Published:Updated:

சிவப்புக் கிளி - வசுதேந்திரா

சிவப்புக் கிளி - வசுதேந்திரா
பிரீமியம் ஸ்டோரி
News
சிவப்புக் கிளி - வசுதேந்திரா

கன்னடத்திலிருந்து மலையாளத்தில் மொழிபெயர்த்தவர்: ஏ.கே.ரியாஸ் முகம்மதுமலையாளம் வழி தமிழில்: யூமா வாசுகி ஓவியங்கள் : கே.எஸ்.அனில்

சிவப்புக் கிளி - வசுதேந்திரா

நான் பள்ளியில் மிகவும் புத்திசாலிப் பையன் என்று பெயரெடுத்தவன். எப்போதும் முதல் ஸ்தானத்தை விட்டுக்கொடுக்காத, அம்மாவின் பெருமைக்குரிய மகன். எல்லா ஆசிரியர்களுக்கும் மிகவும் பிடித்தமானவன் நான். அப்படி இருக்கும்போது ஒருநாள் கன்னட ஆசிரியர், “உன் தலை முழுதும் சாணியை நிறைத்து வைத்திருக்கிறாயேடா…” என்று எல்லா மாணவர்களுக்கும் முன்னால்வைத்து என்னைத்  திட்டினார். என் கண்களிலிருந்து தாரைதாரையாகக் கண்ணீர் வழிந்தது.

 பண்ட்ரி வாத்தியார் அன்று எதனாலோ பாடம் சொல்லிக்கொடுக்கும் மனநிலையில் இல்லை. எல்லா பிள்ளைகளிடமும் ‘எங்கள் விவசாயத் தோட்டம்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதும்படிச் சொல்லிவிட்டு கையில் தடியைப் பிடித்துக்கொண்டு வெறுமனே அங்கும் இங்கும் நடக்கத் தொடங்கினார். என் அப்பாவுக்கு எட்டு ஏக்கர் நிலம் இருந்தது. ஆனால், ஒருபோதும் அப்பா என்னை தோட்டத்துக்கு அழைத்துச் சென்றதில்லை. ஒரு தனியார் நிறுவனத்தில் எழுத்தராகப் பணிபுரிந்துவந்த அப்பா, எப்போதேனும் அங்கே சென்றதாகவும் எனக்கு நினைவில்லை. ஆயினும், கட்டுரை எழுதாமல் சும்மா இருக்க முடியுமா? பேருந்தில் பயணம் செய்யும்போது ஊரில் உள்ள மற்ற விவசாய இடங்களையெல்லாம் பார்த்திருக்கிறேன் என்றாலும் எங்கள் விவசாயத் தோட்டம் மிகவும் சாதாரணமானது என்று எழுதுவதற்கு எனக்குக் கொஞ்சம்கூட மனமில்லை. எனக்குத் தோன்றியதுபோல உறைப்பும் புளிப்புமெல்லாம் சேர்த்து எழுதினேன். வாத்தியார் ஒரு பக்கம்தான் எழுதச் சொல்லியிருந்தார் என்றாலும், நான் இரண்டு பக்கங்கள் எழுதினேன்.

இதுதான் நான் எழுதிய கட்டுரை:

சிவப்புக் கிளி - வசுதேந்திரா

 “எங்கள் தோட்டத்தில் உள்ளி விளையும். ஒவ்வோர் உள்ளி மரமும் மாமரம் அளவுக்கு உயரமாக இருக்கும். இலைகளுக்கிடையே உள்ளிகள் தொங்கிக்கொண்டிருக்கும். ஒரே மரத்திலேயே பல நிறங்களில் உள்ளிகள் காய்க்கும். வெறும் வெள்ளை, சிவப்பு மட்டுமல்ல. நீலம், மஞ்சள், பச்சை, கறுப்பு நிறங்களிலுள்ள உள்ளிகளும் எங்கள் தோட்டத்தில் விளையும். இந்த மரங்களுக்கு நடுவில் உள்ள வழியில் ஒவ்வோர் அடி தூரத்திலும் தாமரைப்பூச் செடிகளை நட்டு வளர்த்திருக்கிறோம். தோட்டத்தில் ஓடி விளையாடும்போது மண்ணில் கால் படுவதாகவே தோன்றாது. தாமரைப் பூக்களின் மேலே மிதித்துக்கொண்டு நாங்கள் ஓடி விளையாடுவோம். சில நேரங்களில் லட்சுமி, சரஸ்வதி,  பிரம்மாவும் புஷ்பக விமானத்தில் வந்து இறங்கி தாமரைப்பூக்களுக்கு மேலே அமர்ந்து வீணை வாசித்தவாறும் கானங்கள் பாடிக்கொண்டும் நாமம் ஜெபித்தபடியும் இருப்பார்கள். லட்சுமி அடிக்கடி கரங்களை உயர்த்தி தங்க நாணயங்களைப் பொழிவாள்.

 தன் பிள்ளைகள் சாப்பிடுவதற்காக மட்டும் என்று அப்பா நிறைய சாக்லேட் மரங்கள் நட்டு வளர்த்திருக்கிறார். இந்த மரங்களில் கையெட்டும் தூரத்தில் சாக்லேட்டுகள் தொங்கிக்கொண்டிருக்கும். இஞ்சி மிட்டாய், பெப்பர்மின்ட், தேங்காய் மிட்டாய், காட்பரீஸ் சாக்லேட் நிறையக் காய்க்கும். அந்த சாக்லேட்டுகளை நாங்கள் மட்டும் தின்பதில்லை, வீணை வாசித்தும் கானங்கள் பாடியும் நாமம் ஜெபித்தும் சலிப்படையும்போது சில சமயங்களில் லட்சுமியும் சரஸ்வதியும் பிரம்மாவும் சாக்லேட்டுகளைப் பறித்துத் தின்பார்கள். ஒவ்வொருவருக்கும் பத்து, பதினாறு கரங்கள் உள்ளதால், சில நேரம் மரங்களில் உள்ள பெரும் பகுதி சாக்லேட்டுகளையும் பறித்து பேராசையுடன் தின்பார்கள். பிரம்மாவோ நான்கு வாயிலும் சாப்பிடுவார். சரஸ்வதி தன் அன்னத்துக்கும் சாக்லேட் ஊட்டுவாள். எங்கள் தோட்டத்துக்கு நடுவில் ஒரு சிறிய கடல் இருக்கிறது.

விவசாயத்துக்குத் தேவையான தண்ணீரை இங்கிருந்துதான் எடுத்துக்கொள்கிறோம். நாங்கள் மகிழ்ச்சியுடன் இந்தக் கடலில் நீந்தி விளையாடுவோம். கடலில் அடிக்கடி பெரிய கப்பல்கள் வந்துபோகும். கப்பலில் உள்ளவர்கள், நாங்கள் விளைவித்த பொருட்களை விலைக்கு வாங்கி, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகளுக்குக் கொண்டுசெல்வார்கள்.”

இதைப் படித்தால் எந்த வாத்தி

யாருக்குத்தான் கோபம் வராது?  அவர் என் காதைப் பிடித்துத் திருகி, பிருஷ்டத்தில் பளிச் பளிச்சென்று இரண்டு அடி கொடுத்தார். நான் எழுதியதை எல்லா மாணவர்களுக்கும் படித்துக்காட்டினார். “மரத்திலிருந்து உள்ளி உதிர்ந்து விழும், அல்லவா!? இந்த பெல்லாரி மாவட்டத்தின் நடுவில் கடல் இருக்கிறது, அப்படித்தானே? நீ எப்போதாவது தோட்டத்துக்குச் சென்று பார்த்திருக்கிறாயா?” என்று கோபத்துடன் கத்தினார். ஒரு நிமிடம் அமைதியாக இருந்த பிள்ளைகள் அனைவரும் என் அறியாமையை நினைத்து குபீரென்று சிரித்தார்கள். வாத்தியார் என் கட்டுரையில் பெரியதொரு பூஜ்ஜியமும் அதன் பக்கத்தில் ஒரு பெருக்கல் குறியும் இட்டு திருப்பிக் கொடுத்தார். எனக்குப் பெரும் அவமானமாக இருந்தது.

வீட்டுக்கு வந்த அப்போதே நீளப் பையை மூலையில் எறிந்து, அழுதபடியே உட்கார்ந்திருந்தேன். அம்மா வந்து பக்கத்தில் அமர்ந்து, முத்தம் கொடுத்து, “என்ன ஆயிற்று என் தங்கமே? என்ன நடந்தது என் ஈஸ்வரா?” என்று முழுமையாக சமாதானப்படுத்திய பிறகு, நடந்த விஷயத்தைச் சொல்லி கட்டுரையை அம்மா கையில் கொடுத்தேன். அதைப் படித்து முடித்துவிட்டு அம்மாவும் சிரிக்க ஆரம்பித்தார்கள். அம்மா சிரிப்பதைப் பார்த்து எனக்குக் கோபம் வந்தது. “நீங்கள் ஒன்றும் சிரிக்க வேண்டாம்…” என்று சொல்லி என் குட்டிக் கைகளால் அம்மாவை அடிக்கத் தொடங்கினேன். சிரிப்பை நிறுத்திய அம்மா தன் தலையில் அடித்துக்கொண்டு, “நூறு ஏக்கர் நிலத்தில் விதைத்தவர்களின் பிள்ளைகளுக்கு இப்படியொரு கதி வந்துவிட்டதே” என்று கலக்கமடைந்தார்கள்.

 “நீ எதற்கு அழுகிறாய்… விட்டுவிடு என் முத்தே… ஏதோ உனக்குத் தெரிந்ததை நீ எழுதியிருக்கிறாய்” என்று என்னிடம் சொல்லி, அருமையான தயிரால் செய்த மொசரவலக்கியைக்  குழைத்து, அதன் மேலே சட்னிப் பொடியும் தூவி எனக்குத் தந்தார்கள். அவலக்கியை சிறுசிறு உருளைகளாக்கி நான் சுவைக்கத் தொடங்கினேன்.

 அப்பா வந்தார். அம்மா விஷயங்களை எல்லாம் சொல்லி அப்பா படிப்பதற்காக அந்தக் கட்டுரையைக் கொடுத்தார்கள். படித்து முடித்ததும் அப்பா, “எல்லாம் உன்னால்தான்” என்று அம்மாவைத் திட்டினார். அம்மா, “நான் என்ன செய்தேன்?” என்று கேட்டு சண்டைபோட முற்பட்டார்கள். “மாத்யரின் வீடு, உள்ளி விலக்கப்பட்டது என்றெல்லாம் சொல்லி உள்ளியை வீட்டுக்குக் கொண்டுவரக் கூடாது என்று சொன்னது நீதானே… உள்ளி எப்படி விளைகிறது என்றெல்லாம் பிள்ளைகளால் எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? வீட்டிலோ எப்போதும் பூஜை, ஹோமம், ஈஸ்வரன், முன்னோர் என்றுதானே சொல்லிக் கொண்டிருக்கிறாய்… பார்… அதனால்தான் அவன் பிரம்மா, லட்சுமி, சரஸ்வதி என்றெல்லாம் எழுதிவைத்திருக்கிறான். பிரம்மா நான்கு வாயிலும் சாக்லேட் தின்பார் என்று கதாகாலட்சேபக்காரனைப் போல எழுதிவைத்திருக்கிறான். உள்ளி நிலத்தில் விளைகிறது என்று தெரியாதாம்… முண்டேகண்டா…” என்று திட்டிவிட்டு, மெதுவாக அவலக்கி சாப்பிட்டுக் கொண்டிருந்த என் தலையில் ஒரு குட்டுவைத்தார். நான் மெள்ள ராகம்போடத் தொடங்கினேன். ஆயினும், சாப்பிடுவதை அப்படியே தொடர்ந்தேன். அது மிகவும் சுவையாக இருந்தது.

 “அவனை எதற்கு வீணே அழவைக்கிறீர்கள்… விடுங்கள். அந்தத் தொல்லைபிடித்தவன் வீட்டுக்கு உள்ளி கொண்டுவந்த நேரத்திலேயே அது எப்படி விளையும் என்று பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்க முடியுமா? `ஐயய்யோ’ என்றால், யாராவது செத்துவிட்டார்களா என்று கேட்பது போலிருக்கிறது இது. முடிந்தால் அதை எப்படி அரியலாம் என்று செய்துகாட்டலாம். அவ்வளவுதான். நாளை அந்தக் கோளாறு பிடித்த வாத்தியார் ‘நம் வீட்டுக் கோழி’ என்று கட்டுரை எழுதிவரச் சொன்னால் என்ன செய்வது? மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். வாய்க்குக் கடிவாளம் இல்லையென்பதால், அவனைத் தொந்தரவு செய்வது எதற்கு? வெளியில் எங்கெங்கோ அலைந்து திரிந்து வருகிறீர்கள் என்பதெல்லாம் எனக்குத் தெரியும். வீட்டில் உள்ள ஆண்கள் அடிக்கடி குழந்தைகளை வெளியே அழைத்துச் சென்று உலகத்தைக் காட்ட வேண்டும். ஆபீஸ் என்று சொல்லி, நாள் முழுதும் அந்தச் சுடுகாட்டிலேயே சும்மா குந்தியிருக்கிறீர்கள். குழந்தைகளுக்கு எப்படிப் புரியும்? நான் ஏதோ ஈஸ்வரன், முன்னோர் என்றெல்லாம் சொல்லிக்கொடுத்ததால், என் குழந்தை அதையெல்லாம் அழகாக எழுதியிருக்கிறான். பிரம்மா, லட்சுமி, சரஸ்வதி ஆகியவர்களை மட்டும் தாமரைப் பூக்களுக்கு மேலே குடியிருத்த வேண்டும் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். ஈஸ்வரனை அழைத்து வந்தால்கூட… சொல்லுங்க…” என்று அம்மா என் புராண அறிவைப் புகழ்ந்தார்கள். அப்பா-அம்மாவின் சண்டை அப்படியே தொடர்ந்தது. தயிர் கெட்டியாகி, அவலக்கி சற்று உறைந்தது. அதனால் கெட்டியான அவலக்கியைக் கொண்டு நான் இரண்டு பொம்மைகள் செய்தேன். ஒரு பொம்மை அப்பா என்றும் இன்னொன்று அம்மாவென்றும் மனதில் நினைத்துக்கொண்டேன். சட்னிப்பொடியை எடுத்து அம்மா பொம்மையில் பெரியதொரு குங்குமம் வைத்தேன். பிறகு ஒரு துளையிட்டு வாய் அமைத்தேன். என் தலைமுடி ஒன்றைப் பிடுங்கி, அப்பா பொம்மையின் வாய்க்கு மேலே ஒரு மீசை ஒட்டி காதுகளைப் பெரிதாக வைத்தேன். பிறகு இரண்டையும் மோதத் தொடங்கினேன்.

