விடியற்காலையில் எழுந்திருந்து அவசரம் அவசரமாகப் புறப்பட்டுப் பள்ளிக்குச் சென்று, அது முடிந்ததும் ஸ்பெஷல் கிளாஸ், டியூசன்.... எல்லாம் முடிந்து, பிள்ளைகள் வீட்டுக்கு வருவதற்குள் அவர்களுக்குத் தூக்கம் வந்துவிடும். வழக்கமான இந்த டென்ஷன் எல்லாம் இல்லாமல், குழந்தைகள் ஜாலியாகக் கோடை விடுமுறையைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை மறுபடியும் புத்தகங்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்தால் வருவார்களா? வரமாட்டார்கள் என்றுதான் பலரும் நினைப்பர். ஆனால், உங்கள் யூகம் தவறு.
ஆசியாவின் மிகப் பெரிய நூலகங்களில் ஒன்று சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம். இங்கு குழந்தைகளை வரவழைப்பதற்குப் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றனர். நூலகத்தின் முதல்மாடியில் குழந்தைகளுக்கான பிரிவு உள்ளது. செயற்கை மரம் உருவாக்கப்பட்டு அதனடியில் அமர்ந்து படிக்கும் விதமான அந்தத் தோற்றமே குழந்தைகள் வெகுவாக ஈர்த்துவிடும். சின்னச் சின்ன நாற்காலிகள், சுவரெங்கும் கார்ட்டூன் ஓவியங்கள் என அந்த இடத்தை விட்டு நகராமல் செய்யும் விதத்தில் வடிமைக்கப்பட்டிருக்கிறது.
கோடை விடுமுறையை, குழந்தைகளின் கொண்டாட்டமாக மாற்றும் தங்களின் திட்டம் பற்றி அண்ணா நூற்றாண்டு நூலக நூலகரிடம் பேசினோம்.
``குழந்தைகளை நூலகத்துக்கு வர வழைப்பதற்காக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம். சிறுவர்களுக்காகச் செயல்படும் ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, மே மாதம் முழுவதும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிட்டோம். சம்ஸ்கிரியா பவுண்டேஷனைச் சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் முன்வந்து, எங்களின் திட்டத்தோடு இணைந்துகொண்டனர். இம்மாதம் 2-ம் தேதி பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.
4 வயது முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகள் என வரையறுத்துள்ளோம். அவர்களிலும் 4 - 8 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒரு குழுவாகவும் 9 - 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை இன்னொரு குழுவாகவும் பிரித்துக்கொள்கிறோம். தமிழில் கதைகள் எழுதவும், அந்தக் கதைகளுக்கு ஓவியங்கள் வரையவும் பயிற்சியளிக்கத் திட்டமிட்டுள்ளோம். அதேபோல குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது காமிக்ஸ். அதனால், அவர்களுக்கு காமிஸ் கதைகளை உருவாக்கவும் அவற்றிற்கு ஓவியங்கள் வரையவும் கற்றுத்தர உள்ளோம்.
நேற்று நடந்த அறிவியல் சோதனைகள் நிகழ்ச்சி ரொம்பவே சுவாரஸ்யமாக இருந்தது. சோப்புக் கரைசலால் பபுள் விட்டு விளையாடுவதை அறிவியல் பூர்வமாக விளக்கினர். அதேபோல ஒரு பேப்பர் பறப்பதற்கு அதன் எடைக்குமான தொடர்பு எவ்வளவு என்பதை ஜாலியான விளையாட்டு ஒன்றுடன் கற்றுத்தந்தனர். அறிவியலை இவ்வளவு எளிமையாகவும் சுவையாகவும் சொல்ல முடியுமா என எனக்கே ஆச்சர்யமாக இருந்தது.
இவை தவிர, அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும் பயிற்சிகளையும் திட்டமிட்டிருக்கிறேன். அது அவர்களின் பள்ளியிலும் மற்றவர்களோடு பழகும்போதும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதுபோன்ற விஷயங்கள் ஒரு தேர்வை அச்சமில்லாமல் எதிர்கொள்வதற்கான மன தைரியத்தை அளிக்கும் என நம்புகிறேன். இவை அனைத்தையும் மகிழ்ச்சியான கொண்டாட்டமாகவே கற்றுத்தரப் போகிறோம். ஒருபோதும் அவர்களுக்குச் சோர்வு தராது.
நாங்கள் எதிர்பார்த்ததை விட, மூன்று மடங்கு எண்ணிக்கையில் அதிகமாகக் குழந்தைகள் வருகிறார்கள். உதாரணமாக, நேற்றைய நிகழ்ச்சிக்கு 120 குழந்தைகளுக்கு மேல் வந்துவிட்டனர். மூன்று பேட்ச்சாகப் பிரித்து பயிற்சி அளித்தோம். நிகழ்ச்சி முடிய மதியம் 2 மணியாகிவிட்டது. அப்போது குழந்தைகளின் ஆர்வமும் உற்சாகமும் கொஞ்சமும் குறையவில்லை. பெற்றோர்களின் ஈடுபாட்டையும் இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். தூரத்தில் உள்ள அண்ணா நகரிலிருந்து ஒரு பெற்றோர் வந்திருந்தனர். அதேபோல, கிராமத்திலிருந்து கோடை விடுமுறைக்காகச் சென்னை வந்திருக்கும் குழந்தைகளையும் அவர்களின் உறவினர் அழைத்துவந்திருந்தனர். பல தரப்பு குழந்தைகள் சங்கமித்து உரையாடும் நல்ல வாய்ப்பாகவும் இது அமைகிறது.
`இதுபோன்ற நிகழ்ச்சிகளால் குழந்தைகளின் நினைவாற்றலும் உடல் வளர்ச்சியும் ஆரோக்கியமாக வளரும். அதனால், ஒவ்வோர் ஆண்டும் இதைப் போன்று தொடர்ந்து நடத்த வேண்டும்' எனப் பல பெற்றோர் தங்களின் கருத்துப் பதிவில் தெரிவித்துள்ளனர்.
இம்மாதம் 31ம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கட்டணம் ஏதும் கிடையாது. ஆனால், முன் பதிவு செய்துகொள்வது நல்லது. ஏனெனில், பயிற்சிக்கான பொருள்களை நாங்கள் வாங்கி வைப்பதற்கு அது உதவியாக இருக்கும் " என்றார்.