
ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவில் மஹாஸ்வேதா தேவியின் உரை - லீனா மணிமேகலை
“நேற்றென்பது ஆயிரத்தியொரு சாத்தியங்கள் நிரம்பியிருந்த நாளல்லவா? அதுதானே வாழ்க்கை. ஒன்றும் மாறிவிட வில்லையே? பின்பு எதற்காக, அவ்வளவு பலவீனமாகவும் சுவாரஸ்யமற்றும், அதிபயங்கரமான வெறுமைஉணர்வோடும் மலேரியா காய்ச்சல்போல இந்த நாள் பரவ வேண்டும்? ஏனெனில், எல்லாவற்றையும்விட மோசமானது தனிமை.”

மீள வாழ்தல்
வார்த்தைகள்... வேதனையில் இருக்கும் எழுத்தாளரிடமிருந்து பிறந்தவையா என எனக்குத் தெரியாது, ஆனால் அறிவேன். என்னுடைய தொண்ணூறாவது வயதில், மீள வாழ வேண்டும் என்ற எனது வேட்கை விஷமமானது. ‘அதிசயங்களின் வலைகளில் சிக்கிய பட்டாம்பூச்சிகள்’ என்ற பாடல் வரியைப் போன்று எனது ஆயுளும் ஒரு விருப்ப வேட்கைதான். இது ஒரு பக்கம் இருக்க, எதிர்பார்த்ததைவிட அளவுக்கு அதிகமான நாட்கள் வாழ்வதின் பேரில், எவ்வளவு சேதங்களை ஏற்படுத்தியிருக்கிறேன் என்று சற்று நினைத்துப்பார்க்கிறேன்.
எண்பத்தியேழு வயதில், என் முன்னெடுப்புகள் அநேகமும் நிழல்களை நாடிய பின்வாங்கல்கள்தாம். அபூர்வமாகவே சூரிய தரிசனம். இளம் வயதுப் பெண்ணாக, தாயாக, நான் ஒருபோதும் முதுமைக்குப் பின்வாங்கியது இல்லை. சில சமயங்களில் முதியவளாக, பார்வை மங்கியவளாக, காது சரியாகக் கேளாதவளாக நடித்துக்காட்டி என் மகனைச் சிரிக்கவைத்ததுண்டு. கண் கட்டி ஆடும் விளையாட்டென, காற்றில் கைகளைத் துழாவி நினைவுகளைப் பரிகசித்திருக்கிறேன். கண நேரத்திற்குள், அதிமுக்கியமான விஷயங்களை மறந்திருக்கிறேன். அன்றைய வேடிக்கைகளிலிருந்து இன்றைக்கு இங்கு நகர்ந்துவந்திருக்கிறேன். வாழ்க்கை ஒரு மீள் செயல். நான் என்னை மீட்டுக்கொள்கிறேன். நடந்தவற்றில் இருந்து, நடந்திருக்கக்கூடியவையிலிருந்து, நடக்காததிலிருந்து என்னை மீட்டெடுத்துக்கொள்கிறேன்.
இது நினைவுகள் என்னைப் பரிகசிக்கும் காலம்
பல எழுத்தாளர்கள், என் கதைமாந்தர்கள், நான் நேசித்து, கூடியிருந்து, இழந்த மனிதர்கள் எல்லோரும் ஆவிகளாக எனக்குள் தங்கி வாழ்கிறார்கள். குடியிருப்பவர்களின் அந்தரங்க உரையாடல்களைச் சதா கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு பழைய வீட்டைப்போல சில சமயங்களில் என்னை உணர்கிறேன். அது ஒன்றும் பெரிய பாக்கியம் அல்ல.
ஆனால் ஒருவர், வலிமையின் இறுதியில் தான் நிற்பதாய் உணரும்போது என்ன நடக்கும்? வலிமையின் இறுதியென்பதோ என்றும் முற்றுப்புள்ளி அல்ல. ரயிலில் இருந்து இறங்கவேண்டிய கடைசி நிறுத்தமும் அல்ல. சற்று வேகம் தாழ்த்துதல் என்று வேண்டுமானால் சொல்லலாம்; உயிர் ததும்பிநிற்கும் தருணம் அது; “நீ தனிமையில் இருக்கிறாய்” என்ற அசரீரி.
