
ஓவியம் : பிரேம் டாவின்ஸி - படம் : கே.ராஜசேகரன்

எப்போது நான் அசோகமித்திரனைச் சந்தித்தேன்? எங்கே சந்தித்தேன்? யோசனை செய்துகொண்டே இருக்கிறேன். ஞாபகத்திற்கு வரவில்லை. முதன்முதலாக அவருடைய கதைப் புத்தகத்தை தி.நகரில் வீராசாமி் தெருவில் உள்ள நூல்நிலையத்தில், படிக்க எடுத்தேன். அந்தத் தொகுதியில்தான் எனக்குப் பிடித்த கதையான ‘ரிக்ஷா’ வந்திருந்தது. அதைப் படித்துப் படித்து விழுந்து விழுந்து சிரித்தேன். அவர் பெரும்பாலான கதைகளை வாசகர்களிடம் விட்டுவிடுவார். வாசகர்தான் அந்தக் கதையை முடிக்க வேண்டும். மேலும், அவர் கதைகள் ஒருமுறைக்கு இருமுறை படிக்கத் தூண்டிக்கொண்டே இருக்கும். ஆடம்பரமான வார்த்தைச் சேர்க்கை தென்படாது. கிட்டத்தட்ட ஒரு செய்தித்தாளைப் படிப்பதுபோல் இருந்தாலும், ஆழமான உணர்வுநிலைக்குப் படிப்பவரைக் கொண்டுசெல்லும். நான் கதைகள் வாசிப்பதில் ஆர்வம் உள்ளவன். பொதுவாக, கதைக்கென்று ஒரு விதி இருக்கும். ஒரு ஆரம்பம் பின் முடிவு என்று. ஆனால், அசோகமித்திரன் அதை முற்றிலும் மாற்றிவிட்டார். அப்போதிலிருந்தே எனக்கு அசோகமித்திரன் மீது பெரிய மதிப்பு ஏற்பட்டுவிட்டது. சந்தித்து, பார்க்க வேண்டும் என்று நினைத்த எழுத்தாளர்களில் அவரும் ஒருவர். அவரிடமிருந்து நிறைய தெரிந்து
கொள்ள வேண்டுமென்று நினைத்துக்கொள்வேன்.
யோசித்துப் பார்க்கிறேன்... எங்கே அசோகமித்திரனை முதலில் சந்தித்தேன்? அப்போது அவரிடம் என்ன பேசினேன். எனக்கு ஞாபகம் வந்துவிட்டது. முதன் முறையாக தி.நகரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில்தான் சந்தித்தேன். முன்பே இலக்கியக் கூட்டங்களில் பார்த்திருப்பதால், அவர்தான் அசோகமித்திரன் என்று அடையாளம் காண முடிந்தது. உண்மையில் என் மனைவி அங்கு பணி புரிந்துகொண்டிருந்ததால், அங்கு வந்திருந்தேன். பணம் எடுக்க அங்கு வந்திருந்தவரை நெருங்கி, “நீங்கதானே அசோகமித்திரன்” என்று கேட்டேன். அவர் என்னை முறைத்துப் பார்த்தார். அந்த இடத்தில் அப்படி ஓர் அறிமுகத்தை அவர் விரும்பவில்லை என்று தோன்றியது. பெரும்பாலும் நான் இப்படி ஏதாவது பேசும்போது, கேட்பவர்கள் என்ன மாதிரியான மனோநிலையில் இருப்பார்கள் என்பதை யோசிப்பது இல்லை. திரும்பவும் இன்னொரு முறை கேட்டேன். இந்த முறை அவருக்குக் கோபம் வந்துவிட்டது. “நான் அசோகமித்திரனா இருந்தா என்ன? ஏன் இங்கே இதையெல்லாம் கேட்கிறீங்க?”என்று கேட்டார். உடனே நான் அப்படிக் கேட்பது சரியில்லை என்று ஒதுங்கிவிட்டேன். அன்று அப்படி நடந்ததே தவிர, உண்மையில் அசோகமித்திரன் அப்படி இல்லை. எல்லோரிடமும் இன்முகத்துடன் பேசக்கூடியவர்.
