
இங்கேயும்... இப்போதும்...படங்கள்: தி.விஜய்,

இளஞ்சேரல்
“சொந்த அனுபவத்தின் வழியாக நம் மரபைக் கண்டடைவதையும், நவீன வாழ்க்கையை அதன் சாரங்களில் இருந்து எழுத முனைவதையுமே என் எழுத்தாகக் கருதி இயங்கிவருகிறேன்.”
இளஞ்சேரலின் இயற்பெயர் ராமமூர்த்தி. கோவையில் உள்ள இருகூரில் வசிக்கிறார். தமிழக அரசின் நிறுவனம் ஒன்றில் அலுவலக உதவியாளராகப் பணி. `கொட்டம்’, `நீர்மங்களின் மூன்றடுக்கு’, `எஸ்.பி.பி குட்டி’ ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகளையும், `என்.ஹெச்.அவினாசி-திருச்சி சாலை சித்திரங்கள்’, `தம்பான் தோது’ என்ற சிறுகதைத் தொகுப்புகளையும் `கருடகம்பம்’ என்ற நாவலையும் எழுதியுள்ளார்.
ராஜன் ஆத்தியப்பன்

“என் இருப்புக்கான அர்த்தம் ஏதாவது இருக்குமானால், அது எழுதுவது மட்டுமே. எழுத்தில்தான் என்னை நான் முழுவதுமாக வெளிப்படுத்திக்கொள்கிறேன். நான் என் தாயால் ஆனவன். எனக்கான அங்கீகாரங்கள் அனைத்தும் அவருக்கே சொந்தம்.”
கட்டடத் தொழிலாளியாகப் பணிபுரிந்துவரும் கவிஞர்். இயற்பெயர் ராஜன். ‘கடைசியில் வருபவன்’ ‘கருவிகளின் ஞாயிறு’ என்ற இரண்டு கவிதைத் தொகுப்புகள் மூலம் இலக்கிய உலகில் கவனம்பெற்றவர். நாகர்கோவிலில் வசிக்கிறார். சிறுகதைகளும் எழுதிவருகிறார்.
இ.எம்.எஸ்.கலைவாணன்

“இன்று முடி திருத்துபவர்களாக மட்டும் அறியப்பட்டாலும், ஆதியில் மருத்துவர்களாகவும் இசைக்கலைஞர்களாகவும் நடிகர்களாகவும் சடங்குமுறைகளை முன்னின்று செய்பவர்களாகவும் இருந்தார்கள். என்னுடைய அப்பாவும் நாடகங்களில் நடித்தவர்தான். பின்னால் எல்லாம் மாறிப்போய்விட்டது. முடி திருத்துபவர்களுக்கான உரிய மரியாதை கிடைப்பதில்லை. அந்த வலியை எனது படைப்புகளில் இறக்கிவைக்க முயற்சிக்கிறேன்.”
இ.எம்.எஸ்.கலைவாணன் நாகர்கோவிலில் முதியோர் பாதுகாப்பு மையம் ஒன்றை நிர்வகிக்கிறார். ‘ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்’ எனும் இவரது கவிதைத் தொகுதி பரவலாகக் கவனம் பெற்றது. சிறுகதைகளும் தொடர்ந்து எழுதி வருகிறார். இவரது படைப்புகள் இரண்டு பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டமாக வைக்கப்பட்டுள்ளன. சிறுவர் மற்றும் முதியோர்களுடனான தன் அனுபவங்களை நாவலாக எழுதிக்கொண்டிருக்கிறார்.
சு.தமிழ்ச்செல்வி

“ஆசிரியர் பணி என்பதே மாணவர்களின் படைப்பூக்கத்தை இனம் காணுவதும் அதை வளர்த்தெடுப்பதும்தானே...’’
சு.தமிழ்ச்செல்வி, விழுப்புரம் மாவட்டம் கோ.ஆதனூரில் அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணிபுரிகிறார். பிறந்தது திருவாரூர் மாவட்டத்திலுள்ள கற்பகநாதர் குளம். `அளம்’, `கீதாரி’, `கற்றாழை’ உள்ளிட்ட ஏழு நாவல்களும் இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. உழைக்கும் பெண்களின் வாழ்க்கைப்பாடுகளை அசலாக தனது புனைவுகளில் பதிவுசெய்பவர். இவருடைய `கீதாரி’ நாவல் திரைப்படமாகும் முயற்சி நடக்கிறது. ‘தமிழ் வளர்ச்சித் துறை விருது’ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். எழுத்துகளில் தனித்த அடையாளத்துடன் விளங்குவதுபோலவே சிறந்த ஆசிரியராகவும் தம் பள்ளியை உயர்த்திவருகிறார்.