மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வாழும் கவி : ஞானக்கூத்தன் - சா.கந்தசாமி

வாழும் கவி : ஞானக்கூத்தன் - சா.கந்தசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
வாழும் கவி : ஞானக்கூத்தன் - சா.கந்தசாமி

வாழும் கவி : ஞானக்கூத்தன் - சா.கந்தசாமி

வாழும் கவி : ஞானக்கூத்தன் - சா.கந்தசாமி

ழுந்ததும் கனைத்தார்; மெல்ல
சொற்பொழிவாற்றலானார்;
வழுக்கையைச் சொறிந்தவாறு
‘வாழ்க நீ எம்மான்’ என்றார்;
மேசையின் விரிப்பைச் சுண்டி
‘வையத்து நாட்டில்’ என்றார்;
வேட்டியை இறுக்கிக்கொண்டு
‘விடுதலை தவறி’ என்றார்;
பெண்களை நோட்டம் விட்டு
‘பாழ்பட்டு நின்ற’ என்றார்


 - இப்படி நிகழ்கால அரசியல் மேடைகளின் அவலத்தைக் காட்சியாகப் புதுக்கவிதையில் சித்தரித்தவர், ராமாராவ் ரங்கநாதன் என்னும் ஞானக்கூத்தன்.

அவர் தாய்மொழி கன்னடம். ஆனால், தமிழ்ப் படித்து புதுக்கவிதைகள், கட்டுரைகள் எழுதியவர். சில சிறுகதைகள்கூட எழுதிப் பார்த்தார். விரைவிலேயே தனக்கான இலக்கியக்களம் புதுக்கவிதை என்பதை அறிந்துகொண்டு கவிதைகள் எழுதினார்.

புதுக்கவிதை என்பது இருண்மையைப் பற்றிப் பேசுவது, சமூக விமர்சனமானது, கேள்வி கேட்பது, சம்ஸ்கிருதச் சொற்கள் அதிகமாகக்கொண்டது, இலக்கணத்தைப் புறந்தள்ளியது என்றிருந்த காலத்தில், அது நவீனமானது; சமூகத்தின் சித்தரிப்பு; பேச்சுமொழியின் வனப்பும் வசீகரமும் கொண்டது; மரபின் தொடர்ச்சியில் புதுமைகொள்வது என்று எழுதியே நிலைநாட்டியவர் ஞானக்கூத்தன்.

ஞானக்கூத்தன், நாகை மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையில் காவிரியின் வடகரையில் பிறந்தார். நான் தென்கரைப் பிறப்பாளன். காவிரிக் கரையிலேயே சில கிலோ மீட்டர் நடந்தால், அவர் பிறந்த திருஇந்தளூர் வந்துவிடும். அவர் என்னைவிட இரண்டு வயது மூத்தவர். மாயூரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் படித்தார். அவரோடு படித்தவர்கள் கூத்துப்பட்டறை ந.முத்துசாமி, ஆன்மிகப் பேச்சாளரான வைத்தியநாதன் என்னும் புலவர் கீரன்.

பள்ளிப் பருவத்திலேயே அவருக்கு கலை, இலக்கிய ஈடுபாடு இருந்தது. விவசாயிகளின் போராட்டங்கள், கம்யூனிஸ்ட் - திராவிடக் கட்சிகளின் எழுச்சி, காங்கிரஸின் வீழ்ச்சி, ம.பொ.சி-யின் தமிழ் முழக்கம், மாநில சுய ஆட்சி, தமிழக எல்லைகளை மீட்டெடுத்தல் என்பனவற்றால் அரசியலில் அக்கறை கொண்டார்.

ஞானக்கூத்தன் பொதுப்பணித் துறையில் வேலைக்குச் சேர்ந்தார். சேப்பாக்கத்தில் அலுவலகம், திருவல்லிக்கேணியில் குடியிருப்பு. ம.பொ.சி., கவி கா.மு.ஷெரீப் உட்பட சிலரைப் பழக்கப்படுத்திக்கொண்டார். `செங்கோல்’ பத்திரிகைக்கு மரபுரீதியான கவிதைகளை  ‘அரங்கநாதன்’ என்ற பெயரில் எழுதிவந்தார்.