அடுத்த முறை அவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குத் திரும்பவும் ஏற்பட்டது. இந்த முறை அவர் வீட்டு முகவரியைத் தெரிந்துகொண்டு அவர் வீட்டுக்கே சென்றேன். ‘கணையாழி’யில் என் குறுநாவல், ‘தி.ஜானகிராமன் குறுநாவல் போட்டி’யில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. நான் எப்போதும் என்னைச் சுற்றியே கதை எழுதிக்கொண்டிருப்பேன். ‘விபத்து’ என்ற அந்தக் கதையில் வரும் ஒரு கதாபாத்திரம் (அது நான்தான்) வங்கியில் பணிபுரிபவராக எழுதியிருந்தேன். வங்கியில் பணிபுரிபவராக எழுதியிருந்தாலும், எந்த வங்கி என்று எழுதவில்லை. ‘கணையாழி’யில் வரும் என் கதையைப் படித்துவிட்டு, என் வங்கியில் உள்ள பெரிய அதிகாரி எனக்குத் தண்டனை கொடுத்துவிடுவாரோ என்று தோன்றியது. ஏனெனில், என் வங்கியில் உள்ள நண்பர் ஒருவர் ‘இந்து’வில் வாசகர் கடிதம் ஒன்றை அப்போது எழுதியிருந்தார். அதைப் படித்த மேல் அதிகாரி ஒருவர் நண்பரை எச்சரிக்கை செய்தார். எது எழுதினாலும் வங்கியிட
மிருந்து அனுமதி பெற வேண்டுமென்று. அந்த பயம் எனக்கும் தொற்றிக் கொண்டிருந்தது. தமிழ் பத்திரிகையான ‘கணையாழி’யைப் படித்துவிட்டு அதுமாதிரி ஆகிவிடுமோ என்ற பயம்தான்.
அசோகமித்திரன் அன்று உடம்பு சரியில்லாமல் இருந்தார். ஜுரம். படுத்துக்கொண்டிருந்தார். அந்த நிலையிலும் அவர் என்னைப் பார்க்க அனுமதித்தார். ‘கணையாழி’யில் வரப்போகும் என் குறுநாவலைப் பற்றிச் சொன்னேன். அதைக் கேட்டவுடன் அவர் அந்தக் குறுநாவலை முழுதாகச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்.
“சரி அந்த குறுநாவலுக்கு இப்போ என்ன?” என்று கேட்டார்.
“அந்தக் குறுநாவலில் பணிபுரியும் இடம் வங்கி என்பதற்குப் பதிலாக, வேற இடத்தில் பணிபுரிவதாக மாற்றிவிடலாமா?” என்று கேட்டேன்.
“ஏன்?”
“வங்கியில் பணிபுரிவது போல் வருகிறது. அதை மாற்ற நினைக்கிறேன்.”
“அதெல்லாம் மாற்ற வேண்டாம். நீங்க கவலைப்படாதீங்க, உங்களை யாரும் ஒன்றும் கேட்க மாட்டார்கள்” என்றார் அசோகமித்திரன்.
என் கதை ‘கணையாழி’யில் வருவது எங்கள் அலுவலகத்தில் உள்ள யாருக்கும் தெரியவில்லை. ஏன் அதுமாதிரியான பத்திரிகையை அவர்கள் கேள்விப்பட்டதே இல்லை. மேலும், நான் தமிழில் கதை எழுதி இருந்தேன். யாரும் தமிழே படிக்க மாட்டார்கள். உண்மையில் நான்தான் தேவை இல்லாமல் பயந்திருந்தேன். இப்படித்தான் என் உண்மையான சந்திப்பு அவர் வீட்டில் நடந்தது.
இன்னொரு முறை அசோகமித்திரன் வீட்டிற்கு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நண்பர் ஒருவரை அழைத்துக்கொண்டு போனேன். அந்த நண்பர் கல்லூரியில் படிக்கிறார் என்பதைக் கேள்விப்பட்டு, “கதை எழுதுவதை அப்புறம் வைத்துக்கொள்ளுங்கள் முதலில் படிப்பில் கவனம் செலுத்துங்கள்; எழுதுகிறேன் என்று படிப்பில் கோட்டை விட்டுவிடக் கூடாது” என்று அறிவுரை கூறி அனுப்பினார். இதுதான் அசோகமித்திரன். அவர் எப்போதும் நடைமுறை வாழ்க்கையைப் பற்றி சிந்திப்பவர்.