நான் பிறந்து வளர்ந்த சூழலில், இன்றைய என் பரிணாம வளர்ச்சியை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். நான் வீட்டிலேயே மூத்தவள். அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியவில்லை. என் முதல் பாலியல் அனுபவத்தை என் குடும்பத்திற்குள்தான் பெற்றேன். இளம்பிராயத்தில் இருந்தே நான் பாலியல் வசீகரத்தோடு இருந்தேன். மற்றவர்கள் சொல்வது ஒருபுறம் இருக்க, நானும் அப்படித்தான் என்னை உணர்ந்தேன். தாகூரால் மிகவும் ஈர்க்கப்பட்ட காலங்கள். சாந்திநிகேதனில் படிக்கும்போது காதலில் விழுவதும் எழுவதுமான ஆர்வத்துடிப்பு நிறைந்தவளாய் இருந்தேன். பதின்மூன்று வயதில் இருந்து பதினெட்டு வயதுவரை என் தூரத்து உறவுப் பையன் ஒருவனைத் தீவிரமாகக் காதலித்தேன். தற்கொலை மனோபாவம்கூடிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்ததால், அவனும் தற்கொலை செய்து இறந்துபோனான். ஆனால், எல்லோரும் என்னைத்தான் குற்றம் சாட்டினார்கள். நான் அவன் அன்பை மறுதலித்ததால் தன்னுயிரை மாய்த்துக்கொண்டான் என்று சொல்லிக் காட்டினார்கள். ஆனால் அது உண்மையல்ல. அப்போது நான் கம்யூனிஸ்ட் கட்சியோடு நெருக்கமாக இணைந்து வேலை செய்துகொண்டிருந்தேன். நேசித்தவன் வீணாகத் தன் உயிரைப் போக்கிக்கொண்டது என்னுள் மரண அடியாக இறங்கியது. மொத்தக் குடும்பத்தின் சுட்டுவிரலும் என்னை நோக்கி நீண்டிருந்தது. பதின்வயதுகளில் தன் உடலின் கவர்ச்சியைக் குறித்த எந்தக் கவனமும் இல்லாத இந்தப் பெண்ணை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று என் பெற்றோர்களும் உறவினர்களும் மனம் கசந்தனர்.
எல்லாமும் ஏதோ ஒரு வகையில் அழுந்தப்பட்டிருக்கும் நடுத்தர வர்க்கத்தின் ஒழுக்க நெறிகள் பெரும் மோசடியானவை.
எழுத்துதான் என் நிஜமான உலகம். நான் முன்னும்பின்னுமாக வாழ்வதும் மீள்வதும் அங்குதான். நான் எழுதும் முறை விசித்திரமானது. எழுதுவதற்கு முன் எக்கச்சக்கமாகச் சிந்திப்பேன். குழம்பித் தவிப்பேன். மூளையில் படிகம்போல தெளிவாக எழுத்து உருவாகும் வரை அதனுடன் மல்லுக்கட்டுவேன்; ஓயாது ஆய்வுகள் செய்வேன். மக்களைச் சந்திப்பேன்; பேசுவேன்; குறிப்புகள் எடுத்துக்கொள்வேன். முடிச்சுகள் ஒவ்வொன்றாய் அவிழ, சேகரித்தவற்றையெல்லாம் விரித்து எழுதுவேன். அதற்குப் பின் பெரும்பாலும் நான் நிறுத்துவதில்லை. நான் வாசித்ததும், நேரடி அனுபவங்களும் ஞாபகங்களும் தேடிப்பெற்ற தகவல்களும் எழுதும்போது கை கொடுக்கும். எங்கு சென்றாலும், என் மனம் எழுத்தையே திட்டமிட்டுக்கொண்டிருக்கும். கூடவே மறதியும் உண்டு. உண்மையில் நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். யாருக்கும் நான் கடமைப்பட்டவள் இல்லை. சமூகத்தின் எந்தச் சட்டதிட்டங்களும் என்னைக் கட்டுப்படுத்த முடியாது. நான் விரும்பியதைச் செய்தும், வேண்டியதை எழுதியும், நினைத்த இடங்களுக்குச் சுற்றியும் வந்திருக்கிறேன்.

நான் சுவாசிக்கும் காற்று வார்த்தைகளால் நிறைந்தது.
