மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சாளரத்தை திறந்து வைத்தவர்களை வீடுகள் மறப்பதில்லை - மாரி செல்வராஜ்

சாளரத்தை திறந்து வைத்தவர்களை வீடுகள் மறப்பதில்லை - மாரி செல்வராஜ்
பிரீமியம் ஸ்டோரி
News
சாளரத்தை திறந்து வைத்தவர்களை வீடுகள் மறப்பதில்லை - மாரி செல்வராஜ்

ஓவியம் : பிரேம் டாவின்ஸி

சாளரத்தை திறந்து வைத்தவர்களை வீடுகள் மறப்பதில்லை - மாரி செல்வராஜ்

ஜூலை 1-ம் தேதி என் திருமண அழைப்பிதழைக் கொடுக்கப் போயிருந்தேன். எப்போதும் புத்தகங்களுக்கு நடுவில் அமர்ந்திருக்கும் முத்துக்குமார் அண்ணன், அன்று புத்தகங்களுக்கு நடுவே படுத்திருந்ததைப் பார்த்து, ஒரு மாதிரியாக என்னவோ போலிருந்தது.

“உடம்பு சரியில்லை மாரி... அதனால கல்யாணத்துக்கு வர முடியாதுன்னு நினைக்கிறேன். திருமணம் முடிஞ்சதும் திவ்யாவை ஒருநாள் வீட்டுக்குக் கூட்டிட்டு வா, சரியா..?’’

‘‘சரிண்ணா... நீங்க முதல்ல உடம்ப நல்லா பார்த்துக்கோங்க.’’

‘‘ஆமா மாரி. நாமதான் நம்ம உடம்பப் பாத்துக்கணும். நம்மள மாதிரி ஆளுங்க எல்லாம் உடம்பை தனியா, மனசை தனியா பிரிச்சு வெச்சிருக்கோம். நம்ம மனசு வேலை செஞ்சுகிட்டே இருக்கிறத நம்பி, நம்ம உடம்பும் ஆரோக்கியமா இருக்கிறதா நம்பி... ஓடிட்டே இருக்கோம். இப்போகூட பாரு... எனக்கு உடம்பு சரியில்லைனு டாக்டர் எல்லாரும் சொல்றாங்க. ஆனா, இந்த ரெண்டு நாள்ல எட்டு பாட்டு உள்ளேயே எழுதி, உள்ளேயே பத்திரமா வெச்சிருக்கேன். சீக்கிரமா வந்து ராமசுப்புவை வாங்கிட்டுப் போகச் சொல்லு.”

 - இதுதான் அந்தக் கவிஞன் என்னிடம் பேசிய கடைசிச் சொற்கள்.

‘கவிஞர், பாடலாசிரியர் நா. முத்துகுமார் மரணம்’ என்ற செய்தியை, ஊடகங்கள் அவசர அவசரமாக ஒளிபரப்பத் துணிந்தாலும் அரை நாளாக அதை உண்மையென்று யார்தான் நம்பினார்கள்?.

‘வாய்க்காலில் உள்ள எறும்புகள்

வீடு போய்ச் சேரட்டும்

பம்புசெட்டை நிறுத்துங்கள்’

என்று எழுதிவிட்டுக் காத்திருந்த கவிஞன் எப்படி அவ்வளவு அவசரமாய் தன் கிராமத்தைவிட்டு, நகரத்தைவிட்டு, மாநகரத்தைவிட்டுக் கிளம்பிப்போவான் என்று எலலோரும்தான் குழம்பிப் போனார்கள். அன்றைக்கு இரவே சென்னையிலிருந்து பறக்கைக்கு ரயிலேறிச் செல்வதற்கு முன் அழைத்த இயக்குநர்  - நடிகர் அழகம்பெருமாள் சாரும் இதைத்தான் சொன்னார்.

“எப்பா... இந்தப் பய செத்துட்டான்னு சொன்னா, ரயில்வே ஸ்டேஷன்ல பொட்டி தூக்குறவன்ல இருந்து இங்க பறக்கையில வேலை பாக்கிற கொத்தனார் வரைக்கும் ஒரு பயலும் நம்ப மாட்டேங்குறானுவ…அப்போ நான் மட்டும் எப்படிப்பா நம்பி அவனை போய்ப் பார்த்து அழுதுட்டுவந்தேன் ச்சேய்” என்று குமுறியதற்கு அவரிடம் வலுவான காரணம் இருந்தது.

