மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பெரியாரின் பூதக்கண்ணாடி

பெரியாரின் பூதக்கண்ணாடி
பிரீமியம் ஸ்டோரி
News
பெரியாரின் பூதக்கண்ணாடி

பெரியாரின் பூதக்கண்ணாடி

பெரியாரின் பூதக்கண்ணாடி

குத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள், தமது 95-ம் வயதிலும் தனது சுற்றுப் பயணத்தையும், மக்களின் சிந்தனையைத் தூண்டும் உரைகளையும் நிறுத்தவே இல்லை.

1973, டிசம்பர் 19-ம் தேதி, சென்னை தியாகராயர் நகரில்தான் இறுதி முழக்கமிட்டார். அதன் பிறகு உடல் உபாதை ஏற்பட்டு, வேலூர் C.M.C. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி டிசம்பர் 24 காலை காலமானார்.

அவரது தொண்டு பற்றி அவர்களே கூறினார்கள்:

“ஈ.வெ. ராமசாமி என்கின்ற நான், திராவிட சமுதாயத்தைத் திருத்தி, உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப்போல், மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன். அத்தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக்கொண்டு தொண்டாற்றிவருகிறேன்”

என்று முழங்கிய அவருக்கு முதுமை தந்த இடையூறுகள் பலப்பல!

அதுபற்றி அவர்களேகூட பலமுறை எழுதியுள்ளார்கள். என்றாலும் அவரது முதுமைக்கேற்ற உடற்கூறுப்படி, ரத்தக் கொதிப்போ, சர்க்கரை நோயோ, நினைவாற்றல் இழப்போ இறுதி வரை அய்யா அவர்களுக்கு இருந்தது இல்லை. ஆனால், பற்பல நேரங்களில் விடாமல் பழைய புராணங்களின் பதிப்பு முதல், தமிழ் அகராதி வரை - அன்றாடச் செய்தித்தாள்கள் உட்பட - படிப்பதைத் தன்னுடைய முக்கிய பழக்கப் பணியாகவும், கடமையாகவும் கருதி வாழ்ந்தவர்.

தனது கண்வலி, ரத்தக் கொதிப்பு என்று அவர் எவற்றைக் கூறுகிறார்? சமுதாயத்தின் நோய்களையே தன் நோயாக்கிக்கொண்ட தன்னிகரற்ற தன்மானத் தலைவர் பெரியார். இதோ அவரே கூறுகிறார். கேளுங்கள்:

“தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிருகங்கள் போல் நடத்தப்படுகிற பாட்டாளி, கூலி, ஏழை மக்கள்தான் எனக்குக் கண்வலியாய் இருப்பவர்கள். அவர்களைச் சக மனிதர்களாக ஆக்குவதுதான் எனது கண்ணோய்க்குப் பரிகாரம்.”

(‘விடுதலை’ 15.10.1967)

“இவ்வளவு பாடுபட்டும் இன்னும் இந்தக் காலத்திலும் ‘பார்ப்பான்’ இருக்கிறான்; ‘சூத்திரன்’ இருக்கிறான்; ‘பறையன்’ இருக்கிறானே! உலகிலெல்லாம் மார்க்சிசம் பரவிய இந்தக் காலத்திலா, இத்தகைய பேதங்கள் இருப்பது?...

...தொழிலாளிக்கு அடி உதை. அதோடு மட்டுமா? தொழிலாளர் குடும்பப் பெண்கள் எத்தனை பேர்கள் கற்பழிக்கப்பட்டார்கள்! எத்தனை பெண்டுகளை மயிரைப் பிடித்து இழுத்துத் தெருவிலே கொண்டு வந்து, போட்டு அடித்தார்கள்! இவ்வளவு பாடுகள் படச் செய்தும் அவர்களது இழிவு நீங்கப்படவில்லை. குறைந்த கஷ்ட நஷ்டத்தில் அதிகப்படியான லாபத்தை யல்லவா பெற வேண்டும்! இதை நினைத்தால் எனக்கு மனம் பதறுகிறது. நம் மக்கள் இப்படி ஏமாற்றப்படுகிறார்களே என்கின்ற ஆத்திரத்தால் சில சமயங்களில் ரத்தக் கொதிப்பு ஏற்படுகிறது.”

பெரியாரின் பூதக்கண்ணாடி

- எஸ்.ஆர்.எம்.யூ. தொடக்க விழா (பொன்மலை 10.9.1952)உரையிலிருந்து.

இப்படி சமுதாயத்தை எக்ஸ்ரே நிபுணர் போல் எடுத்துக்காட்டி, எழுச்சி உரையும் ஆற்றிய, ஒப்பற்ற சமுதாய விஞ்ஞானியான தந்தை பெரியாருக்கு ஒரு பெரிய குறை; முதுமையில் சிறிய எழுத்துக்கள் கொண்ட பழைய நூல்களையும் ஆங்கிலச் செய்தித் தாள்களையும் படிக்கப் பார்வை சரியாக ஒத்துழைக்கவில்லையே என்று ஆதங்கம்.