சிவப்புக் கிளி - வசுதேந்திரா

அரை மணி நேரத்துக்குப் பிறகு அப்பாவுக்குப் பசித்தது. முன்னால் அமர்ந்துகொண்டு நான் மிகவும் சுவையுள்ள அவலக்கி சாப்பிட்டதால், அப்பாவுக்குப் பசி அதிகரித்திருக்க வேண்டும். அதனால் மேற்கொண்டு எதுவும் பேசாமல், “போ… எனக்கும் அவலக்கி செய்து எடுத்து வா…” என்று சொல்லி வாதத்தை முடித்துவைத்தார். அப்பாவுக்கு சாப்பாடு கொடுத்தவாறு அம்மா, “வரும் ஞாயிற்றுக்கிழமை குழந்தைகளை தோட்டத்துக்கு அழைத்துச் சென்று வாருங்கள்…” என்று கட்டளைக் குரலில் சொன்னார்கள். நல்ல தயிரால் செய்த அவலக்கியைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த அப்பா, ‘சரி’ என்று சொன்னார். கொஞ்சம் சாப்பிட்டு பசி சற்று அடங்கியபோது அவர் மீண்டும் என் கட்டுரையை நினைவுகூர்ந்து, “விவசாயத் தோட்டத்துக்கு நடுவில் கடல் என்று எழுதிவைத்திருக்கிறானே உன் அருமை மகன்” என்று சொல்லி இரண்டு முறை தன் உள்ளங்கையால் நெற்றியில் அடித்துக்கொண்டார். அம்மா சமையலறையிலிருந்து உரக்கச் சொன்னார்கள்... “பெல்லாரியில் உள்ள குழந்தைகளுக்கு கடல் என்றால் தெரியுமென்றா நீங்கள் சொல்கிறீர்கள்? ஒருமுறையாவது உடுப்பி கிருஷ்ணனிடம் அழைத்துச் செல்லும்படி ஓராயிரம் முறை கேட்டுக்கொண்டேன்… நான் சொல்வதை நீங்கள் எங்கே கேட்கிறீர்கள்…”

 நான் அம்மாவின் குங்குமத்தை காத்துக் கவனமாகவும், அப்பாவின் மீசையை எடுத்துவிட்டும் இரண்டையும் சாப்பிட்டேன்.

 தாத்தாவுக்கு ஏறத்தாழ நூறு ஏக்கர் நிலம் இருந்தது. அறுவடை செய்த தானியங்களை மூட்டைகட்டி ஏற்றி வரும் வண்டிகள் வீட்டிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசை வரிசையாக நின்றிருக்குமாம். அம்மா கல்யாணம் முடிந்து வந்த சமயத்தில் இந்த தானிய மூட்டைகளில் மஞ்சள், குங்குமம், பூக்கள் ஆகியவற்றையெல்லாம் இட்டு பூஜை செய்வார்களாம். இன்றும் வீட்டில் ஒரு தானிய அறை இருக்கிறது. இதன் உள்ளேதான் தானிய மூட்டைகளை வைத்திருந்தார்கள். அதற்கொரு மிகச் சிறிய வாயில் இருந்தது. யாராக இருந்தாலும் தலை குனிந்தால்தான் உள்ளே செல்ல முடியும். தானியங்களுக்குத் தலை வணங்கித்தான் உள்ளே செல்ல வேண்டும் என்பதுதான் அதற்கான காரணம். இன்று அதற்குள் தானியங்களைப் பாதுகாக்கும் வழக்கம் இல்லையென்றாலும் அந்த மர வாயில் அப்படியேதான் இருக்கிறது. வீட்டுக்கு யாரேனும் புதிதாக வந்தால், அதன் நிலைப்படியில் தலையை இடித்துக்கொள்வது சாதாரணம்தான் என்றாலும் அதன் உயரத்தை அதிகரிப்பது பற்றி அப்பா சிந்திக்கவில்லை. அந்த வாயிலின் நிலையில் பூக்களும் கொடிகளுமாக சித்திர வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது. வாயிலுக்கு மேலே ஒரு கையில் கரும்பைப் பிடித்துக்கொண்டு மறு கையில் தானியத்தைப் பொழியும் தானிய லட்சுமியின் படம் வைக்கப்பட்டிருந்தது. வீட்டில் உள்ள சிறிய பிள்ளைகள் அந்த அறைக்குள் சென்று இஷ்டம்போல விளையாடுவார்களாம். அவை என்னவிதமான விளையாட்டுகள்? இரண்டு படி அரிசியையோ சோளத்தையோ அறையின் நடுவில் குவித்துவைப்பார்கள். அப்புறம் குழந்தைகள் தானியத்தை எடுத்து தங்கள் தலையில் போட்டுக்கொள்வ தாகவோ, ஒருவர் மீது ஒருவர் சிதறுவதாகவோ அந்த விளையாட்டுகள் இருக்கும். விளையாட்டு முடிந்தால் தானியங்களை எடுத்த இடத்திலேயே மீண்டும் வைப்பார்கள். மறுநாள் மறுபடியும் அந்த விளையாட்டுகளைத் தொடர்வார்கள்.

தாத்தாவுக்கு ஆறு பிள்ளைகள். அவர்களில் நான்கு பெண்கள். மூத்த மகனை டாக்டர் ஆக்க வேண்டும் என்பதுதான் தாத்தாவின் பெரிய ஆசை. ஆனால், துரதிர்ஷ்டம் என்னவென்றால், அவனுக்கு அவ்வளவு அறிவு இல்லை. ஆனால், தாத்தாவைப் பொறுத்தவரை அவனது சோம்பேறித்தனம், செரித்துக்கொள்ள முடிகிற மகிழ்ச்சியான செய்தியாக இல்லை. எப்படியோ மருத்துவப் படிப்பில் சேர முடிந்தது என்றாலும் அதை முடிக்க வேண்டும் என்ற எந்த அடையாளத்தையும் அவன் காட்டவில்லை. ஆயினும் அவன் பெரும் ஊதாரியாக மாறினான். அந்த மகன் பல முறை தாத்தாவை அச்சுறுத்தி பணம் வாங்குவான். அதனால்தான் தாத்தா, பாதியளவு நிலத்தை விற்கவேண்டி வந்தது. அதன் பிறகு, மகள்களைக் கல்யாணம் செய்து அனுப்புவதற்காக மீண்டும் நிறைய நிலத்தைக் கைவிட்டார். கடைசியில் எட்டு ஏக்கர் நிலம் மிச்சமிருந்தது. பங்கு பிரிக்கும் சமயத்தில் நிலத்தின் மீது யாரும் பெரிய விருப்பம் காட்டவில்லை. அதிலிருந்து அப்படியொன்றும் விளைச்சலும் கிடைக்கவில்லை. அப்பா  ஊரில்தான் இருப்பார் என்ற ஒரே காரணத்தால்,  நிலத்தை அப்பாவின் தலையில் கட்டிவைத்து தங்கத்தையும் வெள்ளியையும் பணத்தையும் எடுத்துக்கொண்டு மற்றவர்கள் நகரத்தில் குடியேறினார்கள். அந்த காரணத்தால்தான் அம்மா இப்போதும் அப்பாவை ‘போலே சங்கர்’ என்று திட்டுவாள்.

அப்பாவுக்கு விவசாயத்தில் அந்தளவுக்கு ஆர்வமில்லை. தனியார் நிறுவனத்தில் எழுத்தராகப் பணியாற்றிய அப்பா, இரவு பகலாக உழைப்பார். நேரமற்ற நேரத்தில்கூட அப்பாவை அழைப்பார் முதலாளி. எவ்வளவு உழைத்தாலும் வருமானம் என்பது கஷ்டம்தான். சிரமமில்லாமல் இரண்டு வேளை சாப்பிட முடியும் என்பதுதான் ஆறுதல். ஆனால், தானே நிலத்தை உழுது, விதைத்து, அறுவடை செய்து விளைச்சல் எடுப்பது என்பது சாத்தியமான காரியமாக இல்லை. முதல் முயற்சியிலேயே பத்தாம் வகுப்பு வென்றவருக்கு விவசாய வேலை என்பது தன் தகுதிக்குப் பொருத்தமானது அல்ல என்ற எண்ணம் ஆழ்மனதில் இருந்திருக்க வேண்டும் என்று எனக்கு இப்போது தோன்றுகிறது.

தோட்டத்தை அப்பா, ஈரப்பன் எனும் விவசாயிக்கு குத்தகைக்குக் கொடுத்திருந்தார். ஈரப்பன் மிகவும் நல்லவர். அவர் மனைவியின் பெயர் நரசக்கா. அவர்களுக்கு நான்கு பிள்ளைகள். எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில்தான் அவர்களின் குடிசை இருந்தது. அவர்கள் இருவரும் வீட்டு வேலைக்கு வருவார்கள். எங்கள் வீட்டில் உள்ள பாத்திரங்களை எல்லாம் துலக்குவது, வீட்டைப் பெருக்கிச் சுத்தமாக்குவது, நெல் குத்துவது முதலிய சகல வேலைகளையும் நரசக்கா செய்துவந்தாள். வீட்டில் விறகு வெட்டுவது, அப்பா கொடுக்கும் பலசரக்குப் பொருட்களின் பட்டியலுடன் சென்று பொருட்கள் வாங்கிக்கொண்டு வருவது, எப்போதாவது கண்டி நரசிங்க கோயிலுக்குப் போவதாக இருந்தால் வண்டி அழைத்துக்கொண்டு வருவதுபோன்ற வேலைகளை எல்லாம் ஈரப்பன் செய்தார். விவசாய நிலத்தை குத்தகைக்குக் கொடுத்ததற்கு கைம்மாறாக  வருடத்துக்கு ஒன்றிரண்டு மூட்டை தானியங்கள் அன்பளிப்பாக சமர்ப்பிப்பார். “விளைச்சல் இவ்வளவுதானா?” என்று கேட்டு அம்மா சச்சரவு செய்வார்கள். ஈரப்பனும் நரசக்காவும், தோட்டத்தில் பெரிதாக ஏதும் விளையவில்லையே என்றோ அல்லது இந்த முறை போதுமான மழை இல்லையே என்றோ குறைபட்டுக்கொண்டு கண்ணீர் சிந்துவார்கள். அப்படியொன்றும் அவர்கள் ஏமாற்ற மாட்டார்கள் என்று அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தெரியும். வீட்டில் மிச்சமிருக்கும் பழங்கஞ்சியை வாங்கிச் சென்று அவர்கள் மிகுந்த சந்தோஷத்துடன் உண்பார்கள். பழைய தொடுகறியாக இருந்தாலும் வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கிக்கொண்டு போவார்கள். வியர்வை பெருக ஒரு சுமை விறகு வெட்டினால் வெறும் ஐந்து ரூபாய் கூலி வாங்கி திருப்தியடைவார்கள்.

நரசக்கா, விவசாய நிலத்தில் வளரும் அபூர்வமான கீரைகளை தன் முந்தானையில் எடுத்து வந்து அம்மாவின் முன்னால் கொட்டுவாள். ஹக்கரிக்கி, அனந்தகொண்டி, திருகனசாலி ஆகியவை. இன்று இவற்றை எங்கு தேடினாலும் கிடைக்காது, அவ்வளவு விஷேசமானவை. அதிசிறப்பான அந்தக் கீரைகளைக் கொண்டு அம்மா சமைக்கும் பலவித கூட்டுகளைப் பற்றி நினைக்கும்போது இன்றும் வாயில் நீர் சுரக்கும்.

ஈரப்பனின் மகன் குமாரசாமி என் பள்ளியில்தான் படித்தான். மகா குறும்புக்காரன் என்று பெயரெடுத்தவன். படிப்பில் மோசமாக இருந்தாலும் கபடி, கொக்கோ ஆகிய விளையாட்டுக்களில் மிகவும் தேர்ந்தவன். நாங்கள் இருவரும் ஒரே வகுப்பில்தான் படித்தோம் என்றாலும் எங்களிடையே நெருக்கம் குறைவாக இருந்தது என்று சொல்ல வேண்டியிருக்கிறது. என் பழைய உடைகளை அம்மா அவனுக்குக் கொடுப்பாள். அதுவரை நான் அணிந்திருந்த உடைகள்தான் அவை என்று நண்பர்களுக்குத் தெரியும். அவன் அவற்றைப் புதிதாக அணிந்து வரும்போது நண்பர்கள், “ஓ… உன் சட்டை, உன் காற்சட்டை” என்று என்னிடம் சுட்டிக் காட்டுவார்கள். அதைக் கேட்டு நான் நெளிவேன். அவனோ, எதுவும் செய்ய முடியாத நிராதரவான நிலையிலிருப்பான்.

