மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கானமழை பொழிவதெப்போ... - ச.தமிழ்ச்செல்வன்

கானமழை பொழிவதெப்போ... - ச.தமிழ்ச்செல்வன்
பிரீமியம் ஸ்டோரி
News
கானமழை பொழிவதெப்போ... - ச.தமிழ்ச்செல்வன்

ஓவியம் : கார்த்திகேயன் மேடி

கானமழை பொழிவதெப்போ... - ச.தமிழ்ச்செல்வன்

தோழர் திருவுடையானை எப்போது முதல்முதலாகச் சந்தித்தேன் என்பது இப்போது நினைவில் இல்லை. கோவில்பட்டியிலிருந்து சங்கரன்கோவிலுக்கு தொழிற்சங்க வேலையாக வாரம் ஒருமுறை போய்க்கொண்டிருப்பேன். அப்போது கரிசல் குயில் பாடகர்களான கிருஷ்ணசாமியையும் சந்திரசேகரையும் தவறாமல் சந்திப்பேன். அந்த நாட்களில்தான் அவர்களால்தான் திருவுடையான் அறிமுகம்.

கைத்தறி வேட்டி, வெள்ளை நிறக் கைத்தறிச் சட்டை, நெற்றி நிறையத் திருநீறு – இதுதான் அந்த இளைஞனின் தோற்றம். பாடகர் கிருஷ்ணசாமி பாட, அவருக்கு தபேலா இசைக்கும் கலைஞனாக திருவுடையான் அறிமுகமானார். கரிசல் குயில் கச்சேரிக்கு இடையில் தபேலா வாசித்தபடியே திருவுடையான் பாடுவார். அப்போது, சினிமாப் பாடல்களை எங்கள் மேடைகளில் பாடுவது இல்லை என்பதால், தயங்கித் தயங்கி “இந்தப் பாட்டைப் பாடலாமா தோழர்?” என்று கேட்டுக் கேட்டுப் பாடுவார். “செந்தமிழ் தேன்மொழியாள்” போன்ற பழைய திரைப்படப் பாடல்களையே அற்புதமாகப்பாடுவார். அவருக்காகவே எங்கள் இறுக்கம் தளர்த்தி, முற்போக்கான உள்ளடக்கம் கொண்ட திரைப்படப் பாடல்களையும் பாடலாம் என முடிவெடுத்தோம்.

இசை உலகில் தண்டபாணிதேசிகரைத் தன் மானசீகக் குருவாகக்கொண்டவர் திருவுடையான். சொற்சுத்தமாகப் பாடும் சீர்காழி கோவிந்தராஜனை அவர் பெரிதும் கொண்டாடுவார். சீர்காழி மறைவிற்குப் பிறகு சங்கரன்கோவிலில் சீர்காழிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இசை இரவை நடத்தி விடிய விடிய சீர்காழியின் பாடல்களை திருவுடையான் பாடினார். இலங்கை அறிவிப்பாளர் பி.ஹெச்.அப்துல் ஹமீது அந்த நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். எட்டுக்கட்டையில் பாடக்கூடிய சாரீரம். எந்தப் பாடகர் பாடிய பாடலையும், அவர் பாடும்பொழுது அப்பாடல் கூடுதல் வெளிச்சம் பெறும். எங்களோடு இணைந்து எங்கள் குழுக்களில் தமிழகம் முழுவதும் பயணம் செய்யும் போதும், அதே நெற்றி நிறைந்த திருநீற்றுக் கோலத்துடன்தான் தோன்றுவார். “உங்களுக்கு அதிலே ஒன்றும் ஆட்சேபம் இல்லையே” என்றும் கேட்டுக்கொள்வார். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை இயக்கத்தில் சேர்க்க எந்தத் தடையும் இல்லை. தானாக மனமாற்றமடைந்து அவர் பகுத்தறிவின் பரப்புக்குள் வருவார் எனக் காத்திருப்போம். இதுதான் எங்கள் நிலை என்று அவருக்குச் சொன்னோம். உண்மையில் அதுவே நிகழ்ந்தது. கச்சேரி முடிந்ததும் மேடைக்கு முன்னாள் அமர்ந்து முற்போக்கு, இடதுசாரி இயக்கத் தோழர்களின் உரைகளைக் கேட்டும், எங்களோடு தொடர்ந்து விவாதித்தும், கட்சி வகுப்புகளில் கேள்விகள் கேட்டும், கொஞ்சம் வாசித்தும் தன்னை செதுக்கிக்கொண்டே வந்த திருவுடையானின் நெற்றிப்பட்டை, ஒருநாள் தானாகவே காணாமல்போனது. அவருடைய இரட்டையரான பெண் குழந்தைகள் அறிவரசி, அன்பரசி இருவரும் பத்தாம் வகுப்பில் 494, 489 மதிப்பெண்கள் பெற்றபோது, அவர் பிறந்த சாதி அமைப்பினர் விழா எடுத்து பண முடிப்புத் தர முன்வந்தபோது, தயக்கமின்றி உறுதியான குரலில் அதை நிராகரித்தார். தன்னை எந்த சாதி மத அடையாளத்திற்குள்ளும் வைப்பதை எப்போதும் மறுத்துவந்தார்.

