
தண்டனையே குற்றம்!


பெரியபெரிய குற்றங்களைச் செய்துவிட்டு ஹாயாக சுற்றித் திரிபவர்களை விட்டுவிட்டு, சின்னப்புள்ளத்தனமாக காசுமிட்டாய், கடலைபர்பி திருடியவர்கள் சிக்கினால் சிதைத்துவிடுவார்கள். அப்படி சிரிப்புக்காட்டும் சில கைது சம்பவங்கள் இங்கே... இருந்தாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தானுங்க.

ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு நகரின் சாலைகளில் ஓடிக்கொண்டிருந்த ஒரு காரைப் பறிமுதல் செய்து, காரை ஓட்டிவந்த ஜேம்ஸைக் கைது செய்திருக்கிறார்கள். பாவம், இத்தனைக்கும் அந்த நபர் அதிவேகமாகவோ, குடிபோதையிலோ காரை ஓட்டிவரவில்லை. விசாரித்தால், கண்ணாமுழி பிதுங்கும் அளவுக்குக் காரணம் சொல்கிறார்கள். காரில் ஸ்டியரிங் இருக்கும் இடத்தில் அதற்குப் பதிலாக வடசட்டியை மல்லாக்கப் படுக்க வைத்துப் பொருத்தி வண்டியைத் திருப்பியிருக்கிறார். அதைக் கவனித்த அதிகாரிகள், ‘வண்டியை ஸ்டேஷனுக்குத் திருப்பு...’ என சாலையில் செல்வோர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய வழக்கில் கைது செய்து களி திங்க வைத்திருக்கிறார்கள். பாவத்த.. அவருக்கு என்ன கஷ்டமோ?

பென்சில்வேனியாவில் வசிக்கும் இளம் தம்பதி அலெக்ஸாண்டர் பெர்ன்ஸ்டெயினும் அன்னாடெல் க்ரூஸும் சிக்கியது ஒரு விசித்திரமான வழக்கில். இவர்கள் வீட்டில் கோகைன் போதைப்பொருளைப் பதுக்கி வைத்திருப்பதாகப் பக்கத்து வீட்டுக்காரர்கள் போகிறபோக்கில் பற்றவைத்துவிட, இவர்களின் காரில் இரண்டு சோப்புக் கட்டிகள் இருந்தபடியால் அது போதைப்பொருள் எனத் தீர்மானிக்கப்பட்டு கோகைனும் கையுமாகக் கைது செய்யப்பட்டனர். ஜாமீனில் வெளியே வருவதற்கு 7.5 லட்சம் டாலர்களைக் கட்டியபிறகு, கடைசியில் விசாரணை முடிந்தபின்பு, அது உண்மையிலேயே போதைப்பொருள் அல்ல.. ஹோம் மேடு சோப் என ஆராய்ந்து அவர்களை விடுவித்தனர். குளிக்கிற சோப்புக்குள்ளே இவ்வளவு குழப்பமா?

பள்ளிக்கூட இருக்கையில் பெர்மனென்ட் மார்க்கரை வைத்து எழுதியதற்காக அலெக்ஸா கான்செலஸ் என்ற பெண்ணைக் கைது செய்து அபராதம் விதித்திருக்கிறார்கள். ஒண்ணும் தெரியாத சின்னப்பையன் பிரான்டன் ஜோன்ஸ், தன் அம்மா கொடுத்த கிறிஸ்துமஸ் பரிசை கிறிஸ்துமஸ் தொடங்குவதற்கு முன்னாலே பிரித்துப் பார்த்ததை எல்லாம் ஒரு குற்றம்னு கைது பண்ணியிருக்காங்க அமெரிக்காவில் இருக்கும் இந்த ஸ்ட்ரிக்ட் ஆபீஸர்ஸ். எனக்குக் கடமைதான் முக்கியம் மொமென்ட்.
குற்றங்களைச் செய்து, பிடிபட்ட பிறகுதான் எல்லோரும் ஜெயிலிலிருந்து தப்பிக்க முயற்சிசெய்து கம்பிகளை உடைத்து வெளியே வருவார்கள். அமெரிக்காவில் ஜோனதன் டையூ என்பவர் ஜெயில் வெளிப்புறச் சுவரின் முள்வேலி, ஜெயில் கம்பிகள் என சகலத்தையும் உடைத்து உள்ளே புகுந்திருக்கிறார். ஆசைப்பட்டு உள்ளே வந்திருக்கிறார் என வெளியே அனுப்ப மனமின்றி ஜெயிலிலேயே வைத்து லாடம் கட்டியபின்புதான் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிய வந்திருக்கிறது. அப்புறம் அவர்களே முதலுதவி செய்து மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். சிறப்ப்ப்பா கவனிக்கிறதுனா இதுதானா?
- விக்கி