வாழும் கவி : ஞானக்கூத்தன் - சா.கந்தசாமி

நானும் எனது நண்பர் கிருஷ்ணமூர்த்தியும் அடிக்கடி செல்லும் நூலகங்களில் ஒன்றாக அண்ணா சாலையில் உள்ள மத்திய நூலகம் இருந்தது. நிறைய தமிழ், ஆங்கிலப் புத்தகங்கள் படித்தோம். நூலகத்திற்குப் புதிய கட்டடம் கட்டினார்கள். இலக்கியக் கூட்டங்கள், கருத்தரங்குகள் நடத்த நான்கு மணி நேரத்திற்கு இரண்டு ரூபாய் என்றார்கள். எங்களோடு `க்ரியா’ ராமகிருஷ்ணன், ம.இராஜாராம் என்ற எம்.ஐ.டி மாணவரும் சேர்ந்தனர். நாங்கள் நால்வரும் `இலக்கியச் சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, மாதம் இரண்டு கூட்டங்கள் நடத்தினோம்.

தமிழ்ப் பத்திரிகைகள், அவை வெளியிடும் சிறுகதைகள், நாவல்கள், வாசகர்களின் ரசனை, இலக்கிய அழகியல், படைப்பிலக்கியத்தில் இந்திய அளவில் தமிழின் இடம், விருதுகள், பரிசுகள், சாகித்ய அகாடமி செயற்பாடுகள், புதுக்கவிதை என்றால் என்ன? என்று பலவிதமான தலைப்புகளில் கூட்டங்கள் நடைபெற்றன. கூட்டத்தின் முதல் விதி, பேச்சைக் கட்டுரையாக எழுதிவந்து படிக்க வேண்டும். கூட்டத்தினர் கேள்வி கேட்டால், பதில் சொல்ல வேண்டும் என்பதுதான்.

பல பெரிய எழுத்தாளர்கள், விமர்சகர்கள் வேலை இருக்கிறது என்று ஒதுங்கிக்கொண்டார்கள். க.நா.சு., கு.அழகிரிசாமி, சி.சு.செல்லப்பா, சார்வாகன் - என்று சிலர் உற்சாகத்தோடு வந்து கலந்துகொண்டார்கள். ஆட்கள் கிடைக்காதபோது நாங்களே கட்டுரைகள் எழுதிப் படித்தோம். எங்களை `கலகக்காரர்கள், அராஜகவாதிகள், குறுக்கு வழியில் பெயரெடுக்கிறவர்கள்’ என்றார்கள் பிரபலமான எழுத்தாளர்கள். ஆனால், இலக்கியச் சங்கக் கூட்டங்களுக்கு இளைஞர்கள், புதிய எழுத்தாளர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. சிலர் எங்களோடு நெருக்கமானார்கள். அவர்களில் ஞானக்கூத்தனும், ஐராவதம் சாமிநாதனும் முக்கியமானவர்கள். ஞானக்கூத்தன் அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டார். மரபான கவிதைகள் எழுதுவதில் சலிப்புற்றுப் போய்விட்டார். ந.பிச்சமூர்த்தி, க.நா.சு.,  சி.சு.செல்லப்பா புதிர்க் கவிதைகளையும் - ஐரோப்பிய - அமெரிக்கப் புதுக்கவிதைகளையும், பழந்தமிழ்க் கவிதைகளையும் படித்துக்கொண்டு தன்னளவில் புதுக்கவிதைகள் எழுதினார்.

`எழுத்து’ - புதுக்கவிதைகளை வெளியிட்டு பிரசாரம் செய்துகொண்டிருந்தது. அதன் ஆசிரியரான சி.சு.செல்லப்பாவோடு நெருக்கமாக இருந்த ந.முத்துசாமி, ஞானக்கூத்தனின் சில கவிதைகளைக் கொண்டுபோய் கொடுத்தார். செல்லப்பா ஏற்படுத்தி வைத்திருந்த புதுக்கவிதை மரபோடு ஞானக்கூத்தன் கவிதைகள் சேர்ந்து போகவில்லை. எனவே, ‘எழுத்து’வில் அவை பிரசுரிக்கப்படவில்லை. `புதுக்குரல்’ என்ற பெயரில் சி.சு. செல்லப்பா தொகுத்த தமிழ்ப் புதுக்கவிதைத் தொகுப்பிலும் ஞானக்கூத்தன் இடம்பெறவில்லை. அதற்கு அவர் சொன்ன காரணம், ‘எழுத்துக்கு வெளியில் இருந்து நான் எதையும் தேடி எடுக்கவில்லை’ என்பது.