கம்யூனிஸ்ட் வாழ்வில் பிரிக்கமுடியாத பண்பாட்டுக்கூறுகளாக விளங்கும் எளிமை, சுயநல மறுப்பு, எதிர்பார்ப்பில்லாத மக்கள் சேவை இவற்றை இயல்பாகவும் முழுமையாகவும், தன்போக்கில் உள்வாங்கிக்கொண்ட திருவுடையான், பாடுவதோடு நில்லாமல், உள்ளூர் மக்களுக்கான போராட்டங்களிலும் பங்கேற்கத்தொடங்கினார். அந்தப் பயணத்தில் ஒரு கட்டத்தில் அவர், மார்க்சிஸ்ட் கட்சியின் சங்கரன்கோவில் நகரச் செயலாளராக வந்து சேர்ந்தார். பல போராட்டங்களை முன்னெடுத்தார், கைதாகி சிறை சென்றார்,

பேச்சுவார்த்தைகளின் மூலம் பல பிரச்னைகளைத் தீர்த்துவைத்தார், மாநிலம் முழுக்க செயல்படவேண்டிய கலைஞன் என்பதால், கட்சியின் மாநிலத்தலைமையின் வழிகாட்டுதல்படி, விரைவில் அப்பொறுப்பிலிருந்து விடுபட்டு, முழு நேரக் கலைஞன் ஆனார்.

“காலுக்குச்செருப்புமில்லை; கால்வயிற்றுக் கூழுமில்லைபாலுக்கு உழைத்தோமடா; என் தோழனேபசையற்றுப் போனோமடா”

என்று தோழர் ஜீவானந்தம் எழுதிய பாடல் வரிகளில் புறப்பட்ட இடதுசாரி இயக்கத்தின் அசலான வாரிசாக, தன் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பால் திருவுடையான் உயர்ந்தார். பிரமாண்டமான மாநாட்டு மேடைகளிலும், தெருமுனைக்கூட்டங்களிலும் அரங்கங்களுக்கு
உள்ளும், பிரசார வேன்களிலும், தெருவோரப்புழுதியில் அமர்ந்தபடியும் என அவரது மக்கள் இசைப் பயணம் தொடர்ந்தது.

கானமழை பொழிவதெப்போ... - ச.தமிழ்ச்செல்வன்

இசைஞானி இளையராஜா உள்ளிட்ட சில இசையமைப்பாளர்களின் இசையமைப்பில், சில திரைப்படங்களிலும் பாடினார். வருமானம் அதிகம் தரும் சில வாய்ப்புகள் அவரைத் தேடிவந்தபோது, “நான் செங்கொடி இயக்கத்திற்காகத்தான் பாடுவேன்” என உறுதியுடன் மறுத்தவர்.