அந்தக் காலத்தில், காலையில் நான் விழிக்கும் நேரத்திலெல்லாம் ‘கட்டக் கட்டக்’ என்ற ஓசை கேட்கும். அந்த ஓசையைக் கவனித்தால், ஈரப்பன் விறகு வெட்ட வந்திருக்கிறார் என்று புரியும். அப்போதே நான் பல் துலக்குவதையும் பால் குடிப்பதையும் மறந்து வாசலுக்கு ஓடுவேன். ஈரப்பன் ஒரு கதைக் களஞ்சியம். அவர் காட்டிலோ, வயலிலோ சுற்றிகொண்டிருக்கும்போது நடந்த சிலிர்க்கவைக்கும் சம்பவங்களை என்னிடம் அழகாகச் சொல்வார். அவர் சொல்வது பொய் என்று என் மனதுக்குள் தோன்றும் என்றாலும் அதையெல்லாம் மீறிய ஈர்ப்பும் யதார்த்தமும் அந்தக் கதை சொல்லலில் இருக்கும்.

“பக்கத்தில் உட்கார வேண்டாம் சின்ன முதலாளி, மரச் செதில்கள் தெறிக்கும். அதோ அங்கே உட்காருங்கள்” என்று கோடரியால் திண்ணைப் படியைச் சுட்டிக்காட்டுவார். நான் மௌனமாக அங்கே போய் அமர்வேன். அவர் விறகு வெட்டுவதைப் பார்ப்பதற்கே அழகாக இருக்கும்.  வலுவான கறுப்பு உடல் ஈரப்பனுக்கு. நெஞ்சில் நிறைய ரோமங்கள். வலது கையின் புஜத்துக்குக் கீழே ஒரு கறுப்புக் கயிறு கட்டியிருந்தார். அது எந்தளவு இறுக்கமாக இருந்தது என்றால், அது எந்த நொடியிலும் அவர் தோலை அறுத்துவிடுமோ என்ற பயத்தை எனக்கு ஏற்படுத்தியிருந்தது. அந்தக் கயிறில் ஒரு வெள்ளித் தாயத்து இருந்தது. கோடரியைத் தூக்கி ஓங்கி வெட்டும்போது கேட்கும் ஓசையுடன் அவரிடம் இருந்து, ‘ஹாயிக்’ என்ற விசித்திரமான ஓர் ஓசை வந்தது. பத்துப் பதினைந்து முறை வெட்டினால்தான் கட்டை பிளக்கும். சில நேரங்களில் கட்டை உறுதியானதாக இருந்தால் எத்தனை முறை வெட்டினாலும் பிளக்காது.

அப்போது ஈரப்பனும் மரக்கட்டையும் மல்யுத்தம் செய்வதாக எனக்கு ஓர் எண்ணம் தோன்றும். கடைசியில் மரக்கட்டை பிளக்கும். மரக்கட்டை ஒருமுறை பிளந்தால் போதும், பிறகு அதை சிறு துண்டுகளாக்கத் தொடங்குவார். அந்த நேரத்தில் கேட்கும் ஓசை சற்று வித்தியாசமாக இருக்கும். அவர் உடலிலிருந்து வியர்வை வழிந்து அவர் உடுத்தியிருக்கும் துண்டு நனைந்துபோகும்.

என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும். என்னுடன் பேச நினைத்தோ அல்லது கோடரியைக் கூர் தீட்டவோ தன் வேலைக்கு சற்று ஓய்வு கொடுப்பார். அவர் பக்கத்தில் வந்து அமர்ந்தால் போதும், வியர்வை நெடி மூக்கைப் பொத்துமளவுக்குக் கடுமையாக இருக்கும்.

“நேற்று அது மீண்டும் வந்திருந்தது சின்ன முதலாளி” என்று பேச்சை ஆரம்பித்தார். அதில், ஏதோ பெரிய ரகசியம் பேசுவதுபோன்ற தொனி இருக்கும். கதை கேட்பதற்கான ஆர்வம் எனக்கு அதிகரித்தது. ‘அது’ என்று அவர் எதைச் சொல்கிறார் என்று எனக்கு அப்போதே புரிந்துவிட்டது. “எந்த நேரத்தில் வந்தது?” அச்சம் நிறைந்த குரலில் நான் கேட்டேன்.

“வேலையெல்லாம் முடியும்போது மாலை நேரமாகிவிட்டது சின்ன முதலாளி. கொஞ்சம் நேரம் இளைப்பாறுவோம் என்று நினைத்து நான் வரப்பில் படுத்திருந்தேன். என்னையறியாமல் அப்படியே தூங்கிவிட்டேன். விழித்து கண் திறந்தபோது சிறிய மழை தூறுவதைப்  பார்த்தேன். பஞ்சமி நாள். நாகங்கள் படம் எடுத்து இறங்கும் நேரம் என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருக்கும்போது, இது என்ன இப்படி! என் உடலில் மழைபடவில்லையே என்று நினைத்துக்கொண்டு நிமிர்ந்து பார்த்தேன் முதலாளி. என் மகன் மீது சத்தியம். ஏழு படங்களை விரித்துக்கொண்டு ஆலமரம்போல ஒரு நாகம் நிற்கிறது. நட்சத்திரங்கள்போல மின்னும் அதன் பதினான்கு கண்களைப் பார்த்தபோது, ஆகாயம்தான் என் கையெட்டும் தூரத்தில் வந்துவிட்டதோ என்று எனக்குத் தோன்றியது. அதன் பதினான்கு நாக்குகளும் பட்டங்கள்
போல அலைபாய்ந்து கொண்டிருந்தன. அதன் உடல் எந்தத் திசையிலும் வளைந்தது. சின்ன முதலாளி, அது ஒரு முறை சீறினால் போதும், நிலத்திலிருந்து பெரியதொரு பள்ளம் அளவுக்கு மண் காற்றில் பறந்து சென்று வேறொரு இடத்தில் விழும். இரண்டு மரங்கள் ஒன்றாகச் சேர்ந்ததுபோன்று அது பருமனாக இருந்தது. தன் வாலை ஊன்றி அது நிமிர்ந்து நிற்கும். அவ்வளவு மிகப் பெரியதொரு பாம்பு என் தலைக்கு மேலே படம் விரித்து நிற்கும்போது என்னதான் நடக்காது, சொல்லுங்கள்?” என்று கேட்டு அவர் நிறுத்தினார். என் காதில் விழுமளவுக்கு என் இதயத்துடிப்பு அதிகரித்தது.

சிவப்புக் கிளி - வசுதேந்திரா

“அப்புறம் என்னாயிற்று?” நான் கண்கள் விரியக் கேட்டேன். அப்போது கதையைத் தொடர்வதற்கு ஈரப்பன் மறுத்தார். அலட்சியமாக சோம்பல் முறித்துக்கொண்டு கொட்டாவிவிட்டு, “ஒரு கிளாஸ் காபி கொண்டுவாருங்கள் சின்ன முதலாளி… தொண்டை வறண்டுபோகிறது” என்று ஆரம்பித்தார். எனக்குக் கோபம் வந்தது. “முழுக் கதையையும் சொல்லுங்கள்… அப்புறம் காபி குடிக்கலாம்” என்று கேட்டுக்கொண்டேன். “கதை வேண்டாம் முதலாளி… காபி கொண்டுவந்தால் தொடர்ந்து சொல்கிறேன்” என்று சொன்னார் அவர். காபி வராமல் கதையைத் தொடரமாட்டேன் என்பதுபோல அவர் வெறுமனே உட்கார்ந்திருந்தார். வேறு வழி இல்லாமல் நான் உள்ளே ஓடினேன். அம்மா முணுமுணுத்தவாறே காபி கொடுத்தார்கள். “இனி மதியம் வரைக்கும் காபி இல்லையென்று அந்த மனிதனிடம் சொல்லிவிடு” என்று சொன்னார்கள்.

அவர் “ஸொர்ர்… ஸொர்ர்…” என்று காபி குடித்து முடிப்பது வரை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். முழுதும் குடித்து முடித்த பிறகு கிணற்றிலிருந்து ஒரு குடம் தண்ணீர் மொண்டு டம்ளரைக் கழுவினார். பூந்தோட்டத்தின் பக்கம் கவிழ்த்துவைத்துத் திரும்பி வந்து மீண்டும் விறகுவெட்ட ஆரம்பித்தார். எனக்கோ, பாதிக் கதையைக் கேட்டதன் வலி.

 நான் அவர் பக்கத்தில் சென்று, “அதற்குப் பிறகு என்ன ஆயிற்று ஈரப்பா?” என்று கெஞ்சினேன். கோடரியைத் தோளில் வைத்துக்கொண்டு, “இனி என்ன நடக்கும் சின்ன முதலாளி. போ பேவர்ஸி என் நிலத்தில் கால் வைக்காதே என்று அரிவாளை வீசி அச்சுறுத்தினேன். அது படங்களை மடக்கிக்கொண்டு வளைந்து நெளிந்து ஓடிவிட்டது. அதன் பிறகு நான் வீட்டை நோக்கி நடந்தேன்” என்று சுருக்கிச் சொல்லி கதையை முடித்துவிட்டார். கதையில் பலவற்றை எதிர்பார்த்திருந்த நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். இவ்வளவு சீக்கிரம் கதை முடிந்துவிடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

“உங்களுக்குப் பயமாக இல்லையா ஈரப்பா?” நான் கேட்டேன்.

ஈரப்பன் முகத்தில் மிகவும் ஆழ்ந்த தன்மைகொண்டார். “நான் எதற்குப் பயப்பட வேண்டும் முதலாளி. நான் எப்போதாவது யாரையாவது ஏமாற்றியிருக்கிறேனா?” அவர் கேட்டார்.

இல்லையென்று நான் தலையாட்டினேன்.

“யாரிடமாவது பொய் சொல்லியிருக்கிறேனா?”

இல்லையென்று தலையாட்டினேன்.

“வீட்டில் யார் மனதையாவது புண்படுத்தியிருக்கிறேனா?”

நான் மீண்டும் ஒரு முறை தலையாட்டினேன்.

“அப்படியென்றால் எப்படி சின்ன முதலாளி அந்தப் பாம்பால் என்னைக் கடிக்க முடியும்? நல்ல மனிதர்களைப் பார்த்தால் அவை பயப்படும். விஷ்ணு பகவான் அதன் முதுகில் அமர்ந்து கேள்விகள் கேட்பார் அல்லவா, அந்த நேரத்தில் என்ன பதில் சொல்ல முடியும்?” அவர் ஒரு எதிர்க் கேள்வி கேட்டார். ஈரப்பன், சாட்சாத் பீமனைப்போல எனக்குத் தோன்றினார்.

“நானும் திட்டினால் அது போய்விடுமா ஈரப்பா?” நான் கேட்டேன்.

“ஒருமுறை தோட்டத்துக்கு வாருங்கள் முதலாளி. நீங்கள் சொல்வதை அது கேட்கிறதா என்று பார்க்கலாம் அல்லவா” என்று அழைத்தார். நிச்சயமாக எனக்கு அதுபோன்ற தனிப்பட்ட பரிசோதனை செய்வதற்கான ஆவல் இல்லை.

“இல்லை ஈரப்பா, இதுபோன்ற பெரிய பாம்புகள் எதற்கு நம் தோட்டத்தில் ஊர்ந்து செல்கின்றன?” என்று நான் ஒரு வித்தியாசமான கேள்வி எழுப்பினேன்.

ஈரப்பனிடம் அதற்கான பதிலும் இருந்தது. “நம் தோட்டத்துக்கு மட்டுமல்ல முதலாளி, அது மற்றவர்களின் தோட்டத்துக்கும் போகும். அதுமட்டுமல்ல, நம் ஊருக்குப் பக்கத்தில் உள்ள பிரதேசங்கள், காடு, அருவி ஆகிய இடங்களிலெல்லாம் ஊர்ந்து செல்லும். நம்முடைய இந்த ஊர் ஒரு புண்ணிய பூமி முதலாளி. இந்த ஊரில் மொத்தப் புதையலும் மறைந்திருக்கிறது. பூமி மாதாவின் வயிற்றைக் கீறிப் பார்த்தால் அதற்குள் மறைந்திருக்கும் புதையல்  குடங்களைப் பார்க்க முடியும். கெட்ட மனிதர்கள் அதை எடுத்துக்கொண்டு போகாமல் இருப்பதற்குத்தான் பாம்பு காவல் காக்கிறது” என்று சொன்னார் அவர். “இப்போதே அந்தப் பாம்பு என் வார்த்தைகளைக் கொஞ்சம் கேட்கிறது. பார்த்துக் கொள்ளுங்கள் முதலாளி, இன்னும் கொஞ்சம் நாள் போனால் அதை நான் வசப்படுத்துவேன். அதன் பிறகு அதன் படத்தின் மேலே அமர்ந்துகொண்டு ஊர் முழுதும் சுற்றி வருவேன். ‘புதையல் எங்கே இருக்கிறது என்று சொல்லடா!’ என்று நான் அதனிடம் கட்டளையிடுவேன். புதையல் குடங்களை எடுத்துக்கொண்டு திரும்பி வருவேன். பிறகு பெரிய பணக்காரனாகி விடுவேன். இந்த  ஊர் முழுதும் என்னிடம் வந்து வேலை செய்ய வேண்டும். நான் இந்த ஊருக்கே ராஜாவாகிவிடுவேன்” என்று சொல்லி ஈரப்பன் தன் மீசையை முறுக்கினார். எங்கள் ஊரில் புதைந்திருக்கும் புதையல்களைப் பற்றிய ரகசியம், அதற்குக் காவலிருக்கும் பாம்பு, அதன் மீது சவாரி செய்யும் ஈரப்பன்… இந்த விஷயங்கள் எல்லாம் என்னை மெய்சிலிர்க்கச் செய்தன.
அன்று இரவு சாப்பிட அமரும்போது அம்மா, குழந்தைகளை தோட்டத்துக்கு அழைத்துச் செல்வதைப் பற்றி அப்பாவிடம் மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தினார்கள்.

“நான் தோட்டத்துக்கு வர மாட்டேன்.” என்று உடனே சொன்னேன்.

“என்ன விஷயம்?” அம்மா என்னை உற்றுப் பார்த்தார்கள்.