“மெட்ராஸ் டாக்கீஸுக்கு நான் ‘டும் டும் டும்’ பண்றேன். எல்லாரும் பெரிய ஆட்களை எழுதவைப்போம்னு சொல்றாங்க…பட்டாம்பூச்சி விற்பவனைப் படிச்ச நான் மட்டும் ‘இந்தப் பையன் எழுதட்டும்’னு சொல்றேன். ‘சுற்றும் பூமி சுற்றும் அதன் சக்கரம் தேய்ந்துவிடாது’ன்னு எழுதிக் கொடுத்தான். மணிசார் கிட்ட கொண்டுபோய் நீட்டினேன். எல்லா பாட்டும் இந்தப் பையன் எழுதட்டும்னார். அப்புறம் எழுதிக் கொடுத்தாம் பாரு,

‘உன் பேரைச் சொன்னாலே

உள் நாக்கில் தித்திக்குதே’ன்னு நிஜமாவே தமிழ் சினிமாவுக்கு அவன் ஒரு தேன் சொட்டுடா தம்பி.”

அழகம்பெருமாள் சார் சொன்ன, ‘‘அவன் ஒரு தேன் சொட்டுடா தம்பி” என்ற இந்த வார்த்தையில் நின்றுகொண்டுதான் இனி இந்தக் கட்டுரையைத் தொடரப்போகிறேன்.

நா.முத்துக்குமார் அண்ணனை மூன்று விதமாக எனக்குத் தெரியும்; எனக்குப் புரியும்.

நானே தெரிந்துகொண்ட முத்துகுமார்; என் இயக்குநர் காட்டிய முத்துகுமார்; அப்புறம் ஓர் உதவி இயக்குநராக நான் நம்பிக்கொண்டிருந்த முத்துக்குமார் என மூன்று நிலைகளில் அவரை உணர்ந்து என்னால் கொண்டாட முடியும்.

முதல் நிலை. காற்றோடு காது வழி  வந்த முத்துக்குமார்.

 நா.முத்துக்குமாரை நான் அண்ணன் என்று அறிந்துகொள்ளாத காலம் ஒன்றிருந்தது. அது என் பள்ளி, கல்லூரிக் காலம். அந்தக் காலத்தில் நாங்கள் கேட்ட திரைப்படப் பாடல்களின் வழி  ஒரு கோடாங்கியாக வந்து சேர்ந்தவர்தான் நா.முத்துக்குமார்.

‘ஒரு வண்ணத்துப் பூச்சி எந்தன் வழி தேடி வந்ததே

அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளதே’

என்று மிகத் துல்லியமாய் தனக்குக் கிடைத்த உடுக்கைகளின் வழி எங்கள் உள்ளங்கைகளைப் பார்த்துக் குறி சொல்லக் கூடியவனாக இருந்தார். முதல் காதல் கடிதங்களில் என்ன எழுதலாம் என்றிருந்தவர்களுக்கு, ‘இந்தா எழுது’ என்று அவர் கொடுத்த வரிகள்தான் அத்தனையும்.

‘பூவின் முகவரி காற்று அறியுமேஎன்னை உன் மனம் அறியாதா’

என்று மட்டும் ஒரு காகிதத்தில் எழுதி, அவள் நடக்கிற பாதையில் கசக்கிப் போட்டுச் சென்ற எத்தனையோ காதலன்களை எனக்குத் தெரியும். குனிந்து அவள் அதை எடுத்தால், பிரித்து அவள் அதைப் படித்தும்விட்டால்... மறுநாள்,

‘ஒரு பார்வை பார்த்து நீ நின்றால்

சிறு பூவாக நான் மலர்வேனே’

என்று எழுதச் சொல்லி, அக்காதலனை இன்னும் உயரப் பறக்கவைத்தவர் முத்துக்குமார். இந்தக் கட்டுரைக்காக நிறைய பேரை அழைத்தேன். அவரவர் அவரவர்களுக்காக முத்துக்குமார் எழுதிய பாடலைப் பாடிக் காட்டினார்கள்.

‘வெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடி,

வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே’- பாடலை இயக்குநர் அண்ணன் பா.இரஞ்சித் பாட்டாகவே பாடிக்காட்டியபோது, அவ்வளவு இருட்டிலும் என் கண்ணுக்கு முன் பளிச்சென்று அடித்த பால்ய வெயிலின் முகம்,

‘பறவையே எங்கு இருக்கிறாய், பறக்கவே என்னை

அழைக்கிறாய், தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே’


என்று ஜெயராணி அக்கா பாடிக் கரைந்தபோது, உடனே வந்து சிறகுகளை விரித்த ஒரு நேசப்பறவையின் முகம்,