கைத்தறி நெசவு அவரது குடும்பத் தொழில். வறுமையின் காரணமாக எட்டாம் வகுப்புடன் அவரது பள்ளிப்படிப்பு முடிவுக்கு வந்தது. குடும்பத் தொழிலுடன், சித்திரமும் கைப்பழக்கமாக இருந்ததால், தட்டி போர்டுகள் எழுதும் தொழிலையும் கைக்கொண்டார். ‘கலைமகள் ஆர்ட்ஸ்’ என்பது, அவரது குட்டி நிறுவனம். இயக்க நிகழ்ச்சிகளுக்கு அதிக நேரம் ஒதுக்க நேர்ந்த தால்,  ‘கலைமகள் ஆர்ட்ஸ்’ தட்டுத்தடுமாறிக்கொண்டிருந்தது. டிஜிட்டல் பேனர்களின் வருகை அந்தப் பயணத்திற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்தது. மிச்ச நேரத்தில் கைத்தறிச் சேலைகளைத் தூக்கிக்கொண்டு பேருந்தில் விற்பனைக்குக் கிளம்பிவிடுவார்.

விசைத்தறி தொழிலாளர்களின் போராட்டங்களில் தளபதியாக விளங்கினார். ஊருக்காக உழைத்தார். ஆனாலும் வார்டு கவுன்சிலருக்கு அவர் போட்டியிட்டபோது, வெறும் 39 ஓட்டுகளே கிடைத்தன. “சரி… அதுக்காக நாம மக்கள கோவிச்சிக்கிட்டு, எங்கிட்டுப் போக…?” என்று  சிரித்துக்கொண்டே மக்கள் பணியைத் தொடர்ந்தார்.

சேலத்தில் நிகழ்ச்சி முடித்து வாடகை காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது, 28.08.2016 பின்னிரவில், சாலை விபத்தில் அவரது வாழ்க்கைப் பயணம் முடிவுற்றது. பொதுவாக எங்கள் இயக்கத்தவர் கொல்லப்பட்டாலும், இறந்தாலும் பெரிதாக யாரும் பேசுவது இல்லை.

ஆனால் திருவுடையானின் மரணம் பற்றி எல்லா ஊடகங்களும் பேசின. துக்கம் நிறைந்த இந்தச் சூழலிலும் இது எங்களுக்கு வியப்பளிக்கவே செய்கிறது. ஒரு கலைஞனுக்குத் தமிழ் கூறும் நல்லுலகம் செலுத்தும் மரியாதையாகவே இதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

தனிப்பட்ட முறையில் ஒரு இளைய சகோதரனைப்போல எங்கள் குடும்பத்தாரிடம் அன்பு பாராட்டிய அவனுடைய மரணம் எங்களை உருக்குகிறது. எங்கள் இயக்கத்திற்கோ, இது உண்மையிலேயே ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவருடைய குடும்பம் அன்பு தவழும் பெரிய கூட்டுக் குடும்பம். இந்த இழப்பைச் சந்திக்கும் மன வலிமையை அவருடைய இணையருக்கும், மூன்று குழந்தைகளுக்கும், அக்குடும்பத்தின் அரவணைப்பு நிச்சயம் தரும். வேண்டாம் என மறுத்த நிலையிலும், குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்தைக் கணக்கில்கொண்டு,  அவருடைய குடும்பப் பாதுகாப்பு நிதியைத் திரட்டிக் கொண்டிருக்கிறோம். அவருடைய பாடல்களை முழுமையாகத் தொகுத்து வெளியிடவும், இணையத்தில் பதிவேற்றவும் முயற்சி செய்கிறோம். இதையெல்லாம் செய்துவிடலாம்தான். ஆனால் திருவுடையானின் கான மழையை யாரால் மீண்டும் தருவிக்க முடியும்?