அசோகமித்திரனின் சிறுகதைகளில் நான் முக்கியமாய் கவனிப்பது, அவர் பெண் கதாபாத்திரங்களை எப்படி உருவாக்குகிறார் என்பது. படிப்பவர்களுக்கு, பெண் பாத்திரங்கள் மீது ஒருவித பச்சாதாபம், இரக்க உணர்வு ஏற்படாமல் இருக்காது. அவருடைய பெண் பாத்திரங்கள் பலவீன மானவர்களா என்ற கேள்விகூட என்னுள் எழும். ஆனால், கதையில் சில தருணங்களில் அவர்கள் தீவிரமாக இருப்பார்கள். ‘அடுத்த தலைமுறை’ என்ற சிறுகதையில் வரும் அம்மா, முதலில் பையன் வேறு ஒரு ஜாதியில் உள்ள பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதை விரும்ப மாட்டாள். அந்தப் பெண்ணை ஏற்றுக்கொள்ளமாட்டாள். சாதாரண நிலையில் இருக்கும் பையனை அந்தப் பெண்தான் மாற்றி, அமெரிக்காவில் பணிபுரியவைப்பாள். அவன் மனைவியை வீட்டிற்கு அழைத்துக்கொண்டு வர முயலும்போது, அவனை ஏசி அனுப்பிவிடுவாள். பல ஆண்டுகள் கழித்து, திரும்பவும் பையன் இந்தியா வருகிறான். அம்மா கேட்கிறாள், “ஏன் அவளை அழைத்து வரவில்லையா?” என்று. “இல்லை. அடுத்த முறை அழைத்து வருகிறேன்” என்பான். பார்க்க அம்மா மோசமாக ஒப்பிப்போய் விகாரமாக இருப்பாள். அவள் என்ன மருந்தைச் சாப்பிடுகிறாள் என்பது அவளுக்கே தெரியாது. “அடுத்த முறை நான் எங்கே பார்க்கப்போகிறேன்?” என்பாள் அம்மா. அவன் அமெரிக்கா போய்விடுவான். விமான நிலையத்திற்கு வரும் அவன் மனைவி சொல்வாள். “அப்பா போன் பண்ணிச் சொன்னார். உங்கள் அம்மா இறந்துவிட்டாள்” என்று. கதை முடிவில் அசோகமித்திரன் எழுதியிருப்பார், ‘அவன் அம்மா பத்து நாட்கள் சாப்பிட வேண்டிய மருந்தை ஒரே நாளில் சாப்பிட்டுவிட்டாள்’ என்று.
படிக்கும்போதே அம்மா கதாபாத்திரம் மீது நம் இரக்கம் முழுவதும் செல்லும்.
இன்னொரு கதையில் (கதைப் பெயர் ஞாபகத்திற்கு வரவில்லை) கணவன் சொல்லைத் தட்டாத மனைவி. காரணம் இல்லாமல் அவனுடைய கடுமையான கோபத்திற்கு பயந்தபடி இருப்பாள். பொருளாதாரரீதியில் மிக மோசமான சூழ்நிலை. கணவனுக்காகக் குறி கேட்க ஒரு ஆன்மிகப் பெரியவரைப் போய்ப் பார்ப்பாள். அங்கிருந்து வீடு திரும்பி வர தாமதமாகிவிடும். கணவனுக்கு பயப்படுவாள். கணவனும் அவளை அடிக்கப்போவான். இந்த இடத்தில் ஒரே ஒருமுறை கணவனை முறைப்பாள். அடுத்த நாளிலிருந்து கணவன் அந்த வீட்ட்டை விட்டுப் போய்விடுவான். வீட்டை விட்டுப் போய்விட்ட கணவன் மீது நமக்கு எந்த இரக்கமும் உண்டாகாது. ஆனால், அந்த மனைவி மீதுதான் நமக்கு எல்லாவித இரக்க உணர்ச்சியும் குவியத் தொடங்கும். இதுதான் பெண் பாத்திரங்கள் மீது ஒரு விசேஷத்தன்மையை அசோக
மித்திரன் எப்போதும் உருவாக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. சாதாரணமாகச் சொல்வதைப் போல, அசாதாரண அனுபவத்தைச் சொல்லிக்கொண்டு போவார். கதையைத் திரும்பத் திரும்ப வாசிக்கத் தூண்டும்விதமாய் இருந்துகொண்டே இருக்கும்.