‘ஒரு நாளில் வாழ்க்கை இங்கு எங்கும் ஓடிப் போகாது, மறுநாளும் வந்துவிட்டால், துன்பம் நீங்கும் தொடராது’ என்று கவிஞர் கு.உமாதேவி முணுமுணுத்து மௌனித்தபோது, என் அறைக்குள் வந்தமர்ந்த புத்தரின் சிரித்த முகம்,

 ‘மின்சாரக் கம்பிகள் மீது மைனாக்கள் கூடு கட்டும், நம் காதல் தடைகளைத் தாண்டும்’ என்று படப்பிடிப்புத் தளத்திலிருந்து தேனி ஈஸ்வர் சார் பாடத் தொடங்கும்போதே இதயத்திலிருந்து கசியத் தொடங்கிய இழந்த காதலியின் முகம்,

‘கற்றது தமிழை’ தொலைக்காட்சியில் போடும்போதெல்லாம் அலைபேசியில் அழைத்து நண்பன் அகரமுதல்வன் உரக்கப் பாடும்,

சாளரத்தை திறந்து வைத்தவர்களை வீடுகள் மறப்பதில்லை - மாரி செல்வராஜ்

‘தமிழனுக்கு இனி ரோசம் வேண்டுமே

எச்சில் இதயம் மாற வேண்டுமே

அடடா இது நடக்குமா

என் பூமி எனக்குக் கிடைக்குமா

அதுவரை நெஞ்சு பொறுக்குமா

என் தொன்மத் தமிழினம் பிழைக்குமா’ 
என்ற யுத்த வரிகளில் கம்பீரமாய் வந்தமரும் ஒரு தலைவனின் முகம்,

‘பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன். புயல் அடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்’  என்று சொர்ணா மினுங்கிப் பாடுகிறபோதெல்லாம் குளிர்ந்து தெரிகிற ஒரு தேவதையின் முகம்,

‘ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய் என்றே வாழ்கிறேன்’ என்று எத்திசையிலிருந்து ஒலித்தாலும் எவ்வளவு ஓட்டத்தில் அதைக் கேட்டாலும் வழிகிற கண்ணீரில் வந்து விழுகிற அக்கா உச்சினியின் முகம்,

‘ஆயிரம் அருவியாய் அன்பிலே நனைக்கிறாய். மேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைகிறாய்’ என்ற வரிகளைக் கேட்கும்போது, திவ்யா காட்டும் முகக் கோணலில் உடனே நின்று பெய்கிற இரவு மழையின் முகம்,

இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ முகங்களைத் தன் பாடல்களில் கொண்டுவந்து இளைப்பாறவிட்டதன் பிரியத்தை நா.முத்துக்குமார் என்ற கலைஞன் தமிழ்ச் சமூகத்தின் மீது வைத்திருந்த நிச்சயமான பேரன்பு என்பதைத் தவிர வேற என்னவாக இருக்க முடியும்?.

‘நா.முத்துகுமார் தன் வரிகளில் நவீனக் கவிதைப் படிமங்களையும், ஜென் தத்துவங்கள் பலவற்றையும் வெகு அழகாகத் தன் திரை இசைப்பாடல்களின் வழியாகக் கொண்டுவந்தவர்’ என்று நிறையப்பேர் எழுதிய அஞ்சலிக் குறிப்புகளில் வாசித்திருக்கிறேன். எனக்கு அதெல்லாம் தெரியாது. நானொரு படிம சூன்யம். என்னைப் பொறுத்தவரை எளிய மனிதர்களின் பிரியத்தை, காதலை, விருப்பத்தை, இயலாமையை, வறுமையை, உக்கிரத்தை, கனவை, குரலை, தனிமையை, ஒளியை எல்லாம் ஒரு பட்டாம்பூச்சியின்  எடையற்ற பறத்தலின் வழியாக, எல்லோருக்குள்ளும் கொண்டுபோய் சேர்த்து, அதன் மிதமான சூட்டில் தனக்கென சிறுபறவையின் கூட்டையும் கட்டிக்கொண்டவர் நா.முத்துக்குமார். இப்படி பாடல்களின் வழி பட்டென்று பிடித்துப்போய்விட்ட முத்துக்குமார் அண்ணனை, கவிதைகளின் வழி நான் சென்றடைய எனக்கு சில காலம் ஆனது.

‘புறாக்கள் வளர்க்கும் எதிர்வீட்டுக்காரர்

எங்களிடமிருந்து பறிக்கிறார்

பூனை வளர்க்கும் சுதந்திரத்தை’


இந்தக் கவிதையை நான் தாகூருடையது என்றுதான் நினைத்திருந்தேன். என் இயக்குநர் என் தலையில் கொட்டி, ‘இது நா.முத்துக்குமாருடையது’ என்று சொன்ன ஒரு நாளில்தான் அண்ணனுடைய கவிதைகளின் தடங்களில் நடக்கத் தொடங்கினேன் நான்.

