மற்ற எபிசோடுகள்
Published:Updated:

முடிவற்ற பயணிகளின் பாடலில் ‘ கோணங்கி’ முதல்வரி... - வெய்யில்

முடிவற்ற பயணிகளின் பாடலில் ‘ கோணங்கி’ முதல்வரி... - வெய்யில்
பிரீமியம் ஸ்டோரி
News
முடிவற்ற பயணிகளின் பாடலில் ‘ கோணங்கி’ முதல்வரி... - வெய்யில்

படங்கள்: ஸ்ரீதர் பாலசுப்பிரமணியம்

முடிவற்ற பயணிகளின் பாடலில் ‘ கோணங்கி’ முதல்வரி... - வெய்யில்

“காருகுறிச்சி

நாயனத்திற்கு முன்

அடங்காத புலி

அமர்ந்திருந்தது”

- இருள்வ மௌத்திகம்

‘தடம்’ இதழுக்காக நேர்காணல் செய்ய வேண்டும் என்று கோணங்கியிடம் கேட்டேன்.

“என் தோல், மீடியா வெளிச்சத்தத் தாங்காதுடா தம்பி...  வேணாம்டா” என்றார்.

அன்று மாலையில் அவரை நேரில் சந்தித்தேன். காபி சாப்பிட்டுவிட்டுப் பேசிக்கொண்டிருந்தோம். நான் சில கேள்விகளைப் பேச்சுவாக்கில் கேட்டேன்.

``உங்களுக்கான புனைவுலகு எங்க இருக்கு?’’


`` ‘மீதமிருக்கும் விஸ்கியோடு பாடிக்கொண்டிரு’ கதை முடிவுல, அவன் ஒரு மீனவக் கிராமத்தை நோக்கி அவனோட நண்பனைப் பார்க்கப் போவான் இல்லையா...  ஞாபகமிருக்கா? அவன் வீட்டில் தனுஷ்கோடி புயலில் கிடைத்த ஒரு பழைய பீரோ இருக்கு. அதுக்குள்ளதான் எனக்கான புனைவுலகம் இருக்கு.’’

``ஏன் கவிஞர்களின்கூடவே இருக்கிறீங்க?’’

``ஓவியர்கள், கவிஞர்கள்கூடச் சுத்தித்தான் என்னைய நான் புதுப்பிச்சுக்கிறேன்.’’

``இந்தியா முழுக்க சுத்திவந்திருக்கிறீங்க. இந்தப் பயணங்களில் மீண்டும் மீண்டும் பார்க்கிற, பாதிக்கிற  விஷயம் எது?

``எல்லா ரயில்வே பிளாட்பாரங்களிலும் குடும்பம் குடும்பமா நிலமிழந்த பழங்குடிகளைப் பார்க்க முடியுது. அவர்கள் மழையை, வெயிலை அசாதாரணமா  எதிர்கொள்றாங்க. ஆனா, அவங்க  வாழ்க்கைப்பாடுதான் என்னை நிலைகுலையச் செய்யுது.’’

``எப்படி ‘இந்த’ மொழிக்கு வந்துசேர்ந்தீங்க?’’

``இப்பிடித்தான்னு ஒரு விஷயத்தைச் சொல்ல முடியலை. இது சுண்டக் காய்ச்சுற முறை.’’

``உங்க எழுத்துமுறை மாறியிருப்பதைக் குறித்து கி.ரா. கிட்ட கேட்டப்ப ‘ரியலிஸ்ட்டிக்ல இருந்து அப்ஸ்ட்ராக் வடிவத்துக்கு மாறின ஓவியர் ஆதிமூலத்தின் படைப்புலகத்தை ஒப்பிட்டுச் சொல்லியிருக்காரே, படிச்சீங்களா?’’


``நல்லா சொல்லிருக்காரே!’’

``ஏன் நீங்கள் கவிதை எழுதவில்லை?’’ “கவித்துவமா எழுதுறது வேற. கவிதை எழுதுறது வேற என்பது என் புரிதல். நான் முயற்சிக்கலை.’’