சி.சு.செல்லப்பாவோடு நெருக்கமாக இருந்த ந.முத்துசாமி, சி.மணி ஆகியோர் அவரிடம் முரண்பட்டு வெளியில் வந்தார்கள். `எழுத்து’வைவிட தரமான, மேலான சிற்றிதழ் என்று சொல்லிக்கொண்டு ‘நடை’ ஆரம்பித்தார்கள். `நடை’யின் முதல் இதழில் செல்லப்பா வெளியிட மறுத்த ஞானக்கூத்தனின் புதுக்கவிதைகள் வெளிவந்தன. கருத்தாலும், சொல்லும் பாங்காலும், மொழி வளத்தாலும், சந்தத்தாலும் அந்தக் கவிதைகள் மிகுந்த கவனம் பெற்றன.

இலக்கியக் கூட்டங்கள் நடத்திவந்த நாங்கள், ஒரு படி முன்னே போக வேண்டுமென்று 1968-ம் ஆண்டில் `கோணங்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்பைக் கொண்டுவந்தோம். என்னோடு நா.கிருஷ்ணமூர்த்தி, `க்ரியா’ ராமகிருஷ்ணன், ம.இராஜராம் எழுதிய புதுக்கதைகள் இடம்பெற்றன. ஆளுக்கு மூன்று கதைகள் என்று 12 கதைகள். பத்திரிகைகளில் வெளிவராத கதைகள் என்பது மட்டுமல்ல - வெளிவர முடியாத சிறுகதைகள். அதற்கு ஐராவதம் சாமிநாதன் முன்னுரை எழுதினார். அதன் வெளியீட்டில் ஞானக்கூத்தன் முக்கியமான பங்காற்றினார். தமிழ்ச் சிறுகதைகளில் ஏற்பட்டிருந்த தேக்கத்தை உடைத்து அதனை ‘கோணங்கள்’ முன்னெடுத்துச் சென்றது என்று க.நா.சுப்ரமணியம் ‘தாட்’ என்ற ஆங்கிலப் பத்திரிகையில் எழுதினார்.

தமிழ்ச் சிற்றிதழ்களில் நீண்ட காலம் வெளிவந்த சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’ நின்றுபோனது. அதைத் தொடர்ந்து அவரது சீடர்கள் எதிர்க்குரலாக நடத்திய ‘நடை’யும் நின்றுவிட்டது. இலக்கியத்தில் புதுமை காண வேண்டுமென்று கனவு கொண்டவர்களுக்கு அசலான சிற்றிதழ் ஒன்றும் இல்லை.

வாழும் கவி : ஞானக்கூத்தன் - சா.கந்தசாமி

திருவல்லிக்கேணி தோப்பு வெங்கடாசலம் தெருவில் ஞானக்கூத்தன் ஓர் அறையில் தங்கி இருந்தார். அந்த அறையில் கட்டில், நாற்காலி, மேசை ஒன்றும் கிடையாது. சிமென்ட் தரையில் உட்கார்ந்துகொண்டு, சுவரில் சாய்ந்தபடி கதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதிவந்து படித்து விமர்சனங்கள் செய்துகொண்டு இருந்தோம். எல்லோரும் இளைஞர்கள். குடும்பப் பொறுப்பு அதிகம் இல்லை. பலருக்குத் திருமணம்கூட ஆகவில்லை. எனவே, இலக்கியப் பேச்சு, அதனைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவருவது என்று இடைவிடாமல் பேசிக்கொண்டிருந்தோம். அசோகமித்திரன், கி.அ.சச்சிதானந்தம், ந.முத்துசாமி என்று பலரும் சேர்ந்து பெரும் கூட்டமாக இருந்தோம்.

ஒருநாள் இலக்கியப் பேச்சுக்கு நடுவில், `நமக்கான சிற்றிதழ் ஒன்றை நாம் ஆரம்பித்தால் என்ன? அது நம் குரலாக இருக்கும்’ என்றார் ஞானக்கூத்தன். எல்லோர்க்கும் அது சரியான யோசனையாகவும், செய்யவேண்டிய காரியம் என்றும் பட்டது. என்ன பெயர் வைப்பது என்ற கேள்வி வந்தது. ஒரு நண்பர், `துடப்பம்’ என்று பெயர் வைக்கலாம். அது சுத்தம் செய்வது மட்டுமல்ல - மூஞ்சியில் அடித்து சுரணை ஏற்படுத்துவது. துடப்பம் என்றதுமே சிலர் மூஞ்சியை சுளித்துக்கொள்வார்கள். நம் சிற்றிதழுக்கு துடப்பத்தைத் தவிர நல்ல பெயர் வைக்க முடியாது’ என்றார்.