நான் மெதுவாக அம்மாவிடம், ஏழு தலைப் பாம்பைப் பற்றிய கதையைச் சொன்னேன். அதைத் தவிர, எங்கள் ஊரில் மறைந்திருக்கும் புதையலைப் பற்றியும் விவரித்தேன்.

அம்மா தலையிலடித்துக்கொண்டு, “ ஊர் மக்களெல்லாம் இரண்டு வேளை உணவுக்காக அல்லாடுகிறார்கள். இனி இந்தப் புதையல் மட்டும்தான் மிச்சம். விறகு உடைக்கச் சொன்னால், கதை சொல்லி நேரத்தைப் போக்குகிறான் அந்த ரண்டே கண்டன்” என்று திட்டினார்கள்.

தோட்டத்தைப் பார்ப்பதற்காக, திருவிழாவுக்குச் செல்லும் உத்வேகத்துடன் தயாராக இருந்தோம். அக்கா பிடிவாதம் பிடித்து  சிவப்புப் பாவாடையும் நீலச் சட்டையும் அணிந்து கொண்டாள். காதில் தங்கத் தொங்கட்டான் அணிந்து அதைக் காதோர தலைமுடியில் இணைத்தாள். அவள் உடையலங் காரத்தைப் பார்த்து அம்மா கோபப்பட்டார்கள்.

“பழைய  உடைகள் அணிந்துதானே தோட்டத்துக்குப் போக வேண்டும். இது என்ன இப்படி அலங்காரமாக? உடையை அழுக்காக்கிக்கொண்டு வா, சுளீரென்று இரண்டு அடி தருகிறேன்”-அம்மா கண்டித்தார்கள். ஆனால், அக்கா எங்கே கேட்கப்போகிறாள். நானும் அழகான சட்டையும் காற்சட்டையும் அணிந்துகொண்டேன். ஒரு தைரியத்துக்காக சிறிய கோடரியையும் கையில் வைத்துக்கொண்டேன். அப்பா திட்டியபோது அதை வீட்டுக்குள்ளேயே வைத்தேன். அப்பாவும் அக்காவும் நானும் தோட்டத்துக்குப் புறப்பட்டோம். வீட்டு வேலைகள் இருக்கின்றன என்று சொல்லி அம்மா மட்டும் வரவில்லை.  ஆனால், அக்காவிடம் பூக்களும் குங்குமமும் விளக்கும் கொடுத்து, “பூமி மாதாவுக்குப் பூஜை  செய். அதெல்லாம் செய்து எத்தனையோ நாளாகிவிட்டது” என்று சொன்னார்கள். தோட்டத்தில் சென்று சாப்பிடுவதற்கு சட்னிப் பொடியும் அவலக்கியும் கட்டிக்கொடுத்தார்கள்.

எங்கள் ஊரிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்திலிருந்தது எங்களுடைய விவசாய நிலம். அரண்மனை வீதி வழியாக நடந்து, அதே வழியில் சிவபுரத்தின் நீர்நிலையிலுள்ள தடுப்பணையையும் கடந்து, ஜாலஹல்லிக்குச் சென்று, அங்குள்ள, ஸூகம்மா எனும் விலைமகளின் பெயரில் அறியப்படும் பழைய கிணற்றின் அருகினூடே சென்றால், எங்கள் தோட்டத்துக்குச் செல்லும் வழியை அடைந்துவிட முடியும் என்று அப்பா சொன்னார். தார்ச்சாலையில் சென்றால் தூரம் மிகவும் அதிகமாகும் என்பதால்தான்,  இந்தக் குறுக்கு வழியைத் தேர்ந்தெடுத்தார். எங்கள் ஊரைவிட அதிகமாக அனுபவிக்க முடிகிற ஆகாயமும் காற்றும் வெளிச்சமும் கிடைக்கும் என்பதால், நானும் அக்காவும் மிகவும் மகிழ்ச்சிகொண்டிருந்தோம். பாட்டும் ஆட்டமுமாக நாங்கள் அப்பாவுடன் நடக்கத் தொடங்கினோம். சிவபுரத்து நீர்நிலைக்குப் பக்கத்தில் வந்தபோது, அக்காவுக்கு தாகமாக இருந்தது. நாங்கள் மூவரும் மெள்ள அடிவைத்து நீர்நிலையிலிருந்து நீர் பருகினோம். அப்பாவுக்கு அந்த நீர்நிலையுடன் பெரியதொரு நேசமிருந்தது. அதற்குக் காரணம் என்னவென்றால், எங்கள் வீட்டில் உள்ள கிணற்றுக்கும் இந்த நீர்நிலைக்கும் மிகப் பிரத்தியேகமானதொரு உறவு உண்டு. இயற்கைரீதியான ஒரு காரணம். இந்த நீர்நிலை நிறையும்போது வீட்டில் உள்ள கிணறும் நிறையும். இந்த நீர்நிலை வற்றும்போது வீட்டுக் கிணறும் வற்றும். அப்பா இந்த நீர்நிலையை, எங்களுக்குக் குடிநீர் தரும் கடவுளைப்போலத்தான் கருதிவந்தார். ஊரில் சற்று மழை பெய்தால் போதும், பார்ப்பவர்களிடமெல்லாம் `நீர்நிலை நிறைந்து ததும்பிவிட்டதா?’ என்று கேட்பார்.

சிவப்புக் கிளி - வசுதேந்திரா

நீர்நிலையில் நிறைய மீன்கள் இருந்தன. அவை நீந்தி விளையாடுவதை நன்றாகப் பார்க்கக்கூடிய வகையில் நீர் தெள்ளத்தெளிவாக இருந்தது. மீன்கள் கூட்டமாக அங்கும் இங்கும் நீந்தி விளையாடும்போது அவற்றுடன் நானும் அக்காவும் ஓடினோம். ஒரு பிடி சட்னிப் பொடியையும் அவலக்கியையும் நான் தண்ணீரில் எறிந்தேன். மீன்கள் ஓடி வந்து கொப்பளிக்கத் தொடங்கின.

“மிகவும் காரமான அவலக்கி. மீன்களுக்கு தொண்டை எரிந்தால் என்ன செய்யும்?” அக்கா மீன்களை நினைத்து மிகவும் கவலைப்பட்டாள்.

அதற்கு நான், “ஹா, ஹா, ஹா! காரமாக இருந்தால் தண்ணீர் குடிக்கும். உனக்கு இதுகூடத் தெரியவில்லையா?” என்று சொல்லிச் சிரித்தேன். நான் சொன்னதைக் கேட்ட  அப்பாவும் மிக அதிகமாகச் சிரித்தார்கள். அக்காவுக்கு அவமானமாக இருந்தது.

“நீ அக்காவை எதிர்த்துப் பேசுகிறாய் அல்லவா, நீ அடுத்த பிறவியில் மீனாகப் பிறப்பாய், பார்த்துக்கொள்” என்று அச்சுறுத்தினாள்.

அவள் சொன்னதைக் கேட்ட நான் பேசாமலா இருப்பேன். “மீனாகப் பிறந்தால் நல்லதுதான். காலையில் எழுந்தவுடன் `பல் தேய்’, `குளி’ என்றெல்லாம் சொல்லி எனக்குத் தொல்லை கொடுப்பதிலிருந்து தப்பித்துவிடலாமே” என்று சொன்னேன்.

“அது மட்டுமல்ல தம்பி... கொஞ்சம் அதிகம் சத்தம்போட்டால் காற்சட்டையில் அசிங்கம் செய்துவிடுவாய் அல்லவா, அந்த நேரத்தில் அம்மா குடத்தில் தண்ணீருடன் வருவார்கள் அல்லவா. அதிலிருந்தும் தப்பித்துவிடலாம்” என்று சொல்லி அக்கா குபீரென்று சிரிக்கத் தொடங்கினாள். அதைக் கேட்டு எனக்கு அவமானமாகிவிட்டது. நான் அக்காவைத் துரத்தினேன். “ஜாக்கிரதை... வழுக்கி விழுந்துவிடுவீர்கள்!” என்று அப்பா உரத்துச் சொன்னார்.

தமாஷான விஷயம் என்னவென்றால், தோட்டத்துக்கான வழி அப்பாவுக்கு மறந்துபோயிற்று! அவர் எத்தனை வருடத்துக்குப் பிறகு வந்திருக்கிறார் என்று யாருக்குத் தெரியும்? எல்லாம் மாறிவிட்டது. சில விவசாய நிலங்களில் வேலி கட்டி சந்து வழிகளை அடைத்திருந்தார்கள். நாங்கள் ஏதேதோ வழிகளில் நடந்தோம். “இங்குதான் எங்கோ  இருக்க வேண்டும். ஒரு புளிய மரம் இருக்கிறது. அதன் பக்கத்திலேயே ஒரு காய்ந்த மரம், ஆமாம்” என்றெல்லாம் அப்பா தைரியமாக என்னென்னவோ தொடர்பற்ற அடையாளங்களை நினைவுகூர்ந்துகொண்டு பத்துப் பதினாறு வழிகளில் எங்களை நடத்திச் சென்றார். என்றாலும், எங்களால் தோட்டத்தைச் சென்றடைய முடியவில்லை. அப்பாவுக்கு அவமானமாக இருந்ததால், கடைசியில் யாரிடமாவது விசாரிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார்.

சற்று தூரத்தில் தம்பதியர் இருவர் வருவதைப் பார்த்தோம். இருவரும் தலையில் விறகுக் கட்டுகள் சுமந்திருக்கிறார்கள். அவர்கள் வரும் திசையில் நாங்கள் நடந்தோம்.

அப்போது நான் கால் வலிக்கிறது என்று சொல்லி களேபரம் செய்தேன். அவர்கள் இருவரும் வெகு நேரமாக அந்த விறகுச் சுமையுடன் நடந்து வந்திருக்க வேண்டும். அதனால், விறகுக் கட்டுகளை கீழே வைத்துவிட்டு எங்களுடன் பேச நின்றார்கள்.

“எங்கள் தோட்டத்துக்கு எப்படிச் செல்வது என்று சொல்கிறீர்களா அண்ணே?” என்று அப்பா அபத்தமாக ஒரு கேள்வி கேட்டார். இந்தக் கேள்வியைச் செவிமடுத்த அந்தப் பெண்மணி, வாயில் புடவைத் தலைப்பை வைத்துக்கொண்டு குலுங்கிச் சிரித்தாள். கணவன் அவளைக் கண்டித்து அமைதிப்படுத்தினான். “முதலாளி, உங்கள் தோட்டம் இங்கே எங்கோதான் இருக்கிறது என்றுதானே சொன்னீர்கள். எனக்குத் தெரியவில்லை. நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” அவர் எங்களிடம் கேட்டார். அப்பா பழையபடி புளியமரம், காய்ந்த மரம், மண் திட்டு, எட்டு ஏக்கர் நிலம் என்றெல்லாம் விவரிக்கத் தொடங்கினார். அப்பா சொன்னதையெல்லாம் கணக்கிட்டுப் பார்த்து அவர், ஏதோ ஒரு திசையைக் காட்டி அந்த வழியில் போகச் சொன்னார். ஆனால், அவர் மனைவி அந்தத் திசையல்ல என்று மறுத்து, வேறு ஒரு வழியில் போகும்படிச் சொன்னாள். இதன் காரணமாக கணவனும் மனைவியும் சச்சரவிடத் தொடங்கினார்கள். அவர்கள் சண்டைபோட்டுக் கொள்வதை நாங்கள் கலக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. “ஈரப்பனின் தோட்டம் எங்கே இருக்கிறது. அவர் மகன் குமாரசாமி என்னுடன்தான் படிக்கிறான்” என்று சொன்னேன். உடனே அவர்கள் இருவரும், “முதலாளி, நீங்கள் ஈரப்பனின் தோட்டத்தையா கேட்டீர்கள்? இதை முன்பே சொல்லியிருக்கலாமே. அது இங்கே பக்கத்தில்தான் இருக்கிறது” என்று ஒருமனதாக, தோட்டம் இருக்கும் பகுதியைக் கையால் சுட்டிக்காட்டினார்கள். அப்பாவுக்கு அடையாளம் கிடைத்துவிட்டது. அவர்கள் விறகுக் கட்டுகளை தலையில் வைத்துக்கொள்வதற்கு உதவிசெய்து, இருவருக்கும் வணக்கம் சொல்லி நாங்கள் முன்னே சென்றோம். தோட்டத்துக்குச் செல்வதற்கு முன்பு அப்பா, “தோட்டம் நம்முடையதுதானே, அது எப்படி ஈரப்பனுடையது ஆகும்?” என்று யாரிடமோ கோபமுள்ளதுபோல சொன்னார். நான் எதுவும் பேசவில்லை.

தோட்டத்தில் ஈரப்பனும் அவர் மகன் குமாரசாமியும் எங்களுக்காகக் காத்திருந்தார்கள். அங்கே விளைந்த நிலக்கடலையையும் அதனுடன் கருப்பட்டியையும் எங்களுக்காக எடுத்து வைத்திருந்தார்கள். குமாரசாமி எனக்கும் அக்காவுக்கும் விளைநிலம் முழுவதையும் காட்டினான். பாதி இடத்தில் சோளமும் பாதி இடத்தில் நிலக்கடலையும் பயிர் செய்திருந்தார்கள். ஆவணி மாதமானதால் அப்போதே அவை நன்றாக வளர்ந்திருந்தன. குமாரசாமி தான் நட்ட சோளச் செடிகளைக் காட்டினான். அதிலிருந்து கதிர் பறித்து எங்களுக்குத் தின்னக் கொடுத்தான். அங்கே ஓர் ஓரத்தில் மிளகாய்ச் செடிகளும் கொஞ்சம் காய்கறிச் செடிகளும் நட்டு வளர்த்திருந்தார்கள். தோட்டத்தைச் சுற்றிலும் வேலி கட்டியிருந்தார்கள்.

ஒரு மூலையில் உள்ளிச் செடிகள் இருந்தன. அப்பா ஒரு உள்ளிச் செடியைப் பிடுங்கி எடுத்து என்னிடம் காட்டி, “உள்ளி மரத்திலிருந்து உதிர்ந்து விழாது. புரிந்ததா?” என்று கேட்டார். நான் எதுவும் பேசாமல் தலையாட்டினேன். குமாரசாமி குலுங்கிச் சிரித்தான்.