சிறிது நேரத்தில் நான் எதற்காகக் கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன் என்பதைப் புரிந்துகொண்டுவிட்டார். அன்று இரவு முழுக்க அவரோடுதான் இருந்தேன். கூரியர் அனுப்ப ‘கல்குதிரை’ இதழ் கவர்களுக்கு கைப்பட முகவரிகள் எழுதிக்கொண்டிருந்தார். பின், களைப்பில் தூங்கி
விட்டார். வெளியே மழை தூறிக்கொண்டிருந்தது. நான் அவருடனான பயணங்கள் குறித்த சின்னச்சின்ன நினைவுகளைத் தொகுத்தபடி விழித்திருந்தேன்.  

“நாம் ஏன் ஏரிகளாய் இருக்கக்

கூடாது, சலனமற்று வான்

நோக்கி பாறைகளுடன்

பேசிக்கொண்டு”

- ஆத்மாநாம்


ப்போது ‘த’ நாவலுக்காக நாகை, தரங்கம்பாடி, பூம்புகார் கடற்கரைகளில் சுற்றித் திரிந்துகொண்டிருந்தார் கோணங்கி. நானும் சேர்ந்து சுற்றிக்கொண்டிருந்தேன். நாகையின் பழைய துறைமுகம் குறித்து நிறைய வாசித்திருந்தார். ஆனால், அதில் வேலைசெய்தவர்கள், நேரில் பார்த்தவர்களைப் பார்த்துப் பேச வேண்டும் என பல முதியவர்களைச் சந்தித்துக்கொண்டிருந்தார். நாகையில் கண்டெடுக்கப்பட்டுள்ள புத்த தொல் எச்சங்கள், பழைய புத்த நினைவு ஸ்தூபி இருந்த இடம் எனத் தேடித்தேடிப் பார்த்துக்கொண்டிருந்தார். மீனவர்கள் மட்டுமே அறிந்த 16 வகையான கடற்காற்றையும் உணர்ந்துவிட வேண்டும் என்கிற தீவிரம் இருந்தது அவரிடம். ஒரு நாவலுக்காக இவ்வளவு உழைக்க வேண்டுமா என்று எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. நாகப்பட்டினத்தின் தெருக்கள் கோணங்கிக்கு ரொம்பவே பிடிக்கும். மத்தியான நேரம், நல்ல வெயில். ஏதோ ஒரு வீதியில் நடந்துகொண்டிருந்தோம். “சீன வியாபாரிகள் வாசனைத் தைலம் விற்கிறார்கள்... அதோ அந்த வீட்டில்தான் இருக்கிறாள் அந்த சீன நடனப் பெண். வா, போய்ப் பார்க்கலாம்” என்று பழைய பாழடைந்த ஒரு வீட்டின் முன் நின்று எதையோ பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு, மாலையில் கடற்கரையோரம் படகு கட்டும் இடத்துக்குப் போனோம்.

முடிவற்ற பயணிகளின் பாடலில் ‘ கோணங்கி’ முதல்வரி... - வெய்யில்

“இங்கிருந்துதான் காரைக்கால் அம்மையார் இலங்கை போனது!” என்றார்.

“என்ன சொல்றீங்க... உண்மையாவா?” என்றேன்.

“ஆமா... நாவல்ல!” என்றார்.

கோணங்கி எப்போதுமே இப்படித்தான். அன்றிரவு ‘திராட்சை ரசம்’ அருந்திவிட்டுப் பேசிக்கொண்டிருந்தோம்.

நான் சொன்னேன்... “நீங்க பாதி புனைவுலகத்திலயும், மீதி யதார்த்த உலகத்துலயும் இருக்கிறீங்கனு நினைக்கிறேன். சரியா?”

கோணங்கி சொன்னார்... “இல்லடா. முழுக்கவே நான் புனைவுக்குள்ளதான் இருக்கேன்!”