சிற்றிதழுக்கான பெயர் பற்றி நீண்ட விவாதம் நடைபெற்றது. `நம் நோக்கம் இன்னொருவரை அடித்து அவமானப் படுத்துவது இல்லை. நல்ல தரமான இலக்கியத்தைப் படைத்துக் கொடுப்பதும், அதனைப் பரவலாக்குவதும்தான். ஆகையால், நம் கோட்பாடுகளுக்கு ஏற்ப வல்லின எழுத்துக்களான ‘கசடதபற’ என்பதையே பெயராக வைக்கலாம். குறியீட்டுத்தன்மை புரிந்துகொள்ளப்படும். புரியாவிட்டாலும் புதுமையாக இருக்கிறது என்று கொண்டாடப்படும்’ என்று ஞானக்கூத்தன் நீண்ட விளக்கம் அளித்தார்.

`கசடதபற’ என்பது எங்கள் சிற்றிதழ் பெயராகியது. ஆசிரியர் நா.கிருஷ்ணமூர்த்தி. ஓவியர் ஆதிமூலம், பண்டைய வட்டெழுத்தின் மரபில் பெயரை எழுதிக் கொடுத்தார். இலட்சினை, ஐயனார் நவீனமாகக் கையில்பிடித்த வாளும், கேடயத்தோடும், மூடாத  பெரிய விழிகளோடும் அருள்பாலித்துக்கொண்டிருந்தார். 1970-ம் ஆண்டில் அக்டோபரில் `கசடதபற’ முதல் இதழ் வெளிவந்தது. மாத இதழ் விலை 30 காசுகள். சென்னை நகரம் முழுவதும் ஐயனார் படம் கொண்ட பேனர் கட்டப்பட்டது.

`கசடதபற’ முதல் இதழில் ஞானக்கூத்தனின்,  ‘தமிழை எங்க நிறுத்தலாம்’ என்ற புதுக்கவிதை வெளிவந்தது. அது சமகாலப் பிரச்னையைப் பேசும் கவிதை. அதன் காரணமாகவே அதிகமாக விமர்சிக்கப்பட்டது. பேச்சுத் தமிழின் சந்தம் கொண்ட அந்தக் கவிதை இப்படியாக முடிவடைகிறது.

நம்
கையிலும் ரெண்டு காசுகளுண்டு
இனி
தமிழை எங்கே நிறுத்தலாம்?


1973-ம் ஆண்டில் ஞானக்கூத்தனுக்குத் திருமணம் நிச்சயமானது. அவர் திருமணத்திற்கு என்ன பரிசு கொடுப்பது என்று யோசிக்கப்பட்டது. `க்ரியா’ ராமகிருஷ்ணன், `அவருக்குக் கவிதைத் தொகுப்பு எதுவும் இதுவரையில் வெளிவரவில்லை. அவர் கவிதைத் தொகுப்பொன்றை அவரைவிட்டே தேர்ந்தெடுக்கச் சொல்லி புத்தகமாகப் போட்டு பரிசாக வழங்கலாம்’ என்றார்.

`அன்று வேறு கிழமை’ என்ற பெயரில் ஞானக்கூத்தனின் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்தது. தலைப்பு `கசடதபற’வில் வெளிவந்த ஒரு கவிதையினுடையது. புத்தகம் சதுர வடிவில் ஆதிமூலத்தின் முகப்புச் சித்திரத்தோடு ஆர்.பி.பாஸ்கரன், தட்சிணாமூர்த்தி, வரதராஜன், கிருஷ்ணமூர்த்தி கோட்டோவியங்களோடு வெளிவந்தது. `க்ரியா’ ராமகிருஷ்ணன் அதிகமான சிரத்தை எடுத்துக்கொண்டு தயாரிப்பில் ஈடுபட்டார். அவர் ஒரு விளம்பர நிறுவனத்தில் பணியாற்றினார். அது கவிதைப் புத்தகத் தயாரிப்பை நேர்த்தியாக்கியது. தமிழ்ப் புத்தக வடிவமைப்பில் ‘அன்று வேறு கிழமை’ ஒரு மைல் கல். கவிதைகளுக்காகவும் தயாரிப்புக்காகவும் அதிகமாகக் கொண்டாடப்பட்டது. ஆனால், சி.சு.செல்லப்பா, தர்முசிவராம், வெங்கட்சாமிநாதனுக்கு `அன்று வேறு கிழமை’ பிடிக்கவே இல்லை. `ஞானக்கூத்தன் ஒரு கவிஞரே இல்லை’ என்று வெங்கட்சாமிநாதன் எழுதி வந்தார்.

