மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சி.தட்சிணாமூர்த்தி பேராற்றலின் கலை எழுச்சி வடிவம் - சி.மோகன்

சி.தட்சிணாமூர்த்தி பேராற்றலின் கலை எழுச்சி வடிவம் - சி.மோகன்
பிரீமியம் ஸ்டோரி
News
சி.தட்சிணாமூர்த்தி பேராற்றலின் கலை எழுச்சி வடிவம் - சி.மோகன்

படங்கள் : கே.ராஜசேகரன்

சி.தட்சிணாமூர்த்தி பேராற்றலின் கலை எழுச்சி வடிவம் - சி.மோகன்

பேராற்றலின் எழுச்சி வடிவங்களாக அமையும் உருவ பாணியைக்கொண்ட நம் நாட்டார் கலை மரபின் நவீனத்துவக் கலை இயக்கமாகவே திகழ்ந்த சி.தட்சிணாமூர்த்தி,  நம் பெருமிதங்களில் ஒருவர். அவருடைய படைப்புகளைப் போலவே அலாதியானது அவருடைய உடல்மொழி. துள்ளலும் உற்சாகமும் வெளிப்படும் மொழி.

1943-ம் ஆண்டு, வட ஆற்காடு டாக்டர் அம்பேத்கர் மாவட்டத்தைச் சார்ந்த குடியாத்தத்தில் பிறந்தவர் தட்சிணாமூர்த்தி. முனிசிபல் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் ஓவியம் ஒரு தேர்வுப் பாடமாக அமைந்தது. அது முதல் ஓவிய ஆர்வம்.

1960-ம் ஆண்டு சென்னை ஓவியப் பள்ளியில் மாணவனாகச் சேர்ந்தார்.

கே.சி.எஸ்.பணிக்கர் தலைமையில் சென்னை ஓவியப் பள்ளி நவீன முகம் பெற்று எழுச்சியுடன் இயங்கிய காலம் அது, ஆறு ஆண்டுகாலப் படிப்பின்போது ஆசிரியர்களான தனபால், அந்தோணிதாஸ், ஹெச்.வி.ராம்கோபால், எஸ்.முருகேசன் ஆகியோரிடம் இருந்தும், மூத்த மாணவரும் கோட்டையும் வண்ணத்தையும் மாயமாய் உயிர்கொள்ளச் செய்பவருமான சந்தான ராஜிடமிருந்தும் வெகுவாகக் கற்றுக் கொண்டிருக்கிறார். ஓவியம், சிற்பம், அச்சேற்றக் கலை எனக் கலை ஊடகங்களில் தீராத விளையாட்டை, தீவிர மனோ பாவத்துடன் மேற்கொண்டவர்.

சி.தட்சிணாமூர்த்தி பேராற்றலின் கலை எழுச்சி வடிவம் - சி.மோகன்

ஆரம்ப காலங்களில் சுடுமண், உலோகம் போன்ற ஊடகங்களில் தன் படைப்புகளை உருவாக்கிய இவர், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, கல்லிலேயே தன் உருவங்களைப் படைத்தார். கல் அவரை வெகுவாக ஈர்த்தது. கல் அடிப்பதில் அவர் பெரிதும் பரவசமடைந்தார். சுடுமண், உலோகம் போன்ற ஊடகங்களில் வெளிப்பாடு பூரணத்துவம் அடைய பல படிநிலைகள் தேவைப்படுகின்றன. காத்திருக்க வேண்டும். இயல்பிலேயே பரபரப்பும் அதிவேகமும் கொண்ட இவருக்கு, அவை அவ்வளவாகப் பொருத்தமற்றவை. கல்லிலோ படைப்பு உயிர்த்தெழுவதை உளியின் செதுக்கல் களிலிருந்து உடனடியாக உணர முடியுமே.

