
‘ட்ரெண்ட்' பெட்டி!

தமிழகத்தின் தங்கமகன்!
பிரேசில் தலைநகர் ரியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தங்கப் பதக்கம் வென்றார். நாடு முழுவதிலும் இருந்து அவருக்குப் பாராட்டுகள் குவிந்துகொண்டிருக்கின்றன.

ஏழ்மையான குடும்பப் பின்னணியைக் கொண்டிருந்தாலும், விளையாட்டில் சாதனை படைக்கக் காரணமாக இருந்த இவரது தந்தை தங்கவேலு, தாயார் சரோஜா ஆகியோர் பெயரும் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆனது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. #thangavelusarojamariyappan எனக் குடும்பமே ட்ரெண்டிங் ஆனது மகிழ்ச்சியும்கூட. வாழ்த்துகள்!

புதிய அவதாரம்!
நடிகர், தயாரிப்பாளர், கதாசிரியர், பாடலாசிரியர், பாடகர் (கொஞ்சம் மூச்சு விட்டுக்கோங்க!) அவதாரங்களைத் தொடர்ந்து தனுஷ் தற்போது இயக்குநர் அவதாரம் எடுக்கவிருக்கிறார். தனது தந்தை வழியில், முதல் படத்தை நடிகர் ராஜ்கிரணை வைத்து தனுஷ் இயக்கவிருக்கும் இந்தப் படத்திற்கு `பவர்பாண்டி' என்ற தலைப்பு வைக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியானது. தனுஷ் ரசிகர்களும், தமிழ்த் திரையுலகமும் தெரிவித்த வாழ்த்துகளால் #powerpaandi ட்விட்டரில் புல்லட்டில் வலம் வந்தான். டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!


தீவிரவாதம் தீர்வாகாது!
உலகையே உறையவைத்த உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரத் தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்று 15 வருடங்கள் கடந்துவிட்டன. இந்தத் தாக்குதல் நடைபெற்ற இடத்தில் எழுப்பப்பட்டுள்ள நினைவிடத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி, பலியானோர்க்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். ட்விட்டரில் ஒருபக்கம் #neverforget911 என்ற டேக்கில் தீவிரவாதத்திற்கு எதிராகக் கருத்துகள் பதிவாக, இன்னொரு பக்கம் #afterseptember11 என்ற டேக்கில் சிறுபான்மையினர் தாக்குதலுக்குப்பின் தாங்கள் சந்தித்த பிரச்னைகள் குறித்த கருத்துகளைப் பதிவுசெய்தனர்.

என்று தீரும்?
காவிரி நதிநீர்ப் பங்கீடு குறித்து பிரச்னை எழும்போதெல்லாம் தமிழகம் மற்றும் கர்நாடகா இரு மாநிலங்களிலும் பதற்ற நிலை உருவாவது வேதனையான விஷயம். தமிழ் இளைஞரைக் கர்நாடகாவைச் சேர்ந்த சில அமைப்புகள் தாக்கிய வீடியோ, தேசிய அளவில் சர்ச்சைக்குள்ளானது. இந்த விஷயம் மீடியாக்களிலும், சோசியல் மீடியாக்களிலும் டாபிக் ஆனது. இரு மாநிலங்களைச் சேர்ந்த நெட்டிசன்களும் காவிரியை அரசியலாக்காமல், சமாதானத் தீர்வெடுங்கள் என #KaveriForPeace டேக்கில் கருத்துகளைப் பதிவிட்டதால் இந்திய அளவில் ட்ரெண்ட்டில் இடம்பிடித்தது. நீ வேற நான்வேற இல்ல எல்லோருமே இந்தியர்கள்!

வாழ வழிவிடு!
விநாயகர் சதுர்த்தி முடிந்தபின், சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது ஆரவாரமாகக் கொண்டாடுவது வழக்கமாகி வருகிறது. இதனால் ஏற்படும் வாகன நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்கிக்கொண்டால் வழிவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி #WayToAmbulance என்ற பெயரில் கடந்த சில வாரங்களாக விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சீனியர் நடிகரான அமிதாப் பச்சன் தொடங்கிப் பல பிரபலங்கள் ட்விட்டரில் இதை வலியுறுத்தியதில் இந்த டேக் செம்ம ஹிட் அடித்தது. அத்துடன் மும்பையில் ஒரு ஆம்புலன்ஸுக்கு வாகன நெரிசலை விலக்கி வழி ஏற்படுத்தித் தந்த வீடியோவும் வைரல் ஆனது. நல்ல விஷயம்!

எங்கும் சாதனை!
இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த விராட் கோஹ்லியை ட்விட்டரில் பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தொட்டு சாதனை படைத்துள்ளது. அவரின் ரசிகர்கள் பட்டாசு வெடிக்காத குறையாக #12MillionViratians என்ற டேக்கில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதில் ட்விட்டர் கதிகலங்கியது. சச்சினுக்கு ட்விட்டரில் தற்போது 12.3 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். சச்சினின் ரன் சாதனைகளை மட்டுமன்றி, ஃபாலோயர் சாதனையையும் தற்போது நெருங்கியிருக்கிறார் விராட் கோஹ்லி. அதிரடிக்காரன்!
- ட்ரெண்டிங் பாண்டி