வாழும் கவி : ஞானக்கூத்தன் - சா.கந்தசாமி

`கசடதபற’வில் கவிதைகள் வெளிவந்த காலத்திலேயே ஞானக்கூத்தன் கவனிப்புக்கு உரிய புதுக்கவிஞராகிவிட்டார். அவர் கவிதைகளில் காணப்படும் அங்கதமும், பேச்சுமொழியின் லாகவமும், சமூகத்தைத் தனித்தன்மை மிளிர சித்தரிக்கும் விதமும் வாசகர்களைக் கவர்ந்ததுபோல, புதிதாக எழுதவந்த இளம் கவிஞர்களையும் கவர்ந்தது. பலரும் அவரைத் தேடிவந்து தங்கள் கவிதைகளைப் படித்துக் காட்டினார்கள். அவரிடம் ஆலோசனை கேட்டார்கள். அவர் விரும்பினார் என்று சொல்ல முடியாவிட்டாலும் சிலர் சீடர்களானார்கள். அவர்களில் பெரிய சீடர் பாலகுமாரன். முதலில் அவர் புதுக்கவிதைகள்தான் எழுதிக் கொண்டிருந்தார். ஞானக்கூத்தனோடு உரையாடித்தான் தான் ஓர் உரைநடை ஆசிரியன் என்பதைக் கண்டுபிடித்து கதைகள் எழுத ஆரம்பித்தார். கதைகள் எழுதினாலும் அவர் ஞானக்கூத்தனின் அருமை சீடர்தான். மற்றவர்கள் ஆத்மாநாம், ஆர்.ராஜகோபாலன், ஆனந்த் என்று சில பெயர்களைச் சொல்லலாம். அதோடு அவருக்கு உலகம் முழுவதிலும் தமிழ் பேசும், எழுதும் பல சீடர்கள் இருக்கிறார்கள்.

ஞானக்கூத்தன் பேரிலக்கியத்தில் பெரும் ஆர்வம்கொண்டிருந்தார். காப்பியம் படைக்க வேண்டும் என்பது அவர் கனவாக இருந்தது. வாழ, பொருளீட்ட அரசு வேலையில் இருந்தார். அவரின் 30 ஆண்டுகால அரசுப் பணியில் பல ஆண்டுகள் சம்பளம் இல்லாமல் கழிந்தன. அவர் வெகுமதி வாங்கவில்லை. ஆனால், நிறைய மெமோக்கள் வாங்கி இருக்கிறார். வேலை தெரியாததற்கோ, வேலை செய்யாததற்கோ அல்ல, வேலைக்கு வராமல் இருந்ததற்காக. படிப்பு, எழுத்து என்பதே அவர் வாழ்க்கையாக இருந்தது. இளம் பருவத்தில் ஏற்பட்ட தமிழ் அபிமானிகள், திராவிட இயக்கத்தினர் மீதான எதிர்ப்பு கடைக்காலம் வரையில் அவரிடம் இருந்தது.

ஆழ்ந்தப் புலமையும் கவிமனமும் கொண்டிருந்தவர்.  படைப்பு இலக்கியத்திற்குப் படிப்பு பகை என்பதைப் புறந்தள்ளி நவீனக் கவிதைகள் எழுதியவர். பழமை என்பது எத்தனைதான் சிறப்பானது என்றாலும் புதுமை இல்லாமல் அது முழுமை பெறுவது இல்லை. அதாவது புதுமையாலேயே பழைய மரபுகளின் சிறப்புக்கள் மீட்டெடுக்கப்படுகின்றன என்பது அவர் கருத்தாக இருந்தது. ஒவ்வொரு காலத்திலும் நான்கைந்து சிறப்பான கவிஞர்கள், எழுத்தாளர்கள் தனித்தன்மை மிளிர எழுதி, தங்கள் மொழியை உயிர்ப்பித்துவிடுகிறார்கள் என்று சொல்லப்படுவதில் ஞானக்கூத்தன் சேர்ந்துவிடுகிறார்.

புகைப்படங்கள்: நன்றி : www.gnanakoothan.com