பொதுவாக, உருவச் சிற்பங்கள் மெருகு, நளினம் போன்ற வசீகரத்தன்மையினால் பார்வையாளனை ஈர்ப்பவை. தட்சிணா

மூர்த்தி, தன் உருவ வெளிப்பாடுகளில் இவற்றை பிரக்ஞைபூர்வமாகத் தவிர்க்கிறார். அவற்றுக்கு மாறாக, கல் அதன் இயற்கைத் தன்மையிலேயே கொண்டிருக்கும் கோடுகள், வளைவுகள், சுழிப்புகள், இழைவுகள் ஆகியவற்றோடு உளி செதுக்கும் கீறல்களையும் தக்கவைத்துக்கொண்டு உடலின் இயக்கங்

களை உயிர்ப்பிக்கிறார். கல்லின் இயற்கை அழகுகளை தான் உருவாக்கும் உருவங்க

ளோடு இசைவுறப் பொருத்திக்கொள்ளும் தன்மை, இவருடைய சிறப்பு அடையாளம். இவருடைய சிற்பங்கள் ஓவியத்தன்மையை உட்கொண்டிருப்பது மற்றுமொரு தனித்துவமிக்க அடையாளம்.

இவருடைய பாறைச் சிற்பங்கள் பெரும்பாலும் பெண் உருவங்களே. அவர்களின் மெய்ப்பாடுகளும்

சி.தட்சிணாமூர்த்தி பேராற்றலின் கலை எழுச்சி வடிவம் - சி.மோகன்

உணர்ச்சி வெளிப்பாடுகளும் அலாதியானவை. கூட்டமாகவோ, தனியாகவோ பெண்களை உணர்ச்சி பாவங்களுடன் வடிவமைக்கிறார். இன்றைய சமூக வாழ்வில் பெண்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பற்ற தன்மை காரணமாக, அவர்களுக்குள் விளையும் படபடப்புகள், ஏக்கங்கள், கவலைகள், பரிதவிப்புகளை இவருடைய பெண்கள் தாங்கிக்கொண்டிருக்கிறார்கள். உணர்ச்சி பாவங்களோடு அலங்காரங்களும் இவருடைய படைப்புகளில் உண்டு. இந்த அலங்காரங்கள் ஆதி எளிமையோடு, பழங்குடிக் கலை மரபின் சாயைகளோடு அமைகின்றன. நம் சமூக வாழ்விலிருந்து தட்சிணாமூர்த்தியிடம் உள்ளுறைந்த பெண்கள், அவருடைய ஓயாத உளியிலிருந்து அலாதியான தோற்றப் பொலிவோடும் உணர்ச்சி பாவங்களோடும் வெளிப்பட்டுக் கொண்டே இருந்தார்கள்.

1985-ம் ஆண்டு, லலித் கலா அகாடமியில், அவரை நான் முதன் முதலாகச் சந்தித்தேன். அது, நான் ‘க்ரியா’வில் பணிபுரிந்த காலம். அப்போது சுந்தர ராமசாமியின் ‘பள்ளம்’ சிறுகதைத் தொகுப்பு தயாராகிக் கொண்டிருந்தது. அதற்கான அட்டை வடிவமைப்பு பற்றி யோசித்துக் கொண்டிருந்தோம். அச்சமயத்தில், ‘க்ரியா’ அலுவலகம் வந்த, கு.அழகிரிசாமியின் மகனும் புகைப்படக் கலை வித்தகருமான சாரங்கன், லலித் கலா அகாடமியில் அவர் பார்த்த, தட்சிணாமூர்த்தியின் சிற்பமொன்று அதற்குப் பொருத்தமாக இருக்குமென்று பரிந்துரைத்தார். ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டதற்கிணங்க, சாரங்கனுடன் நானும் சென்றேன். அங்கு நான் பார்த்த தட்சிணாமூர்த்தியின் அந்தச் சிற்பம் மிகுந்த ஆச்சரியம் அளித்தது. பெருவியப்புடன் அதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். ‘பள்ளம்’ கதைக் கென்றே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சிற்பமாக அது இருந்துகொண்டிருந்தது. சாரங்கன் அதைப் புகைப்படங்கள் எடுத்தார். அந்தப் புகைப்படங்களில் ஒன்றுதான் ‘பள்ளம்’ தொகுப்பின் அட்டைப் படமாக அமைந்தது.