என் புனைபெயர் அழகியசிங்கர். இந்தப் பெயரை நான் தேர்ந்தெடுப்பதற்கு மறைமுகமாக அசோகமித்திரன்தான் காரணம். அப்போது நான் ‘கணையாழி’, ‘தீபம்’ பத்திரிகைகளின் தீவிர வாசகன். ஒருமுறை கணையாழியில் நோபல் பரிசு பெற்ற ஐ.பி.ஸிங்கர் என்ற எழுத்தாளரைப் பற்றி அசோகமித்திரன் எழுதியிருந்தார். அதைப் படித்துவிட்டு நான் அமெரிக்கன் நூல்நிலையத்தில் ஐ.பி.ஸிங்கரின் புத்தகங்களைத் தேடி எடுத்துப் படித்துக்கொண்டிருந்தேன்.
அப்போது தி.ஜானகிராமன் பெயரில் ‘கணையாழி’ குறுநாவல் போட்டி அறிவித்திருந்தது. முதன்முதலாக நான் ஒரு குறுநாவல் எழுதி, அந்தப் பத்திரிகைக்கு அனுப்பத் தயாராக இருந்தேன். என் இயற்பெயரை ஒரு நாடக நடிகர் கெடுத்துவிட்டார் என்று நினைத்தேன்.
அதனால், புனைபெயரில் குறுநாவலை அனுப்ப வேண்டுமென்று நினைத்திருந்தேன். அந்தத் தருணத்தில்தான் நான் இலக்கிய நண்பர்கள் சிலருடன் பார்த்தசாரதி கோயிலைச் சுற்றிக் கொண்டிருந்தேன்.

உண்மையில் பார்த்தசாரதி கோயிலில் மூலவருக்குப் பின்னால் உள்ள ஒரு பிரகாரத்தில் அழகியசிங்கர் என்ற பெயரில் நரசிம்மன் உருவச்சிலை இருந்தது. அந்த சந்நிதிக்கும் பலர் வந்திருந்து வணங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த சாமி சந்நிதியில் உள்ள பெயரைப் பார்த்தவுடன், என்ன புனைபெயர் வைத்துக்கொள்ளலாம் என்று புலப்பட்டது. ஐ.பி.ஸிங்கருக்கு இணையாக அழகியசிங்கர் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தேன். இதற்கு மறைமுகமாக அசோகமித்திரன்தான் காரணம். அவருக்கு என் நன்றி எப்போதும் உரித்தாகும்.
1988 ஆம் ஆண்டு ‘நவீன விருட்சம்’ என்ற பெயரில் நான் ஒரு சிற்றேடு தொடங்கினேன். ஆரம்பத்தில் ஞானக்கூத்தன் ஒவ்வொரு இதழுக்கும் ஒரு கவிதை எழுதிக் கொடுப்பார். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அந்த இதழ் வெளிவரும். என் பத்திரிகையில் அசோகமித்திரனையும் எழுதவைக்க ஆசைப்பட்டேன். நான் அவரிடம், “எழுதித் தர முடியுமா?” என்று கேட்டேன். அவர் உடனே எழுத ஆரம்பித்துவிட்டார். அவர் ஒப்புக்கொண்டு எழுதித் தருவார் என்று முதலில் நான் நம்பவில்லை. பின், நவீன விருட்சத்தில் பெரும்பாலான அஞ்சலிக் குறிப்புகளை அசோகமித்திரன்தான் எழுதிக் கொடுத்திருக்கிறார்.
அதுபோலவே அவருக்கு ‘சாகித்ய அகாடமி’ விருது கிடைத்தபோது, ஸ்ரீனிவாஸ் காந்தி நிலையத்தில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தேன். கூட்டத்திற்கு வந்தவர்கள் எல்லோரும் சீக்கிரமாகவே பேசி முடித்துவிட்டார்கள். கூட்டம் 1 மணி நேரத்தில் முடிந்துவிட்டது.
எனக்கு இது குறையாகவே இருந்தது. அசோகமித்திரன் அடிக்கடி ஒன்று சொல்வார். ‘இங்க கூட்டம் நடக்கிற இடத்திலதான் நாம பெருமை பேசிக்கொள்வோம். ஆனால், தெருவில் இறங்கி நாம நடந்து போனா, நாம யாருமில்லை. நமக்கு எந்த மதிப்பும் இருக்காது.’
