
ஆஃப் த ரெக்கார்டு!
‘சிவமான’ நடிகர் நடிக்க ஒப்புக்கொண்ட இரண்டு பெரிய நிறுவனங்களுக்கு கால்ஷீட் கொடுக்காமல் சொந்தக் கம்பெனியிலேயே வரிசையாக படங்கள் நடித்து வருவதால் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார்களாம்.
‘லவ்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் டீச்சராக நடிக்க ஆசையோடு ஒப்புக் கொண்டார் இசை நடிகை. சமீபத்தில் வெளியான பாடலைப் பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்துத் தள்ள, `ஏன்டா இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டோம்' என நொந்து போய்விட்டாராம்!
சூப்பர் நடிகரின் `நெருப்பு' படத் தயாரிப்பாளர் அடுத்தப் படத்தைத் தயாரிக்கும் முயற்சிகளில் இறங்கி கால்ஷீட்டுக்குக் காத்திருந்தாராம். ஆனால், மருமகனுக்கு கால்ஷீட் கொடுத்ததால் வடபோச்சே என வருத்தத்தில் இருக்கிறாராம்.

ஒரு சங்கம் பாக்கி இல்லாமல் எல்லா சங்கத்திலும் சண்டையிழுத்த ‘சண்டக்கோழியான’ நடிகர் தயாரிக்கும் படங்களுக்கும், நடிக்கும் படங்களுக்கும் இனி ஃபைனான்ஸ் செய்யக் கூடாது என எல்லா தரப்பிலிருந்தும் எதிர்ப்பு வந்ததால் ஃபைனான்ஸ் இல்லாமல் திண்டாடுகிறாராம் நடிகர்.
‘மில்க்’ இயக்குனர் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடித்துவிட மாட்டோமா? என ஏங்கிக்கொண்டிருந்தவர்கள் கூட அவரைக் கண்டால் தெறித்து ஓடுகிறார்களாம். ஹீரோக்கள் யாரும் கால்ஷீட் கொடுக்காததால் புதுமுகத்தை வைத்து படம் இயக்க இருக்கிறாராம் மில்க்.
‘யோகா’ நடிகை ஏற்றி எடையைக் குறைக்க முடியாமல் திணறி வருகிறார். பத்து மாதமாக யோகா, உடற்பயிற்சி செய்தும் உடல் எடை குறையவில்லையாம். பிரமாண்ட இயக்குனரின் கோபத்துக்கு ஆளானவர் தற்போது காலையும், மாலையும் சைக்கிளில்தான் பவனி வருகிறாராம்!
தான் தமிழன் என்றாலும் அவ்வப்போது தமிழ்நாட்டின் மீது இருக்கும் கோபத்தை வெளிப்படுத்த ‘கலைக்கு மொழி கிடையாது, அதனால் நான் கன்னடன், மலையாளி' எனப் பேசி வருவார் உலக நடிகர். தற்போது தான் ஒரு மலையாளி என அவர் பேச, தமிழ் அமைப்புகள் பலவும் போர்க்கொடி தூக்கி உள்ளன.