‘‘நா.முத்துக்குமார் ஒருவேளை அவருடைய சினிமா பாடல்களுக்காகவே நினைக்கப்படுவார். இலக்கியத்தில் அவர் எண்ணிய எதையும் எழுத நேரவில்லை. அதற்கான மொழியை அமைத்துக்கொள்ள அவருக்குக் கூடவில்லை” என்று எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய அஞ்சலிக் குறிப்பில் எழுதியிருப்பதை வாசித்தேன். இது அவருடைய பேரறிவின் கருத்தாக இருக்கலாம். ஆனால், என்னைப் போன்ற எளியவர்களின் கருத்து என்னவெனில், நா.முத்துகுமார் அவர் எண்ணிய எளியவை எல்லாவற்றையுமே எழுதினார். எளியவற்றை எழுதக்கூடிய மொழியையே தன் விரல்களில் விரும்பி சேகரித்து வைத்துக்கொண்டார் என்பதுதான். இப்படியொரு பிடித்தமான நம்பிக்கையின் வழிதான்,

‘நேற்று பெய்த மழையில்

அசைந்து அசைந்து சென்ற

காகிதக் கப்பலில்

கனவுகளின் பெட்டியை

இறக்கிவைத்தேன்

ஆழ்இருள் பள்ளத்தில்

அமிழ்ந்துபோனது

பின்புக்கும் பின்பு

மழை என்னிடம் சொன்னது

மழையை

மழையாக இருக்கவிடு

உன் எதிர்பார்ப்புகளின்

சுமையை

அதற்குள் இறக்கி

வைக்காதே’


இந்த எளிய கவிதையை எனக்குப் போதுமானதாக நான் பத்திரப்படுத்தி வைத்துள்ளேன். என்னைப்போல இன்னும் நிறைய எளிய மனம் படைத்தவர்களும் நிச்சயம் வைத்திருப்பார்கள்.

‘இறந்துபோனதை

அறிந்த பிறகுதான்

இறக்க வேண்டும் நான்’
என்று எழுதி, தன் கையிலே வைத்துக்கொண்ட கவிஞனா தான் எண்ணியவற்றையெல்லாம் எழுதாமல் விட்டிருப்பான்? ஆபாசத்தைப் பரப்பவில்லை. பட்டொளி வீசிப் பறக்கும் அதிகார வர்க்கத்தின் கொடிகளைத் தன் வரிகளில் வாங்கிக்கொண்டது இல்லை. அவசியமற்றவற்றைத் தூசி தட்டித் துடைத்து எழுதியது இல்லை. தன் ஆன்மாவிற்கு மீறி ஒரு குண்டூசியின் எடையைக்கூட தன் புத்தியில் சேர்த்துவைத்துக்கொள்ளவில்லை.ஒரு கவிஞனை, ஓர் எழுத்தாளனை அவன் சென்ற பின் நினைத்துக்கொள்வதற்கு, கொண்டாடுவதற்கு அவன் கொண்டுவந்து கொட்டியவற்றின் கனம் அவசியம் இல்லை. நமக்குள் அவன் திறந்துவைத்த நினைவின் சாளரம் போதும். நா.முத்துக்குமார் திறந்து வைத்த சாளரங்கள் எண்ணற்றவை..

கிராமம், நகரம், மாநகரம் என்ற கட்டுரைத் தொகுப்பில் முத்துக்குமார் அண்ணன் எழுதியிருப்பார். ‘குழந்தைகள் ஒரு சக பயணியை இழக்கின்றன. பால்யம் தன் முதல் மரணத்தை அறிமுகப்படுத்துகிறது’ என்று. நிச்சயமாக இவ்வரிகள் அவரின் ஊர்வலத்தில் கூடிய உதவி இயக்குநர்களின் கூட்டத்திற்கு மட்டுமானதாக உரிமையோடு நான் எடுத்துக்கொள்கிறேன். ஆமாம்,

‘கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்

இளைப்பாற மரங்கள் இல்லை

கலங்காமலே கண்டம் தாண்டுமே’
என்று எழுதிய நா.முத்துக்குமாரை எல்லா உதவி இயக்குநர்களுக்கும் அவ்வளவு பிடிக்கும். எனக்குத் தெரிந்து, வாய்ப்பு கிடைப்பதற்கு  முன்பே உதவி இயக்குநர்கள் தனது  ஆசைக்காக உருவாக்கிக்கொள்ளும் முதல் விளம்பர வடிவமைப்பில், பாடலாசிரியர் இடத்தில் நா.முத்துக்குமார் பெயர்தான் இருக்கும்.