யணங்களில் தீராத ஆர்வம் கொண்டவர் கோணங்கி. முன்தீர்மானமற்ற பாதைகளும், புதிய புதிய திசைகளும் கொண்டவை அவரது பயணங்கள். அன்று ஏதோ பேசிக்கொண்டிருந்தோம். பேச்சில் கடல் வந்துவிட்டது. சட்டென `தனுஷ்கோடி போலாமா?’ என்றார். கிளம்பினோம். அவரது மகிழ்ச்சி, துக்கம் இரண்டுக்குமான இடம் தனுஷ்கோடி. 250 தடவைக்கும் மேல் அங்கு சென்றிருப்பார் என்று நினைக்கிறேன்.

முடிவற்ற பயணிகளின் பாடலில் ‘ கோணங்கி’ முதல்வரி... - வெய்யில்

“தனுஷ்கோடி கடற்கரை நாய்களுக்கும் காக்கைகளுக்கும் என்னளவு யாரும் பரிச்சயம் கிடையாது!” என்பார். அந்த வார்த்தைகளில் நிறைய உரிமை இருக்கும். மதுரையிலிருந்து கிளம்பினோம். அவரது சகோதரர் முருகபூபதியும் உடன் வந்தார். போய்ச் சேர்வதற்கு நள்ளிரவாகிவிட்டது. ராமேஸ்வரத்தில் தங்கினோம். எலுமிச்சை வாசனை மிகுந்த ஒரு பானம் அருந்தினோம். அது மூளைக்குள் ஒளிரத் தொடங்கியதும் ராமேஸ்வரக் கடலில் குளித்தோம். நல்ல இருள். சில தெருவிளக்குகள் மட்டும் எரிந்துகொண்டிருந்தன. நட்சத்திரங்கள் வானில் நிறைந்திருந்தன. கரையில் ஈழ அகதிகள் வந்த படகுகள் கவிழ்க்கப்பட்டுக்கிடந்தன. முருகபூபதி, “படகுகள் எதற்காகக் கவிழ்க்கப்பட வேண்டும்?” என்று ஒரு நடிகனுக்கே உரித்தான தோரணையில் வானத்தை நோக்கிக் கேட்டார். அது ஒரு நாடகம் போலவும் அதே சமயம் துயரம் மிகுந்ததாகவும் இருந்தது. அதைப் புரட்ட முயன்றார்... முடியவில்லை.  பின் அதைத் தழுவிக்கொண்டு ஒப்பாரியும் தாலாட்டும் கலந்த பாவத்தில் ஏதோ பாடினார். ராத்திரி அமைதியில் அந்தப் பாடல் திகிலூட்டுவதாக இருந்தது. உடைகளில் ஈரம் சொட்டச் சொட்ட கோணங்கி அந்தக் காட்சியை வைத்த கண் வாங்காமல் பார்த்து விம்மிக்கொண்டிருந்தார். இது ஒத்திகையா, நாடகமா? நிஜத் துயரமா? எல்லாமுமா? நான் கடலுக்குள்ளேயே நின்றபடி பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த இரவு எப்படி முடிந்தது என்று எனக்கு உண்மையாகவே நினைவில் இல்லை.

