
``சுடுகாடுனா ஏன் பயப்படுறீங்க?''
`நம்பினால் நம்புங்கள் உங்கள் எதிரிகளை அழிக்கும் கொடூர மரண மயான கோயில். தெய்வ சக்தி இருந்தால் மட்டும் இங்கு வரவும், இது ஆபத்தான கோயில். வருபவர்கள் வேப்பிலை எடுத்து வரவும்!' என்று ஒரு போஸ்டர் நம் கண்ணில் பட்டது. விடுவோமா நாங்க?

தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் தான் அந்த போஸ்டரை ஒட்டியவர். அவர் வீட்டின் முன் நின்றோம். பத்துக்குப் பத்து சதுர அடியில் குட்டி வீட்டில் ஜாகை. கதவு இல்லை, சுவர் இல்லை என அந்த வீடே ஒரு மார்க்கமாக இருந்தது. 6 அடிக்கு மேல் ஒரு காளி சிலை, வர்ணம் தீட்டப்படாமல் டெரர் கூட்டியது. ஆளைக் காணோம். ஊரில் விசாரித்தோம். `அவரா..? அவரு ஒருமாதிரியாச்சே..! குடும்பத்துக்குள்ள பிரச்னை. இப்ப ஊர்லேயே இல்ல. ஊரவிட்டே போய் 3 மாசம் ஆச்சு. எங்கே போனாருனு தெரியலை' என்றார்கள். செல்போன் நம்பருக்கு முயற்சி செய்தோம். தொடர்ந்து ஸ்விட்ச் ஆஃப்பிலிருந்த போன் திடீரென பதினோராவது முறை `காளி...சூலி' பாட்டு ஹலோ ட்யூன் கேட்டது. ஆள் அட்டென்ட் செய்து பேசினார். `சாமி உங்களைப் பத்தியும், உங்களுடைய தெய்வ பக்தியைப் பத்தியும் பேசணும்' என்று சொன்னோம். கொஞ்சம்கூட அலட்டிக்கொள்ளாமல் `நீங்க ஊருக்குப் போகாம கீழக்குறிச்சி வந்து மேலநத்தம் பஸ்டாப்புக்கு வாங்க' என்று கட் செய்தார். நாம் கிளம்பினோம்...
வடசேரியிலிருந்து 10 கிமீ தொலைவிலுள்ள மேலநத்தம் பஸ்ஸ்டாப்பை நெருங்கினோம். காவி உடையில் நின்று கொண்டிருந்தார் நம்ம சுடுகாட்டு சாமி!
``உங்கள ஊர்ல யாரைக்கேட்டாலும் தெரியல தெரியலன்னு சொல்லுறாங்களே சாமி..?''
``அப்படியா சொன்னாய்ங்க? அப்படித்தான் சொல்லுவானுங்க. நீ மேலே கேளு!''
``ஆபத்தான இடம்னு போஸ்டர் அடிச்சிருக்கீங்களே?''
``ஆமா... மயான காளிங்கறது வேறு எங்குமே கிடையாது. அதைக் கட்டுறதுக்குத் தகுதி வேணும் தம்பி. அது எனக்குத்தான் உலகத்துலேயே இருக்கு. செத்தவங்க நினைவா, நல்லா வாழ்ந்த என் அப்பா அம்மா நினைவா கட்டியிருக்கிறேன். 25 வருடத்திற்கு முன்பு சித்தப்பாவை அழைச்சு வீட்டுல வச்சாரு எங்க அப்பா. அதுதான் இப்ப பிராபளம். எங்க அம்மாவை ஊமத்தங்காயை அறைச்சுக் கொடுத்து கொன்னுட்டாங்க. புதைப்பதற்குகூடக் காசு இல்லாம கடன் வாங்கிய காசுக்கு இடத்தையும் எழுதி வாங்கிக்கிட்டானுங்க. ஆரம்பத்துல நான் திராவிடர் கழகத்தில் இருந்தேன். வடசேரியில் மீட்டிங் போட்டுப் பேசியிருக்கிறேன். வீரமணியும் நானும் அருகருகே நின்று பேசியிருக்கிறோம்னா நம்புவீங்களா? ஆனா அது உண்மை தம்பி. அம்மா போனதும் பத்துப் பதினைந்து வருஷமா வீட்டை விட்டு வெளில திரிஞ்சேன். பிச்சையெல்லாம் எடுத்தேன். இப்ப வந்து இந்தக் கோயில் வேலையை ஆரம்பிச்சேன். ஊர்ல எதிர்ப்பு தெரிவிச்சானுங்க. ஆடு, கோழி அடிச்சுப்போட்டுட்டு நான்தான் கொன்னு போட்டேன்னு சொல்லுவானுங்க. ஆரம்பத்துல கல்லால அடிச்சானுங்க. இப்போ பயங்கரமான சக்தியுள்ள சாமினு விட்டுட்டானுங்க. 24 மணி நேரமும் சுடுகாட்டுக்குப் போவேன், வீட்டுக்கு வருவேன். அதுதான் என் வேலை. எனக்கே வீட்டுப்பக்கம் போறதுக்கு பயமா இருக்கும். அதான் இப்பிடி வெளில வந்திடுறேன்."