‘காற்றில் கனிகள் விழுந்திடும் வரைக்கும்

காத்திருக்காதே! கல்லடி கிடைக்கும்’
என்று எழுதிய ஒரு கவிஞனின் பெயரை மரத்தில் எழுதிக்கொள்ள அம்மரத்தின் காய்கள் யாரிடம் அனுமதி கேட்கவேண்டும்?.

யுகபாரதி அண்ணன்தான் அடிக்கடி சொல்வார், ‘‘பறவைகள் மீது அவனுக்கு தீராக் காதல். பறந்துகொண்டேயிருப்பது அவனுக்கு பிடிக்கும். வலிய சிறகை விரித்து பறக்க நினைப்பவர்களையும் அவனுக்கு ரொம்பப் பிடிக்கும்!”.

நா.முத்துக்குமார் எப்படி இறந்தார், ஏன் இறந்தார், அவரின் இறப்பு சொல்லும் பெரும் செய்தி என்ன என பல தலைப்புகளில் பட்டிமன்றங்கள் அவர் இறந்த அடுத்த நொடியிலே தொடங்கிவிட்டதின் பதற்றத்தை, அது தந்த வேதனையை, அவரோடு இருந்த யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காரணம், அப்படிப் பட்டவர்களுக்காகத்தான்,

‘போகின்ற பாதைகள்

பலரும் போனது

புதிதாகப் பிறந்திட

நான் புத்தனில்லை வழிவிடு’
என்று அக்கவிஞனே எழுதிச் சென்றிருக்கிறான். முத்துக்குமார் அண்ணனுக்கு மிகவும் பிடித்த வண்ணதாசன் சாரை அழைத்தேன். ஒடுங்கிப்போன குரலில் பேசினார் வண்ணதாசன்.

 “ஜூலை 12 பிறந்தநாளுக்குக் கூப்பிட்டிருந்தான். ‘இன்னைக்கு என் பிறந்தநாள் சார். அதுதான் உங்க குரலைக் கேட்கலாம்னு கூப்பிட்டேன்’ என்றான். ஒருவரைக் கூப்பிட்டு அவர் குரல் கேட்பது எத்தனைப் பிரியமானது. ஆகஸ்ட் 22 என்னுடைய பிறந்தநாள். அவன் குரலைக் கூப்பிட்டுக் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். நினைப்பதா நடக்கிறது? இல்லை நடப்பதுதான் நினைக்கும்படி இருக்கிறதா…? என் குரு ஞானக்கூத்தனை என்னால் வழியனுப்ப முடிந்தது. என் பிள்ளையை என்னால் எப்படி வழியனுப்ப முடியும்? கதவுகளை அடைத்துக்கொண்டு அழத்தான் முடியும். என்னை இன்னும் கொஞ்ச நேரம் அழவிடுங்கள் செல்வம்” அவ்வளவுதான், இன்னும் ஒரு சொல்கூட சொல்லாமல் போனை வைத்துவிட்டார்.

‘வெயில் காத்திருந்து, உங்கள் உதிர் இறகைப் பொறுக்கப்போகும் கடைசி நொடியில், அதை ஒரு பள்ளிக்கூடச் சிறுமிக்கு சந்தோஷமாக விட்டுக்கொடுக் கிறது. கொடுத்த பின் வெயில் உங்களைப் போலவே பறந்து செல்வதை தூரத்துக் கிளையில் இருந்து நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் முத்துக்குமார்’ என்று எப்போதோ எழுதிவைத்துவிட்ட வண்ணதாசனை, அதற்குப் பிறகு நான் தொந்தரவு செய்யவில்லை. இதற்கு மேல் நானும் என்னைத் தொந்தரவு செய்யாமல், நானாகவே இக்கட்டுரையின் முடிவுக்கு என்னை இழுத்துக்கொண்டு வந்துவிட்டேன்.

‘யாரும் கவனிக்காததை

உணர்ந்த சிறுவன்

அழுகையை நிறுத்துகிறான்’
என்று எழுதிய அந்தக் கவிஞனின் ஏழு வயது மகன் எலலோரும் தன்னைக் கவனிக்கிறார்கள் என்பதால் அழாமலேயே இருந்த அந்த இரவில், பொசுங்கிக்கொண்டிருந்த கவிஞனின் உடல் தன் மகனுக்கு சன்னமாய் சொன்னது,

‘எரித்தாலும்

எழுந்து நிற்கும்

என் எலும்புகள்’


என்ற இந்த வரிகளாகத்தான் இருக்கும்.