முடிவற்ற பயணிகளின் பாடலில் ‘ கோணங்கி’ முதல்வரி... - வெய்யில்

காலையில் முருகபூபதி ஊருக்குக் கிளம்பிவிட்டார். கோணங்கியும், லக்ஷ்மி சரவணக்குமாரும் நானும் கமுதிக்குக் கிளம்பினோம். ‘தனுஷ்கோடிக்குத்தானே கிளம்பினீர்கள்?’ என்று கேட்கலாம். ஆமாம். ஆனால், இது கோணங்கிப் பயணம். இப்படித்தானிருக்கும். கமுதியில் உள்ள ‘வழிவிட்ட’ அய்யனார் கோயிலுக்குப் போனோம், (முன்பு அங்குதான் கிடாவெட்டி கல்குதிரை மார்க்வெஸ் சிறப்பிதழ் வெளியிடப்பட்டது). கோயிலை ஒட்டி பெரிய குளம் ஆனால், வறண்டுபோயிருந்தது. அதில், ஒரு பெரிய குடும்பம் அய்யனாருக்கு ஆடுவெட்டி சமைத்துக்கொண்டிருந்தது. நாங்கள் உற்சாகமாக அவர்களுடன் கலந்துகொண்டோம். அன்று மதியம் அருந்திய தீர்த்தத்தில் நன்றாகத் தூங்கிவிட்டோம். எழுந்தபோது இரவு 8 மணி. தூரத்தில் மயில் அகவிக்கொண்டிருந்தது. ஆலம் விழுதில் எங்களுக்கான உணவைக் கட்டித் தொங்கவிட்டுப் போயிருந்தார்கள் (கீழே வைத்தால், நாய் தூக்கிச்சென்றுவிடும்!). இரவுக்கான மற்ற தேவைகள்கூட மரத்தடியில் வைக்கப்பட்டிருந்தன. பாசக்கார மனிதர்கள். இரவு அந்தக் குளத்துக்குள்ளேயே தங்கிவிடலாம் என்றார் கோணங்கி. புட்டி காலியானது. பேசுவதற்கு யாருக்கும் எதுவும் இல்லை என்பதுபோன்ற ஒரு மனநிலை. வெகுநேரம் மௌனமாகவே அமர்ந்திருந்தோம். மயிலின் அகவல் மட்டும் கேட்டுக்கொண்டேயிருந்தது. சட்டென கோணங்கி விசும்பத் தொடங்கினார். பின் அது அழுகையாக மாறியது. அம்மா... அம்மா... என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தார். அவருக்குள் அம்மாவை இழந்த சிறுவன் விழித்துக்கொண்டுவிட்டான். அந்த வறண்ட குளம், நிலவொளி மட்டும் இருந்த இருள், வெக்கையான காற்று, தூரத்திலிருந்து வரும் கரிமூட்டப் புகை வாசனை, அந்த மயிலின் அகவல் வேறு ‘ஒரு வனாந்தரத் தனிமை உணர்வு’ அவரைப் பற்றிக்கொண்டிருக்க வேண்டும். அவர் வாய்விட்டு அழுத மிகச் சில தருணங்களில் ஒன்று அது என்று நினைக்கிறேன். விடிந்தும் விடியாத நேரத்தில் எழுப்பினார். தூறல் விழுந்துகொண்டிருந்தது. வேகவேகமாகப் பைகளை எடுத்துக்கொண்டு நடந்தோம். ‘இருங்க சாப்ட்டுப் போலாம்’ என்று ஒரு குரல். திரும்பிப் பார்த்தால், மரக்கிளையில் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கும் ஆட்டைத் தோலுரித்துக் கொண்டிருக்கிறார் ஒருவர். எப்போது கொண்டுவந்தார்? எப்போது வெட்டினார்? சாலையில் பால்வண்டியைக் கைகாட்டி மறித்துக்கொண்டிருந்தார் கோணங்கி. அவர் மிகச் சிறந்த ஒரு பயணி என்று துணிந்து சொல்லலாம். ஒரு கதர் வேட்டி, துண்டு அவ்வளவுதான் அவரது பயணச்சொத்து. பேஸ்ட், சோப்கூட பெரும்பாலும் வைத்துக்கொள்ள மாட்டார். ஆனால், அவருக்குப் போகும் இடமெங்கும் எல்லாமே கிடைக்கும். அதற்கு அவரது உடல்மொழியும் மனிதர்களோடு கலந்துவிடுகிற சுபாவமும் முக்கியமான காரணம். நம்பிக்கையூட்டும் அவரின் நெகிழ்ச்சியான உடல்மொழி   மனிதர்களை வசியம் செய்துவிடுவதை அருகிருந்து பார்த்திருக்கிறேன்.