எடுத்துக்காட்டாக, ‘பர்னானர்’ என்ற வார்த்தை, பலாசு மரத்தால் ஆனது. இது ஒரு வினோதமான சடங்குமுறையைக் குறிக்கும் சொல். ஒரு மனிதன் ரயில் விபத்தில் இறந்துவிட்டால், சடலத்தை வீட்டுக்குக் கொண்டுவர முடியாத சூழலில், அவனது உடலைப் பலாசு மரத்தின் இலைகளால் செய்து ஈமச்சடங்குகளை முடிக்கிறார்கள்.
‘பாப் புருஷ்’ கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது ஒரு நாட்டுப்புற நம்பிக்கையைக் குறிக்கும் சொல். நித்திய ஜீவனாக சபிக்கப்பட்ட அவன், மறைவான்; தோன்றுவான்; மற்றவர்களின் பாவங்களைக் கண்காணிப்பான்; சின்னச்சின்ன மீறல்களையும் கணக்கு வைத்துத் தண்டிப்பான்; ஓர் ஆட்டுக்குட்டியைக்கூட கொளுத்தும் வெயிலில் கம்பு ஒன்றில் கட்டிப்போட்டு தண்ணீரோ, தீவனமோ காட்டாது தண்டிப்பான். உண்மையில் பாப் புருஷ் என்பவர், ஒரு நபராக இருக்க முடியாது. அச்சொல் ஒரு குறியீடுதான்.
வங்காள மொழியில்தான் எவ்வளவு அழகழகான சொற்கள். ‘சோரத்’ என்றால் பலகை என்று பொருள். தக் சங்கராந்தி. ‘தக்’ என்றால் சதா விழிப்புநிலையில் இருப்பது. மனம் விழித்திருப்பவர்களுக்கு மட்டும்தான் ஒரு குரல் கேட்குமாம். ‘இன்று புதியதொரு நாள், என்ன செய்யக் காத்திருக்கிறாய், செய்யவேண்டியவற்றை எல்லாம் செய்து முடித்தாயா?’ என்றெல்லாம் அந்தக் குரல் கேள்வி கேட்குமாம்.
‘கர்பா தான்’ என்ற சொல் மிக சுவாரஸ்யமானது. கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் கருவிடம், ‘நீ பெண் குழந்தையாகப் பிறந்தால், இந்தந்தப் பரிசுகளைத் தருவேன்’, ‘நீ ஆண் குழந்தையாகப் பிறந்தால், அந்தந்தப் பரிசுகளைப் பெறுவாய்’ என்று உறுதி கூறுவதைத்தான் ‘கர்பா தான்’ என்று குறிப்பிடுகிறார்கள். கருவில் இருக்கும் குழந்தை இதைக் கேட்டுக்கொண்டு இருப்பதாகவும், பிறந்ததும் பரிசளிப்பதாகச் சொன்னவர்களைத் தேடி அதற்குரியவற்றைக் கேட்டு வாங்கிக்கொள்ளும் என்றும் மக்கள் மத்தியில் நம்பிக்கை இருக்கிறது .
நமது நாட்டில் சுவையான கதைகளுக்கும் சொற்களுக்கும் பஞ்சமே இல்லை. மகாராஷ்டிராவின் பார்தி பழங்குடிகளை எடுத்துக்கொள்ளுங்கள். பார்தி சமூகத்தில் பெண்குழந்தைக்கு ஆக வரவேற்பு. கருவுற்றிருக்கும் பெண்ணின் கணவன், பிறக்கப்போகும் குழந்தை பெண் என்றால், இவ்வளவு விலை என்று ஏலம்விடுவது நடைமுறையில் இருக்கிறது. ‘பேட் கி பாஜி’ என்பார்கள். கருவின் கனியை ஏலம் விடுவதை, ‘நிலம் கோரே டிச்சே’ என்று அழைக்கிறார்கள்.
நரகத்திற்கு நிறையப் பெயர்கள் இருக்கின்றன. ‘ஓஷி பத்ரா பென்’ என்ற பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும். ‘ஓஷி’ என்றால் வாள். ‘பத்ரா’ என்றால் வாள்போன்ற இலைகள். இறந்துபோன ஆன்மா, தான் செய்த பாவங்களுக்காக, வாள் இலைகள் நிறைந்த காட்டுக்குள் கிழியக் கிழிய நடந்துபோக வேண்டும் என்ற மொத்த அர்த்தத்தையும் ‘ஓஷி பத்ரா பென்’ தனக்குள் தேக்கிவைத்திருக்கிறது.