தோட்டத்துக்கு வந்த காரணத்தால் நானும் அக்காவும் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தோம். நாங்கள் இருவரும் இஷ்டப்படி செடிகளுக்கு இடையே ஓடினோம். ஒளிந்து பிடித்து விளையாடினோம். சூழ்நிலை மறந்த எங்கள் சந்தோஷ விளையாட்டுகளுக்கு இடையில் ஒரு சம்பவம் நடந்தது. ஒளிந்துகொள்வதற்காக அக்கா, சற்றுத் தூரத்தில் உள்ள செடிகளை நோக்கி ஓடினாள். அவள் ஓடும்போது கொலுசுச் சத்தம் ஒலிக்கவே, பட்டென்று செடிகளுக்கிடையில் இருந்து ஒரு கிளிக்கூட்டம் கத்தியபடியே ஆகாயத்திற்குப் பறந்து சென்றது. ஒரு கிளியோ, அக்காவின் தலையில் பட்டும் படாமலும் உரசிச் சென்றது. சத்தம் கேட்டு அக்கா பயந்து கத்தினாள். நாங்கள் எல்லோரும் அவளிடம் ஓடினோம். காரணம் தெரிந்து எல்லோரும் சிரிக்கத் தொடங்கினார்கள். நானும் அக்காவும் மட்டும் மெய்சிலிர்த்து நின்றோம். அவ்வளவு பக்கத்தில் பத்துப் பதினைந்து கிளிகள் பறந்து சென்றது அதிஆனந்தமான விஷயமாக இருந்தது. சிலிர்த்து நிற்கும் எங்களைப் பார்த்து குமாரசாமி, இன்னும் கொஞ்சம்  தூரத்துக்குச் சென்று உரக்கக் கூவினான். செடிகளுக்கு இடையில் பல இடங்களில்  இருந்த நூற்றுக்கணக்கான கிளிகள் ஒன்றாக எழுந்து பறந்து சென்றன. ஆகாயத்தில் பச்சை மேகம் உருவானது. அவையெல்லாம் ஒன்றாகக் கத்தியபோது விசித்திரமானதொரு ஓசை உரக்கக் கேட்டது. ஏதோ கனவுலகில் சஞ்சரிப்பதுபோன்ற எண்ணம் ஏற்பட்டது. நானும் அக்காவும் பெருமகிழ்ச்சியுடன் கைதட்டினோம்.

 எங்கள் மகிழ்ச்சியை அதிகரிக்கும் நோக்கத்துடன் ஈரப்பன் வேறொரு காரியம் செய்தார். ``சத்தம் போடாதீர்கள்’’ என்று எங்களிடம் சொல்லிவிட்டு, ஓசையற்று அடிவைத்து சற்று தூரம் சென்றார். பிறகு தன் துண்டை எடுத்து ஒரு செடியின் மேல் போட்டு ஒரு கிளியைப் பிடித்தார். கிளியின் கால்களைப் பிடித்துக்கொண்டு எங்களிடம் வந்தார். அந்தக் கிளி, பிடியிலிருந்து விடுபட முயன்று, கடைசியில் சோர்ந்துபோய் கழுத்தைத் திருப்பி அங்கும் இங்கும் பார்க்கத் தொடங்கியது. உடல் முழுதும் பலவகை பச்சை நிற இறகுகள் கொண்ட அந்தக் கிளியின் சிவப்பு அலகு மிகவும் வசீகரமாய் இருந்தது. சிறு குழந்தையைப் போன்று தோன்றிய அந்தக் கிளி கண்களை முழித்து பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தது. குமாரசாமி ஒரு பச்சைமிளகாயைப் பறித்துக்கொண்டு வந்து அதற்குக் கொடுத்தான். அது மகிழ்ச்சியுடன் மென்று தின்றது. “இது பச்சைமிளகாய்தான் சாப்பிடுகிறது. அதனால்தான் இது பச்சை நிறமாக இருக்கிறது.” அக்கா தன் விளக்கத்தை அளித்தாள்.

“இவை காரமான மிளகாயைத் தின்கின்றன. அதனால்தான் இவற்றின் அலகு சிவப்பு நிறமாக இருக்கிறது” என்று நானும் என் பங்கைச் சேர்த்தேன்.

ஈரப்பன் என்னிடம், அதைக் கொஞ்சம் தொட்டுப் பார்க்கும்படிச் சொன்னார். மனதுக்குள் அச்சமாக இருந்தது. ஆயினும் ஆசையால் அதன் வயிற்றில் சற்று தொட்டுப்பார்த்துவிட்டு உடனே கையைப் பின்னால் இழுத்துக்கொண்டேன். அந்தக் கிளி அப்போதே நான் தொட்ட பகுதியை தன் அலகால் உரசி சுத்தப்படுத்திக்கொண்டது.  குமாரசாமி அதைத் தடவினான். முடிந்த இடத்திலெல்லாம் அது தன் அலகால் உரசிக்கொண்டது. அந்த நேரத்தில் அது தன் உடலை சுத்தப்படுத்திக்கொள்வதில் காட்டும் சிரத்தை மிகவும் சிறப்பாக இருந்தது. ஈரப்பன் அதைப் பற்றி விவரித்தார். “கிளி மிகவும் அழகாக இருக்கும் முதலாளி. கொஞ்சம் அழுக்கு பட்டாலும் போதும், உடனே அலகால் உடலை உரசி அழகுபடுத்திக் கொள்ளவில்லை என்றால் உண்ட ஆகாரம் அதற்கு செரிக்காது.” நான் ஈரப்பனிடம் சொன்னேன். “பாருங்கள் ஈரப்பா, நீங்கள் தினமும் குளிப்பதுகூட இல்லை. உங்கள் பக்கத்தில் வந்தால் கடும் நாற்றம்.” இதைக் கேட்டு எல்லோரும் சிரித்தார்கள். “சின்ன முதலாளி, நான் தோட்டத்தில் வேலை செய்து விளைவிக்கிறேன். நான் விளைவித்ததை என் மகன் சாப்பிடுகிறான். எனக்கும் யாராவது இப்படிச் சாப்பாடு போட்டால், நானும் தினமும் குளிப்பேன்”என்றார் ஈரப்பன். அவர் சொன்னதைக் கேட்டு எல்லோரும் சிரித்தார்கள். “நீங்கள் எல்லோரும் கிளிகளைப் பார்த்து சந்தோஷப்படுகிறீர்கள். ஆனால், அவற்றைப் பார்த்தால் எங்களுக்குக் கோபம்தான் வருகிறது. என் மகன் பயிர் செய்வதையெல்லாம் அவை தின்றழிக்கும்.

விரட்டலாம் என்று பார்த்தால், அவற்றின் பச்சை நிறத்தின் காரணமாக செடிகளுக்கிடையில் அவை எங்கே இருந்தாலும் கண்டுபிடிக்க முடியாது” என்று ஈரப்பன் குறைபட்டுக்கொண்டார். அவருடைய இந்தப் பிரச்னைக்கு நான் ஓர் அழகான தீர்வு சொல்லிக் கொடுத்தேன். “அடுத்த முறை இங்கே வரும்போது நான் என் சாயப் பொடியுடன் வருகிறேன். நீங்கள் ஒவ்வொரு கிளியாகப் பிடித்துக் கொடுத்தால் நான் அதன் உடல் முழுதும் சிவப்பு நிறம் பூசுகிறேன். எல்லாக் கிளிகளையும் சிவப்பு நிறமாக மாற்றிவிடலாம். அதன் பிறகு அவை தோட்டத்துக்கு வந்தால் நீங்கள் அவற்றை எளிதாகக் கண்டுபிடித்து விடலாம்.” என்னுடைய இந்த விவரங்கெட்ட யோசனையைக் கேட்டு எல்லோரும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்கள். என் கற்பனை அக்காவுக்கு மட்டும் மிகவும் பிடித்திருந்தது.

“பச்சைச் செடிகளுக்கு மேலே சிவப்புக் கிளிகள் இருந்தால், அந்த அழகான காட்சியைப் பார்ப்பதற்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அப்படித்தானே?! செடிகள் அனைத்திலும் செம்பருத்திப் பூக்கள் மலர்ந்திருப்பதுபோலத் தோன்றும்” என்று இரண்டு கைகளையும் கன்னத்தில் வைத்து கனவு காண்பதுபோல அவள் சொன்னாள். ஈரப்பன் கிளியைப் பறக்கவிட்டார். அது மகிழ்ச்சியுடன் கத்திக்கொண்டு முடிவிலியில் பறந்தது.

அக்கா தோட்டத்தில் பூஜை செய்வதற்கான ஏற்பாட்டில் மூழ்கியிருக்கும்போது, நான் அமைதியாக ஈரப்பனை சற்று தூரம் அழைத்துக்கொண்டு வந்தேன். “அது எங்கே வந்தது?” நான் மென்மையாகக் கேட்டேன். “என்ன முதலாளி?” அவர் வேண்டுமென்றே உரத்த குரலில் கேட்டார்.
“அதுதான், ஏழு படங்கள் உள்ள பாம்பு!” நான் நினைவுபடுத்தினேன்.

சிவப்புக் கிளி - வசுதேந்திரா

“ஓ… அதுவா முதலாளி, எங்கே என்று சொல்ல முடியாது. விவசாய இடம் முழுதும் ஊர்ந்து போகும். ஒரு நாள் தோட்டத்துக்கு நடுவில் கிடக்கும். இதோ பேய்போல அந்தப் புளிய மரம் இருக்கிறதல்லவா, அதைச் சுற்றிக்கொண்டு மரத்துக்கு குடை பிடிப்பது போல படம் விரித்துக்கொண்டு நிற்கும். சில சமயம் அதோ தெரியும் அந்தச் சிறிய குன்றின் மேலே கலசம்போல இருக்கும். இப்போது கொஞ்சம் நினைத்தால் போதும், அது இங்கே எங்காவது வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.” அவர் சொன்னார். அப்போது செடிகளுக்கிடையில் ஏதோ சத்தம் கேட்டது. நான் பயந்து ஈரப்பனின் கையைப் பிடித்துகொண்டு அவரை ஒட்டி நின்றேன். அச்சம் நிறைந்த கண்களால் நான் சப்தம் வந்த திசையைப் பார்த்தேன். ஏதோ ஒரு பிராணி எங்களை நோக்கி செடிகளுக்கிடையில் வந்துகொண்டிருந்தது. நொடிக்கு நொடி சத்தம் அதிகரித்தது. நாகத்தின் தலையின் மீது அமர்ந்து சவாரி செய்யக்கூடிய தைரியமுள்ள ஈரப்பனை அது ஒன்றும் செய்யாது. ஆனால், என்னை?!

செடிகளை விலக்கிக்கொண்டு அக்கா தோன்றினாள். “நீயா?” நான் ஏமாற்றத்துடன் உரத்துக் கேட்டேன். அக்கா வந்து ஒரு முத்தம் தந்து, “நான்தான், இந்தா பிரசாதம் சாப்பிடு” என்று சொல்லி வெல்லமும் தேங்காயும் வறுத்த பயறும் சேர்த்துக் கலந்து செய்த விசேடப் பிரசாதத்தை எங்கள் கையில் தந்தாள். நான் ஆசையுடன் தின்னத் தொடங்கினேன். “எனக்கு இன்னொரு பிடி கொடு மகளே…” என்று சொல்லி ஈரப்பன் இன்னொரு முறை பிரசாதம் வாங்கினார். அக்கா அந்த இடத்திலிருந்து சென்ற பிறகு, “நாகத்துக்கு பிரசாதம் என்றால் மிகவும் பிடிக்கும் முதலாளி. அதனால்தான் ஒரு பிடி அதிகமாக வாங்கினேன்” என்று சொல்லி சிரித்தார். “எல்லாம் பொய்” என்று சொல்லி நான் என் சிறு கரங்களால் அவரை அடிக்கத் தொடங்கினேன். நான் அடிக்குந்தோறும் அவர் சிரிப்பு அதிகரித்தது.

நான் பொறியியல் படிப்பின் கடைசி கட்ட தேர்வு எழுதி முடித்து ஊருக்குத் திரும்பி வந்தபோது, எங்கள் தோட்டத்துடன் தொடர்புடைய ஒரு சம்பவம் நடந்தது. தேர்வு நடந்துகொண்டிருக்கும் கால அளவில் அப்பா ஒருமுறை தொலைபேசி செய்திருந்தார். வார்டனின்  அறையில் மட்டும்தான் தொலைபேசி இருந்தது. முதலில் ஒருமுறை தொலைபேசி செய்து என்னை அழைக்கும்படி சொல்லியிருந்தார். எனக்கோ, மறு முனையில் என்ன செய்தியாக இருக்கும் என்று தெரியாததால், நெஞ்சு அடித்துக்கொண்டது. ஏறத்தாழ அரை மணி நேரம் அப்பாவுக்கு லைன் கிடைக்கவில்லை. நான் அவரைத் தொலைபேசியில் அழைத்துப் பேசலாம் என்றால், கையில் பணம் இல்லை. வீட்டிலோ, தொலைபேசியும் இல்லை. கடைசியில், பெல்லடித்த நொடியே நான் ஒலிவாங்கியை எடுத்தேன். எடுத்த எடுப்பிலேயே நான் சற்றுப் பதற்றமாக, “அப்பா எல்லோரும் நன்றாக இருக்கிறீர்கள்தானே?” என்றுதான் கேட்டேன். “அக்கா கல்யாணம் நிச்சயமாகியிருக்கிறது!” அப்பா சந்தோஷமாகச் சொன்னார். அப்பாவின் குரலில் கண்ணீர் ததும்புகிறது என்று எனக்குப் புரிந்தது. “வரன் சிந்தனூர். கோபன்னா வாத்தியாருக்கு தூரத்து உறவு.