மஞ்சள் ஆவாரம்பூவை

 நுகர்ந்து

அண்ணாந்து

ஊளையிடுகிறது நாய் - பாழி


ப்போதும் ஏதேனும் ஒரு வார்த்தை, பொருள் அல்லது காட்சிப் படிமத்தைச் சுமந்துகொண்டிருப்பார் கோணங்கி. அல்லது அது இழுத்துக்கொண்டுபோகும் பாதையில் தீவிரமாகப் போய்க்கொண் டிருப்பார். கோணங்கி என்கிற புனைவாளனிடம் உள்ள சிறப்பான விஷயங்களில் ஒன்று இது. அவரது எழுத்துக்களில் அவ்வளவு கவித்துவக் காட்சிப் புனைவுகளைச் சாத்தியப்படுத்துவது அதுதான். ‘த’ என்ற ஒரு எழுத்துதான் 10 வருடம் அவரை இயக்கியது. ‘கோடி எக்கர் கடல்’ எனும் ஒரு காட்சிப் படிமத்தின் பாதையில்தான் இப்போது அவர் போய்க்கொண்டிருக்கிறார். இப்படி நிறைய சொல்ல முடியும். தஞ்சைப் பகுதியில் பாடகச்சேரி என்று ஓர் ஊர். அங்கே ஒரு பைரவச் சித்தர் கோயில் இருக்கிறது. அங்கே கோணங்கி, சாந்தாராம், நான் மூவருமாக ஒருமுறை போனோம்.  ரொம்பத் தூரம் நடக்கவேண்டியிருந்தது. போகிற வழியில் வயலோரம் இரு பக்கமும் பனைகள். எதுவும் நேராக இல்லை. பெரும்பாலும் வளைந்திருந்தன.

“என்னண்ணே இப்பிடி இருக்கு?” என்றேன்.

கொஞ்ச நேரம் நின்று பார்த்துவிட்டு, `‘அடேய்... இதெல்லாம் பூமிக்குள்ள இருக்கிற நாய்களோட வால்கள்!” என்றார்.

இப்படித்தான், எதை நோக்கிப் போகிறோமோ அதுவாகவே அனைத்தையும் பார்க்கும் அவரது மனம். ஊரை நெருங்குகையில் ஒரு புளிய மரத்தில் இரண்டு ஓணான்கள் இனப்பெருக்க வேலையில் இருந்தன. நானும் சாந்தாராமும் பார்த்தோம். கோணங்கியை சத்தம் போடாமல் கைகாட்டிக் கூப்பிட்டோம். அவர் வருவதற்கும் ஓணான்கள் விலகி ஓடவும் சரியாக இருந்தது. ‘எனக்குப் பிரிவுதான் பார்க்கக் கிடைச்சிருக்கு’ என்று சிரித்துவிட்டு, வாய்க்காலுக்குப் பக்கத்தில் இருந்த மூங்கில் காட்டை வெகுநேரம் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். அந்த முங்கில்களின் பச்சை நிறம் தாங்கிக்கொள்ள முடியாததாக இருந்தது.

சாந்தாராம் ரயிலேறிப் போனார். நாங்கள் சித்தன்ன வாசலுக்குப் போனோம். சித்தன்ன வாசல் ஓவியங்கள் இருக்கும் அந்த குகையின் பாதுகாப்புப் பணியாளருக்கு கோணங்கியை நன்றாகத் தெரிந்திருந்தது.

“நம்ம பொருள எடுங்க!” என்றார் கோணங்கி. அவர் ஓர் அழகான சிறிய தலையணையைக் கொடுத்தார். தலைக்கு வைத்துக்கொண்டு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அந்த மேற்கூரை ஓவியங்களைப் பார்த்துக்கிடந்தார். அங்கிருந்து நோயல் கார்க்கி சேர்ந்துகொள்ள நார்த்தாமலை, பிறகு புதுக்கோட்டை பூபாளன் அறை, அங்கிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர், பா.வெங்கடேசன் இணைந்துகொள்ள அங்கிருந்து சிதம்பரம் என அந்தப் பயணம் நீண்டுகொண்டே போனது. தமிழ்நாட்டில் உள்ள எல்லா ஊர்களிலும் கோணங்கிக்கு நண்பர்கள் உண்டு என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அது முழு உண்மையாகவும் இருக்கக்கூடும். அவரது நண்பர்களும்கூட நம்மால் நம்ப முடியாதவர்களாக இருப்பார்கள். தஞ்சாவூர் ரயிலில் முறுக்கு விற்பவர், காரைக்காலில் பார் உபசரிப்பாளர், மதுரையில் பேராசிரியர், திருச்சியில் என்ஜினீயர், ராமநாதபுரத்தில் இன்ஸ்பெக்டர், திருநெல்வேலியில் தியேட்டர் ஆபரேட்டர் என அவரது நண்பர்கள் பட்டியல் விநோதமாக நீளும். பெரிதோ, சிறிதோ எல்லா இடங்களிலும் அவருக்கான சந்தோஷமான ஓர் உலகத்தை உருவாக்கிக்கொள்கிறவர். தன்னைப் பாரமாக உணர்வதற்குள் எங்கிருந்தும் காணாமல் போய்விடுகிற நல்ல பயணி, கோணங்கி!

