘Old women’,  ‘Outcast’ போன்ற அவரின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களின் உதவியை  நாடினேன். எனக்கு மிகவும் பிடித்த இலக்கிய வகை (Genre) ஆவணப் புனைவு ( Docu-fiction) என்பதால், மஹாஸ்வேதா தேவி விரைவில் என் ஆதர்சமானார். கடுமையாகச் சுரண்டப்படுபவர்கள், தோல்வியை ஏற்க மறுப்பவர்கள் ,  அதிகாரம் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்த விளிம்புநிலை ஜீவன்கள்தான் மஹாஸ்வேதா தேவியின் நாயகர்கள். 100 நாவல்கள், 20 சிறுகதைத் தொகுதிகள் என மனுஷி காட்டுத்தனமாக  உழைத்திருப்பதைக் கண்டு மலைத்துப்போனேன். காதல் முறிவுகள், விவாகரத்து, போராட்ட வாழ்வின் தொய்வுகள், கைவிட்டுப்போன நட்புகள், தன் மகனுடனான சிக்கலான உறவு, அன்பின் போதாமைகள், தனிமை, விரக்தி என எல்லாவற்றையும் எழுதி எழுதியே கடந்தார். ஒவ்வொரு நாளும் ஒரு சத்திய வேட்கைபோல சராசரி 15 மணி நேரம் எழுதிய மஹாஸ்வேதா தேவி, “என்  எழுத்துக்களை நான்  நாள்தோறும் சந்தித்த எளிய மனிதர்களே எழுதினார்கள்” என்று சொல்வதின் மாண்புக்கு முன் அவருக்குத் தரப்பட்ட பத்ம, ஞானபீட, மகசேசே விருதுகளும், நோபல் பரிசுக்கான பரிந்துரையும் மிகச் சாதாரணமானவையே.

எழுத்துக்கும் வாழும் வாழ்க்கைக்கும் இடைவெளிவிடாத மஹாஸ்வேதா தேவி, காடுகளைக் கொன்று நாடாக்கும் வங்காள மார்க்சிய அரசாங்கத் திட்டங்களைக் கடுமையாக விமர்சித்தார். ஞானபீட விருது வாங்கிய கையோடு, அப்போது ஆந்திரச் சிறைகளில் தூக்குக்கயிற்றை எதிர்நோக்கியிருந்த மூன்றுபேருக்காக அவர் அளித்த கருணை மனு, ஜனாதிபதியால் பரிசீலிக்கப்பட்டது தனி வரலாறு. மத்தியப் பிரேதசம், பீகார், சட்டிஸ்கர், மேற்கு வங்காள மாநிலங்களின் புழுதியிலிருந்தும், நாட்டுப்புறக் கதைப்பாடல்களில் இருந்தும், தொன்மங்களில் இருந்தும், வாய்மொழி வரலாறுகளில் இருந்தும் தனது புனைவுகளை உருவாக்கிய மஹாஸ்வேதா தேவியின் களப்பணியும் ஆய்வுகளும் தனிமனித சக்திக்கு அப்பாற்பட்டவை. அதனால்தான் தன்னை சூனியக்காரியாக, மந்திரக்காரியாக விவரித்துக்கொண்டாரோ தெரியவில்லை. மஹாஸ்வேதா தேவி என்ற அன்பின் பெருங்கோபக் காளியின் ஆன்மா, எளிய மனிதர்களின் எளிய கனவுகளின் காவல் தெய்வம். அதற்கேது மரணம்?