விஷயங்களையெல்லாம் பேசி முடிவு செய்ய அவர்தான் அழைத்துச் சென்றார். நம் நிலைமைக்கு அதிகமான சீதனம் கேட்டார்கள். வேண்டாம் என்று சொன்னபோது, எல்லோரும் கூடி முடிவு செய்துவிட்டார்கள் மகனே… இப்போது அதையெல்லாம் எப்படிச் சரிசெய்வது என்று நினைத்தால் தூக்கமே வருவதில்லை.

உன்னிடம் ஏதாவது கேட்கலாம் என்று பார்த்தால், நீ படிப்பதற்கு வாங்கிய கடனே பெரிது” என்று அப்பா கவலைப்பட்டார். “பரவாயில்லை அப்பா… ஏதாவது செய்யலாம். கணவன் வீட்டில் இருந்தால்போதும், அக்கா நன்றாக இருப்பாள்” என்று நான் அப்பாவை சமாதானப்படுத்தினேன்.

வீட்டுக்குச் சென்றபோது அப்பா, தோட்டத்தை விற்கும் காரியத்தைப் பற்றி என்னிடம் சொன்னார். ஊரில் உள்ள பணக்காரர் ஒருவர் அந்த இடத்தை வாங்கத் தயாராக இருக்கிறார். அவர் முதலிலெல்லாம் அந்த இடம் வேண்டாம் என்று நிராகரித்தாலும் அப்பா தன் குடும்பக் கஷ்டத்தையும் மகளின் கல்யாண விஷயத்தையும் அவர் மனம் இளகும்படி எடுத்துச் சொன்ன பிறகுதான், அவர் வாங்குவதாக ஏற்றுக்கொண்டார். “முன்னோர்களிடமிருந்து கிடைத்த சொத்தை விற்பதற்காக மிகவும் வருத்தப்படுகிறேன்” என்று அப்பா தன் கவலையை என்னிடம் சொல்லிப் பெருமூச்சுவிட்டார். பிறகு, மாற்றி எழுதிய பத்திரத்தை என்னிடம் காட்டியவாறு,  “உனக்குச் சேர வேண்டிய சொத்து இது. பரம்பரையாகக் கிடைத்தது. நீ இப்போது பெரியவனாகிவிட்டாய். நீ கையெழுத்துப்போடவில்லை என்றால், இடத்தை விற்க முடியாதாம். அக்காவின் கல்யாணத்துக்காக வேறு பணம் எதுவும் நான் சம்பாதிக்கவில்லை மகனே. எதுவும் தவறாக நினைக்காமல், இந்தப் பத்திரங்களில் கையெழுத்துப்போடு.” அப்பா பணிவாகக் கேட்டுக்கொண்டார்.

அப்பா என்னிடம் இப்படி தாழ்மையாகக் கேட்டது எனக்கு முற்றிலும் கலக்கமேற்படுத்தியதால் நான் வேறு எதுவும் யோசிக்காமல், அந்த ஆவணங்களில் பெருக்கல் குறி இட்டிருந்த இடத்திலெல்லாம் கையெழுத்துப் போட்டேன். அந்த ஆவணங்களைக் கொடுத்துவிட்டு நான் அப்பாவின் இரு கரங்களையும் சேர்த்துப் பற்றிக்கொண்டேன். அப்பா நடுங்கினார்.

தேர்வு முடிந்து வீட்டுக்கு வந்த மறுநாள் ஈரப்பனை வீட்டுக்கு அழைத்து வர அப்பா ஆள் அனுப்பினார். எப்போதும் நான்தான் போய் அழைத்து வருவேன் என்றாலும் இந்த முறை என்னைப் போக வேண்டாம் என்று சொல்லிவிட்டு, ஒரு பையனை அனுப்பினார். விஷயம் என்னவென்று தெரியாமல், ஈரப்பன் அவசரமாக வீட்டுக்கு வந்தார். வீட்டில் அப்பாவுடன் கோபன்னா வாத்தியாரும் காசிம் சாகிபும் இருப்பதைப் பார்த்து, விஷயம் வேறு ஏதோ என்று புரிந்துகொண்டு வியப்பான கண்களுடன் ஒரு மூலையில் அமர்ந்தார். வீட்டுச் சூழலில் வெளிச்சம்
படுவது குறைவாக இருந்ததால், இருட்டில் அமர்ந்திருந்த அவர் கண்கள் பளபளவென்று ஒளிர்ந்தன.

கோபன்னா வாத்தியார் பேச்சைத் தொடங்கினார். முதலில் அக்காவின் கல்யாணத்தைப் பற்றிய நல்ல செய்தியைச் சொல்லி, அதன் பிறகு கல்யாணத்துக்கு ஆகும் செலவுகளை விவரித்து, கடைசியில் விவசாய நிலத்தை விற்பது பற்றிச் சொன்னார். “நீ இத்தனை வருடங்களாக அதைப் பராமரித்து வந்திருக்கிறாய். உன் உழைப்பின் மதிப்பைக் குறைத்து மதிப்பிடவில்லை. உன்னையும் குடும்பத்தில் ஓர் உறுப்பினராகக் கருதி ஒரு பாகத்தை உனக்காக ஒதுக்கிவைத்திருக்கிறோம். அதை வாங்கிக்கொண்டு மங்கள காரியத்துக்குத் தடை எதுவும் இல்லாதபடி இந்தப் பத்திரங்களில் கையெழுத்துப்போடு” என்று சொல்லி ஐயாயிரம் ரூபாயை அவர் கையில் கொடுத்தார். ஈரப்பன் ஒருபோதும் அவ்வளவு பணத்தை மொத்தமாகப் பார்த்திருக்க மாட்டார். அதைக் கையில் பிடிப்பதற்கு அவருக்கு அச்சமாக இருந்தது. அவர் உடல் நடுங்கியது. அதை எண்ணிப் பார்க்கக்கூட அவருக்குத் தெரியாது. மேற்கொண்டு எதுவும் பேசாமல் ஈரப்பன் பத்திரங்களில் தேவையான இடங்களில் தன் கட்டைவிரலை அழுத்தினார். விரலில் படிந்திருந்த மையைத் தன் துண்டில் துடைத்துக்கொண்டார்.

காசிம் சாகிப் முன்கூட்டி யோசித்துக்கொண்டு, “உன் மகன் குமாரசாமியிடமும் ஒரு கையெழுத்து வாங்க வேண்டும். அவனைக் கூப்பிடு” என்று சொன்னார். ஈரப்பனை அழைக்கச் சென்ற அதே பையன்தான் குமாரசாமியையும் அழைத்து வந்தான். குமாரசாமி என்னைவிட உயரமாகவும் பருத்தும் இருந்தான். அங்கேயே ஒரு கல்லூரியில் பி.ஏ சேர்ந்திருந்தான் என்றாலும் தொடர்ந்து படிக்க முடியாததால் தன் அப்பாவுடன் சேர்ந்து விவசாய வேலைகள் செய்கிறான்.  பேன்ட்டும் டிஷர்ட்டும் அணிந்திருந்தான். டிஷர்ட்டுக்குப் பித்தான்கள் இல்லை. வீட்டில் அத்தனை பேர் கூடியிருப்பதைக் கண்டு சந்தேகத்துடன் என்னைப் பார்த்தான்.  நான் தலைகுனிந்து நின்றேன்.

கோபன்னா வாத்தியார் மீண்டும் எல்லா விஷயங்களையும் விவரித்து, பேனாவையும் பத்திரங்களையும் அவனிடம் நகர்த்தி கையெழுத்துப் போடும்படி உத்தரவிட்டார். குமாரசாமி பத்திரங்களை எடுத்துப் படித்துப்பார்த்தான். பிறகு கையெழுத்துப் போடாமல் அப்பாவின் முன்னால் நகர்த்தி வைத்துக்கொண்டு, “தோட்டத்தை விற்றால் நாங்கள் என்ன செய்வோம் முதலாளி? இத்தனை வருடங்களாக அதை நம்பித்தான் அப்பா இருந்தார். இனி என்ன செய்வோம்?” என்று தைரியமாகக் கேட்டான். காசிம் சாகிப் ஐயாயிரம் ரூபாய் கொடுத்த விஷயத்தை நினைவுபடுத்தினார். ஈரப்பன் பணத்தை மகனிடம் காட்டினார். குமாரசாமி அதில் மகிழ்ச்சியடையவில்லை. “இந்த ஐயாயிரம் எத்தனை நாளைக்கு வரும்? எங்களுக்குத் தோட்டம் போதும். பணத்தை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னான் அவன்.

ஈரப்பனுக்கு மகனின் இந்தக் குணம் முற்றிலும் பிடிக்கவில்லை. வயதானவர்களை இப்படி எதிர்த்துப் பேசி ஆணவமாக நடந்துகொள்கிறானே என்று அவருக்குக் கோபம் பொங்கி வந்தது. “குமாரா… வாயை மூடிக்கொண்டு கையெழுத்துப் போடடா! பெரிய அறிவு இருப்பதாகக் காட்டிக்கொள்ளாதே. நாலெழுத்து படித்திருக்கிறேன் என்ற அகம்பாவத்தை ஒன்றும் இங்கே காட்ட வேண்டாம்… உன்னைவிடப் படித்த ஆட்கள் இங்கே இருக்கிறார்கள்” என்று ஈரப்பன் கத்தினார். குமாரசாமி, தன் அப்பாவின் வார்த்தைகளை மதிக்காமல்,  “இதெல்லாம் உங்களுக்குத் தெரியாது.

நீங்கள் பேசாமல் இருங்கள்” என்று எதிர்த்துப் பேசினான். அத்தனை ஆட்கள் இருக்கும்போது தன்னை எதிர்த்துப் பேசிய மகன் மீது ஈரப்பனுக்கு கடும்கோபம் ஏற்பட்டது. அங்கே வாசலில் கிடந்த ஒரு கம்பை எடுத்து, தொடையில் அழுத்தி இரண்டு துண்டாக ஒடித்து, மகனைத் தாறுமாறாக அடிக்கத் தொடங்கினார். குமாரசாமி, அப்பா தன்னை அடிப்பார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. வலி தாங்க முடியாமல் நெளிந்து அங்கும் இங்கும் ஓட ஆரம்பித்தான். சமயலறையிலிருந்து அம்மா, “மகனை அடிக்க வேண்டாம் ரண்டே கண்டா…”என்று சத்தம் போட்டார்கள். மற்றவர்கள் பயந்து அரண்டுபோய் அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். பத்துப் பதினைந்து அடிகள் வாங்கிக்கொண்ட பிறகு குமாரசாமி தன் அப்பாவின் கரங்களை பலமாகப் பிடித்துக்கொண்டான். எவ்வளவுதான் உதறி முயன்றாலும் ஈரப்பனால் அந்தப் பிடியிலிருந்து விடுபட முடியவில்லை. கடைசியில் குமாரசாமி கம்பைப் பிடுங்கி வாசல் கிணற்றங்கரையை நோக்கி வீசியெறிந்தான். சக்தியையெல்லாம் சோர்ந்து களைத்துப்போன ஈரப்பன் அங்கேயே அமர்ந்தார்.

“வாத்தியாரே, அந்தப் பத்திரங்களைக் கொடுங்கள்… எங்கே கையெழுத்துப்போட வேண்டும் சொல்லுங்கள்!” என்று குமாரசாமி வேதனையுடன் கோபன்னா வாத்தியாரிடம் கட்டளையிட்டான். கோபன்னா வாத்தியார் பயத்துடன் பத்திரங்களை அவனுக்கு முன்னால் வைத்து, கையெழுத்துப்போட வேண்டிய இடங்களை நடுங்கும் கரத்தால் சுட்டினார். குமாரசாமி மீண்டும் கேள்வி எதுவும் கேட்காமல் எல்லா பத்திரங்களிலும் கையெழுத்துப்போட்டுக் கொடுத்தான். அதன் பிறகு எதுவும் பேசாமல் கால்களை நீட்டி இழுத்துக்கொண்டு வீட்டிலிருந்து இறங்கிச் சென்றான்.

சற்று நேரத்துக்கு யாரும் எதுவும் பேசவில்லை. கோபன்னா வாத்தியார் பத்திரங்களையெல்லாம் அமைதியாகப் பரிசோதித்து முடித்து அப்பாவிடம் காட்டினார். நிலைமையை சற்று இலகுபடுத்துவதற்காக காசிம் சாகிப், “எல்லோருக்கும் காபி கொண்டு வா அக்கா” என்று அம்மாவிடம் சொன்னார். அம்மா ஒரு தட்டில் காபி டம்ளர்களுடன் வந்து ஒவ்வொருவருக்கும் கொடுத்தார்கள். ஈரப்பன் மட்டும் குடிக்கவில்லை. எல்லோருக்கும் வணக்கம் சொல்லி புறப்பட்டுப் போனார். அவர் குடிக்காமல் வைத்துச் சென்ற டம்ளரில் ஈக்கள் முத்தமிடத் தொடங்கின. வாழ்க்கையில் முதன்முதலாக ஈரப்பன் எங்கள் வீட்டிலிருந்து எதுவும் குடிக்காமல் போனார்.

அன்று இரவு ஈரப்பன் நன்றாகக் குடித்துவிட்டு வந்து எங்கள் வாசலில் பாட்டுப் பாடி நடனமாடினார். நான் வாசலுக்குச் சென்றபோது, “உங்கள் அப்பா பெரிய மனதுக்காரர். ஐயாயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறார்” என்று உரத்த குரலில் சொன்னார். அவரது பாட்டும் ஆட்டமும் அதிகரித்தபோது என்ன செய்வது என்று தெரியாமல் நாங்கள் தர்மசங்கடத்துக்கு ஆட்பட்டோம். கதவைச் சாத்திவிட்டு படுக்கும்படி அப்பா எல்லோரிடமும் சொன்னார். வெகுநேரம் எனக்குத் தூக்கம் வரவில்லை. இரவு எப்போதோ குமாரசாமியும் நரசக்காவும் வந்து ஈரப்பனை அழைத்துக்கொண்டு சென்றார்கள்.