“உலகத்தின் எதிர்பார்ப்பு நடை

 பயிலாதவர்களைச் சார்ந்தது”

- சச்சிதானந்தன்


கோணங்கிக்குள் எப்போதும் ஒரு குழந்தை மனமும் பித்த மனமும் கண்ணாமூச்சி ஆடியபடி இருக்கும். ஒருமுறை கொள்ளிடம் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தோம். நான் மணலைத் தோண்டி தலை மட்டும் வெளியில் இருக்கும்படி என்னைப் புதைத்துக்கொண்டேன். அதைப் பார்த்ததும் தன்னையும் அதுபோல புதைத்துவைக்கும்படி சொன்னார். அது ரொம்பவே பிடித்துப்போய்விட்டது. உற்சாகமாகிவிட்டார். “இன்னிக்கு இந்த ஆத்துக்குள்ளேயே இருப்போம்டா!” என்று சொல்லிவிட்டார்.

ஆற்றுக்குள் இருந்த ஒரு சிறிய திட்டில் கோணங்கி, நான், பழ.மணிவண்ணன் மூவருமாக இருந்தோம். இரவுக்குத் தேவையானதை ஊர்சுலா ராகவ் போய் வாங்கிவந்தான். ஏதோ பேசிக்கொண்டிருந்தோம். ஒரு கவிதை குறித்து வாக்குவாதம் வந்தது. நானும் ஊர்சுலாவும் சத்தம்போட்டுப் பேசிக்கொண்டிருந்தோம். நள்ளிரவு ரோந்து வந்த போலீஸ் பாலத்திலிருந்து லைட் அடித்தார்கள். அமைதியானோம். ஜீப்பைத் திருப்பி அதன் ஹெட்லைட் வெளிச்சத்தில் தேடினார்கள். நாங்கள் மணலோடு மணலாகப் படுத்துக்கொண்டோம். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு ஜீப் கிளம்பிவிட்டது. நாங்கள் தூங்கிப்போனோம். இப்படியான இலக்கற்ற  பயணங்களில்தான் கோணங்கி தொடர்ந்து தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறார். இந்த சுவாரஸ்யங்களை எல்லாம் ஒரு குழந்தையைப் போல அவர் விரும்புகிறார். அவரைப்போல தீவிரமான படைப்பு மனநிலை கொண்டவரை நான் பார்த்ததே இல்லை. அவரோடு ஒரு நாளைக் கழிக்கும் கவிஞன், நிச்சயம் இரவில் பேனாவைத் தேடுவான். அதனால்தான் எப்போதும் அவரைச் சுற்றி ஓர் இளைஞர் கூட்டம் இருந்துகொண்டே இருக்கிறது.

முடிவற்ற பயணிகளின் பாடலில் ‘ கோணங்கி’ முதல்வரி... - வெய்யில்

கோணங்கி படைப்பாளிகளைத் தேடிச்சென்று சந்திப்பதில் சலிக்காதவர். ஒரே ஒரு கவிதை எழுதியிருக்கும் இளைஞன் என்றாலும் சரி, தேடிப்போய்ப் பார்ப்பார். ‘வண்ணாத்திப்பூச்சி’ என்ற ஒரு கவிதைக்காகத்தான் என் அறையைத் தேடி அவர் வந்தார். சமீபத்தில் அவரிடம் போனில் பேசினேன். “புதுசா ஒருத்தனக் கண்டுபுடிச்சிருக்கேன்டா... பேரு சூர்யா, என்ஜினீயரிங் படிச்சிக்கிட்டிருக்கான். அவனோட முதல் கவிதைய கல்குதிரைக்கு வாங்கிட்டண்டா...” என்று உற்சாகமாகப் பேசினார்.

