மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

திருமாலின் பூமராங்!

##~##

ஜி.மாரியப்பன், சின்னமனூர்.

 எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர் ரஹ்மான் - மூவரில் யாருடைய இசை எங்கும் எப்போதும் உமக்குக் கேட்கப் பிடிக்கும்?

ஒருவரை மட்டும் தேர்ந்தெடுத்துக் கேட்க இவர்கள் என்ன அரசியல் கட்சிகளா நடத்து கிறார்கள்? மூவருமே கிரேட். எதையும், எங்கும், எப்போதும் கேட்கிற விஷயம் அல்ல இசை. அது மூடைப் பொறுத்தது.

  உதாரணமாக, நல்ல ரொமான்டிக் மூடில் இருக்கும்போது, ரஹ்மானின் 'கேளாமல் கையிலே... தந்தாயே காதலை...’யும், பிறகு இளையராஜாவின் 'நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி...’யையும், பிறகு எம்.எஸ்.வி-யின்  'அன்புள்ள மான் விழியே... ஆசையில் ஓர் கடிதம்’ பாடலையும் கேளுங்கள். மூவருமே பிய்த்து உதறியிருப்பார்கள்!

வி.ரவிச்சந்திரன், சென்னை-18.

எழுத்துத் திறன், பேச்சுத் திறன் இதில் எது சக்தி வாய்ந்தது?

பேச்சுத் திறனால் வரலாற்றையே மாற்றியவர்கள் உண்டு. ஜூலியஸ் சீசர் கொல்லப்பட்ட பிறகு மார்க் ஆண்டனி ஆற்றிய (உசுப்பி விட்ட) உரை உலகப் புகழ் பெற்றது. அதே போல, டெமஸ்தனீஸ், லியோனிடாஸ் ('300’ படத்தின் ஹீரோ!) லிங்கன், சர்ச்சில், நேரு போன்றவர்களின் சிலிர்ப்பான உரைகளைக்கொண்ட புத்தகமே உண்டு. இருப்பினும் பேச்சுத் திறனைக்கூட எழுத்தால் வடித்தால்தான் நிரந்தரம் பெறும்! நிலைத்து நிற்பது எழுத்துதான். பேச்சு... வங்காள விரிகுடா, எழுத்து... பசிபிக் கடல்!

சி.பி.நாராயணசாமி, செக்கானூர்.

ஹாய் மதன் கேள்வி - பதில்

ஆஸ்திரேலிய பூமராங் ஆயுதத்துக்கும் பரமாத்மா கையில் உள்ள சுதர்சனச் சக்கரத் துக்கும் பௌதிகரீதியாக என்ன ஒற்றுமை?

  வீசியவரிடமே திரும்பி வருவதுதான் ஒற்றுமை! ஆஸ்திரேலியாவில் வசிக்கும் 'டுரூவால்’ பழங்குடி மக்களின் மொழியில் இருக்கும் வார்த்தை - பூமராங். அபர்ஜினல் (Aboriginals) என்று அழைக் கப்படும் பழங்குடி மக்கள் வில், அம்பைப் பயன்படுத்துவது இல்லை. அதற்காக பூமராங் ஓடுகிற கங்காருவைக் கொன்றுவிடாது. அதிகபட்சம் கங்காருவுக்கு தலை சுற்றி அது தடுமாறும்போது, ஓடிப்போய்ப் பிடித்துவிடலாம். திருமாலின் சக்கரம் எதிரியின் தலையைச் சீவிவிட்டுத் திரும்பிவந்து விரல் நுனியில் அமரும். பழங்குடி மக்கள் மரங்களை நோக்கியும் பூமராங் வீசுவார்கள். அத்தனை பறவைகளும் பதற்றத்துடன் பறக்கும்போது பல பறவைகள் அவர்கள் விரித்த வலைகளில் சிக்கிக்கொள்ளும். பூமராங் வீசுவது ஒரு கலை. 18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட பூமராங் ஒன்றைத் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டு எடுத்து இருக்கிறார்கள். இப்போதும் அது வொர்க் ஆகிறது!

ராமாயணம், மகாபாரதம் எல்லாம் பிற்பாடு சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவை. ஆகவே, பூமராங்கில் இருந்து விஷ்ணுச் சக்கரம் ஐடியா வந்திருக்க வாய்ப்பு உண்டு!

எல்.விஜயபாஸ்கர், பெங்களூரு.

அவ்வப்போது 'பாதுகாப்பை (Security) அதிகப்படுத்த வேண்டும்’ என்று அரசு சொல்கிறது. அப்படிஎன்றால் 'செக்யூரிட்டி’ அதிகமாக இல்லை என்று ஒப்புக்கொள்வதாகத்தானே அர்த்தம் வருகிறது?

மடக்காதீர்கள்! 'மேலும்’ அதிகரிக்க வேண்டும் என்று அர்த்தம். பிரச்னை என்னஎன்றால், ஏதேனும் ஆபத்து வெடித்த கையோடு பலத்த செக்யூரிட்டி ஏற்பாடு செய்கிறார்கள். பிறகு, மெள்ள அது வலு விழக்கிறது. இந்த அலட்சியம் ரொம்பத் தப்பு! ஆபத்து திடீரென்று எப்போதாவது தான் வரும். ஆகவே, எப்போதும் செக்யூரிட்டி பலமாக இருக்க வேண்டும். அமெரிக்காவில், சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சோதனை நடத்தினார்கள். அதன்படி, ஒரு குறிப்பிட்ட வருஷத்தில் அமெரிக்காவில் விமானத்தில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை 65 கோடிப் பேர் என்பதைக் குறிப்பெடுத்து மிகக் கவனமாக அத்தனை பயணிகளையும் 'செக்’ செய்தார்கள். 598 பயணிகள் ரகசியமாக துப்பாக்கி போன்ற ஆயுதங்களை ஒளித்துவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதாவது, 10 லட்சம் பயணிகளில் ஒருவர் கையில் துப்பாக்கி! இருப்பினும், அந்த ஒரே ஒருவரைச் சோதிக்காமல் விட்டிருந்தால்?! ஆகவேதான், எப்போதும் எச்சரிக்கை தேவை. அதில் நாம் கொஞ்சம் அலட்சியமா கவே இருந்துவிட்டு, பிறகு மார்பில் அடித்துக்கொண்டு அழுகிறோம்!

ஸ்வர்ணலதா ஜோஸ், திருச்சி-3.

நோய்வாய்ப்பட்டு இருப்பவர்களையும், மனநிலை பாதிக்கப்பட்டவர்களையும் அன்போடு கவனித்து உதவுகிற ஒரே உயிரினம் மனிதன்தான் என்று நினைக்கிறேன். ஒப்புக்கொள்கிறீர்களா?

ஹாய் மதன் கேள்வி - பதில்

அப்படி ஒரேயடியாகச் சொல்லிவிட முடியாது. கைகளை இழந்த சக குரங்குக்கு மற்ற குரங்குகள் உணவு ஊட்டிவிடுவதையும், காயம் அடைந்த சிம்பன்ஸிக்கு அதன் உறவினர்கள் இலைகளினால் க்ளீன்பண்ணி சில பச்சிலைகளை (ஆன்டிபயாடிக்!) தின்ன வைப்பதையும் மனநிலை பாதிக்கப்பட்ட குரங்குகள் தப்புசெய்தால் அதை அடிக்கா மல் தட்டிக்கொடுத்து அழைத்துச் செல்லும் மகாக் (Macague) குரங்குகளைப் பற்றியும் 'பயாலஜிஸ்ட்’டுகள் எழுதிவைத்திருக்கிறார்கள்!