மறுநாள் மதியத்துக்குச் சமீபமாக ஈரப்பன் பளபளப்பான ஒரு தடியைக் கொண்டு வந்து அம்மாவின் முன்னால் வைத்தார். “நேற்று கோபத்தால் ஒடித்துவிட்டேன்” என்று சொல்லி வருத்தப்பட்டார்ஏறத்தாழ  இருபது வருடங்களுக்குப் பிறகு நான் மீண்டும் என் ஊருக்குப் புறப்பட்டேன். அந்த ஊரில் கொஞ்சம் நினைவுகள் மட்டும் இருக்கின்றன என்பதைத்  தவிர, வேறு எதுவும் அங்கே இல்லை. விவசாய நிலத்தை அப்பாவே விற்றுவிட்டார். அப்பா அம்மாவின் மறைவுக்குப் பிறகு, நான் இரண்டு வருட காலம் அந்த வீட்டில் வசித்தேன். பிறகு அதை விற்றேன். பெங்களூரில் வீடு வாங்கிய பிறகு ஊரில் உள்ள வீடு வெறும் அற்ப ஆஸ்தியாக எனக்குத் தோன்றியிருந்தது. அதை விற்றுக் கிடைக்கும் பணத்தால் பெங்களூரில் ஒரு குளியலறையைக்கூட வாங்க முடியாது என்று நண்பர்களிடம் தமாஷ் பேசுவேன்.

இந்த முறை ஊருக்கு வருவதற்கு ஒரு முக்கியமான காரணம் இருந்தது. நான் படித்த பள்ளியின் ஆண்டு விழாவுக்காக என்னை முக்கிய விருந்தினராக அழைத்திருந்தார்கள். பண்ட்ரி வாத்தியார் தானே தொலைபேசி செய்து, “வராமல் இருந்துவிடாதே மகனே… நீ படித்த பள்ளி. மறக்காமல் வரவேண்டும். எப்படி சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஆகலாம் என்று பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்” என்று சொல்லியிருந்தார். பிரம்பு பிடித்து சொல்லிக்கொடுத்த ஆசிரியரிடம் வர இயலாது என்று சொல்வது சாத்தியமா? அன்புடன் சம்மதம் தெரிவித்தேன்.

என்னுடன் படித்திருந்த  நண்பன் மஞ்சுநாதன், இப்போது அங்கே ஓர் உருக்கு ஆலையில் வேலைசெய்கிறான். தன் வீட்டில்தான் தங்க வேண்டும் என்று அவன் மிகவும் கட்டாயப்படுத்தினான். அவனுடன் ஒரு நாளைச் செலவிடலாமே என்று நானும் மகிழ்ச்சியடைந்தேன். அவன் கல்யாணம் முடிந்திருந்தது. இப்போது அவனுக்கு அழகான ஒரு மகள் இருக்கிறாள்.  உருக்கு ஆலைக்காரர்கள்தான் அவனுக்கும் குடும்பத்துக்கும் வசதியான ஒரு வீடு கொடுத்திருக்கிறார்கள்.

பள்ளி பழையநிலையில்தான் இருந்தது என்றாலும் சில பிரத்தியேக மாற்றங்களும் ஏற்பட்டிருந்தன. மாணவிகள் எல்லோரும் சுடிதார் அணிந்திருந்தார்கள். பாவாடை, சட்டை அணிந்த ஒரு மாணவியைக்கூடப் பார்க்க முடியவில்லை. என் சிறுவயதில் வட இந்தியாவில் இருந்து வந்த ஒரு மாணவி சுடிதார் அணிந்து வந்ததற்காக வகுப்பு ஆசிரியர் அவளைக் கடிந்துகொண்டு வீட்டுக்குத் திருப்பி அனுப்பினார். அவள் அழுதுகொண்டு வீட்டுக்குச் செல்லும்போது அதைப் பார்த்து மற்ற குழந்தைகளுடன் நானும் சிரித்திருக்கிறேன். அறிவியல் விழாவில் எல்லாப் பிள்ளைகளும் என்னிடம் ஆங்கிலத்தில் விவரிப்பதற்காகப் போட்டிபோட்டார்கள். கன்னடத்தில் பேசும்படிச் சொன்னபோது, “ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று ஆசிரியர் சொல்லியிருக்கிறார் சார்” என்று தங்கள் நிராதரவான நிலையைத் தெரிவித்தார்கள். இது இரண்டைவிட வித்தியாசமாக இருந்த மற்றொரு மாற்றம் என்னவென்றால், பள்ளியில் எல்லாப் பிள்ளைகளுக்கும் நல்ல சாப்பாடு ஏற்பாடு செய்திருந்தார்கள். சிறுவயதில் எங்களுக்கெல்லாம் இரண்டு சாக்லேட்; அதிகமென்றால் கொஞ்சம் லட்டுத் தூள் தருவார்கள். “இவ்வளவு பணம் எங்கிருந்து கிடைக்கிறது?” நான் என் நண்பனிடம் கேட்டேன். அவன் தாழ்ந்த குரலில், “சுரங்கம்” என்று சொல்லி, வேறு எதுவும் பேச வேண்டாம் என்று கூறி அமைதியடைந்தான். என்னுடன் ஒரு சுரங்க முதலாளியும் மேடையைப் பங்கிட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சிகள் எல்லாம் முடிந்த பிறகு நண்பன் என்னை ஹம்பி விரைவு ரயிலில் அனுப்புவதற்காக தன் காரில் ஹொஸபேட்டுக்கு அழைத்துச் சென்றான். சாலை மிகவும் பயங்கரமாக இருந்தது. சுரங்க லாரிகள் தினமும் ஓடிக்கொண்டிருப்பதால், சாலை என்றோ தொலைந்துபோயிருந்தது. ஆழமான பள்ளங்கள் காரை அப்படியே விழுங்கக்கூடிய வகையில் பெரிதாக இருந்தன. சாலை முழுவதையும் சிவப்பு மண் தூசு மூடியிருந்தது. புளிய மரம், மைல்கல், புதர்காடுகள், தெருவிளக்குகள் எல்லாம் சிவப்பு மயம். முன்பு நான் பார்த்திருந்த சாலையைப் பற்றி நினைத்துப்பார்த்தபோது இதயம் வெடித்துவிடும்போலிருந்தது.

கார், சிவபுரம் கோயிலைக் கடந்து சென்ற நொடியில், எனக்கு எங்கள் பழைய தோட்டம் நினைவுக்கு வந்தது. “மஞ்சு, காரைக் கொஞ்சம் நிறுத்து. இந்த இடத்தில் எங்கள் தோட்டம் இருந்தது.” நான் சொன்னேன். மஞ்சு காரை நிறுத்தி “உண்மையாகவா?” என்று கேட்டான். “ஆமாம், அப்பாவுக்கு எட்டு ஏக்கர் நிலம் இங்கே இருந்தது. அக்காவின் கல்யாணச் செலவுகளுக்காக அதை விற்றோம்.” நான் சொன்னேன். “ச்சே, ச்சே! நீங்கள் என்ன வேலை செய்துவிட்டீர்கள்! இடம் கையிலிருந்தால், இப்போது ஒரு ஏக்கருக்கு ஏறத்தாழ ஒரு கோடி ரூபாய் கிடைத்திருக்கும். இந்த இடங்களில் எல்லாம் சுரங்க மண் இருக்கிறது” என்று அவன் வருத்தப்பட்டான். என் கண் முன்னால் எட்டு கோடி ரூபாய் புரண்டு விழுந்தது. நான் அதிகமென்று நினைக்கும் சாஃப்ட்வேர் சம்பளம் அந்தக் கோடிகளுக்கு முன்னால் அற்பமென்று தோன்றியது. ஒரு நொடி நேரம், எல்லாம் போய்விட்டதே என்று நினைத்துத் துயரமாக இருந்தது. ஆனால் முன்னரே,  பணத்தைவிட முக்கியமான பல விஷயங்கள் இருக்கின்றன என்ற உண்மையைப் பல சந்தர்ப்பங்களில் அனுபவத்தில் இருந்து புரிந்துகொண்டிருந் திருக்கிறேன். அதனால் மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டேன். “மஞ்சு... அதிர்ஷ்டம் எப்படி இருக்கிறதோ அப்படித்தான் நமக்குக் காரியங்களெல்லாம் நடக்கும். அந்தக் காலத்தில் நிலத்தை விற்றதால், அக்காவை கல்யாணம் செய்து கொடுக்க முடிந்தது. இன்று அக்காவுக்கு அருமையான இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். ஒரு குழந்தை எட்டாம்  வகுப்பும் மற்றொரு பிள்ளை பத்தாம் வகுப்பிலும் படிக்கிறார்கள். குடும்பத்தை மைத்துனர் நல்ல முறையில் பார்த்துக் கொள்கிறார். அவர்கள் வீட்டுக்குச் சென்றால் மகிழ்ச்சியாக இருக்கும். இந்த எட்டு கோடி அதையெல்லாம் தந்திருக்கும் என்பதற்கு என்ன உறுதி? விடு” என்று நான் சொன்னேன். “நீ இப்போதே பெரிய ஞானி ஆக முயற்சி செய்கிறாயா?” என்று மஞ்சு என்னைச் சீண்டினான். புளிய மரத்தின் கீழே காரை நிறுத்தி சிவப்புத் தூசு நிறைந்த வழியினூடே எங்கள் விவசாய நிலத்தை நோக்கிச் சென்றோம்.

சிவப்புக் கிளி - வசுதேந்திரா

அங்குள்ள காட்சியைப் பார்த்து எனக்குப் பேரதிர்ச்சி ஏற்பட்டது. அங்கே விவசாய நிலம் இல்லை. வெறும் சிவப்பு மண்ணுள்ள வயல். சுவடுகள் வைத்தால் தாமரைப் பூக்கள் இருக்கவேண்டிய இடத்திலெல்லாம், எங்கள் தோட்டத்தின் தாமரைப் பூக்களின் ரத்தம் வழிவதுபோல தோன்றியது. அங்கே ஆழமான குழிகள் தோண்டப்பட்டிருந்தன. கண் பார்த்த இடத்தில் எல்லாம் குழி தோண்டிக்கொண்டிருந்தார்கள். இந்த இடம் முன்பு விவசாயம் செய்து விளைச்சல் எடுத்த இடம் என்று கடவுள் மீது ஆணையிட்டுச் சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள். தேடித்தேடிப் பார்த்தாலும் அங்கே ஒரு புல்லைக்கூடப் பார்க்க முடியாதுபோலிருக்கிறது. வயல் முழுதும் நூற்றுக்கணக்கான மண் தோண்டும் யந்திரங்கள் ஒரேபோன்று செயல்பட்டுக் கொண்டிருந்தன. மண்கொண்டு போவதற்காக ஏறத்தாழ ஆயிரம் லாரிகள் வரிசை வரிசையாக நின்றுகொண்டிருந்தன. இங்கிருந்து எடுக்கும் மண்ணை சீனாவுக்கு ஏற்றுமதி செய்கிறார்களாம். கொஞ்சம் மண்ணுக்கு ஐம்பது ரூபாய் விலையாம்! வேலைசெய்யும் ஆட்கள் அத்தனை பேரும் மண்ணில் குளித்திருந்தார்கள். அவர்கள் சுவாசிக்கும் காற்றில் மண் தூசுகள் அல்லாது வேறு ஒன்றும் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை.

குழிகளால் நிறைந்த அந்த இடத்தில் வெகு அநாயாசமாக ஓடியவாறே வேலை செய்த அந்த மிகப் பெரிய எந்திரங்கள் என்னை ஈர்த்தன. ஏதாவது ஓர் எந்திரத்தை பக்கத்தில் நின்று பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தைச் சொன்னேன். நண்பன் எங்களுக்குப் பக்கத்தில் செயல்பட்டுக்கொண்டிருந்த எந்திரத்துக்கு அருகே என்னை அழைத்துச் சென்றான். வாய் அகன்ற பாத்திரம்போன்று மிகப் பெரிய கூடை பொருத்திய உலோகக் கை கொண்டு அந்த எந்திரம் தனக்குச் சுற்றுமுள்ள எந்தப் பக்கத்திலும் வளையும். ஒருமுறை அதன் கூடையின் கூர்மையான பற்கள் நிலத்தில் குத்தினால் போதும், நிலம் முழுதும் நிராதரவுடன் சரணடைந்துவிடும். தன் கூடை முழுதும் சிவப்பு மண் சுமந்து அதை அப்படியே கொண்டு சென்று லாரிகளின் உடலில் கொட்டிக் காலியாக்கி தன் எல்லா பற்களையும் காட்டிக்கொண்டு நிற்கும். அந்த எந்திரத்தின் எல்லா செயல்பாடுகளையும் சில பித்தான்களைக் கொண்டு இயக்கிய ஒரு மனிதன் அந்த இயந்திரத்துக்குள் இருந்தான். அந்த மனிதன் மிகவும் உயரத்தில் இருந்த காரணத்தால், ஒரு கொக்கைப்போன்று காணப்பட்டான். அந்த எந்திரத்தின் எல்லா அசைவுகளையும் நான் என் கேமராவில் படம்பிடித்தேன். அது தன் வாய் அகன்ற பாத்திரத்தை உயர்த்திக்கொண்டு லாரிகளில் மண் நிறைக்கும் காட்சி மிகவும் வசீகரமாகத் தோன்றியது. அதை நான் என் நண்பனுக்கு, என் கேமராவின் சிறிய திரையில் காட்டினேன். அவன் அதைப் பார்த்து, “ஏழு படங்களுடைய ஒரு நாகம் சீறுவதற்கு ஆயத்தமாக நிற்பதுபோலிருக்கிறதடா” என்று சொல்லிவிட்டான்! ஒப்பிட்டுப் பார்த்து அவன் அதைச் சொன்னபோது நான் ஒரு நொடி திடுக்கிட்டேன். “நீ என்ன சொன்னாய்?”என்று நான் அவனிடம் கேட்டபோது என் குரல் என்னையறியாது உரத்திருந்தது.  “எதற்கு இப்படி கத்திக் கேட்கிறாய்? ஏழு படமுள்ள சர்ப்பத்தைப்போல இருக்கிறது என்று சொன்னேன். புராணத்தில் எல்லாம் இருக்கும் அல்லவா, மகாவிஷ்ணுவுக்குப் படுக்கையாக இருக்கும் அல்லவா, அதுதான்.” அவன் சொன்னான். அந்த நொடியே என் நினைவில் ஈரப்பன் வந்தார். நான் சுற்றிலும் பார்த்தேன்.