எனக்கு அவரிடம் பிடித்தது. அவரது நகைச்சுவை உணர்வு. எப்போது பேசினாலும் இந்த நகைச்சுவை உணர்வோடுதான் பேசுவார்.
ஒருமுறை ஓர் இலக்கியக் கூட்டத்தில் கலந்துகொண்டு நானும் அசோகமித்திரனும் டூவீலரில் வந்துகொண்டிருந்தோம். அந்தக் கூட்டத்தில் நான் கவிதை வாசித்திருந்தேன். அவரிடம் தயங்கித் தயங்கிக் கேட்டேன். “என் கவிதை எப்படி இருந்தது?” என்று. கொஞ்ச நேரம் அசோகமித்திரன் பேசவில்லை. பின் அவர் சொன்னார், “நான் கவிதை எழுதினால் எப்படி இருக்குமோ... அப்படி இருந்தது” என்றார். எனக்கோ தாங்க முடியாத சிரிப்பு. ஏன் என்றால், அவருக்குக் கவிதையே பிடிக்காது. எழுதவும் மாட்டார்.
பத்திரிகையில் வரும் கதையை அவர் படித்து, பிடித்திருந்தால், ஒரு கார்டில் பத்திரிகை பற்றியும் கதை நன்றாக வந்துள்ளது என்றும் குறிப்பிடாமல் இருக்க மாட்டார். அவர் அதுமாதிரி ஒரு கார்டில் எழுத வேண்டும் என்று அவசியம் இல்லை.
அவர் வேளச்சேரியிலிருந்து தி.நகருக்கு அவருடைய பெரிய புதல்வன் வீட்டிற்குக் குடிபெயர்ந்து வந்துவிட்டார். இதனால், மேற்கு மாம்பலத்தில் குடியிருக்கும் நான், அடிக்கடி அவரைச் சந்திப்பேன். வாரத்திற்கு ஒருமுறையாவது போனில் பேசிக்கொள்வோம். அவருக்கு ஏதாவது உதவி என்றால், உடனே போய்ச் செய்வேன். அவரைப் பார்க்கும்போதெல்லாம் மாம்பலத்தில் உள்ள போளி ஸ்டாலில் ஒரே ஒரு மிளகாய் பஜ்ஜி வாங்கிக்கொண்டு செல்வேன். அதைச் சாப்பிட்டுக்கொண்டே, ‘இதைத் தயாரிக்கிறவனுக்கு நோபல் பரிசு தர வேண்டும்’ என்பார். மௌனி, ஜி.நாகராஜன் போன்ற எழுத்தாளர்களைச் சந்திக்கும்போது ஏற்பட்ட அவதிகளை நகைச்சுவை ததும்பக் குறிப்பிடுவார். ஒரு மூத்த எழுத்தாளரைப் பற்றிச் சொல்லும்போது, “உங்களுக்கு ஏதாவது தண்டனை வேண்டுமா சொல்லுங்கள். அந்த எழுத்தாளர் எழுதிய நாவலுடன் உங்களை அறையில் பூட்டி விடுகிறேன். அதைப் படிப்பதுபோல தண்டனை வேற எதுவும் கிடையாது” என்பார். நகைச்சுவை உணர்வு மிக்க மனிதர்.
இந்த மாதம் 22ஆம் தேதி அவருக்கு 86 வது வயது முடியப்போகிறது என்று நினைக்கிறேன். அசோகமித்திரன் எளிதான மனிதர். ஆடம்பரமான வாழ்க்கைமுறை அவரிடம் கிடையாது. தன்னை எப்போதும் முன்னிலைப்படுத்திக்கொள்ள மாட்டார். அவருடைய இந்தத் தன்மையை நேரிடையாக அவரிடம் சொன்னால்கூட சாதாரணமாகக் கேட்டுக்கொண்டு இருப்பார். அவர் உண்மையிலேயே தமிழில், இந்திய அளவில், ஏன்... உலக அளவில் முக்கியமான எழுத்தாளர். குறிப்பிடப்பட வேண்டிய பெரிய எழுத்தாளர். புதியதாக எழுத வருபவர்கள் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.