அதற்கும் முன்பாகவே, ‘க்ரியா’ 1976-ம் ஆண்டில் வெளியிட்ட சுந்தர ராமசாமியின் ‘பல்லக்குத் தூக்கிகள்’ தொகுப்புக்கு, தட்சிணாமூர்த்தி கோட்டோவியம் வரைந்து கொடுத்திருக்கிறார். இலக்கியத்தின் மீது ஆர்வமும், இரு துறைப் படைப்பாளிகளும் இணைந்து ஓர் இயக்கமாகச் செயல்பட வேண்டுமென்பதில் ஈடுபாடும் கொண்டிருந்தார். தனித்துவமிக்க மலையாள ஆளுமையான எம்.கோவிந்தனுடன் அவர் கொண்டிருந்த பரிச்சயத்திலிருந்து இதற்கான உத்வேகத்தை அவர் பெற்றிருந்தார்...

முதல் சந்திப்புக்குப் பின், 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவருடனான நட்பு நீடித்து நிலைத்திருந்தது. பரஸ்பர மதிப்பும் நேசமும் கொண்டிருந்த நட்பு.

சி.தட்சிணாமூர்த்தி பேராற்றலின் கலை எழுச்சி வடிவம் - சி.மோகன்

அவர் தன்னுடைய இரண்டு சிற்பங்களை வெவ்வேறு தருணங்களில் எனக்குக் கொடுத்தார். முதலாவது, ஒரு பாறைச் சிற்பம். நீண்ட கழுத்துடன் தலை சரித்திருக்கும் ஒயிலான பெண் வடிவம். ஓவியக் கல்லூரி, செராமிக் பிரிவு வளாகத்தின் முன்பும் அருகாகவும் அவர் இடையறாது உருவாக்கிக்கொண்டிருந்த கல் சிற்பங்கள் நிறைந்திருக்கும். ஒரு முறை, அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, ‘உங்களுக்குப் பிடித்த ஒன்றை எடுத்துக்கொள்ளுங்களேன்’ என்றார். நான் ஒவ்வொன்றாகத் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டிருந்தேன். எதைத் தேர்ந்தெடுப்பது என்று நிச்சயிக்க முடியவில்லை. அப்போது அவரே, ‘இவளை எடுத்துக்கொள்ளுங்களேன். நல்ல அழகி’ என்று ஒன்றைக் காட்டினார். மேலும், அதை நான் கொண்டுபோவதற்காக, என் பாடு அவருக்குத் தெரியும் என்பதனால், ஆட்டோவுக்கான பணமும் கொடுத்தார்.

மற்றொரு முறை, கல்லூரியில் அவருடைய துறையில், அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அவருடைய மேசையின் ஓர் ஓரத்தில் முக்கால் அடி உயர முழு உருவ உலோகச் சிற்பப் பெண் மிக ஒயிலாக நின்று கொண்டிருந்தாள். மிகக் குறைந்த உலோகச் சிற்பங்களே அவர் படைத்திருக்கிறார். அவற்றில் ஒன்று அது, அபாரமாக இருந்தது. அதை நான் கையில் எடுத்துப் பார்த்தேன். திடமான சிலை,

சி.தட்சிணாமூர்த்தி பேராற்றலின் கலை எழுச்சி வடிவம் - சி.மோகன்

நல்ல கனம், பக்கவாட்டில் தலை சரிந்திருந்தாள். முன்னும் பின்னுமாகவும், சேலை மடிப்புக்களையும் முக அழகையும், தோற்றப் பொலிவையும் பார்த்தபடி இருந்தேன். சிகரெட் புகைத்தபடி, சுபாவமான சிரிப்புடன், ‘பிடிச்சிருக்கா?’ என்றார். நான் பரவசத்துடன் ‘ரொம்பவே’ என்று தலையசைத்தேன். ‘சரி, எடுத்துக்கங்க’ என்றார். நான் நம்ப முடியாமல் திகைத்துப் போய் அவரைப் பார்த்தேன். ‘இருக்கட்டும்; அவ உங்ககிட்டயே இருக்கட்டும்’ என்றார். அதன் பின், பல வருடங்கள் அவள் என் மேசையில் ஒயிலாக நின்று கொண்டிருந்தாள். என்னுடனேயே இருந்தாள். மிக நெருக்கடியான ஒரு தருணத்தில் நான் அவளைப் பிரியும்படி நேரிட்டது. தட்சிணாமூர்த்தியின் மறைவில் அவளுடைய பிரிவை நான் வெகுவாகவே உணர்கிறேன். தெரிந்த இடத்தில்தான் இருக்கிறாள். போய்ப் பார்க்க வேண்டும்