பாம்புகள் எங்கள் பூமியெல்லாம் ஆக்கிரமித்திருக்கின்றன. பூமிக்கு அடியிலுள்ள புதையல்களைத் தேடி அவற்றையெல்லாம் எடுத்துச் சென்று வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றன. எங்கள் ஊரைப் பிடுங்கித் தின்கின்றன. ஊரையே வாங்கக்கூடிய அளவுக்கு யார் யாரையோ பணக்காரர்களாக மாற்றுகின்றன. மிச்சமுள்ளவர்களை எல்லாம் மண் தின்னும் இழிவான நிலைக்குப் புறந்தள்ளுகின்றன. குழந்தைப் பருவத்தில் ஈரப்பன் சொன்னது வெறும் கட்டுக்கதை அல்ல.

அதுபோன்ற இயந்திரங்களை இயக்கும் அந்த மனிதனைப் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று நண்பனிடம் சொன்னேன். நண்பன் உரத்தக் குரலெழுப்பி, மேலிருக்கும் அந்த மனிதனிடம் கீழே இறங்கி வரும்படி ஜாடை காட்டினான். அவன் பெரியதொரு மரத்திலிருந்து ஒரு குரங்கு அநாயாசமாக இறங்குவதுபோல அந்த எந்திரத்தில் இருந்து கீழே இறங்கிவந்தான். அவன் உடல் முழுதும் சிவப்பு மண் தூசு பற்றி படர்ந்திருந்தது. தூசு படிந்து தலைமுடி செம்பு நிறமாகி இருந்தது. அந்த மனிதனை எந்திரத்தின் கூடையின் பற்களுக்குப் பக்கத்தில் நிறுத்தி நிறையப் புகைப்படங்கள் எடுத்தேன். கடைசியில் பர்ஸில் இருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டு எடுத்து அவனிடம் நீட்டியவாறு, “மிகவும் நன்றி. இயந்திரத்தை நன்றாக இயக்குகிறீர்கள். உங்கள் பெயர் என்ன?” என்று பணிவுடன் கேட்டேன். அவன் சிறிதாகச் சற்று சிரித்தான். அவன் பற்களும் சிவப்பு நிறமாயிருந்தன. “என்னைத் தெரியவில்லை அல்லவா முதலாளி? நான் குமாரசாமி. ஈரப்பனின் மகன்” என்று அவன் சொன்னான். ஒரு நொடி எனக்கு இடி விழுந்ததுபோல் ஆயிற்று. அன்று அப்பாவிடம் அடி வாங்கி கோபப்பட்டுச் சென்ற பிறகு அவனை  இப்போதுதான் பார்க்கிறேன்.
“நலமாக இருக்கிறாயா குமாரசாமி?” தழுதழுத்த குரலில் நான் கேட்டேன். “ஹும்... முதலாளி, நீங்களும் நலமாக இருக்கிறீர்கள்தானே? பெரிய வேலையில் இருக்கிறீர்கள் என்றெல்லாம் கோபன்னா வாத்தியாரின் மகன் சொல்லியிருக்கிறான்.”

“நலமாக இருக்கிறேன். உன் விஷயங்கள் எல்லாம் எப்படிப் போகின்றன?”

“பிரச்னைகள் ஒன்றும் இல்லை முதலாளி. இந்த மெஷினை இயக்க கற்றுத் தந்தார்கள். மாதம் மூவாயிரம் ரூபாய் சம்பளம் தருகிறார்கள். கல்யாணம் முடிந்துவிட்டது. இரண்டு  பிள்ளைகள். இங்கிலீஷ் மீடியம் ஸ்கூலில் சேர்த்திருக்கிறேன். மனைவியும் இங்குதான் வேலைக்கு வருகிறாள்.”

“ஈரப்பன் எப்படி இருக்கிறார் குமாரசாமி?”

“அப்பா இறந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டது முதலாளி. உங்களுடைய இடத்தை விற்ற பிறகு, கள் குடிக்கத் தொடங்கினார். பிறகு அதிக காலம் உயிருடன் இருக்கவில்லை.”

“நரசக்கா இருக்கிறார்களா?”

“ஹும். இப்போதும் நல்ல ஆரோக்கியம்.” அவன் சிரித்தான்.

“இப்போது வேலை செய்கிறார்களா?”

“வேலை செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். வீட்டில் ஒரு கலர் டி.வி வாங்கி வைத்திருக்கிறேன். பகல் முழுதும் சீரியல்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள், கண்கள் தளராமல்.”

அவனுடன் மஞ்சுநாதனும் சற்று நேரம் பேசினான். நான் அவனுடன் நின்று ஒரு போட்டோ எடுத்துக்கொண்டேன். தன் உடலில் உள்ள மண் என் மீது ஒட்டுமோ என்ற அச்சத்துடன், குமாரசாமி என்னுடன் சேர்ந்து நிற்காமல் சற்று விலகி நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்தான். என் கைப்பேசி எண்ணை வாங்கி தன் கைப்பேசியில் பதிவுசெய்துகொண்டான்.

பார்த்துக்கொண்டிருக்கும்போது ஆகாயத்தில் ஓர் ஓசை கேட்டது. தலையுயர்த்திப் பார்த்தால் ஒரு ஹெலிகாப்டர், புஷ்பக விமானம்போல கீழே இறங்கி வந்தது. தொழிலாளிகள் எல்லாம் அதன் அருகே ஓடினார்கள். “எங்கள் சுரங்க முதலாளி வந்திருக்கிறார். நீங்கள் சீக்கிரம் இந்த இடத்தைவிட்டுப் போய்விடுங்கள். கேமராவுடன் நகரத்தில் இருந்து வரும் யாரையாவது பார்த்தால் அவர் கோபப்படுவார்” என்று சொல்லிவிட்டு குமாரசாமியும் ஹெலிகாப்டரை நோக்கி ஓடினான். ஹெலிகாப்டரில் இருந்து சுரங்க முதலாளிகள் மூவர் இறங்கி வந்தார்கள். வெயிலில் ஒளிரும்விதமாக வெள்ளை உடை அணிந்திருந்த அவர்கள் தூசு உள்ளே போகாதிருப்பதற்காக முகத்தில் பில்டர்கள் பொருத்தியிருந்தார்கள். தொழிலாளிகளுடன் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்த பிறகு, தூசுப் படலத்தைக் கிளப்பியவாறு அவர்கள் தங்கள் புஷ்பக விமானத்தில் திரும்பிச் சென்றார்கள்.  “பெரிய குத்தகைக்காரன் அவன். நாட்டையே மொத்தமாக விலைக்கு வாங்கக்கூடிய அளவு அவனிடம் காசு இருக்கிறது. ஐந்து ஹெலிகாப்டர்கள் வாங்கி வைத்திருக்கிறான்” என்று மஞ்சு விவரித்தான். நீண்ட நேரம்  அங்கே நிற்பதற்கு நிச்சயமாகவே எனக்கு விருப்பம்  இல்லை. நண்பனை அழைத்துக்கொண்டு காரை நோக்கி நடந்தேன். “பள்ளியில் உன்னுடன் படித்தவனாக இருந்தாலும் அவன் இப்போதும் உன்னை முதலாளி என்று அழைக்கிறானே!” என்று மஞ்சு வியந்தான்.

புளிய மரத்திலும் அதற்குப் பக்கத்தில் இருந்த காரின் மேலும் விசித்திரமான நிறையப் பறவைகள் அமர்ந்திருந்தன. சப்தமெழுப்ப வேண்டாம் என்று நண்பனிடம் சொல்லிவிட்டு மரத்தின் மறைவில் நின்று நான் அந்தப் பறவைகளை நிறையப் படம் எடுத்தேன். “இவை என்ன வகைப் பறவைகள் மஞ்சு? சின்ன வயதில் நான் இவற்றைப் பார்த்தது இல்லையே?” என்று நண்பனிடம் தாழ்ந்த குரலில் கேட்டேன். அவன் அதைக் கேட்டுச் சிரித்தான். “அவை கிளிகளடா, உனக்குத் தெரியவில்லையா? தூசு படிந்திருப்பதால் அவை எல்லாம் சிவப்பாக இருக்கின்றன.” அவன் உண்மைநிலையைச் சொன்னான். எனக்குப் பகீரென்றது. நான் கவனித்துப் பார்த்தேன். ஆமாம். கிளிகள்தான். எந்த சந்தேகமும் இல்லை. அவற்றின் உடல் முழுதும் தூசு படிந்திருக்கிறது, அவ்வளவுதான். “கிளி சுத்தமான பறவை அல்லவா, அழுக்கை எல்லாம் நீக்கி தன் உடலைச் சுத்தப்படுத்திக்கொள்ளுமே?” என்று நான் அவனிடம் கேட்டேன். “எவ்வளவு அழுக்கைத்தான் சுத்தப்படுத்த முடியும். இந்த சிவப்புத் தூசுப் படலம் வெயில்போல ஊரெங்கும் பறக்கிறது. தண்ணீரில் மூழ்கிக் கழுவலாம் என்று பார்த்தால் இப்போது நீர்நிலையும் இல்லை. நீர்நிலைகளிலும் பள்ளம் தோண்டியிருக்கிறார்கள். அரிதாக மழை வந்தாலும் சிவப்புத் தண்ணீர்தான் ஓடுகிறது. தமாஷ் என்ன தெரியுமா? கிளிகளின் எச்சம்கூட சிவப்பு நிறம்தான். அவை வயிற்றுக்குள் என்ன போடுகின்றன என்று அந்தக் கடவுளுக்குத்தான் தெரியும்” அவன் சொன்னான். என்னவென்று தெரியவில்லை. என்னை அச்சம் பீடிக்கத் தொடங்கியது. நான் பிறந்து வளர்ந்த என் ஊர் எனக்கு நரகத்தைப்போலக் காணப்பட்டது. அங்கிருந்து ஓடித் தப்பிவிட வேண்டும் என்று தோன்றியது. நான் சில வசவுகளைப் புலம்பிக்கொண்டு காரின் அருகே ஓடிச் சென்று கிளிகளை எல்லாம் விரட்டிவிட்டு காருக்குள் அமர்ந்தேன். ஒரே ஒரு சிவப்புக் கிளி என் கண்ணில் பட்டால்கூட, என் தலை வெடித்துவிடும் என்று எனக்குத் தோன்றியது.

நண்பன் மிகவும் ஜாக்கிரதையுடன் கார் ஓட்டினான். யாருடைய வார்த்தைகளையும் நான் கேட்க விரும்பவில்லை. கைப்பேசி திரையைப் பார்த்தேன். சாலை தகர்ந்திருந்தாலும் பரவாயில்லை, சிக்னல் கவரேஜ் முழுமையாக இருந்தது. நான் அக்காவுக்கு ஒரு குறுஞ்செய்தி டைப் செய்யத் தொடங்கினேன். “அக்கா, நான் இன்று சிவப்புக் கிளிகளைப் பார்த்தேன். அவை செடிகளில் அமர்ந்தால் செம்பருத்திப் பூக்கள் மலர்ந்திருப்பதுபோன்று இருக்காது அக்கா. தோலை உரித்து கடைகளில் தொங்கவிட்டிருக்கிற இறைச்சித் துண்டுகளைப்போலக் காணப்படும்” என்று டைப் செய்து அனுப்பினேன். நான் அனுப்பிய செய்தியின் தலையும் வாலும் புரியாமல் அவள் திருப்பி அழைப்பாளோ என்ற பயத்தின் காரணத்தால், நான் கைப்பேசியை ஆஃப் செய்து அதைக் கையில் இறுகப் பிடித்துக்கொண்டேன். ஆஃப் செய்தாலும் ஏதாவது ஒரு நொடியில் அது அதிரும் என்ற அச்சம் எனக்கு இருந்தது.

குறிப்பு:

1. உள்ளி: உள்ளி என்பது வெங்காயத்தையும் பூண்டையும் பொதுவாகக் குறிக்கும் சொல். சிவப்பு உள்ளி என்பது வெங்காயம், வெள்ளை உள்ளி என்பது பூண்டு. ஈரமாக இருப்பதால் வெங்காயத்தை ஈருள்ளி என்றும் வெள்ளையாக இருப்பதால் பூண்டை பெல்லுள்ளி என்றும் கன்னடத்தில் குறிப்பிடுகிறார்கள்.

2.  மொசரவலக்கி: அவலும் கட்டித் தயிறும் உப்பும் சேர்த்துச் செய்யும் ஒரு உணவு. கர்நாடகத்தில் மிகவும் பிரபலமானது. அவலக்கி என்றும் சொல்லப்படுகிறது.

3. முண்டே கண்டா: ஒரு வசவுச் சொல். விதவையின் ரகசியக் காதலன் என்று பொருள். பெல்லாரி பகுதியில் இது அன்பான அழைப்பாகவும் பிரயோகிக்கப்படுகிறது.

4. போலே சங்கர்: களங்கமற்ற பரமசிவன் (புராணத்தில் வரும் களங்கமற்ற அர்த்தநாரீஸ்வரன்).

5. பேவர்ஸி: ஒரு வசவுச் சொல். வாலற்றுப்போனவன், அநாதை ஆகிய அர்த்தங்களுடையது. 

நன்றி: மாத்ருபூமி (6 மார்ச் 2016)