‘கல்குதிரை’ இதழ் வாயிலாக, சிற்றிதழ் வெளியில் கோணங்கி மிக முக்கியப் பங்காற்றியிருக்கிறார். கோணங்கியின் மொழி சார்ந்து, படைப்புகள் சார்ந்து, அரசியல் கருத்துகள் சார்ந்து பல விமர்சனங்கள் வைக்கப்படுவது உண்டு. எனக்கும்கூட உண்டு. ஆனால், அவர் மீது தீவிரமான விமர்சனம் உள்ளவர்களாலும்கூட அவரது படைப்புவெளிக்கான இடத்தை நிராகரிக்க முடியாது. அவரது நாவலை எப்படி வாசிப்பது எனப் பலமுறை பல உரையாடல்கள் நடந்திருக்கின்றன. கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அவர் நம்பிக்கையோடு தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார். ஒவ்வொரு நாவலுக்கும் கடுமையாக வாசிக்கிறார். அசாத்தியமான உழைப்பைத் தருகிறார். வாசகர்கள் மீதான அவரது நம்பிக்கை பொய்க்கவில்லை. இன்றும் புதிய இளைஞர்கள் பலர் அவரது நாவல் குறித்த வாசிப்பனுபவத்தை, மதிப்புரைகளை, விமர்சனங்களை எழுதுகிறார்கள். அவரது எழுத்துபாணியைக்கூட சிலர் முயன்று பார்க்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை அவரது படைப்புகள் சுதந்திரப் பிரதிகளாக இருக்கின்றன. அவரது எழுத்தில் விரியும் மாயக் காட்சிப் படிமங்களில் மூழ்கிக்கிடப்பதை நான் விரும்புகிறேன். ஓவியர்களுக்கு, காட்சி ஊடகங்களில் வேலை செய்பவர்களுக்கு கோணங்கியின்  எழுத்தில் நிறைய கருக்கள் கிடைக்கும் என்பது என் அபிப்ராயம்.

“தவறுகள் பிரமாதமானவை

என்பது விதி”

- அரேபிய இரவுகள்


கோணங்கியின் மதிப்பீடுகள் விசித்திரமானவை. நார்த்தாமலைக் காடுகளில் சேகரித்த காஞ்சிரம் பழத்தையும், ஒரு பழங்குடி கிராமத்தில் சேகரித்த தூவியையும் பத்திரமாக வைத்திருப்பார். லண்டன் ஆர்ட் கேலரிகளில் சுற்றி எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் கிழித்துப்போட்டுவிடுவார். நூல் வெளியீடுகள் திருவிழாக் கோலம் காணும் இந்த நாட்களில் தனது பத்து ஆண்டுகால உழைப்பை தன்னந்தனியாகப் போய் தனுஷ்கோடி கடற்கரையில் வெளியிட்டு, காகங்களுக்கு நாவலை வாசித்துக் காட்டுகிறார். அவரைப் புரிந்துகொள்வதற்கு நாமும் கோணங்கியாக வேண்டும். கொஞ்சமேனும் கோணங்கித் தன்மை இல்லாதவர்களால், அவரோடு பயணிக்கவே முடியாது. இலக்கியத்தின் மீதான தீவிரத்தில் அரசுப் பணியைக் கைவிட்டார். இன்று வரை திருமணம் செய்துகொள்ளவில்லை. பயணங்களும் ஓய்ந்தபாடில்லை. இரவையும் பகலையும் ஏதேதோ கொண்டு நிரப்பியபடி சென்றுகொண்டே இருக்கிறார் கோணங்கி.