என்னைப் பாதிக்கும் சொற்களைக் கடக்கும்போதெல்லாம், அவற்றைக் குறித்துவைத்துக்கொள்வேன். எத்தனை எத்தனை நோட்டுப் புத்தகங்கள். கோட்டோ கதா. எண்ணிலடங்கா வார்த்தைகள், எண்ணிலடங்கா ஒலிகள். நான் வார்த்தைகளைக் கர்மசிரத்தையாகச் சேகரிப்பவள்.
கனவு காணும் உரிமை
நீண்ட காலமாக ஒன்றைக் குறித்து எழுத வேண்டும் என்று சிந்தித்துவருகிறேன். உலகமயமாக்கலின் கோரங்களை எப்படிச் சமாளிப்பது? ஒரு மையமான இடத்தில் துண்டு நிலத்தைக் கைப்பற்றி, புற்களால் அதை மூடி அங்கு ஒற்றை மரத்தை நடலாம். அதில் உங்கள் மகனின் சைக்கிள் ஒன்றைக் கிடத்தலாம். ஓர் ஏழைக் குழந்தை அங்கு வந்து சுதந்திரமாக விளையாடட்டும். அந்த மரத்தின் கிளைகளில் பறவைகள் வந்து அமரட்டும். சின்ன ஆசைகள்; சின்னக் கனவுகள். நம் எல்லோருக்கும் உண்டுதானே?
எப்போதும் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வை, பண்பாடுகளை எழுதிவருவதாகப் பேசுகிறேன். அதில் எவ்வளவு உண்மை, அல்லது பொய் அல்லது அதிகப்படி என்று எனக்குத் தெரியவில்லை. மேலும் மேலும் சிந்தித்து எதையும் விளக்குவதற்கு முற்படுகையில் திண்டாடிப்போகிறேன். தயக்கமும் தடுமாற்றமும் என்னை ஆட்கொள்கின்றன. நம்மைப்போன்ற தொன்மையான மூத்த பண்பாடுகள் நிறைந்த சமூகத்தில், எனது நம்பிக்கை என்பது ஒன்றே ஒன்றுதான். அது மனிதநேயம் மட்டும்தான். பரஸ்பர உரிமைகளை ஒருவருக்கொருவர் கண்ணியத்தோடு ஏற்றுக்கொள்ளும் மாண்பு.
மனிதர்களுக்குக் காணவேண்டியவற்றைக் காண்பதற்குக் கண்கள் இல்லை. ஆனால், வாழ்நாள் முழுவதும் எளிய மனிதர்களின் மிக எளிய கனவுகளை நான் கண்டுவருகிறேன். அவர்கள் தங்கள் கனவுகளை எல்லாம் பத்திரமாகப் பூட்டிவைத்திருக்கிறார்களோ எனத் தோன்றும். ஆனால், அவற்றில் சில தப்பித்திருக்க வேண்டும். சிறைக் கம்பிகளை உடைத்து வெளியேறியிருக்க வேண்டும்.
‘பதேர் பாஞ்சாலி’ நாவலில், ஓடும் ரயிலை கண்கள் விரிக்கப் பார்த்துக்கொண்டிருக்கும் துர்கா. தூக்கத்திற்காக ஏங்கும் ஒரு முதிய பெண். நீண்ட காத்திருப்புக்குப் பின் தனக்குரிய பென்ஷன் பணத்தைப் பெற்றுவிடும் ஓய்வுபெற்றவர். காட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் எங்கு செல்வார்கள்? அவர்களின் போக்கிடம் என்ன? நக்சலைட்டுகள் செய்த குற்றம் என்ன? அவர்கள் கனவு காணத் துணிந்தவர்கள். அவர்களின் கனவுகளிலிருந்து அவர்களை விலக்குவதற்கும் அனுமதிப்பதற்கும் நாம் யார்? இப்படிப்பட்ட சாதாரணர்களின் சாதாரண அபிலாஷைகள்தான் எனக்கு முக்கியம்.
கனவு காணும் உரிமையே அடிப்படையானதென பல வருடங்களாக, தொடர்ச்சியாக, அழுத்தம் திருத்தமாக நான் சொல்லிவருகிறேன்.
கனவு காண்பதற்கான உரிமை! வாழ்விலும் இலக்கியத்திலும், இதுவே என் முழுமுதல் போராட்டம்.’’