சென்னை பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது,  அய்யாவைப் பல்வேறு துறையினரும் பரிசோதித்தார்கள். இறுதியாக தனது மனக்குறை - தொடர்ந்து படிக்க முடியாது ஏற்படும் நிலை பற்றிக் கூறியபோது, சென்னை அரசு கண் மருத்துவமனைத் தலைவராக அப்போது இருந்த பிரபல கண் மருத்துவர் டாக்டர் டி.டி.இராமலிங்கம் அவர்கள், தனது குழுவினருடன் பரிசோதனை செய்தார். பிறகு தந்தை பெரியார் அவர்களிடம் “அய்யாவிற்கு வயது 88 தாண்டிவிட்ட நிலையில், இதற்கு மேல் வேறு மருத்துவம் பெரும் அளவில் மாற்றத்தை ஏற்படுத்தாது; நீங்கள் படிப்பதை நிறுத்திவிட்டு, பக்கத்தில் யாரையாவது ஒருவரை வைத்துக்கொண்டு அவர் படிக்க நீங்கள் கேட்டுக்கொள்ளலாமே! அதுதான் சரியானதாக எனக்குப்படுகிறது” என்றார்.

“அப்படிங்களா, மிக்க நன்றி!” என்று கூறிவிட்டு, பிறகு நாங்கள் வேனில் மீண்டும் பொது மருத்துவமனை வார்டுக்குத் திரும்பும்போது, “ஏம்பா, இதைச் சொல்வதற்காகவா நாம் இவரிடம் சிகிச்சைக்குச் சென்றோம்?” என்றார் - சிரித்துக்கொண்டே நகைச்சுவையுணர்வுடன். பிறகு அவரே “ஏன் பெரிய பூதக்கண்ணாடி (Magnifying Glass  - Lens) கிடைத்தால் அதைப் பயன்படுத்திப் படிக்கலாமே. இங்கே விசாரித்துப் பாருங்கள்” என்றார். அதை சென்னையில் விசாரித்து வாங்கி வந்து அய்யாவிடம் கொடுத்ததும், அவர் அதைப் பயன்படுத்தி தினசரிகள், புத்தகங்களைப் படிப்பதை வழக்கமாக்கிக்கொண்டார்.

வேலூரில் பணியாற்றிய பிரபல டாக்டர் ஏ.சி.ஜான்சன் அவர்கள், தந்தை பெரியாரிடம் அளவு கடந்த பாசம் கொண்ட பிரபல எக்ஸ்ரே துறை (Radiology) நிபுணர்! தஞ்சை ஆபிரகாம் பண்டிதரின் வழிவந்தவர். 87 வயதில் இன்றும் அமெரிக்காவின் துல்சா மாநிலத்தில் வசித்துவருபவர். டாக்டர் ஜான்சன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பி அய்யாவையும் அம்மாவையும் சந்தித்தபோது, “இந்த ‘லென்ஸ்’ (பூதக்கண்ணாடி) மிகவும் அய்யாவுக்குப் பயன்படும்” என்று கூறி அளித்தார்கள்! அந்த மாதிரி பெரு ஆடிகளை பற்பலரும் அய்யாவிடம் பல்வேறு அளவுகளில் தந்தனர். 95 வயது வரை - கடைசி வரை படித்துக்கொண்டே இருந்தார்!

கடைசி வரை தானே கைப்பட அறிக்கைகளை எழுதும் பழக்கத்தைக் கைவிடவில்லை. சென்னையில் தங்கும்போது, ‘விடுதலை’ அச்சிடும் முன் படித்துத் திருத்தவும், ‘over’ எடுக்கவும் (இது அச்சு மொழி - நடுவில் இணைப்பது) அந்த லென்ஸை சரியான முறையில் பயன்படுத்தினார்!

அது இறுதி வரை கண்ணாடிக்குக் கூடுதலான ‘பெரு ஆடி’ (Magnify Lens) ஆகவும், புரையோடிய சமுதாயத்தின் கிருமிகளைக் கண்டறிந்து கூறிய ‘நுண் ஆடி’ (Microscope) ஆகவும் பயன்பட்டது!.

தமிழர்களுக்கு விழி திறந்த வித்தகரான சமுக விஞ்ஞானி, அதனை இறுதியாக விழி மூடும் வரை பயன்படுத்தியது அறிவியலில் அவருக்குள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்குத் தக்க சான்றாகும்.

பெரியார் புகைப்படம், நன்றி: ஈ.வெ.ரா.மோகன்