``கணவன்-மனைவி பிரச்னையை எப்படித் தீர்க்குறீங்க?''
``பிரச்னைனு வர்றவங்க பெயரை எழுதி அதைக் காளி பாதத்தில வச்சு பூஜை செய்து கொடுத்து அனுப்புவேன், அதைத் தலையணைக்குக் கீழே வெச்சுப் படுத்தால் சரி ஆகிடும். நிறையபேர் வந்து செப்புத் தகடு வாங்கிட்டுப் போவாங்க. நல்லா இருக்கோம் சாமீனு சொல்லிட்டுப் போவாங்க."
``தீராத நோயை தீர்த்து வைப்பேன்னு சொல்லியிருக்கீங்களே சாமி...?''
``அது என்னமோ அப்படி நான் கொடுக்குற மண்ணுல சரி ஆகிடுது. நான் யாரிடமும் பணம் கேட்பதில்லை. நீங்க ஏதாவது செய்வதாக இருந்தால் எனக்கு நோட்டீஸ் அடிச்சுக் கொடுங்கனு சொல்றேன். என் புகழ் அப்படியே பரவிடுது!''
``நீங்க பயங்கரமான சாமின்னு சொல்றீங்களே, சுனாமி, வெள்ளம், மழை, புயல்னு ஏதாவது அறிகுறி தெரிந்து சொல்லி இருக்கீங்களா?''
``எனக்குத் தெரிஞ்சு ஊர்க்காரவங்க 2, 3 பேர் இறந்திடுவாங்கனு முன்கூட்டியே சொல்லிஇருக்கேன். அதோட ஊர்க்காரனுங்க பயந்துட்டானுங்க... சுடுகாட்டுலதான் படுத்துக்கெடப்பேன். அதுல இன்னும் டர்ரு அவங்களுக்கு! எனக்குக் மயான காளி காட்சி கொடுத்து, `நான் பார்த்துக்கிறேன்டா... நீ எனக்கு கோயிலைக் கட்டு!'னு சொன்னிச்சு. அதான் கட்டினேன். மற்ற சாமியைவிட இது அதிக பவர் உள்ள சாமி. தி.க கட்சிக்குள்ளேயே ஜாதி பார்க்கிறார்கள். ஒரு அடிமையாகத்தான் பார்க்கிறார்கள். வெளியே சாமி இல்லன்னு சொல்லுகிறார்கள். உள்ளே பொங்கல் வைக்கிறார்கள். நான் தி.க கட்சியில இருந்தா பயப்படாதவங்க, சாமியைக் கும்பிட ஆரம்பிச்சதும் ஏன் எனக்கு பயப்படுறானுங்கனு தெரியலை. அவ்வளவு ஏன், என்னைப் பார்த்து சாதாரண மக்கள்கூட பயப்படுகிறார்கள். நான் தெய்வத்தின் அருளால் இதை எல்லாம் பண்ணுறேன். மந்திரம் எதுவும் பண்ணி பிள்ளை குட்டிகளை எதுவும் பண்ணிடுவானோனு பயப்படுறாங்க. இப்பக்கூட சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுக்க சுடுகாட்டுக்குத்தான் போறேன். வாங்களேன் இளைப்பாறிட்டுப் போகலாம்!'' என்று நம்மை அழைத்தார்.
`அவசர வேலை சாமி!' எனச் சொல்லி அங்கிருந்து ஜூட் விட்டோம்!
- ஏ.ராம், படங்கள்: கே.குணசீலன்